2014-இல் இந்தியாவில் ஆட்சியைக் கைப்பற்றியதிலிருந்து பாசிச மோடி அரசு பெயரளவிலான கூட்டாட்சியைக் கேள்விக்குள்ளாக்கி மாநிலங்களின் உரிமைகளைப் பறித்து வருகிறது. ஜி.எஸ்.டி., நீட், மூன்று குற்றவியல் சட்டங்கள், அணை பாதுகாப்புச் சட்டம், புதிய விதை மசோதா, பேரிடர் பாதுகாப்புச் சட்டம், தேசிய பணமயமாக்கல் திட்டம் போன்ற பல்வேறு சட்டத் திட்டங்களின் மூலம் மாநில உரிமைகளைப் பறித்து; ஒட்டுமொத்த அதிகாரத்தையும் தங்களது கைகளில் குவித்துக் கொண்டிருக்கிறது, பாசிச மோடி-ஷா கும்பல். இதன் நீட்சியாக, கனிம வள நிலங்கள் மற்றும் கனிம வளங்கள் மீது மாநில அரசுகள் வரி விதிக்கக்கூடிய உரிமையையும் பறித்திருக்கிறது இக்கும்பல்.
கடந்த ஆகஸ்ட் 13 அன்று நாடாளுமன்றத்தில் எவ்வித விவாதமுமின்றி பாசிச முறையில் “கனிமங்கள் மற்றும் சுரங்கங்கள் (மேம்பாடு மற்றும் முறைப்படுத்துதல்) திருத்தச் சட்டம், 2026” நிறைவேற்றப்பட்டது. ஆகஸ்ட் 17 அன்று குடியரசுத் தலைவரின் ஒப்புதலைப் பெற்று, ஆகஸ்ட் 22 முதல் இச்சட்டம் நடைமுறைக்கு வந்துள்ளது.
இச்சட்டத்தின், பிரிவு 2-இன் மூலம் கனிமம் கொண்ட நிலங்கள் (mineral bearing lands) மத்திய அரசின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு செல்லப்பட்டுள்ளன; பிரிவு 3-இன் படி கனிமம் கொண்ட நிலம் என்பதற்கான வரையறையை மாற்றியுள்ளது. இது தன் எல்லைக்குள் உள்ள நிலத்தின் மீதான மாநில அரசின் உரிமையைப் பறிக்கின்றது.

அதாவது, கனிமம் கொண்ட நிலங்கள் அனைத்தையும் மத்திய அரசின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருவதன் மூலம், கார்ப்பரேட் நிறுவனங்கள் தங்களது சுரங்கங்களை இந்தியாவின் எந்தப் பகுதியிலும், எந்தவித எதிர்ப்புமின்றி செயல்படுத்த முடியும். எனவேதான் கனிம வள நிலங்களின் மீதான மாநில அரசின் அதிகாரத்தைப் பறித்திருக்கிறது கார்ப்பரேட் தாசனான மோடி அரசு.
மேலும், இச்சட்டத்தில் புதிதாகச் சேர்க்கப்பட்டுள்ள பிரிவு 9டி-தான் மிகவும் அபாயகரமானது. இப்பிரிவின் படி மாநில அரசுகள் கனிமங்கள் அல்லது கனிம நிலங்கள் மீது தன்னிச்சையாகப் புதிய வரிகளையோ, செஸ் வரிகளையோ அல்லது கட்டணங்களையோ விதிக்க முடியாது. மத்திய அரசு நிர்ணயிக்கும் நிபந்தனைகளுக்குட்பட்டு மட்டுமே மாநிலங்கள் வரிகளை விதிக்க முடியும்.
ஜூலை 25, 2024 அன்று உச்சநீதிமன்றத்தின் ஒன்பது நீதிபதிகள் கொண்ட அமர்வு, கனிமங்கள் மற்றும் கனிமம் கொண்ட நிலங்கள் மீது வரி விதிக்கும் முழு அதிகாரம் மாநிலங்களுக்கு உண்டு எனத் தீர்ப்பு வழங்கியது. மேலும், ஏப்ரல் 1, 2005 முதல் நிலுவையில் உள்ள வரிகளை மாநிலங்கள் வசூலித்துக் கொள்ளலாம் என்றும் உத்தரவிட்டது.
