இந்தியாவின் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோவின் (ISRO – Indian Space Research Organisation) ஒன்பது ஊழியர் சங்கங்கள், விண்வெளி நிறுவனத்தின் எதிர்காலம் தொடர்பாக பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளன.
கடந்த செப்டம்பர் 4 அன்று, இஸ்ரோவின் ஒன்பது ஊழியர் சங்கங்கள் இஸ்ரோ தலைவர் மற்றும் விண்வெளித் துறைச் செயலாளர் டாக்டர் வி. நாராயணுக்கு எழுதிய கடிதத்தில், இஸ்ரோவின் உற்பத்தி மற்றும் செயல்பாட்டுப் பணிகள் தனியார் நிறுவனங்களுக்கு மாற்றப்படுவது தொடர்பாக தெளிவான விளக்கம் கோரின. ஏவுகலங்களின் வடிவமைப்பு, உருவாக்கம், ஒருங்கிணைப்பு, சோதனை மற்றும் ஏவுதல் போன்ற பணிகளில் எதிர்காலத்தில் இஸ்ரோவின் பங்கு என்ன என்பதையும் அவர்கள் கேள்வியாக எழுப்பினர்.
அதேபோல், ஊழியர்களின் நிலை, எதிர்கால ஆட்சேர்ப்பு, அனுமதிக்கப்பட்ட பணியிடங்களின் எண்ணிக்கை, ஏவுகலங்கள் மற்றும் செயற்கைக்கோள்கள் தொடர்ந்து இஸ்ரோவிற்குள்ளேயே உருவாக்கப்படுமா என்பன உள்ளிட்ட பல்வேறு கேள்விகளையும் இக்கடிதத்தில் எழுப்பியிருந்தனர்.
வரி செலுத்துவோரின் பணத்தாலும், பல தலைமுறைகளாக இஸ்ரோ ஊழியர்கள் செய்த உழைப்பாலும் உருவாக்கப்பட்ட தொழில்நுட்பங்கள், சோதனை வசதிகள், ஏவுதளங்கள் மற்றும் தொழில்நுட்ப அறிவு ஆகியவை தனியார் நிறுவனங்களின் பயன்பாட்டிற்கு மாற்றப்படுவது அல்லது திறக்கப்படுவது எந்த நிறுவன அமைப்பின் கீழ் நடைபெறுகிறது என்பது குறித்தும் அவர்கள் கேள்வி எழுப்பினர்.
இதில் நியூஸ்பேஸ் இந்தியா லிமிடெட் (NewSpace India Limited- NSIL)-ன் பங்கு என்ன? இந்திய தேசிய விண்வெளி மேம்பாடு மற்றும் அங்கீகார மையம் (Indian National Space Promotion and Authorisation Centre – IN-SPACe)-ன் பங்கு என்ன? இஸ்ரோவின் தொழில்நுட்பம், உள்கட்டமைப்பு மற்றும் செயல்பாடுகள் தனியார் நிறுவனங்களுடன் எந்த விதிமுறைகளின் கீழ் பகிரப்படும் என்பன குறித்தும் அவர்கள் விளக்கம் கேட்டுள்ளனர்.
இஸ்ரோ ஒரு அரசு விண்வெளி நிறுவனமாக எதிர்காலத்தில் என்ன பொறுப்பை வகிக்கும் என்பது குறித்தும் ஊழியர் சங்கங்கள் கேள்வி எழுப்பியுள்ளன.
குறிப்பாக, PSLV (Polar Satellite Launch Vehicle – துருவ செயற்கைக்கோள் ஏவுகலம்), LVM3 (Launch Vehicle Mark-3 – ஏவுகலம் மார்க்-3), SSLV (Small Satellite Launch Vehicle – சிறிய செயற்கைக்கோள் ஏவுகலம்) மற்றும் எதிர்கால ஏவுகலங்களின் வடிவமைப்பு, மேம்பாடு, உருவாக்கம், ஒருங்கிணைப்பு, சோதனை மற்றும் ஏவுதல் ஆகிய பணிகள் தொடர்ந்து இஸ்ரோவின் பொறுப்பில் இருக்குமா அல்லது இவை படிப்படியாகத் தனியார் துறைக்கு மாற்றப்படுமா என்று அவர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
இந்தக் கேள்விகளுக்குப் பின்னணியாக 2023-ஆம் ஆண்டின் இந்திய விண்வெளிக் கொள்கையும் உள்ளது. அந்தக் கொள்கையில், முதிர்ச்சியடைந்த விண்வெளி அமைப்புகளை வணிக ரீதியான பயன்பாட்டிற்காக தொழில்துறைக்கு மாற்றி, இஸ்ரோ மேம்பட்ட தொழில்நுட்ப ஆராய்ச்சி மற்றும் புதிய திறன்களை உருவாக்குவதில் அதிக கவனம் செலுத்தும் வகையில் மாற்றம் செய்யப்பட வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அதே கொள்கையில், NSIL பொதுச் செலவில் உருவாக்கப்பட்ட விண்வெளித் தொழில்நுட்பங்கள் மற்றும் தளங்களை வணிகமயமாக்கும் பொறுப்பைக் கொண்டிருக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது.
