23.10.2026

பாபர் மசூதி முதல் ரேஸ்கோர்ஸ் மசூதி வரை!

இஸ்லாமிய மக்களை ஒடுக்கும் காவி கார்ப்பரேட் பாசிசத்தை முறியடிப்போம்!

இந்துராஷ்டிர கனவை முறியடிக்க ஜனநாயக சக்திகள் ஒன்றிணைவோம்!

பத்திரிகைச் செய்தி

டெல்லியில் பிரதமர் இல்லத்திற்கு அருகிலுள்ள சுமார் 150 ஆண்டுகள் பழமையான ரேஸ்கோர்ஸ் மசூதியைக் காலி செய்யுமாறு அரசு நிலம் மற்றும் மேம்பாட்டு அலுவலகம் (L&DO) நோட்டீஸ் வழங்கியுள்ளது. மேலும் மசூதியின் மின்சாரம், குடிநீர் இணைப்புகளும் துண்டிக்கப்பட்டுள்ளது. ஜனநாயக விழுமியங்களுக்கும், மதச்சார்பின்மைக்கும் அச்சுறுத்தலாக இந்த நடவடிக்கை அமைந்துள்ளது. இதை மக்கள் அதிகாரக் கழகம் சார்பாக வன்மையாகக் கண்டிக்கின்றோம்.

மசூதிக்குள் நுழைவதற்கான கட்டுப்பாடுகள் மற்றும் அத்தியாவசிய சேவைகள் துண்டிக்கப்பட்டதால், வழிபாடு நடத்த முடியாமல் இஸ்லாமிய மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் படி ஒவ்வொரு குடிமகனுக்கும் இருக்கும் வழிபாட்டு உரிமையை பா.ஜ.க. அரசு பறித்து வருகிறது.

இந்த ரேஸ்கோர்ச் மசூதி மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதி ஆகியவை 1977 ஆம் ஆண்டின் டெல்லி நிர்வாக அரசிதழ் அறிவிப்பின் படி அங்கீகரிக்கப்பட்ட வக்ஃப் சொத்தாக உள்ளது. மேலும் புது தில்லியின் நகராட்சி மன்றத்தின் பாரம்பரிய கட்டடங்கள் பட்டியலிலும் இடம் பெற்றுள்ளது.

ரேஸ் கோர்ஸ் மசூதியைப் பாதுகாக்கக் கோரி அமைச்சர் கிரண் ரிஜிஜூவை நேரில் சந்தித்து இஸ்லாமிய அமைப்புகள் மனு அளித்துள்ளனர். தமிழ்நாட்டில் உள்ள மனித நேய மக்கள் கட்சி உள்ளிட்ட கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.

ரேஸ் கோர்ஸ் மசூதிக்குப் பக்கத்தில் உள்ள 700 வீடுகளை ஆக்கிரமிப்பு என்று சொல்லி இடித்துத் தள்ளியுள்ளது பா.ஜ.க. அரசு. வீடுகள் என்பது வெறும் செங்கல், சிமெண்ட் கட்டடம் அல்ல, ஒரு குடும்பத்தின் வாழ்வாதாரம், பாதுகாப்பு, எதிர்காலம் என அனைத்தையும் திட்டமிட்டே சிதைப்பதாகும். இத்தகைய நடவடிக்கைகள் இஸ்லாமியர்களைக் குறிவைத்து அவர்களின் வாழ்வாதாரத்தை அழிக்கும் மதவெறியுடன் செயல்படுத்தப்படுகிறது.

ரேஸ் கோர்ஸ் மசூதிக்குப் பக்கத்தில் உள்ள 700 வீடுகளை ஆக்கிரமிப்பு என்று சொல்லி இடித்துத் தள்ளியுள்ளது பா.ஜ.க. அரசு.