ஆனால், இப்புதிய சட்டத்தின் மூலம் உச்சநீதிமன்றத்தின் இத்தீர்ப்பை செல்லாக்காசாக்கும் வகையில் முன்தேதியிட்டு (Retrospective) நிலுவை வரிகளை ரத்து செய்துள்ளது பாசிச மோடி அரசு. அதாவது, இச்சட்டம் நடைமுறைக்கு வருவதற்கு முன்னர் மாநில அரசுகள் வரி விதித்திருந்தாலும் ஆகஸ்ட் 22 வரை வசூலிக்கப்படாத அல்லது அரசிடம் செலுத்தப்படாத வரிகளை மாநில அரசுகள் இனி வசூலிக்க முடியாது. அவை பாசிச மோடி அரசால் செல்லாதவையாக்கப்பட்டுள்ளன.
இதன் மூலம் இச்சட்டம் அதானி-வேதாந்தா போன்ற சுரங்கத் தொழில் சார்ந்த கார்ப்பரேட்டுகளுக்கு கொண்டாட்டமாக இருக்கப் போகிறது என்பது அம்பலமாகிறது.
இனி எந்தவொரு மாநில அரசும் தன் எல்லைக்குட்பட்ட நிலத்தின் மீது அதிகாரம் செலுத்த முடியாது, வரி வசூலிக்கவும் முடியாது என்றால், மாநில அரசு என்ற ஒன்று எதற்கு? இச்சட்டத்தின் மூலம் மாநில அரசுகள் மத்திய அரசின் நிர்வாக அலகாக, அதாவது ஒரு மாவட்ட ஆட்சியர் அலுவலகம் போல மாற்றப்படும். சுருக்கமாகச் சொன்னால், மாநில அரசுகள் அந்த நிலத்தின் உரிமையாளர்கள் அல்ல, வெறும் காவல்காரர்கள். சட்டமன்றங்கள் வெறும் அலங்கார பீடங்கள்.
மேலும், கனிமப் படிவு நிலங்கள் மத்திய அரசின் கட்டுப்பாட்டிற்குள் செல்வதன் மூலம், மத்திய அரசோ அல்லது கார்ப்பரேட் நிறுவனங்களோ மாநில அரசின் அனுமதிக்காகக் காத்திருக்க வேண்டியதில்லை. மாநில அரசின் எதிர்ப்புகள் என்பவை வெற்றுக் கூச்சலாகிவிடும். டங்ஸ்டன் சுரங்கத் திட்டம், டெல்டாவில் ஹைட்ரோ கார்பன் ஆகியவற்றிற்கு எதிரான மக்கள் போராட்டங்களுக்கு அடிபணிந்து மாநில அரசும் இத்திட்டங்களை எதிர்க்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டன. ஆனால், இனி மாநில அரசுகளின் இந்த எதிர்ப்புகளுக்கு எந்தவொரு பயனும் இல்லை.
மாநிலங்களின் வருவாய் பறிப்பு
மாநில நிதிகள் குறித்த இந்திய தலைமைத் தணிக்கையாளரின் அறிக்கையின்படி, 2024-25-ஆம் ஆண்டில் மாநிலங்களின் சொந்த வரி அல்லாத வருவாய் ரூ.3.3 லட்சம் கோடி. இதில் 41 சதவிகிதம், அதாவது ரூ.1.36 லட்சம் கோடி வருவாயானது கனிமங்கள் மற்றும் பெட்ரோலியம் தொடர்பான வரவுகளில் இருந்து வந்துள்ளது. அனைத்து மாநிலங்களின் மொத்த வருவாயில் கனிமங்கள் மற்றும் பெட்ரோலிய வருவாய் 3.4 சதவிகிதம் மட்டுமே என்றாலும், கனிம வளம் செறிந்த மாநிலங்களுக்கு இதன் பங்கு மிக அதிகம். ஒடிசா மாநிலத்திற்கான வருவாயில் 23 சதவிகிதமும், சத்தீஸ்கர் வருவாயில் 5 சதவிகிதமும் கனிம வரிகள் பங்களிப்பதாக இந்த அறிக்கை கூறுகிறது.
ஜார்க்கண்ட் மாநிலத்தின் சொந்த வரி அல்லாத வருவாயில் சுமார் 84.9 சதவிகிதம் சுரங்க வருவாயில் இருந்தே வருவதாக அம்மாநில முதலமைச்சர் சோரன் தெரிவித்திருக்கிறார். இச்சட்டத்தால் ஜார்க்கண்ட் மாநிலத்தில் ஆண்டுக்குச் சுமார் ரூ.11,000 கோடி இழப்பு ஏற்படும். ஒடிசாவிற்கு ஆண்டுக்கு ரூ.12,000 கோடி வருவாய் இழப்பும், ரூ.1 லட்சம் கோடி நிலுவைத் தொகை இழப்பும் ஏற்படும் என்று அம்மாநில எதிர்க்கட்சியான பிஜூ ஜனதா தளம் குற்றஞ்சாட்டியுள்ளது.
