21.09.2026
சென்னை பல்கலைக்கழகத்தில் சர்வாதிகாரம் | AIYF கண்டனம்
மாணவர் தீரனின் சேர்க்கை ரத்தை உடனடியாகத் திரும்பப் பெறுக!
சென்னைப் பல்கலைக்கழக மாணவர் தீரன் (எ) நவீன் அவர்களின் முதுகலை இந்திய தத்துவவியல் படிப்பிற்கான சேர்க்கையைப் பல்கலைக்கழக நிர்வாகம் ரத்து செய்திருப்பதை அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம் (AIYF) தமிழ்நாடு மாநிலக்குழு கண்டிக்கிறது.
தீரன் 2024–2026 கல்வியாண்டில் சென்னைப் பல்கலைக்கழகத்தின் அண்ணா பொது வாழ்வியல் மையத்தில் M.A. Public Administration படிப்பை முடித்துள்ளார். தொடர்ந்து 2026–2028 கல்வியாண்டில் M.A. Indian Philosophy படிப்பில் சேர்ந்து, கல்விக் கட்டணத்தைச் செலுத்தி இரண்டு மாதங்களாக வகுப்புகளுக்கும் சென்று வந்துள்ளார்.
கிராமப்புறத்திலிருந்து தினமும் வந்து செல்வதில் உள்ள சிரமத்தால் பல்கலைக்கழக விடுதியில் இடம் கோரியுள்ளார். விடுதி வசதி மறுக்கப்பட்டதைத் தொடர்ந்து, 07.09.2026 அன்று பதிவாளரிடம் எழுத்துப்பூர்வமாக மனு அளித்துள்ளார். அதற்கு அடுத்த நாளான 08.09.2026 அன்று அவரது சேர்க்கை ரத்து செய்யப்பட்டதாகப் பல்கலைக்கழகம் கடிதம் அனுப்பியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
கடந்த கல்வியாண்டில் மாணவர் நடத்தை விதிகளைத் தீரன் கடுமையாக மீறியதாகப் பல்கலைக்கழகம் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளது. ஆனால், கடந்த கல்வியாண்டில் அவர் மீது முறையான விசாரணை நடத்தப்பட்டதா, குற்றச்சாட்டுகள் குறித்து விளக்கம் கேட்கப்பட்டதா, ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதா என்பதற்கான விவரங்கள் வெளிப்படையாகத் தெரிவிக்கப்பட வேண்டும்.
தீரன் பல்கலைக்கழகத்தில் குடிநீர், கழிப்பிடம், விடுதி, வகுப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகளுக்காகவும், மாணவர் உரிமைகளுக்காகவும், சாதியப் பாகுபாடுகளுக்கு எதிராகவும் தொடர்ந்து குரல் கொடுத்து வந்துள்ளார்.
SC/ST மாணவர்களுக்கான குறைதீர்ப்புக் கூட்டங்களை முறையாக நடத்த வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார். மாணவர்களை ஒருங்கிணைத்து சாதி எதிர்ப்பு நடவடிக்கைகளிலும் ஈடுபட்டுள்ளார். மாணவிகளுக்கான விடுதி தொடர்பான பிரச்சினையில் சென்னை உயர் நீதிமன்றத்தையும் அணுகியுள்ளார்.
இத்தகைய மாணவர் உரிமைச் செயல்பாடுகளுக்குப் பின்னர் அவரது சேர்க்கை ரத்து செய்யப்பட்டிருப்பது, இந்த நடவடிக்கை பழிவாங்கும் நோக்கத்துடன் மேற்கொள்ளப்பட்டதா என்ற தீவிரமான கேள்வியை எழுப்புகிறது.
பதிவாளர் பேராசிரியர் ரீட்டா ஜான் மீது சாதியப் பாகுபாடு தொடர்பான புகார்கள் தேசிய பட்டியல் சாதியினர் ஆணையத்தில் நிலுவையில் இருப்பதாகவும் கூறப்படுகிறது. அவை தனித்தனியாக உரிய அமைப்புகளால் விசாரிக்கப்பட்டு உண்மை நிலை வெளிப்படுத்தப்பட வேண்டும்.

மாணவர்கள் தங்களது அடிப்படை உரிமைகளுக்காகக் குரல் கொடுப்பதும், நிர்வாகத்தின் குறைபாடுகளைச் சுட்டிக்காட்டுவதும் குற்றமாகக் கருதப்படக்கூடாது. கருத்துரிமையையும் மாணவர்களின் ஜனநாயகச் செயல்பாடுகளையும் ஒழுங்கு நடவடிக்கைகள் மூலம் முடக்கக் கூடாது.
எனவே, சென்னைப் பல்கலைக்கழக நிர்வாகம் தீரன் (எ) நவீன் அவர்களின் M.A. Indian Philosophy சேர்க்கை ரத்து நடவடிக்கையை ரத்து செய்து, அவரது கல்வி தொடர்வதற்கான வாய்ப்பை உறுதிப்படுத்த வேண்டும் எனவும் மாணவர் தீரன் விவகாரத்தில் பழிவாங்கும் நோக்கோடு செயல்பட்ட பதிவாளர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம் தமிழ்நாடு மாநிலக்குழு வலியுறுத்துகிறது.
க.பாரதி,
மாநிலச்செயலாளர்.
இரா.தமிழ்ப்பெருமாள்,
மாநிலத் தலைவர்.
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram, Threads











