சாதி ஒடுக்குமுறைக்கு எதிரான போராட்ட முன்னோடிகளை நெஞ்சிலேந்துவோம்!

இன்று, தலித் மக்கள் குறைந்தபட்சம் சில உரிமைகளையாவது பெற்றிருக்கின்றனர் என்றால், அவை நக்சல்பாரித் தியாகிகளாலும், தலித் மக்களின் உரிமைகளுக்காகக் களத்தில் போராடிய முருகேசன் போன்ற பல தியாகிகளின் போராட்டத்தாலும் கிடைத்த உரிமைகளே அன்றி, தேர்தல் அரசியல் தானாக வழங்கிவிட்ட உரிமைகள் அல்ல.

சாதி ஒடுக்குமுறைக்கு எதிரான போராட்ட முன்னோடிகள்
சென்னகரம்பட்டி தியாகிகள் 35-ஆம் ஆண்டு,
மேலவளவு தியாகிகள் 30-ஆம் ஆண்டு

பிரச்சார இயக்கம்

அன்பார்ந்த உழைக்கும் மக்களே

மதுரை மாவட்டத்தில் சாதிய ஒடுக்குமுறையின் கீழ் இருந்த கிராமம் சென்னகரம்பட்டி. அங்கு 1991 ஜூலை 30-ஆம் தேதி அம்மச்சி அம்மன் கோயிலுக்கான நிலம் ஏலம் விடப்பட்டது. 1987 முதலே குத்தகை உரிமைக் கேட்டு வந்தார்கள் தலித் (பறையர்கள்)கள். அதனாலேயே அம்பலக்காரர்கள் ஏலத்தைத் தள்ளிப்போட வைத்து வந்தனர். 1991-ஆம் ஆண்டிலும் தலித்துகள் ஏலம் எடுப்பதில் முனைந்தனர்.

தலித்துகள் தரப்பில் பெருமாள் மற்றும் ஆறுமுகம் ஆகியோர் ஏலம் கேட்டனர். பெருமாள் மற்றும் ஆறுமுகத்திற்கே ஏலமும் கிடைத்தது. “கீழ்ச்சாதிகாரன், நம் நிலத்திலே பண்ணையடிப்பவன் நிலத்தில் உரிமைக் கொண்டாடுவதா?” என்று அம்பலக்காரர்கள் கடும் கோபமடைந்தனர். பெருமாள் மற்றும் ஆறுமுகம் எடுத்த ஏலம் செல்லாது என்று நீதிமன்றத்திற்குச் சென்றனர் அம்பலக்காரர்கள். ஆனால், சென்னை உயர்நீதிமன்றமோ தலித்துகள் எடுத்த ஏலம் செல்லும் என்று 1991 நவம்பர் 22-ஆம் தேதி தீர்ப்பு வழங்கியது. நீதிமன்றத்தில் தோற்றுப்போன அம்பலச்சாதியினர் கிராமத்தில் தலித்துகளை ஒடுக்குவதைத் தீவிரப்படுத்தினார்கள்.

தங்களின் நிலத்தில் இனி வேலை செய்யக்கூடாது என்று தலித்துகளுக்குத் தடைப் போட்டனர் சாதிவெறியினர். இதனால் பக்கத்து ஊர்களுக்கு உழைக்கப் போனார்கள் தலித்துகள். இதனால் மேலும் வெறியடைந்த சாதிவெறியர்கள் 1992 ஜூலை 3-ஆம் தேதி பக்கத்து ஊர்களுக்கு வேலைக்குச் சென்று வந்த அழகி, ராஜேந்திரன், சேவி, நல்லமணி போன்றவர்களை வெட்டித்தாக்கினார்கள்.

