25.09.2026

ஜீரம் பள்ளத்தாக்கு மாவோயிஸ்ட் தாக்குதல் வழக்கில் நீதிமன்றத்தின் தீர்ப்பு – பாதிக்கப்பட்ட பழங்குடி மக்களுக்கு இழைக்கப்பட்ட அநீதி!

பத்திரிகைச் செய்தி

மே 25 2013 அன்று சத்தீஸ்கர் ஜீரம் பள்ளத்தாக்கில் நடந்த தாக்குதல் தொடர்பான வழக்கில் 10 மாவோயிஸ்ட் போராளிகளுக்கு செப்டம்பர் 17 2026 அன்று மரண தண்டனை விதித்துள்ளது சத்தீஸ்கர் மாநிலத்தின் ஜத்தல்பூரில் அமைந்துள்ள சிறப்பு தேசிய புலனாய்வு முகமை நீதிமன்றம். இதில் முக்கிய மாவோயிசத் தலைவர்களான திப்பிரி திருப்பதி (எ) தேவுஜி மற்றும் பர்சே தேவா ஆகியோரும் அடங்குவர்.

இந்தத் தீர்ப்பானது பாதிக்கப்பட்ட வெகு மக்களுக்கு அநீதி இழைப்பதாகவும் வரலாற்றை மறைப்பதாகவும் உள்ளது.

சத்தீஸ்கர் மாநிலத்தில் உள்ள பஸ்தர் மற்றும் தண்டேவாடா பகுதிகளில் உள்ள கனிம வளங்களை கொள்ளை அடிக்க டாட்டா, எஸ்ஸார் போன்ற கார்ப்பரேட் கும்பல்களுடன் இணைந்து கொண்டு அங்கு வாழும் பழங்குடியின மக்களை விரட்டியடிக்க அப்பகுதியைச் சேர்ந்த பெருநில உடைமையாளர் குடும்பத்தில் பிறந்த மகேந்திர கர்மா செயல்பட்டார்.

2005 ஆம் ஆண்டு மத்திய மாநில அரசுகள் ஆயுத உதவிகள் வழங்க, கார்ப்பரேட்டுகள் நிதி உதவி வழங்க ‘சல்வா ஜூடும்’ (சுத்திகரிக்கும் வேட்டை) என்ற பயங்கரவாத குண்டர் படையைக் கட்டியமைத்தார் மகேந்திர கர்மா.

அடுத்த ஐந்து ஆண்டுகளில் தமது எஜமானர்களான கார்ப்பரேட்டுகளின் சார்பில் தமது மக்கள் மீது சல்வா ஜூடும் படையினர் நர வேட்டையை நடத்தினர். இந்தப் படையால் சுமார் 644 கிராமங்களில் வீடுகள் எரிக்கப்பட்டு அங்கு வாழ்ந்த 20 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் நாடோடிகளாக்கப்பட்டனர், சுமார் 1 லட்சம் பழங்குடி மக்கள் தென் சத்தீஸ்கரில் உள்ள பல்வேறு முகாம்களில் குடியேற்றப்பட்டனர்; பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட பழங்குடியின மக்கள் கோரமாகக் கொல்லப்பட்டனர்; பல நூற்றுக்கணக்கான பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டனர். இவற்றில் மகேந்திர கர்மா தானே தலைமை ஏற்று நடத்திய கொடுமைகளும் அட்டூழியங்களும் ஏராளம்.

மாவோயிஸ்டுகள் செயல்படுவதற்கு கிராமங்கள் இல்லாமல் செய்வதாகவும், மக்களை மாவோயிஸ்டுகள் தாக்கத்திலிருந்து பாதுகாப்பதற்காக முகாம்களில் குடியேற்றுவதாகவும் கூறி நூற்றுக்கணக்கான பழங்குடி மக்கள் படுகொலை செய்யப்பட்டனர்; பெண்கள் பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கப்பட்டனர்; சொந்த மண்ணில் அகதிகளாக்கப்பட்டனர்.

