தங்கள் நாட்டின் இயற்கை வளங்கள் அமெரிக்க அதிபர் பாசிஸ்ட் டிரம்பின் குடும்பத்திற்குத் தாரை வார்க்கப்படுவதைக் கண்டித்து தங்கள் நாட்டின் அரசுக்கு எதிராக அல்பேனிய மக்கள் நூறு நாட்களுக்கும் மேலாக தீரத்துடன் போராடி வருகின்றனர். மக்களால் ‘பிளமிங்கோ புரட்சி’ என்று அழைக்கப்படு வருகின்ற இப்போராட்டம் தீவிரமடைந்து வருகிறது.
அல்பேனியாவின் தென்மேற்கு கடலோரப் பகுதியில் அமைந்துள்ள சாசான் தீவில் பன்னாட்டு முதலாளிகள், மேட்டுக்குடி வர்க்கத்துக்கான ஐந்து நட்சத்திர சொகுசு விடுதிகள், படகு துறைமுகம் போன்றவை 1.4 பில்லியன் யூரோக்கள் (தோராயமாக 15,250 கோடி) மதிப்பீட்டில் அமைக்கப்பட உள்ளன.
இதனைப் போன்று பாதுகாக்கப்பட்ட இயற்கை கடலோர சரணாலயப் பகுதியில் வ்யோசா-நார்ட்டா (Vjosa-Narta), ஸ்வரெனெக் (Zvërnec) மற்றும் அதை ஒட்டிய கடலோரப் பகுதியில் 10,000 சொகுசு விடுதி அறைகள் மற்றும் குடியிருப்பு வில்லாக்கள் கொண்ட சுற்றுலா வளாகம் அமைக்கப்பட உள்ளது. இதற்காக 2.5 பில்லியன் முதல் 4.7 பில்லியன் டாலர் வரை செலவிடப்பட உள்ளது.
அல்பேனிய அரசு மற்றும் முதலீட்டாளர்களின் மதிப்பீட்டின்படி, இரண்டு திட்டங்களுக்கும் சேர்த்து ஒட்டுமொத்த ஒருங்கிணைந்த செலவுத் தொகை 4 பில்லியன் யூரோக்கள் (₹4,36,000 கோடி) ஆகும். இத்திட்டத்திற்கு ஆளும் கட்சியான அல்பேனிய சோசலிஸ்ட் கட்சியின் (Socialist Party of Albania) தலைவர் பிரதமர் ஏ.டி ராமா தலைமையிலான அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
அமெரிக்க அதிபர் டிரம்பின் மருமகனான ஜாரெட் குஷ்னரின் (Jared Kushner) “அஃபினிட்டி பார்ட்னர்ஸ்” (Affinity Partners) நிறுவனம் மூலம் இந்த சொகுசு விடுதி திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. மேலும் இத்திட்டத்தில் சவூதி அரேபியா, கத்தார் மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் உள்ளிட்ட நாடுகள் பல பில்லியன்கள் முதலீடு செய்துள்ளன.
ஜாரெட் குஷ்னரின் அஃபினிட்டி பார்ட்னர்ஸ் போன்ற வெளிநாட்டு கார்ப்பரேட் நிறுவனங்கள் அல்பானியாவில் பில்லியன் கணக்கில் முதலீடு செய்ய முன்வந்த போது, நாட்டின் பழமையான வனப்பாதுகாப்புச் சட்டங்கள் அந்நிறுவனங்களுக்குப் பெரிய தடைகளாக இருந்தன. ஏனெனில், முந்தைய சட்டங்களின்படி பாதுகாக்கப்பட்ட இயற்கை வனப்பகுதிகளிலோ அல்லது சதுப்புநிலங்களிலோ பிரம்மாண்டமான கான்கிரீட் கட்டடங்களைக் கட்டவோ, வணிக ரீதியிலான பணிகளை மேற்கொள்ளவோ கடுமையான தடைகள் இருந்தன.
இந்தத் தடைகளை உடைத்து, பன்னாட்டு முதலாளிகளுக்குச் சாதகமாகச் செயல்பட அல்பானிய அரசு 2024-ஆம் ஆண்டில் பாதுகாக்கப்பட்ட பகுதிகள் பற்றிய சட்டத்தில் (சட்டம் எண்: 21/2024) அவசர அவசரமாகத் திருத்தங்களை மேற்கொண்டது.
