மேற்கு வங்கத்தில் அதிகரிக்கும் சிறுபான்மையினர் மீதான வன்முறைகள்!

வெறுப்புப் பிரச்சாரம், நேரடி வன்முறை, வாழ்வாதாரத்தின் மீதான தாக்குதல், நிதி ஒதுக்கீட்டில் பாகுபாடு, ஜனநாயக உரிமைகள் மறுப்பு என பல்வேறு வழிகளில் சிறுபான்மையினர் ஒடுக்கப்படுகின்றனர். இஸ்லாமியர்களையும், கிறிஸ்தவர்களையும் இரண்டாம் தர குடிமக்களாக்கும் ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க.வின் திட்டத்தை இத்தகைய நடவடிக்கைகள் வெளிப்படுத்துகின்றன.

ஒன்றியத்தில் ஆர்.எஸ்.எஸ். – பா.ஜ.க. ஆட்சியைக் கைப்பற்றியதிலிருந்து இஸ்லாமியர்கள்,  கிறிஸ்தவர்கள் உள்ளிட்ட சிறுபான்மையினர் மீதான வெறுப்பு பிரச்சாரங்களும், வன்முறை தாக்குதல்களும் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. தற்போது மேற்கு வங்கத்தில் பா.ஜ.க. ஆட்சியைக் கைப்பற்றியதைத் தொடர்ந்து, சிறுபான்மையினருக்கு எதிரான தாக்குதல்கள் தீவிரமடைந்து வருகிறது. இது ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க தனது இந்துராஷ்டிர கனவை நனவாக்குவதில் முன்னேறி வருவதைக் காட்டுகிறது.

அண்மையில், அக்டோபர் 9ஆம் தேதி,  கிறிஸ்தவர்களின் வழிபாட்டுத் தளத்திற்குள், சங்கி கும்பல் அத்துமீறி நுழைந்து தாக்குதலில் ஈடுபட்டனர். இதில் ஆறு பேர் படுகாயமடைந்ததோடு, வழிபாட்டுத் தளத்திலும் பெரும் பொருட்சேதம் ஏற்பட்டுள்ளது. மதமாற்றத்தில் ஈடுபடுவதாகக் குற்றம்சாட்டி நடத்தப்பட்ட இந்த தாக்குதல் தனித்த சம்பவமல்ல. ஜூலை மாதத்திலும் தேவாலயத்திற்குள் புகுந்த காவி குண்டர்கள் அங்கிருந்த பொருட்களைச் சேதப்படுத்தியதோடு, வழிபாட்டில் பங்கேற்ற மக்களையும் தாக்கியுள்ளனர். இவ்வாறு வழிபாட்டுத் தளங்களைக் குறிவைப்பதும், மதமாற்ற குற்றச்சாட்டுகளை முன்வைத்து சிறுபான்மையினரைத் தாக்குவதும் தொடர்கதையாகி வருகிறது.

இந்தியா ஹேட் லேப் (India Hate Lab) ஆய்வறிக்கையின்படி, மேற்கு வங்கத்தில் 2026 மே மாதம் பா.ஜ.க. ஆட்சிக்கு வந்ததிலிருந்து சிறுபான்மையினருக்கு எதிராக 62 வெறுப்பு மற்றும் வன்முறைச் சம்பவங்கள் நடைபெற்றுள்ளன. அதிகரித்து வரும் இந்த வெறுப்பு சம்பவங்களைப் பற்றிய ஆய்வில் சிறுபான்மையினருக்கு எதிரான வெறுப்பு செயல்களில் 88 சதவீதத்திற்கும் மேற்பட்டவை பா.ஜ.க. ஆளும் மாநிலங்களில் நடைபெற்றுள்ளதாகக் கூறப்படுகிறது. தேர்தல் பிரச்சாரங்கள், பொதுக்கூட்டங்கள், மத ஊர்வலங்கள் என பல்வேறு தளங்களில் இசுலாமியர்களுக்கும்  கிறிஸ்தவர்களுக்கும் எதிரான வெறுப்பு திட்டமிட்டு வளர்க்கப்படுகிறது.

ஒருபுறம் இந்து மதவெறியைத் தூண்டி மக்களைத் தனது இந்துராஷ்டிர கனவை நோக்கி அணிதிரட்டும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன. அண்மையில், மேற்கு வங்கத்தில் நடைபெற்ற துர்கா பூஜை நிகழ்வில் முறையான பாதுகாப்பு ஏற்பாடுகளும், திட்டமிடலும் இல்லாமல் குறுகலான இடத்தில் ஆயிரக்கணக்கில் மக்கள் திரண்டதில் ஏழு வயது குழந்தை உட்பட 19 பேர் உயிரிழந்த சம்பவம் மக்களிடையே இந்துத்துவ உணர்வை வளர்க்க மக்களின் உயிரையும் பணையம் வைக்கும் பா.ஜ.க அரசின் போக்கை எடுத்துக்காட்டியது.

