தான் கொடுத்த ராஜினாமாவைத் திரும்பப் பெற்று மீண்டும் எம்.எல்.ஏ-வாகத் தொடர வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தின் கதவைத் தட்டியிருக்கிறார் அம்பாசமுத்திரம் முன்னாள் அ.தி.மு.க. எம்.எல்.ஏ. இசக்கி சுப்பையா.
அ.தி.மு.க-வின் இரட்டை இலைச் சின்னத்தில் மக்களிடம் வாக்குப் பெற்று வெற்றி பெற்ற அவர், மே 13 அன்று கட்சிக் கொறடா உத்தரவை மீறி விஜய் அரசுக்கு ஆதரவாக வாக்களித்தார். பின்னர் எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்துவிட்டு த.வெ.க-வில் சேர்ந்தார். மூன்று மாதங்கள் கழித்து, தனது தொகுதிக்குப் பிரதிநிதி இல்லாமல் போய்விட்டதாகக் ‘கவலைப்பட்டு’, தனது ராஜினாமாவைத் திரும்பப் பெற்று மீண்டும் எம்.எல்.ஏ-வாகத் தொடர அனுமதிக்க வேண்டும் என்கிறார்.
இசக்கி சுப்பையாவின் இந்த அரசியல் பல்டியை மட்டும் நாம் கேலி செய்துவிட்டுக் கடந்துவிட முடியாது. காரணம், தன்னை அறியாமலேயே இந்தத் தேர்தல் ஜனநாயகத்தின் மொத்த யோக்கியதையையும் அவர் அம்பலப்படுத்திவிட்டார்.
தேர்ந்தெடுக்கலாம்; திரும்ப அழைக்க முடியாது!
அ.தி.மு.க-வின் பெயரிலும் சின்னத்திலும் வாக்கு வாங்கலாம். அந்த வாக்கால் எம்.எல்.ஏ. ஆகலாம். கட்சிக் கொறடா உத்தரவை மீறி வேறொரு அரசை ஆதரிக்கலாம். பதவியை ராஜினாமா செய்யலாம். ஆளும் கட்சியில் சேரலாம். பிறகு மீண்டும் அதே பதவி வேண்டும் என்றும் கேட்கலாம்.
ஆனால் அந்தத் தொகுதி மக்கள் மட்டும், “நாங்கள் உங்களைத் தேர்ந்தெடுத்தோம்; எங்கள் தீர்ப்புக்கு நேர்மாறாக நடந்துவிட்டீர்கள்; இனி எங்களைப் பிரதிநிதித்துவப்படுத்த வேண்டாம்” என்று அவரைத் திரும்ப அழைக்க முடியாது.
இதுதான் இவர்களின் ஆகச்சிறந்த மக்களாட்சி!
ஒருவரை நமது சார்பில் அதிகாரம் செலுத்துவதற்காகத் தேர்ந்தெடுக்கிறோம் என்றால், அவர் அந்த அதிகாரத்தை எவ்வாறு பயன்படுத்துகிறார் என்று சோதிக்கவும், நமது நம்பிக்கையை இழந்தால் அந்த அதிகாரத்தைத் திரும்பப் பெறவும் மக்களிடம் அதிகாரம் இருக்க வேண்டும்.
அதுதான் உரிமை என்பதற்கான குறைந்தபட்ச அளவுகோல்.
வாக்கினைப் பயன்படுத்த மட்டும் முடியும்; தவறாகப் போனால் திருத்த முடியாது. தேர்ந்தெடுக்க மட்டும் முடியும்; அவர் தவறானவராக மாறினால் மாற்ற முடியாது. அதிகாரத்தை ஒப்படைக்க மட்டும் முடியும்; திரும்பப் பெற முடியாது என்றால் அது எப்படிப்பட்ட உரிமை?
