தூக்கம் உங்கள் கண்களை ஆனந்தமாகத் தழுவுகிறது.
ரயில் சலிப்பில்லாத ஒரு செவிலித்தாய். தூக்க மயக்கம் ஏற்படும் பொழுதும், அதன் தாளத்தோடு கூடிய இன்னிசை உங்கள் காதுகளில் ஒலிக்கிறது. சோவியத் ரயில் வண்டியில் விசாலமான மெத்தையின் மீது நித்திரை செய்வதற்காக, மிருதுவாக அது தாலாட்டுகிறது. சமவெளியிலிருந்து மிதந்து வரும் இனிய கீதத்தையும் அந்தத் தாலாட்டு அமுக்கி விடுகிறது, சலிப்புறச் செய்கிறது.
அது ஒரு மனோகரமான இன்னிசை.
பத்து மணி நேரம் உங்கள் காதுகளில் ஒலித்த இனிய தாலாட்டு உங்களைத் தூங்கச் செய்கிறது.
இரவு வருகிறது; இயற்கைதான். சோவியத் ரயிலில் வாராந்திரப் பிரயாணம் செய்வோருக்குத் தூக்கமும் வந்துவிடுகிறது.
ஆனால், எதிரில் இரண்டாம் நம்பர் இடத்திலுள்ள மனிதர் உங்களைத் தூங்க விடமாட்டார். நீங்கள் அவரை எவ்வாறு கவனித்தாலும், அவர் உங்கள் உள்ளத்தைக் கவருகிறார்.
ஒரு சிறிய ஸ்டேஷன், ஒரே ஒரு கட்டிடம். நான்கு தண்டவாளங்கள், அதைச் சுற்றிலும் மரகதக் கற்கள் பதித்தாற்போன்ற பசுமையான பரந்த சமவெளி, “குராஜ்லி – ரஸ்செட்” என்ற வார்த்தைகளை நீங்கள் பார்க்கிறீர்கள். அங்கேதான் உங்கள் புதிய நண்பர் ரயிலில் ஏறுகிறார். அவருடன் ஒரு நாய். அவரைத் தவிர அங்கு ரயிலில் ஏறுபவர் யாருமில்லை. அவர் இவ்வூர் வாசியா? அப்படியானால் அவர் போனதும் மனித அரவமே இல்லாத இடமாக மாறிவிடும். குராஜ்லி வாசியாக இல்லாதிருந்தால், பசும்புற் கடலின் நடுவேயுள்ள இத்திட்டிற்கு எப்படி வந்து சேர்ந்தார்?
அவர் மிகவும் களைப்புற்றவராகக் காணப்படுகிறார். குழிவிழுந்த கண்கள்; மூக்கின் கீழிருந்து தொடங்கிக் காதுவரை நீண்டிருக்கும் சுருக்கங்கள்.
அவர் களைப்புற்றிருக்க வேண்டும்; அல்லது நோயாளியாக இருக்க வேண்டும்.
அவர் தூங்கவில்லை.
அவர் ஒழுங்காக இடையிடையே எழுந்திருக்கிறார். இவ்வாறு அவர் எழுந்திருப்பதை அவரது சில் உடைந்த கைக்கெடியாரத்தின் மூலம் நீங்கள் சரிபார்த்துக்கொள்ளலாம். அவர் ஒவ்வொரு தடவை எழுந்திருந்ததும் அவலட்சணமான ஒரு பெட்டியைத் திறந்து, அவசர அவசரமாக ஒரு சீசாவை எடுக்கிறார். ஒரு காலத்தில் ‘ஓடி கொலோன்’ என்ற தைலம் இருந்த அந்தச் சீசாவில், இப்போது நூதனமான கரிய நிறமுள்ள ஒளி வீசும் திரவம் இருந்தது. சாதாரண மக்களுக்கு ஓய்வளிப்பதற்காகவும், மட்டரகமான கவிஞர்களுக்கு உற்சாகம் ஊட்டுவதற்காகவும், தனது கடைசிச் செந்நிறக் கதிர்களைப் பரப்பி அஸ்தமிக்கும் சூரியனுக்கும் தனக்கும் இடையே, அவர் அந்தச் சீசாவைப் பிடித்திருக்கிறார்.
ஒரு அபூர்வ மனிதன்; ஒரு அபூர்வ சீசா.
அதைப் பற்றித் தெரிந்துகொள்ள அவா அதிகரிக்கிறது. அந்த ரகசியத்தைத் தெரிந்துகொள்ள உங்கள் நா எழவில்லை. வீர நினைவுகள். நீங்கள் நிம்மதியாகத் தூங்குகிறீர்கள். இது இயற்கை, சோவியத் ரயில்களின் வாராந்திர பயணிகளின் செயலும் இதுவே. உங்கள் கேள்விக்குப் பதில் உருவாகிவிட்டது.
“நீங்கள் வைத்திருப்பது என்ன? அந்தச் சீசாவில் இருப்பதென்ன? அது ஒரு நூதன தைலமோ?”
”ஆம்; அது நூதன தைலம்தான்..”