கடந்த 2025-இல் தமிழ்நாடு கனிம வள நிலங்கள் வரிச் சட்டம் 2024-இன் மூலம் 32 கனிமங்களுக்கு வரி நிர்ணயிக்கப்பட்டது. இதன் மூலம் ஆண்டுக்கு சுமார் ரூ.2,400 கோடி கூடுதல் வருவாய் கிடைக்கும் என மாநில அரசு மதிப்பிட்டது. ஆனால், தற்போது இதுவும் கேள்விக்குறியாகியுள்ளது.
ஏற்கெனவே, ஜி.எஸ்.டி. மூலம் மாநிலங்களின் வரி வசூலிக்கும் உரிமை பறிக்கப்பட்டு மோடி அரசிடம் கையேந்தும் நிலைக்கு மாநில அரசுகள் தள்ளப்பட்டுள்ளன. புயல், பெருவெள்ளம் போன்ற இயற்கைப் பேரிடர் சூழலில் கூட பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் கொடுக்க மத்திய அரசிடம் போராட வேண்டியிருக்கிறது. இந்நிலையில், கனிம வள வருவாயையும் பறிப்பதானது, ஏற்கெனவே கடன் நெருக்கடியிலும் வருவாய்ப் பற்றாக்குறையிலும் உள்ள மாநிலங்களை மோடி அரசிடம் மேலும் கையேந்த வைப்பதே ஆகும்.
மேலும், மாநிலங்களுக்கு வருவாய் தரும் பெட்ரோல்-டீசல் மீதான மதிப்புக் கூட்டு வரி (VAT), நிலம்-கட்டடங்கள் மீதான வரி, மதுபான வரி போன்ற ஒரு சில துறைகள்தான் இன்னும் விட்டுவைக்கப்பட்டுள்ளன. மாநில அரசுகளிடமிருந்து அவற்றையும் பறித்து மாநிலங்களை பாசிச மோடி அரசுக்குக் கப்பம் கட்டும் காலனிகளாக மாற்றும் நடவடிக்கையின் தொடர்ச்சியாகவே இச்சட்டம் அமைந்திருக்கிறது.
ஏற்கெனவே, பி.எம்.ஸ்ரீ. போன்ற திட்டங்களை நடைமுறைப்படுத்தினால்தான் கல்வி நிதி தர முடியும் என மோடி அரசு பாசிச திமிருடன் நடந்துவருகிறது. இப்போக்கு தொடர்ந்தால், இந்துராஷ்டிர அடிக்கட்டுமானத் திட்டங்களுக்கு அடிபணிந்தால்தான் நிதி என மாநில அரசுகளை மிரட்டி அடிபணிய வைக்கும்.
இந்திய வளங்களை கொள்ளையிடக் காத்திருக்கும்
அமெரிக்க கார்ப்பரேட் கழுகுகள்
கனிமங்கள் எனும் போது, இரும்பு, பாக்சைட் போன்ற கனிமங்கள் மட்டுமல்லாமல், மின்சார வாகனங்கள், மின்னணு சாதனங்கள் மற்றும் இராணுவத் தளவாட உற்பத்தி ஆகியவற்றிற்கான அரிய வகைக் கனிமங்களின் தேவை இன்று பூதாகரமாக வளர்ந்துள்ளது. உலகளவில், இக்கனிமங்களை அகழ்ந்தெடுப்பதிலும் கைப்பற்றுவதிலும் ஏகாதிபத்தியங்களுக்கு இடையே போட்டாபோட்டி நிலவுகிறது. இச்சூழலில்தான், இந்தியாவில் உள்ள கனிம வளங்களைச் சூறையாட வேண்டும் என அமெரிக்க கார்ப்பரேட்டுகள் காத்துக்கிடக்கின்றன.
அண்மையில் அமெரிக்கா – இந்தியா இடையே அரிய வகைக் கனிமங்களுக்கான இருதரப்பு ஒப்பந்தம் கையெழுத்தாகியது. இந்த அடிமை ஒப்பந்தத்தின் மூலம் இந்தியாவின் வளங்களை அமெரிக்க கார்ப்பரேட்டுகள் கொள்ளையடிப்பதுடன், அவற்றை சுத்திகரிக்கும் ஆபத்தான நிறுவனங்களும் இந்தியா முழுவதும் நிறுவப்படும் அபாயம் உள்ளது. மேலும், மேலாதிக்கப் போட்டிக்காக அமெரிக்கா உருவாக்கிய “பேக்ஸ் சிலிக்கா”, “ஃபோர்ஜ்” ஆகிய அமைப்புகளிலும் பாசிச மோடி அரசு இணைந்து அமெரிக்காவிற்கு அடிமை சேவகம் புரிந்து வருகிறது.