இவற்றையெல்லாம் அரசும் போலீசும் நீதிமன்றங்களும் வேடிக்கை பார்த்தன. இந்த நடவடிக்கையில் கொல்லப்பட்ட அரச படைகளுக்கும் அரசியல்வாதிகளுக்கும் பல லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கி, கண்ணீர் அஞ்சலி செய்து கார்ப்பரேட்டுகளின் சார்பில் நடத்தப்பட்ட இந்த கொலை வேட்டையை ஊக்குவித்தது அரசு.

பழங்குடி மக்கள் மத்தியில் பிரிவு ஏற்படுத்தி, அவர்களது கிராம வாழ்க்கையை அழித்து, பெரும் எண்ணிக்கையிலான மக்களை நாடோடிகளாக மாற்றிய சல்வா ஜூடும் கூலிப்படைக்கு எதிரான பழங்குடியினர் போராட்டங்களும் மாவோயிஸ்ட் தாக்குதல்களும் தீவிரமடைந்தன. பாதிக்கப்பட்ட மக்களில் பலர் போராளிகளாக மாறினர். 2008-ஆம் ஆண்டு இறுதிக்குள் மக்கள் மீதான சல்வா ஜூடுமின் பயங்கரவாத பிடி பெருமளவு பலவீனமடைந்தது. மக்கள் தத்தமது கிராமங்களுக்கு மீண்டும் குடியேற ஆரம்பித்தனர்.

இந்தக் கொலை வெறியாட்டங்களுக்கு எதிராக மனித உரிமை அமைப்புகள் தொடர்ந்த வழக்கில் 2011 ஆம் ஆண்டு சல்வா ஜூடும் அமைப்பை அரசே நடத்துவது சட்ட விரோதமானது என்று கூறி ஏற்கெனவே பழங்குடி மக்கள் மற்றும் மாவோயிஸ்ட் போராளிகளின் எதிர்ப்பால் பலவீனம் அடைந்த சல்வா ஜூடும் படையைக் கலைக்கும்படி நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

ஆனால், சல்வா ஜூடுமின் பயங்கரவாத வெறியாட்டத்தில் கொல்லப்பட்ட பழங்குடி மக்கள், பாலியல் வன்முறைக்கு உட்படுத்தப்பட்ட பழங்குடி பெண்கள், அழிக்கப்பட்ட கிராமங்கள் இவற்றுக்கு சத்தீஸ்கர் அரசும், மத்திய அரசும் எந்த விதமான நியாயத்தையும் வழங்கவில்லை. அந்த குற்றங்களை இழைத்தவர்கள் மீது வழக்கு தொடுத்து தண்டனை வழங்கவில்லை. அவற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்கவில்லை.

மாறாக சல்வா ஜூடுமை உருவாக்கி, கட்டியமைத்து, இயக்கிய மகேந்திர கர்மா சத்திஸ்கர் காங்கிரசின் முக்கிய தலைவராகத் தொடர்ந்தார். அவருக்கு அரசின் Z+ பாதுகாப்பு வழங்கப்பட்டது.

இந்த அட்டூழியங்களுக்குப் பதிலடி தரும் விதமாக 2013 ஆம் ஆண்டு மே 25ஆம் தேதி சத்தீஸ்கர் மாநிலம் தற்போதைய பஸ்தர் மாவட்டத்தின் ஜீரம் பள்ளத்தாக்கில் இருக்கும் வனப்பகுதியில் சல்வா ஜூடும் படையின் தலைவனாகிய மகேந்திர சிங் கர்மா மற்றும் அரசு பயங்கரவாத தாக்குதலைக் கட்டவிழ்த்து விட்ட முன்னாள் மாநில காங்கிரஸ் தலைவருமான நந்தக்குமார் பட்டேல் உள்பட பிரச்சார ஊர்தியில் சென்ற காங்கிரஸ் கட்சியினரை வழிமறித்து மாவோயிஸ்ட் போராளிகள் தாக்குதல் நடத்தினர். இத்தாக்குதலில் 27 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர், 35 பேர் படுகாமடைந்தனர்.