அதேசமயம், விண்வெளித் துறையில் தனியார் நிறுவனங்களின் பங்களிப்பை தாங்கள் முழுமையாக எதிர்க்கவில்லை என்று ஊழியர் சங்கங்கள் தெரிவித்து வருகின்றன.
“தனியார் துறைக்கு எதிராக நாங்கள் இல்லை. ஆனால், பொதுத்துறை நிறுவனங்களை விலக்கிவிட்டு, ஏவுகலத் தொழில்நுட்பங்களைத் தனியார் நிறுவனங்களுக்கு மட்டும் மாற்றுவதை நாங்கள் எதிர்க்கிறோம்” என்பதே அவர்களின் நிலைப்பாடாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல், PSLV மற்றும் LVM3 உற்பத்தியைத் தனியார் துறைக்கு மாற்றும் திட்டத்தில் பொதுத்துறை நிறுவனங்கள் விலக்கப்பட்டுள்ளனவா என்பதைத் தெளிவுபடுத்த வேண்டும் எனக் கோரியுள்ளனர். மேலும், தனியார் துறை உற்பத்தியில் அதிக பங்கு வகிக்கத் தொடங்கும் நிலையில், இஸ்ரோ புதிதாக எந்த ஏவுகலங்களை உருவாக்கி இயக்கப் போகிறது என்பதற்கும் தெளிவு வேண்டும் என்று சங்கங்கள் கூறுகின்றன.
இஸ்ரோவின் 2025–26 ஆண்டு அறிக்கையின்படி, NSIL, HAL தலைமையிலான தொழில்துறை கூட்டமைப்புடன் PSLV-XL ஏவுகலங்களின் முழுமையான உற்பத்திக்கான ஒப்பந்தத்தில் ஈடுபட்டுள்ளது. அதே அறிக்கையில், 15 SSLV-களை இஸ்ரோ அடையாளம் கண்டுள்ள இந்திய தொழில்துறை (பெரும்பாலும் தனியார் நிறுவனங்கள்)மூலம் உருவாக்கும் திட்டமும் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், இஸ்ரோவில் கூட்டு ஆலோசனை இயந்திரம் (Joint Consultative Machinery – JCM – கூட்டு ஆலோசனை அமைப்பு) மீண்டும் நடைமுறையில் கொண்டுவரப்பட வேண்டும் என்றும் அவர்கள் கோருகின்றனர்.
இஸ்ரோவில் 2019 முதல் JCM செயல்படாதது குறித்தும் ஊழியர் சங்கங்கள் அதிருப்தி தெரிவித்துள்ளன. “இஸ்ரோ ஊழியர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளில் ஒன்று, 2019 முதல் நிறுவனத்தில் JCM இல்லாதது. பிரச்சினைகளைக் கட்டமைக்கப்பட்ட முறையில் விவாதித்து முடிவெடுக்க இது தேவையான அமைப்பு” என்று சங்கங்கள் கருதுகின்றன.
முக்கியமான நிறுவன மாற்றங்கள் குறித்து நிர்வாகத்துக்கும் ஊழியர்களுக்கும் இடையே முறையான ஆலோசனை நடைபெறவும், எடுக்கப்படும் முடிவுகள் பதிவு செய்யப்படவும் JCM உதவும் என்பது சங்கங்களின் கருத்தாகும்.
இக்கடிதத்திற்குப் பதிலளிக்கும் வகையில் டாக்டர் வி. நாராயண் காணொலி மூலம் ஊழியர்களிடம் விளக்கமளித்தார். இதில், இஸ்ரோவின் சாதனைகள், அடுத்த தலைமுறை ஏவுகலம் (Next Generation Launch Vehicle – NGLV – அடுத்த தலைமுறை ஏவுகலம்) உருவாக்கம், இந்தியாவின் விண்வெளி நிலையத் திட்டங்கள் மற்றும் பிற திட்டங்கள் குறித்து அவர் பேசினார். அனைவருக்கும் தொடர்ந்து பணிகள் இருக்கும் என்று தெரிவித்தாக ஊழியர் ஒருவர் கூறியுள்ளார்.
