காவிரிக்கு அடுத்தபடியாகத் தமிழ்நாட்டின் இரண்டாவது மிக நீளமான ஆறு தென்பெண்ணை. சுமார் 497 கிலோமீட்டர் நீளம் கொண்ட இந்த ஆறு 320 கிலோமீட்டர் வரை தமிழ்நாட்டில் பயணிக்கிறது.
கர்நாடகாவின் சிக்பள்ளாப்பூர் மாவட்டத்தில் சென்னகேசவா மலையில் உற்பத்தியாகி, பெங்களூருவின் தொழிற்பேட்டைகள் வழியாக வளைந்து நெளிந்து, ஓசூருக்கு அருகில் தமிழ்நாட்டிற்குள் பாய்கிறது. கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், வேலூர் மாவட்ட எல்லை மற்றும் கடலூர் வழியாக பயணித்து வங்காள விரிகுடாவில் கலக்கிறது. இதன் நீர்ப்பிடிப்புப் பகுதி சுமார் 3,700 சதுர கிலோமீட்டர் பரப்பளவைக் கொண்டுள்ளது.
தென்பெண்ணை ஆறு தமிழ்நாட்டு மக்களின் முக்கியமான நீராதாரமாகும். குடிநீர், விவசாய உற்பத்தி, கால்நடைகள் வளர்ப்பு, இயற்கைச் சூழல் மற்றும் தொழிற்சாலைகளுக்குத் தேவையான நீராதாரம் என்ற வகையில் முக்கியத்துவம் வாய்ந்த ஆறாகும்.
அதிலும், கிருஷ்ணகிரியின் மிக முக்கிய நீராதாரமான தென்பெண்ணை, கெலவரப்பள்ளி அணை மூலம் 8,000 ஏக்கர் விவசாய நிலங்களுக்கும், கிருஷ்ணகிரி அணை மூலம் 9,000 ஏக்கர் நிலங்களுக்கும் நீர்ப்பாசனமாக விளங்குகிறது. ஆனால், ஒரு காலத்தில் தனது தூய நீரால் வயல்களுக்கு வளம் சேர்த்த தென்பெண்ணை இப்போது மாசடைந்து, பயிர்களை அழிக்கும் நஞ்சாக மாறி வருகிறது. இதனால், கடந்த பத்தாண்டுகளில் விவசாய மகசூல் பாதிக்கும் அதிகமாகக் குறைந்துவிட்டது. ஆண்டுதோறும் அதிகரித்துவரும் மாசுபாட்டால் மகசூல் மென்மேலும் சரிந்து வருகிறது.
ஆண்டின் பெரும்பாலான நாட்களில் வறண்டு காணப்படும் இந்த ஆறு மழைக்காலங்களில் மட்டுமே பாய்ந்தோடுகிறது. ஆனால், கடந்த சில ஆண்டுகளாக கர்நாடகா எல்லை வழியாக தமிழ்நாட்டுக்குள் நீர் நுழையும்போது, துர்நாற்றத்துடனும் குவியல் குவியலாக நுரைப் பொங்கியும் வருகிறது. இதனால் கெலவரப்பள்ளி அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்படும் போது விவசாய நிலங்களில் கழிவுநீர் நிரம்பி மரக்கிளைகள் உயரத்திற்கு இரசாயன நுரை ததும்புகிறது.
ஆண்டுதோறும் மழைக்காலங்களில் இந்த நீர் மாசுபாடு விவாதத்திற்குள்ளானாலும் விவசாயிகள் தொடர் போராட்டங்களை நடத்தினாலும் கடந்த 15 ஆண்டுகளாக இப்பிரச்சினை தீர்க்கப்படாமலேயே இருக்கிறது.
000
தென்பெண்ணையாறு இத்துணை மோசமாக மாசடைந்து வருவதற்கு முக்கிய காரணம் பெங்களூருவின் நகர்ப்புற மற்றும் தொழிற்சாலைக் கழிவுநீர் ஆற்றில் கலந்துவிடப்படுவதே ஆகும். இதனை கர்நாடக அரசும் ஒப்புக்கொண்டுள்ளது.
அண்மையில், பெங்களூர் மாநகரின் 50 சதவிகித கழிவுநீர் சுத்திகரிப்பு செய்யப்படாமல் காவிரி, தென்பெண்ணை ஆகிய ஆறுகளில் கலந்து தமிழ்நாட்டுக்கு செல்வதாக கர்நாடக சுற்றுச்சூழல்துறை அமைச்சர் இராமலிங்க ரெட்டி தெரிவித்தார்.