ஒருமுறை பொத்தானை அழுத்திவிட்டு அதன் விளைவுகளை ஐந்தாண்டுகளுக்குச் சுமக்கச் சொல்வது, வாக்கு செலுத்துவதையே ஒரு சடங்குத்தனமான கடமையாகச் சுருக்குவதுதான். இந்தியாவில் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களை அவர்களைத் தேர்ந்தெடுத்த மக்களே பதவிக்காலத்தின் நடுவில் திரும்ப அழைப்பதற்கான பொதுவான உரிமை இல்லை.
ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை வாக்குச்சாவடிக்கு வாருங்கள். வரிசையில் நில்லுங்கள். விரலில் மை வைத்துக்கொள்ளுங்கள். ஒரு பொத்தானை அழுத்துங்கள். அதற்குப் பிறகு நீங்கள் தேர்ந்தெடுத்தவர் என்ன செய்தாலும் அடுத்த தேர்தல் வரை காத்திருங்கள்!
இதிலும் வேடிக்கை என்னவென்றால், இந்த அமைப்பின் மனநிலையை இந்திய சட்ட ஆணையமே அப்பட்டமாக எழுதி வைத்திருக்கிறது. 2015 தேர்தல் சீர்திருத்த அறிக்கையில் மக்கள் பிரதிநிதிகளைத் திரும்ப அழைக்கும் உரிமையை அறிமுகப்படுத்த வேண்டாம் என்று கூறிய சட்ட ஆணையம், அது “அளவுக்கு அதிகமான ஜனநாயகத்தை” (Excess of democracy) ஏற்படுத்திவிடும் என்று காரணம் சொன்னது.
அடடா!
ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை வாக்குப் போடுவது — ஜனநாயகம்.
தான் தேர்ந்தெடுத்தவன் துரோகம் செய்தால் அவனைத் திரும்ப அழைப்பது — அளவுக்கு அதிகமான ஜனநாயகமா?
இந்த அமைப்பின் அவலட்சணத்தை இதைவிடத் தெளிவாக யார் விளக்க முடியும்?
கட்சித்தாவல் சட்டத்தில்கூட மக்கள் எங்கே?
“கட்சித்தாவல் தடுப்புச் சட்டம் இருக்கிறதே?” என்று கேட்கலாம்.
இருக்கிறது. ஒரு கட்சியைச் சேர்ந்த உறுப்பினர் கட்சியின் உத்தரவுக்கு எதிராக வாக்களித்தாலோ, கட்சியை விட்டு வெளியேறினாலோ தகுதிநீக்கம் செய்ய வழி இருக்கிறது. ஆனால் அந்தத் தகுதிநீக்கத்தைத் தீர்மானிப்பது அவரைத் தேர்ந்தெடுத்த மக்கள் அல்ல; சபாநாயகர்.
கட்சித் தலைமை, கொறடா, சபாநாயகர், பின்னர் நீதிமன்றம் என எல்லோரும் இந்த நடவடிக்கையில் இருக்கிறார்கள். அந்த எம்.எல்.ஏ-வைத் தேர்ந்தெடுத்த மக்கள் மட்டும் வெளியே வைக்கப்பட்டிருக்கிறார்கள்!
இப்போது ஆறு அ.தி.மு.க. எம்.எல்.ஏ-க்களின் ராஜினாமாவைச் சுற்றி நடக்கும் வழக்கே இதை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது. கொறடாவை மீறி விஜய் அரசுக்கு ஆதரவாக வாக்களித்தவர்களுக்கு எதிராகத் தகுதிநீக்க நடவடிக்கை கோரப்பட்ட நிலையில், அவர்களின் ராஜினாமாவை சபாநாயகர் ஏற்றுக்கொண்டது செல்லுமா என்ற வழக்கு நீதிமன்றத்தில் இருக்கிறது.
யார் முடிவு செய்கிறார்கள்? கட்சி. சபாநாயகர். நீதிமன்றம்.
மக்கள்? அவர்கள் போட்ட வாக்கை மட்டும் நினைத்துக்கொண்டிருக்கலாம்!
விஜய்யின் ‘மாற்று அரசியல்’!
இசக்கி சுப்பையாவை மட்டும் சந்தர்ப்பவாதி என்று விமர்சித்து முடித்துக் கொண்டால், அவரை உருவாக்கிய அரசியல் நடவடிக்கையைத் தவறவிட்டுவிடுவோம்.
