05.09.2026

தமிழ்நாடு நகர் மற்றும் ஊரமைப்புச் சட்டத்திருத்த மசோதா:
கார்ப்பரேட் கும்பலின் கொள்ளையை சர்வாதிகாரமாக நிலைநாட்டத் துடிக்கும் விஜய் அரசு!

பத்திரிகைச் செய்தி

செப்டம்பர் 1 அன்று, தமிழ்நாடு சட்டப்பேரவையில் வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் பி.ராஜ்குமார், “தமிழ்நாடு நகர் மற்றும் ஊரமைப்புச் சட்டத்திருத்த மசோதா” என்ற ஒரு மசோதாவை அறிமுகப்படுத்தினார். இச்சட்டத்திருத்த மசோதா கார்ப்பரேட் முதலாளிகளின் கொள்ளைக்காக கொண்டு வரப்பட்ட மசோதா ஆகும்.

தமிழ்நாடு நகர் மற்றும் ஊரமைப்புச் சட்டத்தின் பிரிவு “9-F” நகர்ப்புற மேம்பாட்டு குழுமங்களின் (Urban Devolepment Authorities) பணிகள் தொடர்பானது. நகர்ப்புற மேம்பாட்டு குழுமங்களின் கீழ், நகரத் திட்டமிடல், உள்கட்டமைப்பு மேம்பாடு, நில மேம்பாடு, வளர்ச்சித் திட்டங்களை செயல்படுத்துதல், நகர்ப்புற வளர்ச்சியை ஒழுங்குபடுத்துதல் போன்ற பணிகள் உள்ளன. தற்போது வரை இதற்கு மாவட்ட ஆட்சியர் தலைவராக உள்ளார்.

தற்போதைய மசோதா, நகர்ப்புற மேம்பாட்டுக் குழுமத்திற்கு தனியாக முழுநேர தலைவர், உறுப்பினர், செயலாளரை உருவாக்க வேண்டும் என்று கூறுகிறது. மேலும், மாவட்ட ஆட்சியர் உறுப்பினராக மட்டும் தொடர்வார் என்று கூறுகிறது. அதாவது, மாவட்ட ஆட்சியரின் அதிகாரம் பறிக்கப்பட்டு தனி அதிகாரம் உருவாக்கப்படுகிறது.

இச்சட்டத்தின் பிரிவு “47-A” என்பது திட்டமிடப்படாத பகுதிகளில் ’நிலமேம்பாட்டுக்கான’ அனுமதி தொடர்பானது . இதுவரையிலான நடைமுறையின்படி, பிரிவு”47-A”-இன் கீழான நடவடிக்கைகளுக்கு மாவட்ட ஆட்சியரின் ஒப்புதல் தேவை. இம்மசோதாவானது, மாவட்ட ஆட்சியரின் தனிப்பட்ட முன் ஒப்புதல் தேவையை நீக்கி, நகரமைப்பு மற்றும் ஊரமைப்புத் துறையின் இயக்குநருக்கு அந்த அதிகாரத்தை வழங்குகிறது.

இங்கு மாவட்ட ஆட்சியரின் அதிகாரம் பறிக்கப்படுகிறது என்பது மட்டுமல்ல, அதைவிட முக்கியமானது, உள்ளாட்சி அமைப்புகளின் அதிகாரம் பறிக்கப்படுகிறது என்பதாகும். உள்ளாட்சி அமைப்புகளிடம் அனுமதி பெற்றே எந்த ஒரு தொழிற்சாலையையும் அமைப்பது பற்றி முடிவெடுக்க வேண்டும் என்ற முந்தைய சட்டத்தை ஒழித்துக் கட்டும் நோக்கில் இம்மசோதா அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அதாவது கார்ப்பரேட் முதலாளிகள் தொழில் தொடங்க, நில மேம்பாடு என்ற பெயரில் விவசாய நிலங்களை அபகரித்து, அழிப்பதற்காகத்தான் இம்மசோதா தற்போது அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