ஆனால், ஒன்பது ஊழியர் சங்கங்களும் தங்களது கடிதத்தில் எழுப்பிய அடிப்படையான கேள்விகளுக்கு அவர் பதிலளிக்கவில்லை என்று தெரிவித்துள்ளனர். கடந்த சில ஆண்டுகளாக இஸ்ரோவின் எதிர்காலம் குறித்து கூறப்பட்டு வந்த கருத்துகளையே அவர் மீண்டும் கூறியுள்ளதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.
ஆனால், 2026 ஆகஸ்ட் மாதத்தில் IN-SPACe தலைவர் பவன் குமார் கோயங்கா, எதிர்காலத்தில் இஸ்ரோ ஏவுகலங்களைத் தயாரிப்பதை நிறுத்தி, அவற்றின் உற்பத்தி தனியார் அல்லது பொதுத்துறை நிறுவனங்களால் மேற்கொள்ளப்படும் என்று கூறியுள்ளார்.
இஸ்ரோ, நிறுவனம் தனியார்மயமாகாது என்றும், அதன் முக்கியத்துவம் குறையாது என்றும் அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்துள்ளது. மேம்பட்ட விண்வெளி ஆராய்ச்சி, தொழில்நுட்ப மேம்பாடு, தேசிய மற்றும் மூலோபாயப் பணிகள், விண்வெளி அறிவியல் மற்றும் புதிய முன்னணி தொழில்நுட்பத் திறன்களில் இஸ்ரோ தொடர்ந்து இந்தியாவின் முக்கிய நிறுவனமாக இருக்கும் என்று தெரிவித்துள்ளது.
மேலும், முதிர்ச்சியடைந்த தொழில்நுட்பங்களை தொழில்துறை பெருமளவில் பயன்படுத்தும் வகையில் விரிவுபடுத்துவதும், அதே நேரத்தில் இஸ்ரோ அடுத்த தலைமுறை தொழில்நுட்பங்கள் மற்றும் தேசிய முக்கியத்துவம் வாய்ந்த பணிகளில் கவனம் செலுத்துவதும் தற்போதைய நிறுவன அமைப்பின் நோக்கம் என இஸ்ரோ விளக்கியுள்ளது.
ஆனால் இந்த உறுதிமொழிகள், எந்தப் பணிகள் இஸ்ரோவிடம் தொடரும், எந்தப் பணிகள் தனியார் துறைக்கு அல்லது பிற நிறுவனங்களுக்கு மாற்றப்படும், தற்போதைய பணியாளர்களின் எதிர்காலம் என்ன, எதிர்கால ஆட்சேர்ப்பு எவ்வாறு நடைபெறும் என்பதற்கான தெளிவான கொள்கையாக மாற்றப்பட வேண்டும் என்பதே ஊழியர் சங்கங்களின் கோரிக்கையாக உள்ளது.
2020-ஆம் ஆண்டிலிருந்து தனியார் நிறுவனங்களின் பங்களிப்பை விரிவுபடுத்தும் வகையில் மோடி அரசு பல்வேறு நிறுவன மாற்றங்களை மேற்கொண்டுள்ளது. அந்தச் சீர்திருத்தங்களில், தனியார் நிறுவனங்களுக்கு முழுமையான விண்வெளி நடவடிக்கைகளில் பங்கேற்க வாய்ப்பு வழங்குதல், இஸ்ரோ வசதிகளைப் பயன்படுத்த அனுமதித்தல், NSIL மூலம் தொழில்நுட்பங்கள் மற்றும் சேவைகளை வணிகமயமாக்குதல், IN-SPACe மூலம் தனியார் விண்வெளி நடவடிக்கைகளை ஊக்குவித்து அனுமதித்துக் கண்காணித்தல் ஆகியவை அடங்குகின்றன.
கடந்த பிப்ரவரி மாதத்தில் மோடி அரசின் தேசிய பணமயமாக்கல் திட்டம் 2.0 மூலம் பொதுத்துறை நிறுவனங்களைக் குத்தகைக்கோ அல்லது பகுதி அளவு விற்பனை செய்வதன் மூலம் வருவாய் ஈட்டத் திட்டமிட்டுள்ளது. மக்களின் வரிப் பணத்தாலும், தொழிலாளர்களின் உதிரத்தாலும் விளைந்த பொதுத்துறை நிறுவனங்களை அதானி, அம்பானி போன்ற கும்பல்களுக்கு விற்பனை செய்து வருகிறது. ஒன்பது சங்கங்களின் கேள்விகளையும் இதனுடன் இணைத்துப் பார்க்க வேண்டியுள்ளது.
![]()
ஹைதர்
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram, Threads