இதன் பின்னணியிலிருந்துதான் இந்திய கனிம வளங்களை சூறையாடுவதற்காக கொண்டுவரப்பட்டுள்ள இப்புதிய சட்டத்திருத்தத்தைப் பார்க்க வேண்டியுள்ளது. இச்சட்டத்திருத்தத்தின் மூலம், ஏற்கெனவே சாதாரண கனிமங்களுக்காகக் குத்தகை எடுக்கப்பட்ட நிலங்களில், லித்தியம், கோபால்ட், நிக்கல், கிராஃபைட் போன்ற அரியவகை மற்றும் உத்திசார் கனிமங்கள் (Strategic Minerals) இருப்பது கண்டறியப்பட்டால், அதற்குத் தனியாகப் புதிய உரிமம் பெறவோ அல்லது கூடுதல் கட்டணம் செலுத்தவோ தேவையில்லை என்ற நிலை உருவாக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் மின்சார வாகனங்கள் மற்றும் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் துறையைக் கைப்பற்றத் துடிக்கும் அதானி – வேதாந்தா உள்ளிட்ட கார்ப்பரேட்டுகளுக்கு பல்லாயிரம் கோடி ரூபாய் மறைமுக மானியமாக வாரி வழங்கப்படுகிறது.
000
பாசிச மோடி கும்பல் ஆட்சிக்கு வந்ததிலிருந்து இந்தியாவின் கனிம வளத்தை அதானி-வேதாந்தா போன்ற கார்ப்பரேட்டுகளுக்கும் அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கும் தாரைவார்ப்பதற்கு ஏதுவாக “கனிமங்கள் மற்றும் சுரங்கங்கள் (மேம்பாடு மற்றும் முறைப்படுத்துதல்) சட்டத்தில்” பல்வேறு திருத்தங்களை கொண்டு வந்துள்ளது. கடந்த 2023-ஆம் ஆண்டு லித்தியம், பெரிலியம், நியோபியம், டைட்டானியம், டான்டலம், சிர்கோனியம் எனும் ஆறு அணுக் கனிமங்களைக் கண்டுபிடிப்பதில் கார்ப்பரேட் நிறுவனங்களும் களமிறங்க வழிவகுக்கும் வகையில் சட்டத்திருத்தத்தைக் கொண்டுவந்தது.
2025-ஆம் ஆண்டு மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் இந்தியாவில் காணப்படும் 24 வகையான அரியவகைக் கனிமங்களையும், ஆறு வகையான அணுக் கனிமங்களையும் அகழ்ந்தெடுக்கும் திட்டங்களைப் பொதுமக்கள் கருத்துக் கேட்புக் கூட்டம் நடத்தாமலே மேற்கொள்ளலாம் என அறிவித்தது. மேலும் அகழ்ந்தெடுக்கப்படும் நிலப்பரப்பு சிறிய பகுதியாக இருந்தாலும் இத்திட்டங்களுக்கான சுற்றுச்சூழல் அனுமதிக்கான பரிசீலனையை மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம்தான் மேற்கொள்ளும் என அறிவிக்கப்பட்டது.

இவ்வாறு மிகத் துல்லியமாக சட்டத் திருத்தங்கள் வழியாக நாட்டின் கனிம வளங்களை கார்ப்பரேட்டுகளுக்குத் தாரைவார்த்து வருகிறது மோடி அரசு. தற்போது இதன் உச்சமாகவே, கனிமங்கள் மற்றும் கனிமம் கொண்ட நிலங்கள் மீதான மாநிலங்களின் உரிமைகளைப் பறிக்கும் விதமாக இச்சட்டத்திருத்தத்தை கொண்டுவந்துள்ளது.
மாநில அரசுகளின் எதிர்ப்பு
மாநில அரசின் உரிமையைப் பறிக்கின்ற, அதிகாரத்தை செல்லாக்காசாக்குகிற இப்புதிய சட்டத்தை ஜார்க்கண்ட், கேரளா உள்ளிட்ட மாநில அரசுகளும் எதிர்க்கட்சிகளும் கடுமையாக எதிர்த்து வருகின்றன. இது மாநிலங்களின் உரிமைகளைப் பறிப்பதாகவும், இந்தியாவின் கூட்டாட்சித் தத்துவத்திற்கு எதிரானது என்றும் விமர்சிக்கின்றன.