மற்றொருபுறம், சிறுபான்மையினரின் வழிபாட்டு உரிமைகளும் வாழ்வாதாரமும் குறிவைக்கப்படுகின்றன. அவர்கள் மீது கட்டற்ற முறையில் வன்முறை அரங்கேற்றப்படுகிறது. இது  கிறிஸ்தவ பண்டிகைக்காக பலூன் விற்கும் சிறுவன் மீதும் கட்டவிழ்க்கப்படுகிறது; மாட்டுக்கறி வைத்திருந்ததற்காக ஒரு இஸ்லாமியர் மீதும் கட்டவிழ்க்கப்படுகிறது.

மேலும் நீதித்துறை, போலீஸ், தேர்தல் ஆணையம் உள்ளிட்ட அரசின் அமைப்புகளைத் தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவருவதன் மூலம், குறைந்தபட்ச ஜனநாயக உரிமைகளையும் பலவீனப்படுத்தி சட்டரீதியாகவே இந்துராஷ்டிரத்தை நிறுவ ஆர்.எஸ்.எஸ். – பா.ஜ.க. கும்பல் முயன்று வருகிறது.

மேற்கு வங்கத் தேர்தலில் எஸ்.ஐ.ஆர். (SIR) நடவடிக்கையின் மூலம் பல லட்சம் மக்களின், குறிப்பாக இஸ்லாமியர்கள் மற்றும்  கிறிஸ்தவர்களின் வாக்குரிமை பறித்துத்தான் ஆட்சியை நிறுவியுள்ளது பாசிச கும்பல்.

மேற்கு வங்க பா.ஜ.க. அரசு தனது நிதிநிலை அறிக்கையில் சிறுபான்மையினர் நலன் மற்றும் மதரசா கல்விக்கான நிதியை 62 சதவீதமாகக் குறைத்துள்ளது. பா.ஜ.க. ஆளும் அசாம் உள்ளிட்ட மாநிலங்களில் இஸ்லாமியர்கள் தடுப்பு முகாம்களில் அடைக்கப்படுவதும், இந்துத்துவக் குண்டர் படையினரின் தாக்குதல்களுக்கு உள்ளாவதும் சிறுபான்மையினரின் வாழ்வுரிமை குறித்த கேள்விகளை எழுப்புகின்றன.

மேற்கு வங்கத்தில் ஆட்சியமைத்த இரண்டு நாட்களுக்குள்ளாகவே இஸ்லாமியர்கள் நடத்தும் கடைகள் மீது தாக்குதல்கள் நடைபெற்றன. அவர்களின் பாதுகாப்பு மற்றும் வாழ்வாதாரம் சொந்த நாட்டிலேயே கேள்வியாக்கப்பட்டுள்ளது.

மேலும் சிறுபான்மையினரின் உரிமைகளைப் பறிக்கும் மற்றொரு நடவடிக்கையாக, மதமாற்றத் தடுப்பு என்ற பெயரில் சட்டங்கள் அறிமுகப்படுத்தப்படுகின்றன. 2025 பிப்ரவரியில் ராஜஸ்தான் சட்டமன்றத்தில் பா.ஜ.க. அரசு அறிமுகப்படுத்திய “ராஜஸ்தான் சட்டவிரோத மதமாற்றத் தடை மசோதா, 2025” மதமாற்றத்தில் ஈடுபடுபவருக்கு ஓராண்டு முதல் பத்து ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை உள்ளிட்ட தண்டனைகளை முன்வைத்தது. இந்திய அரசியலமைப்பின் சரத்து 25 படி ஒரு மனிதன் தான் விரும்பும் மதத்தைப் பின்பற்றும் உரிமை ஒவ்வொரு இந்தியக் குடிமகனுக்கும் உண்டு. ஆனால் பா.ஜ.க. ஆளும் மாநிலங்களுக்கு இவ்விதி எவ்வகையிலும் பொருந்தாத ஒன்று.

இவ்வாறாக, வெறுப்புப் பிரச்சாரம், நேரடி வன்முறை, வாழ்வாதாரத்தின் மீதான தாக்குதல், நிதி ஒதுக்கீட்டில் பாகுபாடு, ஜனநாயக உரிமைகள் மறுப்பு என பல்வேறு வழிகளில் சிறுபான்மையினர் ஒடுக்கப்படுகின்றனர். இஸ்லாமியர்களையும், கிறிஸ்தவர்களையும் இரண்டாம் தர குடிமக்களாக்கும் ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க.வின் திட்டத்தை இத்தகைய நடவடிக்கைகள் வெளிப்படுத்துகின்றன.

சிறுபான்மையினரின் உரிமைகளைப் பாதுகாப்பதும், ஆர்.எஸ்.எஸ். – பா.ஜ.க. முன்னெடுக்கும் பாசிச நடவடிக்கைகளை எதிர்ப்பதும் புரட்சிகர மற்றும் ஜனநாயக சக்திகளின் கடமையாகும். மதம், மொழி, இனம் ஆகிய வேறுபாடுகளைக் கடந்து மக்களை அமைப்பாக்கி, மதவெறி அரசியலுக்கு எதிராக உறுதியான போராட்டத்தைக் கட்டியெழுப்ப வேண்டும். சிறுபான்மையினரின் ஜனநாயக உரிமைகளையும், வாழ்வுரிமையையும் பாதுகாக்கும் பாசிச எதிர்ப்பு ஜனநாயகக் குடியரசைக் கட்டியமைக்க வேண்டும்.


நடாஷா

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram, Threads



விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க