இதன் மூலம் கார்ப்பரேட் நிறுவனங்கள் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிக்குள் ரிசார்ட்கள், சொகுசு விடுதிகள் கட்ட சட்டப்பூர்வ அனுமதி வழங்கி குஷ்னரின் திட்டத்திற்குப் பாதை அமைத்துக் கொடுத்தது. அத்துடன் மக்கள் வரிப்பணத்தில் பன்னாட்டு நிறுவனங்கள் அமைக்கின்ற சொகுசு விடுதிகளுக்குக் குடிநீர் இணைப்புகள், சிறப்பு மின்சார விநியோகம், கழிவுநீர் சுத்திகரிப்பு மையங்கள் மற்றும் இணைப்புச் சாலைகள் போன்ற அனைத்து உள்கட்டமைப்பு வசதிகளையும் அரசே வழங்குவதற்கு வழிவகை செய்யப்பட்டது.
மேலும், இது தொடர்பான முடிவெடுக்கும் அதிகாரம் சுற்றுச்சூழல் அமைப்புகளிடமிருந்து பறிக்கப்பட்டு, பிரதமரின் தலைமையிலான ‘தேசிய நிலப்பரப்பு கவுன்சிலிடம்’ ஒப்படைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் நாட்டின் இயற்கை வளங்களை டிரம்பின் குடும்பம் சூறையாடுவதற்குப் பாதை அமைத்துக் கொடுக்கப்பட்டுள்ளது. இதற்குப் பின்னர் குஷ்னர் சாசான் தீவு மற்றும் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியில் சொகுசு விடுதிகளைக் கட்டுவதற்கான வரைபடங்களை வெளியிட்டார்.
படிக்க: தென்கொரியா: ஹூண்டாய் தொழிலாளர்களின் வேலைநிறுத்தப் போராட்டம் மாபெரும் வெற்றி
அட்ரியாட்டிக் கடலோரத்தில் அமைந்துள்ள 4,000 ஹெக்டேர் பரப்பளவிலான நார்ட்டா ஏரி (Narta Lagoon), இயற்கை அன்னை அல்பானியாவுக்கு அளித்த விலைமதிப்பற்ற கொடை. உவர்நீர் சதுப்புநிலங்கள், இயற்கை மணல் மேடுகள் மற்றும் அரிய வகை பைன் காடுகள் நிறைந்த இப்பகுதி, சர்வதேச அளவில் முக்கியத்துவம் வாய்ந்த ஒரு சூழலியல் மையமாகும். ஆப்பிரிக்கா மற்றும் ஐரோப்பாவிற்கு இடையே பறவைகள் புலம்பெயரும் பிரதான பாதையான “அட்ரியாட்டிக் பறவைகள் பாதையில்” (Adriatic Flyway) இது அமைந்துள்ளதால், ஆண்டுதோறும் 200-க்கும் மேற்பட்ட அபூர்வ பறவையினங்கள் இங்கு தங்கி இனப்பெருக்கம் செய்து வருகின்றன. மேலும், பல அரிய வகை மீன்கள் மற்றும் நீர் வாழ் உயிரினங்களின் இனப்பெருக்க நர்சரியாகவும் இச்சதுப்புநில அமைப்பே செயல்படுகிறது.
குறிப்பாக, ஆயிரக்கணக்கான பிளமிங்கோ (பூநாரை) பறவைகளின் முதன்மை வாழிடமாகவும், உலகளவில் அழிவின் விளிம்பில் உள்ள ‘லாக்கர்ஹெட்’ (Loggerhead) ஆமைகள் உட்பட சுமார் 70-க்கும் மேற்பட்ட அரிய வகை உயிரினங்களின் புகலிடமாகவும் நார்ட்டா ஏரியும் அதனை ஒட்டிய ஸ்வரெனெக் பகுதியும் விளங்குகின்றன.
நார்ட்டா ஏரியின் குறைந்த ஆழமும், உப்புத்தன்மையும் பிளமிங்கோ பறவைகளுக்கு உகந்த சூழலைத் தருகின்றன. இங்கு ஒரே நேரத்தில் ஆயிரக்கணக்கான பிளமிங்கோ பறவைகளைக் காண முடியும். ஏரியில் உள்ள நுண்ணிய இறால்கள் (Artemia salina) மற்றும் பாசிகளை உட்கொள்வதால்தான் பிளமிங்கோக்களுக்கு அந்த அழகிய இளஞ்சிவப்பு (Pink) நிறம் கிடைக்கிறது.
