ஒவ்வொரு எழுச்சியும் அடுத்த எழுச்சியின் வகுப்பறை! ஜந்தர் மந்தர் மாணவர் போராட்டம் விட்டுச் சென்ற தலைவர்களும் அனுபவங்களும்

அடுத்த போராட்டம் மீண்டும் பூஜ்ஜியத்திலிருந்து தொடங்காமல், ஜந்தர் மந்தர் போராட்டத்தின் படிப்பினைகளிலிருந்து தொடங்கும் வகையில் நமது கற்றலை மேம்படுத்த வேண்டும்.

போராட்டக் களத்தில் போலீசு ஒடுக்குமுறையை துணிவுடன் எதிர்கொள்ளும் இளைஞர்கள்.

மாபெரும் புரட்சிகள் ஏதோ ஒரு நல்ல நாளில் திடீரென வெடித்து, ஒரே முயற்சியில் பிசிறில்லாமல் அரங்கேற்றப்படும் காவியங்கள் அல்ல. வேலைநிறுத்தங்கள், முற்றுகைகள், தன்னிச்சையான எழுச்சிகள், சிறிய வெற்றிகள், கடுமையான தோல்விகள், அரசின் அடக்குமுறைகள், போராட்டங்களை ஒருங்கிணைத்த அமைப்பில் நேர்ந்த தவறுகள்  – இவற்றில் மக்கள் பெற்ற அனுபவங்கள் படிப்படியாகத் திரண்டு அரசியல் அறிவாகவும் அமைப்புத் திறனாகவும் மாறும்போதுதான் பெரும் சமூக மாற்றத்திற்கான அடித்தளம் தயாராகிறது.

ஒவ்வொரு எழுச்சியையும் அடுத்த எழுச்சிக்கான அனுபவமாக மாற்ற வேண்டும் என்ற இந்த வரலாற்றுப் படிப்பினையை இந்திய மாணவர்கள் எழுச்சியிலும் நாம் பொருத்த வேண்டும். ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானின் பதவி விலகல் ஜந்தர் மந்தர் போராட்டத்தின் உடனடி வெற்றி. ஆனால், அதன் ஆழமான அனுபவத் திரட்சியானது, போலீசின் தடுப்பரணுக்கு முன்னால் தலைவர்களாக மாறிய இளைஞர்களிலும், குடிசையிலிருந்து எழுந்த தொழிலாளியின் வர்க்கக் குரலிலும், உணவு – மருத்துவம் – பாதுகாப்பு – அறிவு ஆகியவற்றால் போராட்டத்தை உயிர்ப்புடன் வைத்த கூட்டுழைப்பிலும் இருக்கிறது.

மூன்று வாழ்க்கைகள் –
ஒரே தலைமுறையின் எழுச்சி

டெல்லி, பதர்பூர் எல்லையிலிருந்து பள்ளியை விட்டுவிட்டு ஜந்தர் மந்தர் போராட்டத்திற்கு வந்த சிறுமி கனிகா, பதினோராம் வகுப்பு அறிவியல் பிரிவு மாணவி. நீட் தேர்வை இனிமேல்தான் எழுதப் போகிறார். ஆனால், தொடர்ந்து அரங்கேறிவரும் வினாத்தாள் மோசடிகள் தனது எதிர்காலத்தை கேள்விக்குறியாக்கி வருவதை அவர் ஏற்கெனவே உணர்ந்திருந்தார்.

அவர் தடுப்பரணுக்கு முன்னால் “வெறுங்கையோடு திரும்புவதற்காக நாங்கள் வரவில்லை; கல்வி அமைச்சரின் ராஜினாமாவை வாங்கியே தீருவோம்” என்று முழங்கினார். போலீசிடம் கெஞ்சவில்லை; “உள்ளே செல்ல எங்களுக்குச் சுதந்திர உரிமை இருக்கிறது; வழியை விட்டு விலகுங்கள்” என்று உரிமைக் குரலெழுப்பினார். அவர் அத்துடன் நிற்கவில்லை. “நாங்களும் பதினெட்டு வயதை அடைவோம். யாருக்கு ஓட்டுப் போடுவோம் என்று அப்போது பார்க்கிறோம். ஒருவருக்கும் இல்லை. எந்த அரசாங்கத்திற்கும் வாக்களிக்க மாட்டோம். எல்லோரும் திருடர்கள்” என தனது அரசியல் பிரகடனத்தை முன்வைத்தார்.