மே 13 நம்பிக்கை வாக்கெடுப்பில் அ.தி.மு.க-வின் 25 எம்.எல்.ஏ-க்கள் கட்சியின் நிலைப்பாட்டை மீறி விஜய் அரசுக்கு ஆதரவாக வாக்களித்தனர். விஜய் அரசு 144 வாக்குகளைப் பெற்றது. அதன் அரசியல் விளைவாக விஜய் அரசின் பலம் அதிகமானது; அ.தி.மு.க-வின் பிளவும் வெளிப்பட்டது. இதைத்தொடர்ந்து குதிரைப் பேரம், பதவிகள், சலுகைகள் அள்ளி வீசப்பட்டதை நாடே பார்த்தது.
த.வெ.க-வுக்கு எதிராக பிரச்சாரம் செய்து, அ.தி.மு.க-வின் பெயரிலும் இரட்டை இலைச் சின்னத்திலும் மக்களிடம் வாக்குப் பெற்றவர்கள், விஜய் அரசின் ‘தூண்களாக’ மாறினார்கள். அவர்களில் ஆறு பேர் பின்னர் எம்.எல்.ஏ. பதவிகளை ராஜினாமா செய்து த.வெ.க.வில் இணையவும் செய்தனர்.
இந்தக் கட்சித் தாவலுக்கு அவர்களைத் தேர்ந்தெடுத்த மக்களிடம் யாராவது அனுமதி கேட்டார்களா? இல்லை. வாக்குப் போட்டதோடு மக்களுடைய வேலை முடிந்துவிட்டது!
படிக்க: சட்டமன்றமா? வெட்டி அரட்டை மடமா? முடிவுகள் எடுக்கப்படுவது எங்கே?
இதன் பின்னணியில்தான் “சோபா மாடல்” என்ற கேலியும் தமிழ்நாடு அரசியலில் உருவானது. “சோபா செட்” வழங்கப்பட்டதும், எம்.எல்.ஏ-க்கள் அணி மாறியதும், குதிரைப் பேரக் குற்றச்சாட்டுகளும் ஒன்றோடொன்று இணைந்தன.
சோபாவுக்குள் என்ன இருந்தது என்பதை யாரும் பிரித்துக் காட்டவில்லை. ஆனால், “பழைய அரசியலுக்கு மாற்று” என்று வந்த விஜய், தேர்தலுக்குப் பிறகு மற்ற கட்சிகளின் எம்.எல்.ஏ-க்களைத் தனது கையாட்களாக மாற்றிக்கொண்டிருந்ததை மக்கள் பார்த்தார்கள்.
பழைய கட்சிகள் செய்தால் குதிரைப் பேரம். அதையே நடிகர் கட்சி செய்தால் “மாற்று அரசியல்”!
சட்டம் இரண்டு; ஜெயலலிதாவுக்கு நான்கு!
இந்தத் தேர்தல் ஜனநாயகத்தின் யோக்கியதையை விஜய் மட்டும் புதிதாக அம்பலப்படுத்தவில்லை. அதைச் சீரும் சிறப்புமாகச் செய்து காட்டியவர்களில் முதன்மையானவர் ஜெயலலிதா.
2001 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் கிருஷ்ணகிரி, ஆண்டிப்பட்டி, புவனகிரி, புதுக்கோட்டை என நான்கு தொகுதிகளில் ஜெயலலிதா வேட்புமனு தாக்கல் செய்தார். ஒருவர் ஒரே சட்டமன்றத் தேர்தலில் இரண்டு தொகுதிகளுக்கு மேல் வேட்பாளராக இருக்க முடியாது என்று மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம் கூறியிருந்த நிலையில்தான் இந்த நான்கு மனுக்களும் தாக்கல் செய்யப்பட்டன.