ஜூலை 5 அன்று இரவு சுமார் பத்து மணி அளவில் சுந்தரராஜபுரத்தில் தலித்துகள் வந்த பேருந்தை வழிமறித்தது ராமர் என்னும் சாதிவெறியனின் தலைமையிலான சாதிவெறிக் கூட்டம். எல்லோர் கையிலும் ஆயுதங்கள். பேருந்தில் இருந்த போலீசுகாரர்களும் தப்பி ஓடினார்கள். மற்றவர்கள் எல்லோரும் தாக்குதல் துவங்கியவுடன் இருட்டில் ஓடி தப்பித்துக்கொள்ள அம்மாசியும் வேலுவும் மட்டும் சாதிவெறிக் கும்பலிடம் சிக்கிக்கொண்டனர். பேருந்திலிருந்து இழுத்துப்போடப்பட்ட அந்த இருவரையும் சரமாரியாக வெட்டினார்கள் சாதிவெறியர்கள். இரத்தச் சகதியில் பலியானார்கள் அந்த நிலவுரிமைப் போராளிகள்.

சென்னகரம்பட்டி படுகொலைக்குத் தலைமை தாங்கிய ராமர் என்ற ஆதிக்கச் சாதிவெறியனின் தலைமையிலேயே 1997-இல் மேலவளவு படுகொலையும் நடத்தப்பட்டுள்ளது. அதிலும், ஆதிக்கச் சாதிவெறியர்களின் கொட்டத்தை முறையிடுவதற்காக மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்குச் சென்றுவிட்டு வீடு திரும்பும் போது, பேருந்தை நிறுத்தி வெட்டிக் கொல்வது என்ற வகையிலேயே இரண்டு படுகொலைகளும் அரங்கேற்றப்பட்டன.

1997, ஜூன் 30-ஆம் நாள், மதுரை மாவட்டம், மேலூர் வட்டம், மேலவளவு ஊராட்சித் தலைவரான முருகேசன், துணைத் தலைவர் மூக்கன் உள்ளிட்ட 7 பேர் ஆதிக்கச் சாதிவெறியர்களால் படுகொலை செய்யப்பட்ட நாள்!

தென்மாவட்டங்களில் தலித் மக்கள் மீதான சாதிவெறியாட்டங்கள் தீவிரமாக இருந்த காலமது. மதுரை மாவட்டம் பாப்பாப்பட்டி, கீரிப்பட்டி, நத்தமங்கலம். விருதுநகர் மாவட்டம் கொட்டக்காச்சியேந்தல் ஊராட்சிகள் தலித் மக்களுக்கான தனித்தொகுதிகளாக ஒதுக்கப்பட்டதற்கு எதிராக தேர்தலையே நடத்த முடியாத அளவிற்கு நெருக்கடி கொடுத்தனர் ஆதிக்கச் சாதிவெறியர்கள்.

போலி ஜனநாயகத்தைப் பயன்படுத்தி ஆதிக்கச் சாதிவெறியர்கள் ஆடிய இந்த ஆட்டத்தால், 1996 முதல் 2006 வரையிலான பத்தாண்டுகளில் பத்து முறைக்கும் மேலாக இவ்வூராட்சிகளில் தலித் மக்கள் ஊராட்சித் தலைவராக முடியாமல் தடுக்கப்பட்டனர்.

இவ்வாறு, தலித் மக்கள் ஊராட்சித் தலைவராவதற்கான போராட்டத்தில்தான், முருகேசன், மூக்கன் உள்ளிட்ட 7 பேர் வெற்றி பெற்றனர். தலித் மக்களின் அரசியல் அதிகாரத்திற்கான நாயகர்களாகினர்!

1996-இல் பஞ்சாயத்து ராஜ் சட்டத்தில், உள்ளாட்சி அமைப்புகளில் தலித்துகளுக்கென தனித் தொகுதிகள் சுழற்சி அடிப்படையில் ஒதுக்கீடு செய்யும் சட்டத் திருத்தம் கொண்டுவரப்பட்டது. தம்மீது திணிக்கப்படும் சாதி ஆதிக்கத்திற்கு எதிராக, உள்ளாட்சி அமைப்புகளில் தலித் மக்களுக்கு வழங்கப்பட்ட இந்த சட்ட உரிமையை பயன்படுத்தி எழுந்து நிற்க போராடினர்.