பெங்களூர் மாநகரில் உள்ள கால்வாய்கள் வழியாக தினசரி 2,825 எம்.எல்.டி. (MLT) கழிவு வெளியேறுகிறது. இதில் 1,364.5 எம்.எல்.டி. கழிவுநீர் சுத்திகரிப்பு மையங்கள் மூலம் சுத்திகரிக்கப்படுகிறது. மீதமுள்ள 47 சதவிகித சுத்திகரிப்பு செய்யப்படாத கழிவுநீரானது, ரிசபாவதி மற்றும் ஆர்க்காவதி ஆறுகள் வழியாக கனகபுரா அருகே உள்ள சங்கமத்தில் காவிரி ஆற்றிலும், பெல்லந்தூர் மற்றும் வர்தூர் ஏரிகள் வழியாகத் தென்பெண்ணை ஆற்றிலும் கலந்து தமிழ்நாட்டின் எல்லையை அடைகிறது.
மேலும், பெங்களூரில் குடிநீர் வடிகால் மற்றும் கழிவுநீர் வாரியத்தின் கீழ் செயல்படும் 37 கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்கள் முழுமையான சுத்திகரிப்பு திறன் இல்லாமல் உள்ளது என்பதையும் கர்நாடக அரசின் அதிகாரிகள் மற்றும் அமைச்சர்கள் ஒப்புக்கொள்கின்றனர்.
ஓசூரில் உள்ள கெலவரப்பள்ளி அணை வழியாக பாய்ந்து 60 கிலோமீட்டர் தூரத்திற்கு கீழ்நோக்கி அமைந்துள்ள கே.ஆர்.பி. அணைக்கு மாசடைந்த கழிவுநீர் வந்தடைகிறது.
தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் (TNPCB) மற்றும் சுற்றுச்சூழல் ஆய்வுகளின்படி, கே.ஆர்.பி. அணையில் ஏற்பட்டுள்ள நீர் மாசுபாடு என்பது இரசாயனங்கள் மற்றும் நச்சு நுரைகள் காரணமாக, நீரில் உள்ள அதிகப்படியான காரத்தன்மை 600 பி.பி.எம். (PPM) என்ற அபாயகரமான நிலையை எட்டியிருப்பது கண்டறியப்பட்டுள்ளது. உப்புத்தன்மை (TDS) உயர்வு காரணமாக விவசாய நிலங்களில் மண்வளம் பாதிக்கப்படுகிறது.
மாசடைந்த நீரினால் பாதிக்கப்பட்டு, டன் கணக்கில் மீன்கள் செத்து மிதக்கின்றன. மேலும் நீரில் நைட்ரேட், அம்மோனியா மற்றும் பாஸ்பேட் போன்ற வேதிப்பொருட்கள் அதிகரித்து நச்சுப் பாசிகள் படந்துள்ளன.
நிலத்தடி நீர் ஆதாரங்கள் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. காற்றில் நச்சு இரசாயன நுரைகள் பரவுவதால் வீசும் கடுமையான துர்நாற்றம் காரணமாக தோல் நோய்கள், சுவாசப் பிரச்சினைகள் ஏற்படும் அபாயம் உள்ளது என ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இது குறித்து, தேசிய பசுமை தீர்ப்பாயம் பரிசோதித்து பெங்களூரில் இருந்து வெளியேறும் கழிவுநீர்தான் இப்பாதிப்புகளுக்கு காரணம் என்பதை உறுதிப்படுத்தி உள்ளது.
இந்நிலையில், கடந்த செப்டம்பர் 22 அன்று சென்னையைச் சேர்ந்த பயோசின்க் இந்தியா பிரைவேட் லிமிடெட் நிறுவனம் ஆய்வு முடிவு ஒன்றை வெளியிட்டது. அதில், கர்நாடக எல்லை வழியாக தமிழ்நாட்டிற்குள் நீர் நுழையும் பிரதான பகுதியில் ஆய்வு செய்தபோது, நீரில் கரைந்துள்ள ஆக்ஸிஜன் அளவு 0.1 முதல் 0.2 மி.கி/லிட்டர் வரை மட்டுமே இருப்பது தெரிய வந்துள்ளது. சுத்தமான நீர்நிலையில் 7 முதல் 9 மி.கி/லிட்டர் வரையிலான ஆக்சிஜன் அளவு இருக்க வேண்டும். 4 மி.கி/லிட்டருக்கும் குறைவான அளவு நீண்ட காலத்திற்கு நீடித்தால், அது மீன்கள் மற்றும் பிற நீர்வாழ் உயிரினங்களை மோசமாகப் பாதிக்கக்கூடும். ஆனால், இங்கு பூஜ்ஜியத்திற்கும் கீழ் குறைந்துள்ளது மாசுபாட்டின் தீவிரத்தை உணர்த்துகிறது. இது இயற்கையான ஆற்றுநீர் அல்ல, சுத்திகரிக்கப்படாத கழிவுநீரே அணைக்குள் நுழைகிறது என ஆய்வறிக்கை தெளிவாகக் குறிப்பிடுகிறது.