சட்டம் இரண்டு என்று சொல்கிறதா? நான்கில் மனு போடு! தன்னை மீறி யார் என்ன செய்துவிட முடியும்! தேர்தல் சட்டத்தின் எல்லைகளை எவ்வளவு தூரம் வளைக்க முடியும் என்பதை ஜெயலலிதா அன்று செய்து காட்டினார்.
இன்று வடிவம் மாறியிருக்கிறது. மக்கள் ஒரு கட்சியின் வேட்பாளரைத் தேர்ந்தெடுக்கட்டும். அந்த வாக்கால் கிடைத்த அதிகாரத்தைத் தேர்தலுக்குப் பிறகு எந்தக் கட்சியை வலுப்படுத்தப் பயன்படுத்துவது என்பதை அரசியல்வாதிகளே முடிவு செய்துகொள்வார்கள்!
சூரத்: வாக்கே போடாத மக்களுக்கு
‘மக்கள் பிரதிநிதி’!
2024 நாடாளுமன்றத் தேர்தலில் குஜராத்தின் சூரத் தொகுதி இன்னும் அப்பட்டமான பாடத்தை நடத்தியது.
அங்கு 15 வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. ஆறு நிராகரிக்கப்பட்டன. எட்டு பேர் தங்கள் மனுக்களைத் திரும்பப் பெற்றனர். இறுதியில் பா.ஜ.க. வேட்பாளர் முகேஷ் தலால் மட்டுமே களத்தில் இருந்ததால் வாக்குப்பதிவே நடைபெறவில்லை. அவர் போட்டியின்றித் ‘தேர்ந்தெடுக்கப்பட்டார்’.
மற்ற வேட்பாளர்கள் மீது பா.ஜ.க. அழுத்தம் கொடுத்தும் மிரட்டியும் பின்வாங்கச் செய்து, இத்தகைய ‘சாதனை’ வெற்றியை நிலைநாட்டியது. சூரத் மக்களில் ஒருவர்கூட முகேஷ் தலாலைத் தங்களது எம்.பி-யாகத் தேர்ந்தெடுக்க வாக்களிக்கவில்லை. அப்படியிருக்க அவர் எந்த அர்த்தத்தில் அவர்களுடைய “மக்கள் பிரதிநிதி” என்று தன்னைச் சொல்லிக்கொள்ள முடியும்?
சட்டம் அப்படித்தான் அனுமதிக்கிறது என்பதே பா.ஜ.க-வின் பதிலென்றால், அது சட்டப்படி கிடைத்த பதவிதானே ஒழிய, அவர் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதி அல்ல.
வாக்குப்பதிவு நாளில் மட்டும் மக்களாட்சி!
இதையெல்லாம் கட்டுப்படுத்தவும் மக்களின் எதிர்ப்பை நிலைநாட்டவும்தான் “நோட்டா இருக்கிறதே” என்று சிலர் சொல்லலாம்.
போட்டியிடும் அனைவரையும் நிராகரித்து நோட்டா-வுக்கு வாக்களிக்க முடியும். ஆனால் நோட்டா அதிக வாக்குகள் பெற்றுவிட்டதால் மட்டும் தேர்தலை ரத்து செய்து, புதிய வேட்பாளர்களைக் கொண்டு மீண்டும் தேர்தல் நடத்த வேண்டும் என்ற பொதுவான உரிமை வாக்காளர்களுக்குக் கிடையாது.
அதாவது தேர்தலுக்கு முன்பு, “இவர்கள் யாரும் வேண்டாம்; வேறு வேட்பாளர்களைக் கொண்டு வாருங்கள்” என்று கட்டாயப்படுத்தவும் முடியாது. தேர்தலுக்குப் பிறகு, “இவர் எங்கள் நம்பிக்கையை இழந்துவிட்டார்; திரும்ப அழைக்கிறோம்” என்றும் சொல்லவும் முடியாது.
அப்படியானால் மக்களின் அதிகாரம் எங்கே இருக்கிறது? வாக்குப்பதிவு நாளில் மட்டும்தான்!
அந்த ஒரு நாளில் மட்டுமே மக்கள் ‘எஜமானர்கள்’. மறுநாளிலிருந்து வெறும் பார்வையாளர்கள் மட்டுமே.