உள்ளாட்சி அமைப்புகளில் தலித் மக்களுக்கு அதிகாரத்தை உத்தரவாதம் செய்யும் இந்த உரிமையானது, நீண்ட அரசியல் போராட்டத்தின் விளைவாகும்.

“உழுபவருக்கே நிலம் சொந்தம், உழைப்பவருக்கே அதிகாரம்” என்ற முழக்கத்தின் கீழ், செங்கொடி ஏந்திய நக்சல்பாரி கூலி ஏழை விவாசாயிகளின் எழுச்சி இதற்கு தொடக்க நிலையாகும்.

இந்த அரசு அதிகாரத்திற்கு வெளியே, கூலி ஏழை விவசாயிகளான தலித்துகள், பண்ணையாதிக்கத்தை வீழ்த்தி அதிகாரத்தைக் கையிலெடுத்த அந்த எழுச்சி நாடெங்கும் பற்றிப் பரவியது: இது, இந்த போலி ஜனநாயக அரசுக் கட்டமைப்பை உலுக்கியது.

இன்று, தலித் மக்கள் குறைந்தபட்சம் சில உரிமைகளையாவது பெற்றிருக்கின்றனர் என்றால், அவை நக்சல்பாரித் தியாகிகளாலும், தலித் மக்களின் உரிமைகளுக்காகக் களத்தில் போராடிய முருகேசன் போன்ற பல தியாகிகளின் போராட்டத்தாலும் கிடைத்த உரிமைகளே அன்றி, தேர்தல் அரசியல் தானாக வழங்கிவிட்ட உரிமைகள் அல்ல.

மேலவளவு படுகொலை நடந்து 30 ஆண்டுகள் கடந்தாலும், இன்றைக்கும் தமிழ்நாட்டில் தலித் ஊராட்சித் தலைவர்கள் மரியாதையுடன் நடத்தப்படுவதில்லை. தேசியக் கொடியை ஏற்றவிடாமல் தடுப்பது, ஊராட்சி மன்ற அலுவலகத்திற்குள்ளே நுழையவிடாமல் தடுப்பது. மற்ற உறுப்பினர்களுக்கு சமமாக நாற்காலிகளில் அமர்வதைத் தடுப்பது என்று தலித் ஊராட்சித் தலைவர்கள் சந்திக்கும் அவமானங்களும் அடக்குமுறைகளும் கொஞ்சநஞ்சமல்ல.

வெண்மணி, உஞ்சனை, கொடியங்குளம், காரணை என தலித் மக்களின் உரிமைகளை மறுக்கும் வன்முறைகள் அனைத்தும் ஆதிக்கச் சாதிவெறியின் அடையாளங்களே!

இந்த ஆதிக்கச் சாதிவெறிக்கு சிம்மசொப்பனமாக திகழ்ந்த தியாகிகளான மாடகோட்டை சுப்பு, முருகேசன், மூக்கன், இளவரசன், கோகுல்ராஜ், கவின்; மானாமதுரை ஆகாஷ்… தலித் மக்கள் எழுச்சியின் நாயகர்களே!

ஆம், தலித்துகள் மீதான இந்த வன்முறைகள் அனைத்தும், தலித் மக்கள் எழுச்சிக்கு எதிரான வன்முறைகளாகும்.

அன்று, ஊர் கூடி ஆதிக்கச் சாதி பஞ்சாயத்துப் பேசி நிகழ்த்தப்பட்ட வன்முறைகள், இன்று ஆதிக்கச் சாதிவெறி சங்கங்கள், அதில் ஊடுருவியுள்ள ஆர்.எஸ்.எஸ். சங்கப் பரிவார பாசிச கும்பலால் அரங்கேற்றப்படுகின்றன.