இது ஏதோ ஒரு பள்ளி மாணவியின் சிறு வயதுக் கோபமல்ல. தனது கல்வியை, எதிர்காலத்தைக் காக்க எந்தத் தேர்தல் கட்சியும் களத்திற்கு வராதபோது, வினாத்தாளைக் கசியவிட்டவர்கள் பாதுகாக்கப்பட்டபோது, நீதிகேட்ட மாணவர்களுக்கு எதிராகப் போலீசு அடக்குமுறை ஏவப்பட்டபோது எடுக்கப்பட்ட அரசியல் முடிவு. பள்ளி மாணவியாகக் களத்திற்கு வந்த கனிகாவை, சில நிமிடங்களில் ஒரு தலைமுறையின் அரசியல் அடையாளமாகப் போராட்டக்களம் உயர்த்தியது.

மகாராஷ்டிராவின் மும்பையில் போராட்டக் களத்தை அடைவதற்கு முன்பே, கைது செய்யப்பட்ட மாணவர்களை ஏற்றிச் சென்ற போலீசு வாகனம் ஒன்று ரியா அஹிர் என்ற இளம்பெண் முன்னால் வந்தது. வாகனத்திற்குள் இருந்த யாருமே அவருக்கு அறிமுகமில்லை. நிலைமையை எவ்வாறு எதிர்கொள்வது என்று தனது கைப்பேசியின் உதவியுடன் தகவல்களைத் தேடித் தெரிந்துகொண்ட அவர், மாணவர்களைக் கைது செய்ததற்கான ஆவணத்தைப் போலீசிடம் கேட்டார். பதில் கிடைக்கவில்லை. மழையில் போலீசு வாகனத்துடன் ஓடி, அதன் முன்பாகச் சென்று தடுத்து நிறுத்தினார். போலீசின் மிரட்டல்களையும் சட்டவிரோத நடவடிக்கைகளையும் கைப்பேசியில் பதிவு செய்தார். நாற்பது நிமிடங்கள் அங்கிருந்து நகரவில்லை. இறுதியில் மாணவர்கள் விடுவிக்கப்பட்டனர்.

“நான் போராட்டத்தில் கலந்துகொள்ளச் சென்றேன்; அதற்கு முன்பாகப் போராட்டமே என்னிடம் வந்தது” என்ற அவரது சொல், அந்தச் செயலின் முழு உணர்வையும் கூறியது. அது ரியாவின் முதல் போராட்டம். “எனக்குச் சம்பந்தமில்லை” என்று அநீதியைக் கடந்து செல்ல மறுத்த ஒரு இளம்பெண், தனது தீரச்செயலின் மூலம் போராட்டக்களத்தின் தலைவராக, நாடு போற்றும் வீரமங்கையாக மாறினார்.

கனிகா பள்ளிக்கூடத்திலிருந்து வந்தார். ஆனால், முகமது இர்ஃபான் பள்ளிக்கூடத்திற்கே செல்ல முடியாத வாழ்க்கையிலிருந்து வந்தவர். டெல்லியின் குடிசைப் பகுதியில் பத்துக்குப் பத்து அறையில் குடும்பத்துடன் வாழ்ந்து, தள்ளுவண்டிக் கடையில் நாளொன்றுக்கு ஐந்நூறு ரூபாய் ஈட்டும் இளம் தொழிலாளி அவர். “நாங்கள் யாருடைய பணத்திலும் வாழவில்லை; இந்த நாட்டின் உழைப்பாளர்கள் நாங்கள். ஆனால் இந்த சிஸ்டம் எங்களை நசுக்குகிறது” என்ற அவரது ஒரு வரி, ஏழைகளை அரசின் கருணையில் வாழும் சுமையாகக் காட்டும் பொய்யை நொறுக்கியது.

“வயிறு நிறையச் சாப்பிடுவது மட்டும் வாழ்க்கையல்ல. ஐந்நூறு ரூபாயிலும் எங்களிடம் ஜி.எஸ்.டி. வாங்குகிறீர்கள். பத்து, பதினொரு மணி நேரம் வேலை வாங்கி பதின்மூன்று, பதினான்கு ஆயிரம் ரூபாய் தருகிறார்கள். தொழிலாளி ஒருநாள் போராட வந்தால் அன்றைய கூலி போய்விடும்” என்றார்.