மே மாதத்தில் ஜாரெட் குஷ்னரின் நாசகரத் திட்டத்திற்காகப் பொதுமக்கள் சுதந்தரமாகச் சென்றுவந்த ஸ்வரெனெக் மற்றும் வ்யோசா-நார்ட்டா கடற்கரைப் பகுதியில் கனரக பொக்லைன் இயந்திரங்கள் இறக்கப்பட்டு மணல் குன்றுகள் அழிக்கப்பட்டு, கடற்கரைகளுக்குச் செல்லும் பாதைகள் கம்பிவேலி போட்டு அடைக்கப்பட்டன.
இதற்கு மக்கள் எதிர்ப்பு தெரிவித்த போது தனியார் நிறுவனப் பாதுகாவலர்களுக்கும் மக்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. நிலத்தைச் சுற்றி முள்வேலிகள் அமைத்து, மக்கள் தங்கள் சொந்தக் கடற்கரைக்கே செல்ல முடியாமல் தடுக்கப்பட்ட செய்தி நாடு முழுவதும் பரவி பெரிய கொந்தளிப்பை ஏற்படுத்தியது.
பின்னர் ஸ்வரெனெக் என்ற இடத்தில் நடைபெற்ற போராட்டம் ஜூன் மாதத்தில் தங்கள் நாட்டின் இயற்கை வளங்கள் தனியார் நிறுவனத்திற்குத் தாரைவார்க்கப்படுவதற்கு எதிரான நாடு தழுவிய போராட்டமாக மாறியது. தலைநகர் திரானாவில் உள்ள ஸ்காண்டர்பெக் சதுக்கம் போராட்டத்தின் மையமாக உருவெடுத்தது. அங்கு நடைபெற்ற போராட்டங்களில் ஆயிரக்கணக்கான கல்லூரி மாணவர்கள், இளைஞர்கள், சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் என குடும்பமாகக் கலந்து கொண்டு தங்களது எதிர்ப்பைப் பதிவு செய்து வருகின்றனர். பலர் காலையில் தங்களது வேலைகளுக்குச் சென்று விட்டு மாலை நேரத்தில் பேரணிகளில் கலந்து கொள்கின்றனர்.
இப்போராட்டத்தில் பங்கேற்றவர்கள் “திட்டத்தை ரத்து செய்” என்று முழக்கமிட்டவாறும், “அம்பானியா விற்பனைக்கு அல்ல”, “இவான்கா, வீட்டிற்குப் போ” என்று எழுதப்பட்ட பதாகைகளை ஏந்தியவாறும் ரிசார்ட் கட்டும் திட்டத்தை அரசாங்கம் உடனடியாக நிறுத்த வேண்டும் என்ற முழக்கங்களை எழுப்பினர்.
நாசகரத் திட்டத்தால் பாதிக்கப்படக்கூடிய இளஞ்சிவப்பு நிறப் பறவையான பிளமிங்கோவின் உருவம் பொறித்த பதாகைகளை மக்கள் ஏந்தியிருந்ததால், இப்போராட்டம் ‘பிளமிங்கோ புரட்சி’ என்று அழைக்கப்படுகிறது. இந்த அரசு எதிர்ப்புப் போராட்டங்கள் அல்பானியாவையே உலுக்கியுள்ளன.
போராட்டம் தீவிரமடையத் தொடங்கிய போது “அல்பானியர்களாகிய எங்களால் இங்கு வாழ முடியாது” என்றும், “எங்கள் நாடு வெளிநாட்டினருக்குச் சொர்க்கமாகவும், அல்பானியர்களுக்கு நரகமாகவும் மாறி வருகிறது என்ற உணர்வுமே இதற்குக் காரணம்” என்று போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஆர்வலர் அரில்டா லேஷி தெரிவித்தார்.
போராட்டம் 100வது நாளை (செப்டம்பர் 8) எட்டிய மறுநாள் கோடைக்கால விடுமுறைக்குப் பின் நாடாளுமன்றம் கூடியபோது ஸ்காண்டர்பெக் சதுக்கத்திலிருந்து பேரணியாகச் சென்ற ஆயிரக்கணக்கான மக்கள் நாடாளுமன்றத்தை முற்றுகையிட்டனர். எம்.பி.க்கள் மற்றும் அமைச்சர்களின் வாகனங்கள் மீது மக்கள் முட்டைகள், தக்காளிப் பழங்கள் மற்றும் பிளாஸ்டிக் பாட்டில்களை வீசி எறிந்து தங்களது எதிர்ப்பைப் பதிவு செய்தனர். உடனே போலீசு கண்ணீர்ப்புகைக் குண்டுகள் மற்றும் தடியடிகளைப் பயன்படுத்திப் போராட்டத்தைக் கலைத்து. பல போராட்டக்காரர்கள் கைது செய்யப்பட்டுத் தடுத்து வைக்கப்பட்டனர்.
