தென்காசி மாவட்டம் ஆலங்குளம் செட்டியூரைச் சேர்ந்த சுமை தூக்கும் தொழிலாளியான தங்கசாமியின் மகன் ஆகாஷ் (23). இவர் நாடார் சாதியைச் சேர்ந்தவர். முக்கூடல் அருகே உள்ள மேல அரியநாயகிபுரத்தைச் சேர்ந்த முருகனின் மகள் சுஷ்மிதா (21). இவர் தேவர் சாதியைச் சேர்ந்தவர். இருவரும் ஒரே கல்லூரியில் படித்த போது காதலித்து வந்தனர்.
கல்லூரி படிப்பு முடிந்தவுடன் சுஷ்மிதாவின் அப்பா அவருக்கு திருமண ஏற்பாடு செய்யவே, சுஷ்மிதாவும் ஆகாஷூம் வீட்டை விட்டு வெளியேறி திருமணம் செய்துகொண்டனர். பின்னர் போலீசு நிலையத்தில் இருவரும் தஞ்சமடைந்தார்கள். இரு வீட்டாரையும் அழைத்துப் பேசியதில் சுஷ்மிதாவின் வீட்டார் சாதி கடந்த இவர்களின் திருமணத்தை ஏற்றுக்கொள்ளவில்லை.
அதன் பின் ஆகாஷூம் சுஷ்மிதாவும் சிவகாமிபுரத்தில் வாடகைக்கு வீடு எடுத்து வாழ்க்கையை நடத்தி வந்தார்கள். சுமார் மூன்று மாத காலமாக பேசாமல் இருந்து வந்த சுஷ்மிதாவின் அப்பா முருகன், கடந்த 10 நாட்களாக வீட்டிற்கு வருவதும் போவதுமாக இருந்து நன்றாகப் பேச ஆரம்பித்துள்ளார். முருகன் சமாதானமாகி தங்களை ஏற்றுக்கொண்டுவிட்டார் என்றே இருவரும் மகிழ்ந்திருந்தனர். ஆனால், அவர்களை நோட்டமிடுவதற்காகவே முருகன் வந்து போயுள்ளார்.
இந்நிலையில், கடந்த செப்டம்பர் 10 அன்று மாலை அவர்களின் வீட்டிற்குள் நுழைந்த முருகன், தான் மறைத்து எடுத்துக் கொண்டுவந்த அரிவாளால், ஆகாஷை தலை, கை, கால் என்று சரமாரியாக சாதிவெறி, கொலைவெறியுடன் வெட்டியுள்ளார். குறுக்கே வந்து தடுத்த சுஷ்மிதாவின் கையிலும் வெட்டி உள்ளார். அங்கிருந்து தப்பிய ஆகாஷை அக்கம்பக்கத்தினர் காப்பாற்றியுள்ளனர். படுகாயமடைந்த ஆகாஷ் தற்போது மேல் சிகிச்சைக்காக திருநெல்வேலி உயர்தர சிறப்பு மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். வெட்டிவிட்டு தப்பிய முருகனை போலீசு கைது செய்ததாக செய்திகள் வந்துள்ளன.
ஆகாஷும் சுஷ்மிதாவும் அடைக்கலமான போலீசு நிலையத்தில் அவர்களுக்கு உரிய பாதுகாப்பை வழங்குவதற்கு பதிலாக, ஒரு வருடம் வெளியூர் சென்று தங்கிக் கொள்ளுமாறு கூறியுள்ளார்கள். இதனை காரணமாக வைத்துக்கொண்டு தற்போதைய தாக்குதலுக்கு பாதிக்கப்பட்டவர்களையே குற்றவாளியாக்குகிறது போலீசு. சாதி மறுப்பு திருமணம் செய்து கொண்டவர்களுக்கு உரிய பாதுகாப்பு கொடுக்க வேண்டும் என்ற உச்சநீதிமன்றத்தின் வழிகாட்டுதலை போலீசு பின்பற்றவில்லை; சாதிவெறியர்களுக்கு உரிய எச்சரிக்கை விடுக்கவும் இல்லை. போலீசின் அலட்சியமும் இத்தாக்குதலுக்கு ஒரு காரணமாக உள்ளது.