மன அழுத்தம், நடுங்கும் கைகள், வேகமாகத் துடிக்கும் இதயம், கிடைக்காத மருத்துவம் என இந்தச் சமூக அமைப்பு ஏழைகளை எவ்வாறு நசுக்குகிறது என்பதற்கு இர்ஃபானின் உடலே சாட்சியாக இருந்தது. பள்ளிக்குச் செல்ல முடியாத அவர் கைப்பேசியில் கவிதைகளைத் தேடிப் படித்தார்; பகத்சிங்கின் பெயர் கொண்ட  கவிதைகளைத் தனது குரலில் வாசித்து நள்ளிரவிலும் போராட்டக்களத்தை உயிர்ப்புடன் வைத்தார். எந்தப் பல்கலைக்கழகமும் அவரை உருவாக்கவில்லை. உழைப்பு, வறுமை, குடிசை, அவமதிப்பு, வாசிப்பு, போராட்டம் – இவையே அவரை உருவாக்கிய பல்கலைக்கழகங்கள். “எங்களை இந்து–இஸ்லாமியர் என்று பிரிக்காதீர்கள்; தொழிலாளர்களின் வாழ்க்கையை மாற்றுங்கள்” என்று இர்ஃபான் சொன்னபோது, மாணவர் எழுச்சி செல்ல வேண்டிய வர்க்கப் பாதையைத் தொட்டுக் காட்டினார்.

கனிகாவின் எதிர்காலத்தை வினாத்தாள் கசிவு அழிக்கிறது. இர்ஃபானின் நிகழ்காலத்தை குறைந்த கூலியும் வறுமையும் அழிக்கின்றன. இப்பிரச்சினைகளை நேரடியாக எதிர்கொள்ளாத ரியா, யாரென்றே தெரியாத மாணவர்களுக்காகத் தனது உடலைத் தடுப்பரணாக மாற்றினார். வேறுபட்ட பின்னணிகளைச் சேர்ந்த இம்மூவரையும் ஒரே களத்தில் இணைத்தது ஒரு சமூக உணர்வு – அது, “இது எனக்குச் சம்பந்தமற்றது” என்று விலக மறுத்த பொறுப்புணர்வு.

போராட்டத்தைத் தாங்கிய கூட்டுச் சமூகம்

இந்த மூவரின் பின்னால் பெயரற்ற, முகமற்ற ஆயிரமாயிரம் கைகள் இருந்தன. யாரோ ஒருவர் புத்தகத்தைக் கொண்டுவந்தார்; அது கள நூலகத்தின் பொதுச் சொத்தானது. உலகின் பல பகுதிகளில் இருந்தும் முகம் தெரியாதவர்கள் “பசியுள்ள எந்த மாணவருக்கும் கொடுங்கள்” என்று உணவை அனுப்பினர். தேவைக்கு மேல் மீதமான உணவை அருகிலிருந்த மருத்துவமனை வாசலில் காத்திருந்த ஏழைக் குடும்பங்களுடன் மாணவர்கள் பகிர்ந்துகொண்டனர்.

மருத்துவர்களும் மருத்துவ மாணவர்களும் காயங்களுக்கு மருந்திட்டனர். ஓ.ஆர்.எஸ். (ORS), முகக்கவசம், சானிட்டரி நாப்கின் (Sanitary napkin), குடிநீர் ஆகியவை திரட்டப்பட்டன. மாணவிகள் இரவும் பகலும் களத்தில் நிலைத்திருக்க மாதவிடாய் சுகாதாரம், பாதுகாப்பான கழிப்பிடம், ஓய்வு, மருத்துவ உதவி ஆகியவை போராட்டத்தின் பொதுத் தேவையாக ஏற்கப்பட்டன.

ஒரு பெண் தன்னார்வலர் நண்பர்கள், உறவினர்களிடமிருந்து நிதி திரட்டி நாற்பது பவர் பேங்குகளை (Power bank) வாங்கினார். அவற்றை களத்தில் சுழற்சி முறையில் வழங்கி, திரும்பப் பெற்று வீட்டில் சார்ஜ் செய்து, மறுநாள் மீண்டும் கொண்டுவந்தார். கைது, மருத்துவம், குடும்பத் தொடர்பு, போலீசு வன்முறைப் பதிவு – அனைத்திற்கும் கைப்பேசி களக் கருவியாக இருந்தது.

போலீசின் தாக்குதல் காட்சிகளைச் சில மணி நேர இணையப் பரபரப்பாக மறைந்துபோக விடாமல், அவற்றைச் சட்ட நடவடிக்கைக்கான ஆதாரங்களாகச் சேமிக்க நவீன செயலிகள் மூலம் தகவல் பரிமாற்றம் மேற்கொள்ளப்பட்டது. இம்முயற்சிகளின் மூலம் பாசிச மோடி அரசின் இணைய முடக்கத்தையும் மாணவர்கள் தகர்த்தார்கள். ஜென் சி தலைமுறையின் மொழிகளான மீம்களும் நையாண்டிக் காணொளிகளும் அதிகாரத்தின் மீதான அச்சத்தை உடைத்தன; கைப்பேசித் திரைகள் போராட்டக்களத்தின் சுவரொட்டிகளாக மாறின.