இசக்கி சுப்பையா கட்சியை மாற்றிக்கொள்ளலாம். பதவியை ராஜினாமா செய்யலாம். தான் எடுத்த முடிவையே மாற்றிக்கொண்டு ராஜினாமாவைத் திரும்பப் பெற முயற்சிக்கலாம்.
ஆனால், அவரைத் தேர்ந்தெடுத்த மக்கள் மட்டும் தங்களுடைய முடிவை மாற்ற முடியாது. ஆம், வாக்காளனுக்கு மட்டும் “Undo” கிடையாது!
கிழிந்த முகத்திரையைத் தைக்கும் “இடதுசாரிகள்”!
இதில்தான் வரலாற்றின் ஆகச்சிறந்த முரண்நகை இருக்கிறது.
முதலாளித்துவ நாடாளுமன்றத்தின் வரம்புகளையும் தேர்தல் ஜனநாயகத்தின் உண்மையான யோக்கியதையையும் மக்களுக்கு அம்பலப்படுத்துவதற்காகத்தான் புரட்சிகர கம்யூனிஸ்டுகள் தேர்தல், நாடாளுமன்ற மேடைகளைப் பயன்படுத்த வேண்டும். ஆனால் இன்று அந்த வேலையை ஆளும் வர்க்கக் கட்சிகளே போட்டிபோட்டுச் செய்துகொண்டிருக்கின்றன.
ஜெயலலிதா நான்கு வேட்புமனுக்களால் செய்து காட்டினார். சூரத்தில் ஒரு வாக்குகூட பதிவாகாமல் “மக்கள் பிரதிநிதி” உருவானார். “மாற்று அரசியல்” என்று வந்த விஜய்யின் ஆட்சியில் எதிர்க்கட்சியின் 25 எம்.எல்.ஏ-க்கள் அரசை ஆதரித்தனர்; ஆறு பேர் பின்னர் ஆளும் கட்சிக்கே சென்றனர். இப்போது, இசக்கி சுப்பையா கொடுத்த ராஜினாமாவையே திரும்பப் பெறுவதாகக் கோருகிறார்.
இப்படியெல்லாம், ஆளும் வர்க்கத்தின் அடியாட்களான இவர்களே தேர்தல் ஜனநாயகத்தின் முகத்திரையை ஒவ்வொரு பக்கமாகக் கிழித்துக் கொண்டிருக்கிறார்கள்.
ஆனால், நாடாளுமன்றப் பாதையில் மூழ்கிய சி.பி.ஐ., சி.பி.எம். கட்சிகளோ “ஜனநாயகத்தைக் காப்போம்”, “அரசியலமைப்பைக் காப்போம்” என்பதையே தங்களது அரசியலாகச் சுருக்கிக்கொள்கிறார்கள்.
பா.ஜ.க–ஆர்.எஸ்.எஸ். பாசிச தாக்குதலிலிருந்து மக்களின் ஜனநாயக உரிமைகளைப் பாதுகாப்பது அவசியம். ஆனால் மக்களின் ஜனநாயக உரிமைகளைப் பாதுகாப்பதும், மக்களுக்கு அதிகாரமில்லாத இந்த நாடாளுமன்ற அமைப்பையே மக்களாட்சியின் இறுதி வடிவமாகப் பாதுகாப்பதும் ஒன்றல்ல.
ஆளும் வர்க்கக் கட்சிகள் நடைமுறையிலேயே இந்த அமைப்பின் வரம்புகளை அம்பலப்படுத்திக் கொண்டிருக்க, சி.பி.ஐ., சி.பி.எம். கட்சிகளோ கிழிந்த முகத்திரையைத் தைத்துக் கொண்டிருக்கிறார்கள்.
மக்கள் உண்மையில் ஆள்வது எப்போது?
இதிலிருந்து நாம் என்ன முடிவுக்கு வர வேண்டும்? எந்தத் தேர்தலிலும் “வாக்களிக்காதே” என்பதல்ல. வாக்களிக்கும் உரிமையையே மக்கள் அதிகாரம் என்று காட்டும் மோசடியை நிராகரிக்க வேண்டும் என்பதுதான்.
