
07.09.2026
திருப்பத்தூர் நாட்றம்பள்ளி அருகே கல்குவாரியை மூடக்கோரி
சுடுகாட்டில் பந்தல் அமைத்து கைகுழந்தைகளுடன் பொதுமக்கள் போராட்டம்!
பத்திரிகைச் செய்தி
திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அருகே தென்மலை பகுதியில் கடந்த 2023-ஆம் ஆண்டு மல்லகுண்டா பகுதியைச் சேர்ந்த ராஜா என்பவருக்கு சொந்தமான கல்குவாரி செயல்படத் தொடங்கியது.
கல்குவாரியை சுற்றிலும் விவசாய நிலங்கள் உள்ள நிலையில், வெடி வைத்து பாறைகளை தகர்ப்பதாலும், கற்களை அரைக்கும் போது வெளியேறும் தூசி துகள்களாலும் பொதுமக்கள், விவசாய நிலங்கள் மற்றும் கால்நடைகள் பாதிக்கப்படுவதாக அப்பகுதி மக்கள் குற்றஞ்சாட்டி வருகின்றனர்.
மடபள்ளம், தண்ணிகுண்டுகொல்லி, கல்லூர், சக்கரப்பனூர் உள்ளிட்ட பகுதிகளில் 600-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வரும் நிலையில், கல்குவாரியை மூடக்கோரி துறை சார்ந்த அதிகாரிகளிடம் பலமுறை மனு அளித்து போராட்டங்களில் ஈடுபட்டுள்ளனர்.
இதன் காரணமாக சுமார் ஓராண்டு காலம் கல்குவாரி செயல்படாமல் இருந்ததாகவும், ஆனால் கடந்த மூன்று மாதங்களாக மீண்டும் கல்குவாரி செயல்பட்டு வருவதாகவும் பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.
கல்குவாரியை நிரந்தரமாக மூடக்கோரி கடந்த மூன்று மாதங்களாக மாவட்ட ஆட்சியர் மற்றும் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் பலமுறை மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
இதன் தொடர்ச்சியாக, கடந்த செப்டம்பர் 5 அன்று பொதுமக்கள் கல்குவாரி முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். அதே பகுதியில் உள்ள சுடுகாட்டின் நடுவே பந்தல் அமைத்து, அங்கேயே மதிய உணவை சமைத்து சாப்பிட்டு, கைகுழந்தைகளுடன் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த திருப்பத்தூர் வருவாய் கோட்டாட்சியர் வரதராஜன் மற்றும் வாணியம்பாடி டி.எஸ்.பி. மகாலட்சுமி ஆகியோர் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
ஆனால், அதிகாரிகளின் சமரச பேச்சுவார்த்தைக்கு உடன்படாத பொதுமக்கள், கல்குவாரியை உடனடியாக மூட வேண்டும்; இல்லையெனில் சுடுகாட்டிலேயே இரவு உறங்கிப் போராட்டத்தை தொடர்வோம் என திட்டவட்டமாக தெரிவித்தனர்.
தமிழ்நாடு முழுக்க பல்வேறு இடங்களில் கல் குவாரிகளை மூடக்கோரி மக்கள் போராட்டங்கள் தொடர்ச்சியாக நடந்து வருகின்றன.
த.வெ.க. அரசு கல்குவாரிகள் மீது நடவடிக்கை எடுக்கிறோம் என்று கூறி, விளம்பரத்திற்கு சில நடவடிக்கைகளை எடுத்து விட்டு மக்களை ஏமாற்றிக் கொண்டிருக்கிறது. கல்குவாரி முதலாளிகள் சுதந்திரமாக செயல்பட்டு வருகின்றனர்.
இதை உணர்ந்த மக்கள் அரசின் வாக்குறுதிகளை நம்பாமல் களத்தில் இறங்கி போராடி வருகின்றனர்.
கல் குவாரிகளுக்கு எதிரான மக்களின் போராட்டங்களை மக்கள் அதிகாரக் கழகம் ஆதரிக்கிறது.
கல்குவாரிகளை மூடுவதற்கு நடவடிக்கை எடுக்காத த.வெ.க. அரசை மக்கள் அதிகாரக் கழகம் வன்மையாகக் கண்டிக்கிறது.
த.வெ.க. விஜய் அரசே! திருப்பத்தூர் மாவட்ட நிர்வாகமே!
நாட்றம்பள்ளி அருகே தென்மலைப் பகுதியில் இயங்கி வரும் கல்குவாரியை உடனடியாக இழுத்து மூடு!
![]()
இவண்,
மக்கள் அதிகாரக் கழகம்,
கிருஷ்ணகிரி மாவட்டம்.
8754674757
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram, Threads





