பணி நிரந்தரம், ஊதிய உயர்வு உள்ளிட்ட அடிப்படை வாழ்வாதார கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி தூய்மைப் பணியாளர்கள் சென்னை மாநகராட்சி அலுவலகமான ரிப்பன் மாளிகை வளாகத்தில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஐந்து ஆண்டுகள் மற்றும் அதற்கு மேலாக ஒப்பந்த முறையில் பணியாற்றும் தூய்மைப் பணியாளர்கள் பணி நிரந்தரம் செய்யப்படுவார்கள் என்று தவெ.க. தன்னுடைய தேர்தல் வாக்குறுதியில் அறிவித்திருந்தது. ஆனால் ஆட்சிக்கு வந்து நூறு நாட்களுக்கு மேலாகியும் தூய்மைப் பணியாளர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுவதற்கு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இதனால் ஆத்திரமடைந்த தூய்மைப் பணியாளர்கள் உழைப்போர் உரிமை இயக்கத்தின் தலைமையில் தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்ற வலியுறுத்தி ஆகஸ்ட் 20 ஆம் தேதி முதல் சாலை மறியல், தலைமைச் செயலகத்தை நோக்கி பேரணி என பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர்.
குறிப்பாக ஆகஸ்ட் 24 ஆம் தேதி முதல் ரிப்பன் மாளிகை வளாகத்தில் தங்கி தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். காலையில் நகரின் தூய்மைப் பணிகளை முடித்துவிட்டு மாலையில் போராட்டத்தில் இணைந்து கொள்கின்றனர்.
ஆனால் கோரிக்கைகளை நிறைவேற்றுவதற்குப் பதிலாக தூய்மைப் பணியாளர்களை போலீசைக் கொண்டு கைது செய்வது, இரவில் மின்சாரத்தை நிறுத்தி அச்சுறுத்துவது போன்ற ஒடுக்குமுறைகளை மேற்கொண்டு வருகிறது த.வெ.க. அரசு.
மக்களின் சுகாதாரத்தையும், சென்னை மாநகரத்தின் தூய்மையையும் பேணிக் காக்கும் தூய்மைப் பணியாளர்களைப் பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்ற அடிப்படைக் கோரிக்கையை ஏற்க மறுத்து போலீசை கொண்டு ஒடுக்குவது கடும் கண்டனத்திற்குரியதாகும்.
தூய்மைப் பணியாளர்களின் 11 அம்ச கோரிக்கைகள்:
- நீண்ட காலமாக தற்காலிக மற்றும் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றும் அனைத்துத் தூய்மைப் பணியாளர்களையும் உடனடியாகப் பணி நிரந்தரம் செய்ய வேண்டும்.
- சென்னை மாவட்ட ஆட்சியர் நிர்ணயித்த குறைந்தபட்ச நாளூதியமாக ₹832 வழங்க வேண்டும். (தற்போது ₹761 மட்டுமே வழங்கப்படுகிறது)
- வாரத்திற்கு ஒரு நாள் கட்டாய ஊதியத்துடன் கூடிய விடுப்பு வழங்கப்பட வேண்டும்.
- பெண் தூய்மைப் பணியாளர்கள் மற்றும் உள்ளாட்சித் தொழிலாளர்களுக்கு மாதந்தோறும் சம்பளத்துடன் கூடிய மாதவிடாய் விடுப்பு வழங்க வேண்டும்.
- அரசு ஊழியர்களுக்கு வழங்கப்படுவதைப் போல ஒப்பந்தப் பெண் பணியாளர்களுக்கும் 3-வது குழந்தைக்கு 1 ஆண்டு ஊதியத்துடன் கூடிய மகப்பேறு விடுப்பு வழங்கப்பட வேண்டும்.
- கடந்த ஆண்டு தனியார்மய எதிர்ப்பு போராட்டத்தில் பணிநீக்கம் செய்யப்பட்டு மீண்டும் பணி வழங்கிய பட்டியலில் விடுபட்ட 13 பணியாளர்களையும் மீண்டும் முழுமையாகப் பணியில் சேர்க்க வேண்டும்.
- 2025-ஆம் ஆண்டு தனியார்மய எதிர்ப்புப் போராட்டத்தின் போது தொழிலாளர்கள் மற்றும் தொழிற்சங்க நிர்வாகிகள் மீது பதியப்பட்ட காவல் வழக்குகளை முழுமையாகத் திரும்பப் பெற வேண்டும்.