போராட்டத்தில் பங்கேற்ற எலிடான் மெஹ்மேதாஜ் “நாங்கள் மாற்றத்தை விரும்புவதால் இங்கு வந்துள்ளோம். இளைஞர்கள் போராடிக் கொண்டிருக்கிறார்கள். வாழ்க்கை கடினமாகி வருகிறது; ஆனால், அரசு செவிசாய்க்கவில்லை. அல்பானியாவால் இதைவிடச் சிறப்பாகச் செயல்பட முடியும் என்று நாங்கள் நம்புகிறோம்,” என்று தெரிவித்தார்.
“நாங்கள் பெரிதாக எதுவும் கேட்கவில்லை. அல்பானிய குடிமக்களுக்காக, எங்கள் நாட்டிற்காக, எங்கள் எதிர்காலத்திற்காக – ஒரு சிறந்த எதிர்காலத்தை மட்டுமே நாங்கள் கேட்கிறோம்,” என்று அவர் கூறினார்.
இந்நிலையில் சுற்றுச்சூழலையும், தங்கள் நிலங்களையும் பாதுகாக்கத் தொடங்கிய இப்போராட்டம் நாளடைவில் ஆளும் அரசின் மீதான ஊழல் மற்றும் எதிர்க்கட்சி தலைவர் உள்ளிட்டு ஒட்டுமொத்த அரசு கட்டமைப்புக்கு எதிரான மக்கள் இயக்கமாக மாறியுள்ளது. “ராமா சிறைக்குச் செல்”, “பெரிஷா (எதிர்க்கட்சித் தலைவர்) சிறைக்குச் செல்” (Rama në burg, Berisha në burg) என்பன மக்களின் முழக்கமாக மாறியுள்ளன.
ஆனால் மக்களின் போராட்டத்தைத் துளியும் மதிக்காத பிரதமர் எடி ராமா “நான் இங்கு இருக்கும் வரை முதலீடுகள் நிற்காது, அல்பானியாவை அண்டை நாடுகள் பொறாமைப்படும் ஒரு சுற்றுலா மையமாக மாற்ற நான் விரும்புகிறேன், இந்தத் திட்டம் அந்த லட்சியத்தின் ஒரு பகுதியாகும்,” என்று திமிர்த்தனமாகக் கூறியுள்ளார்.
அமெரிக்காவில் டிரம்ப் – மஸ்க் தலைமையிலான பாசிச கும்பல் ஆட்சியைக் கைப்பற்றிய பிறகு அக்கும்பல்களின் நலன்களுக்காக பல்வேறு நாட்டின் இயற்கை வளங்கள் சூறையாடப்பட்டுக் கொண்டிருக்கின்றன. அந்த வகையில் டிரம்ப் குடும்பத்தின் வணிக வேட்டைக்காக அல்பானிய நாட்டின் இயற்கை வளங்கள், சூழலியல் மண்டலங்கள் அழிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன. இதற்கு அந்நாட்டின் அரசும் ஒப்புதல் அளித்துள்ளது.
மக்களின் போராட்டத்தினால் இந்த நாசகரத் திட்டம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. ஆனால் மக்கள் 2024-இல் திருத்தப்பட்ட பாதுகாக்கப்பட்ட பகுதிகள் சட்டத்தை ரத்து செய்து பாதுகாக்கப்பட்ட இயற்கைப் பகுதிகளுக்குப் பழைய சட்டப் பாதுகாப்பை அளிக்க வலியுறுத்தி தினந்தோறும் இரவில் ஸ்காண்டர்பெக் சதுக்கத்திலிருந்து நகரின் முக்கிய சாலைகளில் பேரணியாகச் சென்று பிரதமர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
எனவே தங்கள் நாட்டின் இயற்கை வளங்களையும், நிலங்களையும் அந்நிய நாட்டுக்கு விட்டுக்கொடுக்க மாட்டோம் என்று உறுதியாகப் போராடி வருகின்ற அல்பானிய மக்களுக்கு ஆதரவாகக் குரல் எழுப்புவோம்.
![]()
இன்குலாப்
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram, Threads