போலீசு உடைத்த போராட்ட மேடையைத் தன்னார்வலர்கள் இரவோடு இரவாக மீண்டும் எழுப்பினர். காயமடைந்த மாணவர்கள் கட்டுப்போட்ட உடல்களுடன் மறுநாள் போராட்டக் களத்திற்கு திரும்பினர். அக்னிபாத் திட்டத்துக்கு எதிராகத் தீரத்தை வெளிப்படுத்திய பாட்னாவின் இளம் பட்டாளம், தண்ணீர்ப் பீரங்கி, கண்ணீர்ப்புகை, தடியடியை இம்முறை மிகுந்த விருப்பத்தோடு எதிர்கொண்டு, போராட்டக்களத்தில் புதிய தடத்தை பதித்திருக்கிறது.

இவை தனித்தனி மனிதநேயச் சம்பவங்களோ தனிப்பட்ட மாணவர்களின் தீரமோ அல்ல. பார்வையாளர்கள் பங்கேற்பாளர்களாகவும், உதவி பெற்றவர்கள் பொறுப்பேற்றவர்களாகவும், கூச்ச சுபாவம் கொண்டவர்கள் அமைப்பாளர்களாகவும் மாறிய தருணங்கள். ஆம், போராட்டக்களம் ஏற்கெனவே தயாரான போராளிகளை மட்டும் திரட்டவில்லை; புதிய மனிதர்களையும், அமைப்பாளர்களையும் தலைவர்களையும் உருவாக்கியுள்ளது.

விவசாயிகள், ஆயிஷா தொழிலாளர்கள்…
பல்வேறு வர்க்கங்களின் ஆதரவு

ஜூலை 16 அன்று பாரதிய கிசான் சங்கத் தலைவர் ராகேஷ் திகாயத் சுமார் ஐந்நூறு விவசாயிகளுடன் ஜந்தர் மந்தருக்கு வந்தார். பின்னர் மாணவர்கள் மீதான போலீசு தாக்குதலை எதிர்த்து பஞ்சாப் – ஹரியானாவில் விவசாயிகளும் மாணவர் அமைப்புகளும் போராடினர். அமெரிக்க அடிமை ஒப்பந்தத்தை எதிர்த்த தங்கள் சொந்தக் கோரிக்கைகளுடன் டெல்லி நோக்கி வந்த பஞ்சாப் – ஹரியானா விவசாயிகளை ஹரியானா போலீசு தடுத்து நிறுத்தியது.

இதேபோல், டெல்லி, உத்தரப் பிரதேசத்தில் மாணவர்களுக்கு ஆதரவாக ஆயிஷா தொழிலாளர்கள் போராடினார்கள். ஆட்டோ ஓட்டுநர்கள் போராட்டக் களத்திற்கு வருபவர்களை இலவசமாக அழைத்து வந்து விட்டார்கள். இவ்வாறு பல்வேறு வர்க்கத்தைச் சார்ந்த உழைக்கும் மக்களும் தங்களால் முடிந்தவரை மாணவர் போராட்டத்திற்கு ஆதரவாக இருக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தனர்.

விவசாயியின் நிலத்தை கார்ப்பரேட் நிறுவனங்களிடம் தாரைவார்ப்பதும், மாணவரின் கல்வியைப் பயிற்சி நிறுவனங்களுக்கும் கார்ப்பரேட் கல்லூரிகளுக்கும் தாரைவார்ப்பதும், தொழிலாளர்களின் உழைப்பைச் சுரண்டுவதும், மக்களின் வாழ்வாதாரத்தைச் சூறையாடுவதும் தனியார்மயம் – தாராளமயம் – உலகமயம் எனும் ஒரே மறுகாலனியாக்கக் கொள்கைதான். இப்படி பாதிக்கப்படும் வர்க்கங்கள் இணைந்தால் எத்தகைய வலிமை கிடைக்கும் என்பதை இந்தப் போராட்டத்தின் இறுதி நாட்கள் எடுத்துக் காட்டியிருக்கின்றன. தனித்தனி கோரிக்கைகளுக்கான போராட்டங்களாக அல்லாமல், பொதுக் கோரிக்கைகளுக்கான இணைந்த போராட்டமாக எழுந்து நிற்பதன் தேவையை, பயனை உணர்த்தியிருக்கின்றன.