1992 டிசம்பர் 6 அன்று, ஆர்.எஸ்.எஸ். – பா.ஜ.க. தலைமையிலான இந்துத்துவ அமைப்புகளின் பின்னணியில் பாபர் மசூதி திட்டமிட்டு இடித்துத் தரைமட்டமாக்கப்பட்டது. ராமர் பிறந்த இடம் என்ற இமாலய பொய்யை முன்வைத்து ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க வழிபாட்டுத் தலம் இடிக்கப்பட்டது. இது இந்திய அரசியல் வரலாற்றில் அழிக்க முடியாத கறையாகும். இன்று ஞானவாபி மசூதி உள்ளிட்ட பல்வேறு வழிபாட்டுத் தலங்கள் தொடர்பாகப் புதுப்புது சர்ச்சைகள் ஆர்.எஸ்.எஸ். கும்பலால் திட்டமிட்டே எழுப்பப்படுகின்றன. மதக்கலவரங்களை உருவாக்கி அதில் அரசியல் ஆதாயம் அடைவது தான் ஆர்.எஸ்.எஸ். – பி.ஜே.பி. கும்பலின் திட்டம்.

நேற்று பாபர் மசூதி, இன்று ரேஸ்கோர்ஸ் மசூதி, நாளை எந்த வழிபாட்டுத் தலம்? என்ற அச்சுறுத்தலை உருவாக்கி வருகின்றனர்.

உத்தரப் பிரதேசம், குஜராத் உள்ளிட்ட பா.ஜ.க. ஆளும் மாநிலங்களில், இஸ்லாமியர்களின் வீடுகள், கடைகள் மற்றும் பிற கட்டடங்கள் ஆக்கிரமிப்பு அல்லது சட்டவிரோதக் கட்டுமானம் என்ற பொய்க் குற்றச்சாட்டின் பெயரில் புல்டோசர்களால் இடிக்கப்படும் கொடூரங்கள் நடந்தேறி வருகின்றன.

மசூதிகளைப் பாதுகாப்பது என்பது இஸ்லாமியர்களின் பிரச்சினை மட்டுமல்ல. அது ஒவ்வொரு ஜனநாயக சக்திகளும் அக்கறை கொள்ள வேண்டிய பிரச்சினை.

பெரும்பான்மை உழைக்கும் மக்களின் வேலைவாய்ப்பு, விலைவாசி உயர்வு, கல்வி, மருத்துவம், விவசாயம் போன்ற அடிப்படைப் பிரச்சினைகளைத் தீர்க்காத இந்த பாசிச மோடி அரசு, திட்டமிட்டே மத ரீதியான தாக்குதலை நடத்தி வருகிறது. இவர்களுடைய இந்து ராஷ்டிரத்தில் உழைக்கும் மக்களாகிய இஸ்லாமியர்கள், கிறிஸ்துவர்கள், தலித் மக்கள், ஆதிவாசிகள், பழங்குடியினர்கள், மீனவர்கள், தொழிலாளர்கள், விவசாயிகள், சிறு வணிகர்கள், மாணவர்கள், பெண்கள் என அனைத்து தரப்பு மக்களும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். ஒடுக்குமுறைகளுக்கெதிராக அனைவரும் களம் காண்போம்.

மோடி அரசே!

  • டெல்லி ரேஸ்கோர்ஸ் மசூதியை இடிக்கும் பாசிச நடவடிக்கையை உடனடியாக கைவிட வேண்டும். மசூதியின் மின்சாரம், குடிநீர் இணைப்புகளை மீண்டும் வழங்கி, மக்களின் வழிபாட்டு உரிமையை உறுதிப்படுத்த வேண்டும்
  • அனைத்து மத மக்களுக்கும் சம உரிமை, பாதுகாப்பு, வழிபாட்டு உரிமை உறுதிப்படுத்த வேண்டும். இஸ்லாமிய மக்களின் உரிமைகளைப் பாதுகாப்போம்!
  • ஆர்.எஸ்.எஸ்- பாஜகவின் இந்துராஷ்டிரத் கனவை முறியடிப்போம்!


தோழமையுடன்
தோழர் சி. வெற்றிவேல் செழியன்,
கழகப் பொதுச் செயலாளர்,
மக்கள் அதிகாரக் கழகம்,
தமிழ்நாடு – புதுவை.
9962366321

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram, Threads



விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க