எனவே, இம்மசோதா அப்பட்டமாக விவசாயிகளின், உழைக்கும் மக்களின் நில உரிமையைப் பறிக்கும் நோக்கிலானதாகும். நகரமைப்பு மற்றும் ஊரமைப்புத்துறையின் இயக்குநர் ஒப்புதல் மட்டும் போதும் என்று கூறுவது, நிலப்பறிப்பை எதிர்த்து போராடும் மக்களை கொடூரமாக ஒடுக்குவதற்கான சட்டரீதியான ஒப்புதலேயன்றி வேறொன்றுமில்லை.  இதனை மக்கள் அதிகாரக் கழகம் வன்மையாகக் கண்டிக்கிறது.


படிக்க: ஸ்டெர்லைட் துப்பாக்கிச்சூடு குற்றவாளிகள் மீது நடவடிக்கை கிடையாது – விஜய்யின் பச்சை துரோகம்


ஒருபக்கம், மக்கள் போராட்டத்தின் காரணமாகப் பின்வாங்கி, பரந்தூர் விமான நிலைய விரிவாக்கம் ரத்து என்று விஜய் அரசு அறிவிக்கிறது (கையகப்படுத்தப்பட்ட நிலங்களை மீண்டும் விவசாயிகளிடம் ஒப்படைக்காதது தனிக்கதை). இன்னொரு பக்கம் சதித்தனமாக கார்ப்பரேட் கும்பல்களின் கொள்ளைக்காகத் தீவிரமாக விஜய் அரசு செயல்பட்டு வருகிறது என்பதைத்தான் மேற்கண்ட மசோதா நமக்கு உணர்த்துகிறது. விஜய் அரசின் பல்வேறு நடவடிக்கைகள் இதைத்தான் நமக்கு உணர்த்துகின்றன.

ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டத்தில் மக்களைச் சுட்டுக் கொன்ற அதிகாரிகள் மீது நடவடிக்கை கிடையாது என்ற அறிவிப்பு; தூய்மைப்பணியை தனியாருக்கு தாரைவார்க்கும் முயற்சி; தூய்மைப் பணியாளர் போராட்டத்திற்கு துரோகம்; மாநகராட்சி குடிநீர் விநியோகத்தை பன்னாட்டு நிறுவனங்களுக்கு தாரைவார்ப்பது; தூத்துக்குடியில் அனல்மின்நிலையம்; தமிழ்நாடு மின்தொடரமைப்பு கட்டமைப்பு மேம்பாட்டு திட்டம் உள்ளிட்ட அனைத்தும் விஜய் அரசு கார்ப்பரேட் கும்பலின் கையாள்தான் என்பதை நிரூபிக்கிறது. குறிப்பாக, பல்வேறு கார்ப்பரேட் திட்டங்களும், பல ஆயிரம் கோடி மக்கள் வரிப்பணத்தை விரயம் செய்கின்ற புதிய சட்டப்பேரவை போன்ற தான்தோன்றித்தனமான அறிவிப்புகளும் 110 விதியின் கீழ் சர்வாதிகரமான முறையில் அறிவிக்கப்படுகின்றன. இதிலிருந்து மக்களைத் திசைதிருப்பும் வகையில் சட்டமன்ற நடவடிக்கைகளை திட்டமிட்டு நடத்தி வருகின்றனர்.

த.வெ.க. விஜய் அரசே!

  • தமிழ்நாடு நகர் மற்றும் ஊரமைப்புச் சட்டத் திருத்த மசோதாவை உடனடியாகத் திரும்பப் பெறு!

உழைக்கும் மக்களே!

  • மக்கள் விரோத கார்ப்பரேட் திட்டங்களை, கேடான முறையில் சர்வாதிகாரமாக அமல்படுத்தத் துடிக்கும் த.வெ.க. விஜய் அரசை போராட்டங்களின் மூலம் பணிய வைப்போம்!


இவண்,
மக்கள் அதிகாரக் கழகம்,
கிருஷ்ணகிரி மாவட்டம்.
8754674757

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram, Threads



விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க