ஒருவரைத் தேர்ந்தெடுத்த மக்கள் அவரிடம் தொடர்ந்து கணக்குக் கேட்கவும், அவர் மக்களின் நம்பிக்கையை இழந்தால் திரும்ப அழைக்கவும் அதிகாரம் பெற வேண்டும். மக்களின் வாழ்க்கையைத் தீர்மானிக்கும் முக்கிய முடிவுகளில் மக்கள் நேரடியாகத் தலையிட்டு முடிவெடுக்கும் அமைப்புகள் உருவாக வேண்டும். அப்போதுதான் “மக்களாட்சி” என்ற சொல்லுக்கு உண்மையான பொருள் கிடைக்கும்.
இல்லாவிட்டால் அரசியல்வாதி கட்சி மாறலாம்; அணி மாறலாம்; கொறடா உத்தரவை மீறலாம்; பதவியை ராஜினாமா செய்யலாம்; கொடுத்த ராஜினாமாவையே திரும்பப் பெற முயலலாம்; வாக்குப்பதிவே நடக்காமல் ஒருவர் எம்.பி. ஆகலாம். ஆனால், மக்கள் மட்டும் ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு அழுத்திய ஒரு பொத்தானின் கைதிகளாக இருக்க வேண்டும்?
சட்டம் அதை வாக்குரிமை என்று அழைக்கலாம். ஆனால் தேர்ந்தெடுத்த பிரதிநிதியைக் கட்டுப்படுத்தவும், தேவைப்பட்டால் திரும்ப அழைக்கவும் அதிகாரம் இல்லாத வரை அது மக்கள் அதிகாரமாக இருக்க முடியாது.
ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை மக்களிடம் அதிகாரத்தைப் பெற்றுக்கொண்டு, அடுத்த ஐந்தாண்டுகள் அதே மக்களை அதிகாரத்திலிருந்து வெளியே நிறுத்தும் அமைப்புக்கு “மக்களாட்சி” என்று பெயர் வைத்திருக்கிறார்கள்.
ஜெயலலிதா முதல் சூரத் வரை; விஜய் முதல் இசக்கி சுப்பையா வரை – அதன் இலட்சணத்தை ஆளும் வர்க்க அரசியல்வாதிகளே நாள்தோறும் அம்பலப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள்.
அதிலும் இன்று நாட்டின் ஆட்சியதிகாரத்தைக் கைப்பற்றியுள்ள ஆர்.எஸ்.எஸ்-பா.ஜ.க.; அம்பானி அதானி பாசிச கும்பல் இந்த போலி ஜனநாயக அரசு கட்டமைப்பை பாசிச சர்வாதிகாரமாக மறுவார்ப்பு செய்து கொண்டிருக்கிறது. தனக்கு வாக்களிக்காத மக்களை வாக்காளர் பட்டியலிலிருந்து நீக்குவது, வாக்களிக்க விடாமல் முடக்குவது என எந்தத் திரைமறைவுமின்றி இந்தக் கட்டமைப்பின் யோக்கியதையை வெளிக்காட்டுகிறது. இத்தகைய சூழலில் பாசிச கும்பலை வீழ்த்தி இந்தக் கட்டமைப்பிற்கு மாற்றாகப் பாசிச எதிர்ப்பு ஜனநாயகக் குடியரசை கட்டியமைக்காமல் தேர்தலில் மக்களின் உண்மையான அதிகாரத்தை நிலைநாட்ட முடியாது.
வாக்குப் போடுவதுதான் மக்களின் அதிகாரம் என்றால் – மக்கள் உண்மையில் ஆள்வது எப்போது? இதுதான் நாட்டு மக்கள் எழுப்ப வேண்டிய, விடைதேடி விவாதிக்க வேண்டிய கேள்வி!
![]()
தமிழ்ச்சுடர்
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram, Threads