000

மாரத்தான் போட்டியில் கலந்துகொண்டு பல பதக்கங்களையும் கோப்பைகளையும் வாங்கியவர் ஆகாஷ். மென்மேலும் இதில் சாதிக்க தன்னை தயார்படுத்தி வருபவர். ஆனால், அவர் வாங்கிய பதக்கங்களோ, தன் மகளின் விருப்பமோ, அவரது வாழ்க்கையோ முருகனுக்கு ஒரு பொருட்டாக தெரியவில்லை. அவருக்கு அவரது சாதி ‘பெருமையும்’ ‘கௌரவமும்’ காப்பாற்றப்பட வேண்டும். அப்படித்தான் சொல்லிக் கொடுக்கப்பட்டிருக்கிறது முருகன்களுக்கு.
ஒரு சுமை தூக்கும் தொழிலாளியின் மகனும் ஒரு கொத்தனார் வேலை பார்க்கும் தொழிலாளியின் மகளும் இச்சமூகத்தில் காதலித்து திருமணம் செய்துகொள்ள முடியாமல் சாதி தடுத்துக்கொண்டிருப்பதை இச்சம்பவத்தின் மூலம் மீண்டும் உணர்ந்துகொள்ள முடிகிறது.
‘இந்து மத காவலர்கள்’ யாரும் இந்தச் சாதிவெறி தாக்குதலை இதுவரை கண்டிக்கவில்லை. ‘இந்துவாக’ இருந்தாலும் சாதி வேறுதானே. அவரவர் சாதிக்குள் அவரவர் பெண் எடுத்து, பெண் கொடுத்து வாழ்ந்து கொள்வதுதான் இந்து மதத்தை காப்பதற்கு சிறந்த வழி. இந்த கோட்பாட்டை மீறுபவர்கள் வெட்டிக் கொல்லப்பட வேண்டியவர்கள் என்பதுதான் மனுநீதி. இந்த மனு நீதியை ‘சூத்திர’ இந்துக்களின் வழியே நிலைநாட்டுவதுதான் பார்ப்பன இந்துமத நியதி.
தங்களை ஆண்ட சாதி என்று நினைத்துக்கொள்ளும் ‘சூத்திர’ இந்துக்களில் சாதிவெறி பிடித்த சிலர், தங்களை ஆதிக்கச் சாதிவெறி சங்கமாகத் திரட்டிக்கொண்டு, சாதிவெறியை மக்கள் மத்தியில் தூண்டுகிறார்கள். தமிழ்நாட்டில் காலூன்றுவதற்கு தொடர்ந்து சந்தர்ப்பத்தை எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் ஆர்.எஸ்.எஸ். – பா.ஜ.க. கும்பல் இந்தச் சாதிவெறி சங்கங்களை தங்களின் கீழ் பிணைத்துக்கொண்டு, பின்னாலிருந்து அதை இயக்கி, மென்மேலும் சாதிவெறியை தூண்டிவிட்டுக் கொண்டிருக்கின்றன.
இந்த ஆதிக்கச் சாதிவெறி சங்கங்களையும் ஆர்.எஸ்.எஸ். – பா.ஜ.க. கும்பலையும் தடை செய்ய உழைக்கும் மக்கள், ஜனநாயக சக்திகள் அனைவரும் ஒன்றிணைந்து போராட வேண்டும். அதன் வழியாக மட்டுமே இம்மாதிரியான சாதிவெறி தாக்குதல்களையும் ஆணவப் படுகொலைகளையும் நம்மால் தடுத்து நிறுத்திட முடியும்.
தமிழ்நாடு அரசே…
- பாதிக்கப்பட்ட ஆகாஷுக்கு உயர்தரமான, இலவச சிகிச்சையை முழுமையாக வழங்கிடு!
- பாதிக்கப்பட்ட இணையருக்கு உரிய நிவாரணம் வழங்கு!
- சுஷ்மிதாவுக்கு அரசு வேலை வழங்கு!
- பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்கு!
- ஆணவப் படுகொலைகளுக்கு எதிரான சிறப்பு சட்டத்தை உடனே இயற்றிடு!
பதிவு
மக்கள் அதிகாரக் கழகம்,
நெல்லை – தூத்துக்குடி மாவட்டங்கள்.
9385353605
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram, Threads