ஒவ்வொரு அடியும்
புதிய தலைவர்களை உருவாக்கும்

ஜாலியன்வாலாபாக்கில் இந்திய மக்கள் சிந்திய இரத்தம், சிறுவன் பகத்சிங்கின் நெஞ்சில் அணையாத நெருப்பை மூட்டியது. பின்னர் புரட்சிகர அரசியலும் அமைப்பும் அவரை இந்திய மக்களின் புரட்சிகர அடையாளமாகச் செதுக்கின. மக்களை அச்சுறுத்துவதற்காக நடத்தப்பட்ட படுகொலை, ஏகாதிபத்தியத்தின் தூக்குமேடைக்கும் அஞ்சாத ஒரு தலைமுறையை  உருவாக்கியது.

இன்று ஆர்.எஸ்.எஸ். – பா.ஜ.க. பாசிச கும்பலும் அதே விதியைச் சந்திக்கிறது. அது எழுப்பும் ஒவ்வொரு தடுப்பரணும் புதிய கனிகாக்களை உருவாக்குகிறது. ஒவ்வொரு கைதும் புதிய ரியாக்களை முன்னே கொண்டுவருகிறது. முதலாளித்துவம், தனக்கு சவக்குழியைத் தோண்டும் பாட்டாளி வர்க்கத்தைத் தானே உருவாக்கியதுபோல, பாசிசம் தனது அடக்குமுறையால் தன்னை வீழ்த்தப்போகும் போராளிகளை உருவாக்கிக் கொண்டிருக்கிறது.

ஆனால், தீப்பொறி தானாகப் பெருநெருப்பாகாது. “யாருக்கும் வாக்களிக்க மாட்டோம்; எல்லோரும் திருடர்கள்” என்று கனிகா முழங்கும் இடத்தில்தான் புரட்சிகர அமைப்புகளின் பணி தொடங்குகிறது. இத்தகைய இளம் போராளிகளை அடையாளம் கண்டு, வரலாற்றையும் வர்க்க அரசியலையும் கற்றுக்கொடுத்து பயிற்றுவிக்க வேண்டும். ரியாவின் துணிவை மக்கள் இயக்கத்தின் ஒழுங்காகவும், இர்ஃபானின் அனுபவ அறிவைப் பாட்டாளி வர்க்கத்தின் அமைப்புச் சக்தியாகவும் உயர்த்த வேண்டும். போராட்டக்களம் கலைந்ததும் சிதறிப்போகும் தனிநபர்களின் நினைவுகளாக அன்றி இந்த அனுபவங்களை ஒன்றுதிரட்டிச் சேகரிக்க வேண்டும். அடுத்த போராட்டம் மீண்டும் பூஜ்ஜியத்திலிருந்து தொடங்காமல், ஜந்தர் மந்தர் போராட்டத்தின் படிப்பினைகளிலிருந்து தொடங்கும் வகையில் நமது கற்றலை மேம்படுத்த வேண்டும்.

ஜென் சி-கள் அரசியலற்ற தலைமுறை அல்ல. அவர்களின் அரசியல் உணர்வு வினாத்தாள் கசிவிலும், வேலைவாய்ப்பின்மையிலும், போலீசு தடுப்பரணிலும், கைப்பேசித் திரையிலும், கள நூலகத்திலும், பகிரப்பட்ட உணவிலும், விவசாயிகளின் லங்கரிலும் (விவசாயிகள் போராட்டத்தில் சாதி, மதம் பார்க்காமல் அனைவருக்கும் உணவு வழங்கும் கூடம்) பிறந்து கொண்டிருக்கிறது. அடுத்த போராட்டம் வெடிக்கும்போது அவர்கள் பார்வையாளர்களாக நிற்க மாட்டார்கள்; கனிகாவைப் போல கேள்வி கேட்கவும், ரியாவைப் போலத் தலையிடவும், இர்ஃபானைப் போல தங்கள் வாழ்க்கையின் உண்மையைப் பேசவும் களத்திற்குள் வந்தே தீருவார்கள். ஏனெனில் ஒருமுறை போராட்டக்களத்தில் அரசியலைக் கற்றுக்கொண்ட தலைமுறை, மீண்டும் மௌனமாக வாழ முடியாது!


தமிழ்ச்செல்வன்

(புதிய ஜனநாயகம் – ஆகஸ்ட் 2026 இதழ்)

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram, Threads



விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க