சமூகத்தில் சமத்துவத்திற்கான உணர்வு மேலெழுந்தாலும் ஆதிக்கச் சாதிவெறியர்களும் சங்கப் பரிவாரக் கும்பலும் அதற்கு தடைக்கற்களாக நிற்கின்றன. இந்தத் தடைக்கற்களை உடைப்பதன் மூலமாகத்தான், சமத்துவ சமநீதியைப் பெறமுடியும்.

உள்ளாட்சியில் சமத்துவத்தைக் கோரிய முருகேசன் உள்ளிட்டவர்கள் படுகொலை; கொலைக் குற்றவாளிகளான ஆதிக்கச் சாதிவெறியர்கள் விடுதலை. இதுதான், இந்த அரசு அதிகாரத்தின் உண்மை முகம்.

ஆளும் வர்க்கங்கள் உருவாக்கியிருக்கும் இந்த அரசு அதிகாரத்திற்குள் சென்று, சாதியை ஒழிக்க முடியாது. சமத்துவத்தை அடைய முடியாது என்ற உண்மையை உணரும் போது, விடுதலைக்கான பாதையும் பிறந்து விடுகிறது.

நிலவுகின்ற அரசியல் அதிகார அமைப்பிற்கு மாற்றாக, உண்மையான ஜனநாயகத்திற்கான, மாற்று அரசியல் அமைப்பை அது உருவாக்கக் கோருகிறது.

பாசிச சக்திகள், ஆளும் வர்க்கங்கள், ஆதிக்கச் சாதிகளின் அடக்குமுறைகள், வன்முறைகளுக்கு எதிரான எழுச்சியின் மூலமாகவே அது தொடங்கவும் செய்கிறது.

தமிழ் மண்ணின் உரிமையை மீட்க, ஜல்லிக்கட்டுக்காக கிளர்ந்தெழுந்தோம். விவசாயிகளைப் பாதுகாக்க, டங்ஸ்டன் சுரங்கத் திட்டத்திற்கு எதிராகக் கிளர்ந்தெழுந்தோம். கல்குவாரிகள், கிரானைட் குவாரிகள், கார்ப்பரேட் திட்டங்களுக்கு எதிராகப் போராடுகிறோம்.

அந்தவகையில், சமத்துவத்தைப் படைக்க, சாதிவெறியாட்டங்களுக்கு எதிராகக் கிளர்ந்தெழுவோம்!

  • ஆணவப் படுகொலைக் குற்றவாளிகளின் சொத்துக்களைப் பறிமுதல் செய்வது; ஆணவப் படுகொலைகள் மற்றும் சாதி வெறியாட்டங்களைத் தூண்டிவரும் ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க. சங்கப் பரிவார அமைப்புகள், ஆதிக்கச் சாதிவெறிச் சங்கங்களைத் தடை செய்வது; ஆணவப் படுகொலைக்கு உள்ளானவர்களின் குடும்பத்திற்கு ஒரு கோடி ரூபாய் இழப்பீடு வழங்குவது உள்ளிட்ட அம்சங்களைக் கொண்ட ஆணவப் படுகொலைத் தடுப்புச் சிறப்புச் சட்டம் இயற்று!
  • சாதி, மத மறுப்பு மணங்களை மக்கள் முன்னிலையில் அரசே முன்னின்று நடத்தி அங்கீகரி! சாதி, மத மறுப்பு மணம் புரியும் இணையர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்கு! ஊக்கத்தொகை வழங்கு! சாதிவாரிக் கணக்கெடுப்பை நடத்து! மக்கள்தொகைக் கணக்கெடுப்பில் “சாதி, மதமற்றவர்” என்று பதிவு செய்ய தனிப்பிரிவை உருவாக்கு! “சாதி, மதமற்றோர்” என சான்றிதழ் பெற்றவர்களுக்கும் இட ஒதுக்கீடு வழங்கு!

படிக்க: புதிய ஜனநாயகம்
பார்க்க: வினவு, பெருவிழா

மக்கள் அதிகாரக் கழகம்,
மதுரை கிழக்கு மாவட்டம்.
84386 31587

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram



விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க