ஒடிசா சட்டமன்றத்தில், காங்கிரசும், பிஜூ ஜனதா தளக் கட்சியும் இச்சட்டத்திற்கு எதிராக முழக்கங்களை எழுப்பியிருக்கின்றன. ஆனால், ஒடிசாவை ஆளும் பா.ஜ.க. அரசு இப்புதிய சட்டம் கார்ப்பரேட் முதலீடுகளை ஈர்க்கும், பொருளாதாரத்தை வலுப்படுத்தும் எனக் கதையளந்து இச்சட்டத்தை ஆதரித்து வருகிறது.
ஆனால், கொள்கை எதிரி பா.ஜ.க. என்று சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பு வசனம் பேசிய தமிழ்நாட்டு முதல்வர் விஜய், ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு பா.ஜ.க. என்ற வார்த்தையை மறந்தும்கூட பேசுவதில்லை. இந்தப் புதிய சட்டத்திருத்தத்திற்கு எதிராக இதுவரை அதிகாரப்பூர்வமாக எந்த எதிர்ப்பையும் தமிழ்நாடு அரசு பதிவு செய்யவில்லை. அரசுக் கட்டுப்பாட்டில் உள்ள மீனம்பாக்கம் விமான நிலையத்தை தனியாருக்கு தாரைவார்க்குமாறு மோடி அரசிற்கு கடிதம் எழுதிய விஜய், மாநில உரிமைக்கு குரல் கொடுப்பார் என்றெல்லாம் எதிர்பார்க்க முடியாதுதான்.
ஆனால், மத்திய அரசை எதிர்க்கின்ற மாநிலங்களும் வரி வருவாய் இழப்பு, மாநில அதிகாரம் பறிப்பு ஆகியவற்றை மட்டுமே எதிர்க்கின்றன. மாறாக, அம்பானி-அதானி-வேதாந்தா கொள்ளைக் கும்பலிடம் வளங்கள் தாரைவார்க்கப்படுவது குறித்தோ, அருமண் தனிமங்களை எடுப்பதால் ஏற்படும் சுற்றுச்சூழல் பேரழிவு மற்றும் மக்கள் வாழ்வாதாரப் பாதிப்பு குறித்தோ வாய்திறக்கவில்லை.
2026 கனிம வளச் சட்டத் திருத்தம் என்பது ஏதோ வெறும் வரி வசூல் தொடர்பான நிர்வாக மாற்றம் அல்ல; அது மாநிலங்களின் உரிமைகள் மீதும், மக்களின் இயற்கை வளங்களின் மீதும் நடத்தப்பட்டுள்ள அப்பட்டமான பாசிச தாக்குதலாகும். மாநிலங்களை வெறும் காலனிகளாக மாற்றி, அம்பானி-அதானி-வேதாந்தா போன்ற கார்ப்பரேட் கழுகுகளுக்கு நாட்டின் அரியவகை கனிம வளங்களை தாரைவார்க்கும் மோடி அரசின் சதித்திட்டமாகும்.
எனவே, வருவாய் இழப்பு என்றும் மத்திய அரசுடன் பேச்சுவார்த்தை என்றும் பேரம் பேசுவதோடு நின்றுகொள்ளும் எதிர்க்கட்சிகளால் மாநில உரிமையையோ இயற்கை வளங்களையோ ஒருபோதும் காப்பாற்ற முடியாது.
எனவே, நாட்டின் இயற்கை வளங்களையும் சுற்றுச்சூழலையும் மக்களின் வாழ்வாதாரத்தையும் பாதுகாக்கும் கடமை மக்களின் தோளில் சுமத்தப்பட்டிருக்கிறது. ஒடிசா, சத்தீஸ்கர், ஜார்க்கண்ட், அசாம் என இந்தியா முழுவதும் நடந்துவரும் பழங்குடியின மக்களின் நில உரிமைக்கான போராட்டங்கள் இதனையே உணர்த்துகின்றன. ஆகவே, பேரழிவை ஏற்படுத்தும் இச்சட்டத்திற்கு எதிராக மக்கள்திரள் போராட்டங்களைக் கட்டியமைக்க வேண்டியது புரட்சிகர-ஜனநாயக சக்திகளின் கடமையாகும்.
![]()
அப்பு
(புதிய ஜனநாயகம் – அக்டோபர் 2026 இதழ்)
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram, Threads