மேலும், கழிவுநீரில் கலக்கும் பாஸ்பரஸ் மற்றும் நைட்ரேட் இரசாயனங்கள் காரணமாக நீர்நிலைகளில் அதிக அளவில் இரசாயன நுரை உருவாவதுடன் ஆகாயத்தாமரையும் அடர்ந்து படர்கிறது.
தற்போது விவசாயத்திற்கு இந்த கழிவுநீர் கலந்த இரசாயன நீரையே பயன்படுத்தும் நிலை உள்ளது. ஆறு பாயும் பகுதிக்கு அருகில் உள்ள விவசாயக் கிணறுகள், ஆழ்துளை கிணறுகளில் நீர் மாசடைகிறது. இந்நீரைக் கையாளும் விவசாயத் தொழிலாளர்களுக்குத் தோல்நோய்கள் ஏற்படுகிறது. ஒவ்வொரு மழைக்காலத்திலும் கால்நடைகள் குடிக்க முடியாத சூழல் நிலவுகிறது. இந்நீரின் நச்சுத்தன்மை காரணமாக உடல்நலப் பாதிப்புகளும் ஏற்படுகின்றன.
தென்பெண்ணையாற்றின் நீர் மாசுபாட்டுக்கு எதிராக, விவசாயிகள் தொடர்ச்சியான போராட்டங்களை நடத்தியும் கூட இப்பிரச்சினையைத் தீர்க்க தமிழ்நாடு – கர்நாடக அரசுகள் உரிய நடவடிக்கைகளை எடுப்பதில்லை. பெயரளவுக்கு ஆய்வுகள் நடத்துவது என்பதை மட்டும் சடங்கு போல செய்து வருகின்றன. நீதிமன்றங்களும் பொதுவான உத்தரவை வழங்கிவிட்டு அமைதியாகி விடுகின்றன.
இதற்கு அடிப்படை காரணம், தனியார் -கார்ப்பரேட் நலனை முன்னிறுத்தும் அரசின் கொள்கை நடைமுறையே ஆகும். மக்கள் – சுற்றுச்சூழல் மீதான அக்கறையற்ற அரசுகள் ஆபத்தான சூழலை நோக்கி மக்களைத் தள்ளுகின்றன.
எனவே, தமிழ்நாடு அரசு, கெலவரப்பள்ளி அணைநீர் மாசுபடுவதின் தீவிரத்தையும் அதனால் ஏற்படும் ஆபத்தையும் கணக்கில் கொண்டு நேரடியாகவும், சட்டரீதியாகவும் கர்நாடக அரசுக்கு உரிய அழுத்தம் கொடுக்க வேண்டும். இரண்டு மாநில அரசுகளும் பெயரளவிற்கான ஆய்வுகள் நடத்துவது என்ற போக்கைக் கைவிட வேண்டும். கழிவுநீரை சுத்திகரிப்பது தொடர்பான விரிவான செயல்திட்டங்களை நடைமுறைப்படுத்துவது குறித்து தமிழ்நாடு – கர்நாடக அரசுகள் ஒருங்கிணைந்து தொடர்ச்சியான முன்னெடுப்புகளை எடுக்க வேண்டும். அதற்கு இரு மாநில அரசுப் பிரதிநிதிகள், சுற்றுச் சூழலியலாளர்கள், விவசாயப் பிரதிநிதிகள் கொண்ட குழுக்களை அமைத்து தொடர்ச்சியான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். அந்த அடிப்படையில் குறிப்பிட்ட கால இடைவெளியில் வெள்ளை அறிக்கை வெளியிட்டு, எந்த அளவில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது என்பது பற்றி மக்களுக்கு விரிவாக அறிவிக்க வேண்டும். தமிழ்நாடு உழைக்கும் மக்கள், போராட்டங்கள் மூலம் தமிழ்நாடு அரசுக்கு தொடர்ச்சியான அழுத்தம் கொடுக்க வேண்டும்.
மேற்கண்ட அம்சங்களை உடனடித் தீர்வுக்காக முன்வைப்பது மட்டுமின்றி, சுற்றுச்சூழல் மீதும், மக்கள் நல்வாழ்வின் மீதும் அக்கறை கொண்ட மாற்றுக் கட்டமைப்புக்கான விவாதங்கள், நகர்வுகளைப் பற்றிச் சிந்திப்பதும், செயல்படுவதும் அவசியமானதாகும். ஏனெனில், அதுவே நிரந்தரத் தீர்வுக்கான வழிமுறையாகும்.
தோழர் இரஞ்சித்,
மாவட்டச் செயலாளர்,
மக்கள் அதிகாரக் கழகம்,
கிருஷ்ணகிரி மாவட்டம்.
![]()
(புதிய ஜனநாயகம் – அக்டோபர் 2026 இதழ்)
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram, Threads











