
08.09.2026
டெல்லி: மாணவர்கள் தங்கும் விடுதி இடிந்து விழுந்து 7 பேர் உயிரிழப்பு –
பா.ஜ.க. அரசும் அதிகாரிகளுமே முதன்மைக் குற்றவாளி!
பத்திரிகைச் செய்தி
டெல்லி பல்கலைக்கழகத்தின் தெற்கு வளாகத்திற்கு அருகிலுள்ள சத்யா நிகேதன் பகுதியில் மாணவர்கள் தங்கியிருந்த ஐந்து மாடிக் கட்டடம் செப்டம்பர் 6 அன்று இடிந்து விழுந்ததில் ஐந்து மாணவர்கள் உட்பட ஏழு பேர் உயிரிழந்துள்ளனர். இடிபாடுகளில் சிக்கியிருந்த 12 பேர் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணியின் சார்பாக ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
இக்கொடூரச் சம்பவத்திற்கு பொறுப்பான அனைத்து அதிகாரிகள் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் டெல்லி பா.ஜ.க. அரசின் முதல்வர் ரேகா குப்தா பதவி விலக வேண்டும் என்றும் மாணவர்களுக்கு பாதுகாப்பான – கட்டணமற்ற தங்குமிடங்களை உறுதி செய்ய வேண்டும் என்றும் பு.மா.இ.மு. சார்பாகக் கேட்டுக்கொள்கிறோம்.
செப்டம்பர் 6 அன்று நண்பகல் சுமார் 1.30 மணியளவில் இவ்விபத்து நடைபெற்றது. மாணவர்கள் அதிகம் வசிக்கும் பகுதியாக சத்யா நிகேதன் இருப்பதால், விபத்து நடைபெற்றபோது கட்டடத்தில் 40 முதல் 50 பேர் வரை இருந்திருக்கலாம் என முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
சுமார் 40 முதல் 55 ஆண்டுகள் பழமையானது எனக் கூறப்படும் இக்கட்டடத்தில், விபத்துக்கு முன்னதாக அடித்தளத்தில் சீரமைப்புப் பணிகள் நடைபெற்றதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அடித்தளத்தில் தேங்கியிருந்த தண்ணீரும், அங்கு மேற்கொள்ளப்பட்ட கட்டுமானப் பணிகளும் கட்டடத்தின் அடித்தளத்தைப் பாதித்திருக்கலாம் என விசாரணையில் சந்தேகிக்கப்படுகிறது.
விபத்தைத் தொடர்ந்து டெல்லி மாநகராட்சியைச் சேர்ந்த ஐந்து அதிகாரிகள் பணியிடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். கட்டட உரிமையாளரும் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஆனால், இவையெல்லாம் மாணவர்களின் போராட்டம் வெடித்ததை தொடர்ந்து எடுக்கப்படும் கண்துடைப்பு நடவடிக்கைகள் மட்டுமே.
ஏனென்றால், கடந்த 2024-ஆம் ஆண்டு ஜூலை 27 அன்று கனமழை பெய்ததைத் தொடர்ந்து டெல்லியில் உள்ள “ராவ்ஸ் ஐ.ஏ.எஸ். பயிற்சி மையத்தின்” (Rau’s IAS Study Circle) அடித்தளத்தில் வெள்ளநீர் புகுந்ததில் 3 யு.பி.எஸ்.சி. மாணவர்கள் உயிரிழந்தனர். இதனையடுத்து, பாதுகாப்பு விதிகளை கடுமையாக அமல்படுத்த வேண்டும்; பொறுப்பானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்; உயிரிழந்த மாணவர்களின் குடும்பங்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து மாணவர்கள் பல நாட்கள் போராடினர்.
இந்த வழக்கு தற்போது நடைபெற்று வருகிறது. அவ்விபத்தில் உயிரிழந்த நெவின் டால்வி என்ற மாணவரினின் தந்தை, சி.பி.ஐ-யின் விசாரணை மேலோட்டமாகவும் மூத்த டெல்லி மாநகராட்சியின் அதிகாரிகளைப் பாதுகாக்கும் வகையிலும் நடைபெற்றதாகக் குற்றம் சாட்டியுள்ளார். இதன் தொடர்ச்சியாகவே தற்போது விடுதி கட்டடம் இடிந்து விழுந்த கோரச் சம்பவமும் நிகழ்ந்துள்ளது.
இச்சம்பவத்தைக் கண்டித்து டெல்லி பல்கலைக்கழக மாணவர்கள், “200 ஏக்கர் நிலம் காலியாக இருக்கிறது; மாணவர்களுக்கு விடுதி இல்லை”, “மாணவர்களுக்கு தங்குமிடத்தை வழங்குங்கள்; அது எங்கள் உரிமை” ஆகிய முழக்கங்களை முன்வைத்து துணைவேந்தர் அலுவலகம் நோக்கி பேரணி நடத்தினர்.
மாணவர்களின் இப்போராட்டத்திற்கு புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி ஆதரவளிக்கிறது. மேலும்,
- விபத்துக்கு காரணமான கட்டட உரிமையாளர்கள் மட்டுமின்றி, அலட்சியமாக செயல்பட்ட அதிகாரிகள் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு உரிய இழப்பீடும் காயமடைந்தவர்களுக்கு முழுமையான மருத்துவ உதவியும் வழங்க வேண்டும்
- டெல்லி முழுவதும் உள்ள மாணவர்கள் தங்கும் பி.ஜி. மற்றும் விடுதிகளுக்கு உடனடி கட்டமைப்பு பாதுகாப்புத் தணிக்கை நடத்த வேண்டும். விதிமீறல் மற்றும் அனுமதியற்ற கட்டுமானங்களைக் கண்டறிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். மாணவர் விடுதிகளுக்கு கட்டாய பாதுகாப்புச் சான்றிதழ் வழங்கும் நடைமுறையை உருவாக்க வேண்டும்.
- டெல்லி பல்கலைக்கழகத்தில் போதுமான எண்ணிக்கையில் பாதுகாப்பான மற்றும் இலவச விடுதிகளை கட்ட வேண்டும்.
ஆகிய கோரிக்கைகளை நிறைவேற்ற மாணவர்கள் போராட்டங்களை கட்டியமைக்க வேண்டும் என்பதை புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி கேட்டுக் கொள்கிறது.
![]()
தோழர் தீபன்,
புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி,
தமிழ்நாடு – புதுவை.
9444836642
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram, Threads