- தூய்மைப் பணியாளர்களுக்குத் தேவையான அனைத்து அடிப்படை வசதிகளுடன் கூடிய தரமான நகர்ப்புற உறைவிட / வீட்டுவசதிகளை அமைத்துத் தர வேண்டும்.
- பணியின் போது உணவுப் படி (Food Allowance) வழங்குவதோடு, பணிபுரியும் இடங்களில் கழிப்பறை மற்றும் குடிநீர் வசதிகளை உறுதி செய்ய வேண்டும்.
- மாநகராட்சி வளாகத்திற்குள் தொழிற்சங்கப் பணிகளை மேற்கொள்வதற்கு அதிகாரப்பூர்வமாக அலுவலக இடம் ஒதுக்கீடு செய்ய வேண்டும்.
- அதிகாரிகளுடன் மட்டுமே பேச்சுவார்த்தை நடத்தாமல், தங்களின் கோரிக்கைகள் குறித்து முதலமைச்சருடன் நேரடியாகச் சந்தித்துப் பேச வாய்ப்பு அளிக்க வேண்டும்.
தூய்மைப் பணியாளர்கள் தொடர் போராட்டத்தினால் விடுபட்ட பட்டியலில் உள்ள 12 தூய்மைப் பணியாளர்களை பணியில் சேர்த்துள்ளது. ஆவணங்கள் சரிபார்க்கப்பட்டு ஒவ்வொருவரும் பணியில் சேர்க்கப்படுவர் என்று அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மகப்பேறு விடுப்பு, ஊதிய உயர்வு , தொழிற்சங்க அலுவலகம் மற்றும் உணவுப்படி உள்ளிட்ட நான்கு கோரிக்கைகளைப் பரிசீலிப்பதாக அரசு தெரிவித்துள்ளது. ஆனால் தூய்மைப் பணியாளர்களின் அடிப்படை வாழ்வாதார கோரிக்கையான பணி நிரந்தரம் குறித்து வாய்திறக்கவில்லை. ஆனால், முதல்வர் விஜய் தங்களைச் சந்திக்கும் வரை போராட்டத்தில் ஈடுபடுவோம் என்று தூய்மைப் பணியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
மறுபுறம் தூய்மைப் பணியாளர்கள் பணி நிரந்தரம் கோரி போராடிக் கொண்டிருக்கும் நேரத்தில், த.வெ.க. அரசின் சமூக நீதித்துறை அமைச்சர் வன்னியரசு 2,500 தூய்மைப் பணியாளர்களுக்கு அகம் திட்டத்தின் கீழ் வீடுகள் கட்டித் தரப்படும் என்று அறிவித்துள்ளார் . இது தூய்மைப் பணியாளர்களின் போராட்டத்தை மழுங்கடிக்கின்ற வஞ்சக நடவடிக்கையாகும்.
குறிப்பாக, த.வெ.க. தமிழ்நாட்டின் 12 மாநகராட்சிகளில் திடக்கழிவு மேலாண்மை மற்றும் தூய்மைப் பணிகளைப் பொது-தனியார் பங்களிப்பு (PPP) அடிப்படையில் மேற்கொள்வதற்கான சாத்தியக்கூறு அறிக்கையைத் தயார் செய்ய டெண்டர் அறிவிப்பை வெளியிட்டது. பின்னர் தூய்மைப் பணியாளர்களின் போராட்டம் மற்றும் ஜனநாயக சக்திகளின் எதிர்ப்பினால் அதனை ரத்து செய்தது.
தூய்மைப் பணிகளைத் தனியார்மயமாக்க வேண்டும் என்ற நோக்கத்திலிருந்தே தூய்மைப் பணியாளர்களைப் பணி நிரந்தரம் செய்யாமல் அவர்களுக்குத் துரோகமிழைத்து வருகிறது. இது த.வெ க அரசின் அப்பட்டமான கார்ப்பரேட் சேவையைக் காட்டுகிறது.
எனவே தங்களின் அடிப்படை வாழ்வாதார உரிமைகளுக்காகப் போராடும் தூய்மைப் பணியாளர்களுக்கு ஜனநாயக சக்திகளும், புரட்சிகர அமைப்புகளும் ஆதரவளிக்க வேண்டும்.
![]()
ஆசாத்
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram, Threads