இந்த தாக்குதலை அப்போதைய பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி ஆகியோர் கடுமையாகக் கண்டனம் செய்தனர். கோப்ரா கமாண்டோ பிரிவு அடங்கிய சி.ஆர்.பி.எஃப். படையினர் 600 பேர் சத்தீஸ்கருக்கு அனுப்பப்பட்டனர். தாக்குதலில் கொல்லப்பட்டவர்களுக்கு மத்திய, மாநில அரசுகள் தலா ரூ 5 லட்சம் உதவித் தொகை வழங்கின. ஆனால் பழங்குடி மக்களை இந்திய துணை இராணுவப் படைகள் கொன்றதற்கெல்லாம் இத்தகைய நிவாரணங்கள் ஏதுமில்லை. சொல்லப் போனால் இவர்களின் கொலைகளுக்குக் கணக்கே இல்லை.

இதனையடுத்து “மனிதத் தன்மையற்ற கொடூரங்கள், படுகொலைகள், முடிவில்லாத பயங்கரவாதத்தை பஸ்தர் பழங்குடியின மக்கள் மீது கட்டவிழ்த்து விட்ட சல்வாஜூடும் எனும் பாசிச குண்டர் படையின் தலைவன் எங்களால் அழித்தொழிக்கப்பட்டுள்ளான். ஆயிரக்கணக்கான பழங்குடி மக்கள் சல்வாஜூடும் குண்டர் படையாலும், அரசின் ஆயுதப் படைகளாலும் கொல்லப்பட்டதற்குப் பழிவாங்கவே நாங்கள் இத்தாக்குதலை நடத்தியுள்ளோம்”என்று மாவோயிஸ்டு கட்சியின் சத்தீஸ்கர் மாநில தண்டகாரண்யா சிறப்புப் பிராந்தியக் கமிட்டி 2013 மே 26 அன்று வெளிப்படையாக அறிவித்தது.

இந்த தாக்குதலுக்குப் பிறகு தேசிய புலனாய்வு முகமை (NIA) மொத்தம் 39 பேர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது.

ஆனால் இப்போதும் நக்சல் ஒழிப்பு என்ற பெயரில் ஆபரேஷன் ககர் என்ற பாசிச திட்டத்தின் கீழ் சத்தீஸ்கரின் கனிம வளங்களை அம்பானி அதானிகளுக்கு தாரைவாக்க அப்பாவி பழங்குடி இன மக்களைக் கொலை செய்தும், இந்த கொடூரத்திற்கு எதிராக போராடும் மாவோயிச தோழர்களை வேட்டையாடியும், மாவோயிஸ்டுகள் என்று முத்திரை குத்தி பழங்குடியின பெண்களை கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்தும், பழங்குடியின மக்களை ராணுவ முகாம்களில் அடைத்து வைத்தும் சல்வா ஜுடுமின் வெறியாட்டங்களைத் தொடர்ந்து வருகிறது இந்த பாசிச மோடி அரசு.

மேற்கண்ட தீர்ப்பைப் பற்றி சத்தீஸ்கரின் தற்போதைய முதலமைச்சர் விஷ்ணுதேவ் சாய் “இது நீதிக்குக் கிடைத்த வெற்றி” என்றும் “மோடியும் அமித்ஷாவையும் நக்சலைசத்தை ஒழித்து, சத்தீஸ்கரின் பஸ்தரில் பல தசாப்தங்களாக நடந்து கொண்டிருந்த மாவோயிஸ்ட் தாக்குதல்களை அடக்கி அமைதியை நிலைநாட்டி விட்டனர்” என்றும் உச்சி முகர்ந்து பாராட்டுகிறார்.

ஆனால், அன்றிலிருந்து இன்று வரை அரசின் பயங்கரவாத கொலை வெறியாட்டத்தால் பாதிக்கப்பட்ட பழங்குடி மக்களின் நிலை இன்னும் கேள்விக்குறியாகவே இருக்கிறது.

பாதிக்கப்பட்ட பழங்குடி மக்களைப் பற்றி மத்திய அரசோ மாநில அரசோ கண்டு கொள்ளவில்லை. ஆனால் தங்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகளை எதிர்த்து எதிர்த் தாக்குதல் நடத்திய பழங்குடி மக்களும் மாவோயிச போராளிகளும் கண்மூடித்தனமாக ஒடுக்கப்பட்டு வருகின்றனர். எனவேதான், இத்தீர்ப்பை பாதிக்கப்பட்ட வெகு மக்களுக்கு எதிராகவும் ஒரு தலைப்பட்சமானதாகவும் போலீசு மற்றும் துணை ராணுவ படையின் அராஜகங்களை ஊக்குவிக்கும் விதமாகவும் அளிக்கப்பட்ட அநீதியான தீர்ப்பாகவே நாம் பார்க்க வேண்டியுள்ளது. ஆகவே, இந்த அநீதியான தீர்ப்பு ரத்து செய்யப்பட வேண்டும். ஊடகங்களும் பாதிக்கப்பட்ட மக்களைப் பற்றி வாய் திறக்காமல் இத்தீர்ப்பைப் பாராட்டி வருகின்றன.

ஆகவே, அம்பானி அதானிகளின் கொள்ளைக்காக சத்தீஸ்கரின் இயற்கை வளங்கள் சூறையாடப்படுவதையும் அப்பாவி பழங்குடியின மக்கள், இதை எதிர்த்துப் போராடும் மாவோயிஸ்ட் தோழர்கள், சமூக செயற்பாட்டாளர்கள், இயற்கை ஆர்வலர்கள் தாக்கப்படுவதையும் மக்கள் அதிகாரக் கழகம் வன்மையாகக் கண்டிக்கிறது.

அநீதியாக வழங்கப்பட்ட இத்தீர்ப்புக்கு எதிராகவும் இயற்கை வள சூறையாடலுக்கு எதிராகவும் பழங்குடி மக்கள் மீது நடக்கும் தாக்குதலுக்கு எதிராகவும் போராட்டங்களைக் கட்டியமைக்க வேண்டும் என்று அறைகூவல் விடுக்கிறது.

  • ஆபரேஷன் ககர் என்ற பெயரில் பழங்குடி மக்களை வேட்டையாடுவது, பெண்களை பாலியல் வன்புணர்வு செய்வது, மக்களை ராணுவ முகாம்களில் அடைப்பது, ட்ரோன்கள் மூலம் சொந்த நாட்டு மக்களைத் தாக்குவது மற்றும் கண்காணிப்பது போன்ற கொடூரச் செயல்களை உடனே நிறுத்து!
  • காங்கிரஸ் அரசின் சல்வா ஜூடும், பச்சை வேட்டை மற்றும் ஆபரேஷன் ககர் ஆகிய திட்டங்களால் பாதிக்கப்பட்ட மக்கள் அனைவருக்கும் உரிய நிவாரணம் வழங்கு!
  • காங்கிரஸ் அரசின் சல்வா ஜூடும், பச்சை வேட்டை மற்றும் மோடி அரசின் ஆபரேஷன் ககர் ஆகிய திட்டங்களில் மக்கள் விரோத கொலை வெறியாட்டங்களில் ஈடுபட்ட அனைவருக்கும் உரிய தண்டனை வழங்கு!
  • பாதிக்கப்பட்ட மக்களுக்கு அநீதி இழைக்கப்படும் வகையிலும் ஒரு தலை பட்சமானதாகவும் பாசிச நோக்கம் கொண்டதாகவும் இருக்கும் இந்த அநீதியான தீர்ப்பை ரத்து செய்!
  • சத்தீஸ்கரின் கனிம வளங்களையும் காடுகளையும் அம்பானி அதானிகளுக்கு தாரைவார்க்காதே!


தோழமையுடன்
தோழர் சி. வெற்றிவேல் செழியன்,
கழகப் பொதுச் செயலாளர்,
மக்கள் அதிகாரக் கழகம்,
தமிழ்நாடு – புதுவை.
9962366321

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram, Threads



விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க