அவர் உங்களைக் கவனித்திருக்கமாட்டார் என்று நீங்கள் நினைத்திருக்கலாம். நீங்கள் பல மணிநேரம் விவாதித்ததற்குப் பிறகு பதில் அளிப்பதைப் போன்றிருக்கும் அவர் தரும் விடை. நீங்கள் சொல்லி முடிக்குமுன், அக்கேள்வியை எதிர்பார்த்திருந்தவரைப் போல் அவர் பதில் கூறத் தயாராயிருக்கிறார்.
சமவெளியில் பிரயாணம் செய்கிற நீங்கள் முதல் இரவிலேயே தூக்கத்திற்கு விடைக் கொடுத்துவிடுகிறீர்கள்.
அவரது சொந்த ஊர் லெனின்கிராடு.
அவருக்கு வயது முப்பது.
அவர் மடமடவென்று பேசுகிறார். அவரது முப்பது வருடங்களின் செழுமையான அனுபவங்களைப் பற்றி ஆயிரத்து ஒரு இரவுகளில் கேட்க வேண்டிய நீண்ட கதையில், முதல் இரவில் சொல்லி முடிக்க வேண்டிய பகுதியைத் தொடங்குகிறார். அது கட்டுக்கதை அல்ல; புதிய வீரர்களின் கதை.
அவர் அவர் நில இயல் வல்லுநர். அவர் எண்ணெய் ஆராய்ச்சியில் ஈடுபட்டிருந்தார். அவர் ஒரு மந்திரக்கோலைப் போன்றவர். அவர் குனிந்து பார்ப்பார். சில வாரங்களுக்குப் பின், அவ்விடத்தில் எண்ணெய் பிரவாகமாகக் கொந்தளிக்கும். அவர் கஸாக்ஸ்தானுக்கு அனுப்பப்பட்டார். இந்தச் சமவெளியில்தான் நாங்கள் பிரயாணம் செய்துகொண்டிருக்கிறோம். இங்கேதான் ‘எம்பா’ பிரதேசம் இருக்கிறது. எம்பா நதியின் பெயரால் இப்பிரதேசம் அழைக்கப்படுகிறது. இதன் விஸ்தீரணம் எழுபதினாயிரம் சதுர கிலோ மீட்டர். காஸ்பியன் கடலின் வடகிழக்குக் கரையோரத்திலிருந்து, ஓரென்பர்க் – டாஷ்கென்ட் ரயில்வே வரை எண்ணெய்க் கிணறுகள் ஏராளமாக உள்ளன.
இந்தச் செல்வம் இருப்பது வெகுகாலமாகத் தெரிந்த விஷயம்தான். ஜார் அரசர்கள் இவற்றைக் கண்டுபிடிக்க முயன்றனர். இருபது மீட்டர்கள் வரை (சுமார் 66 அடி) தோண்டப்பட்ட பிறகு, இந்த முயற்சியில் ஈடுபட்ட பிரிட்டிஷ் கம்பெனி, இம்முயற்சியைக் கைவிட்டது. வாழ்க்கை கஷ்டமாக இருந்ததுதான் அதற்குக் காரணம்.
பெட்ரோகிராடைச் சேர்ந்த நில இயல் நிபுணர்களின் திட்டங்களில் மட்டுமே எண்ணெய் இடம் பெற்றிருந்தது.
பிறகு பெட்ரோகிராடு லெனின்கிராடாகியது.
“ஐந்தாண்டுத் திட்டம், தோழரே! அது நிறைவேற்ற முடியாத திட்டங்களுக்காக அல்ல; முழுமூச்சுடன் எம்பா பிரதேசத்தில் செயலாற்றத் தொடங்கினோம். ”
ஆம், எம்பா பிரதேசத்தில் அவர்கள் முழு கவனம் செலுத்தினர். அதன் அர்த்தம் என்ன? இரண்டு மூன்று வருடங்களுக்கு வாழ்க்கையைத் தியாகம் செய்வது. அதன் பிறகும் வீடு திரும்புவோம் என்பதை யார் அறிவர்!
இந்த இடத்திற்குத் தொழிலாளிகளை அனுப்புவதே சாத்தியமானதல்ல. குழி தோண்டத் தொடங்கிய இடங்களிலிருந்து வெளி உலகிற்கு எவ்விதத் தொடர்பும் கிடையாது. மக்கள் அங்கு நிலையாகக் குடியிருப்பதும் இல்லை. அது வெறும் சமவெளி. ரயில் நிலையத்திலிருந்து 60 மைல்களுக்கு அப்பால் இந்தச் சமவெளியில் ஒருவர் வேலை செய்ய வேண்டும். அவருக்கு அவசியமான பொருள்களை அனுப்புவது மிகக் கஷ்டமான காரியம்; சில வேளைகளில் எவ்வித உணவும் அங்கே கிடைக்காது. அந்த மனித சஞ்சாரம் இல்லாத இடத்தில் என்ன நேரிடும் என்பது உங்களுக்குத் தெரியாது. நீங்கள் நோயால் வருந்தலாம். அருகிலுள்ள ஆஸ்பத்திரிக்குப் போவதென்றால், இரண்டு நாள் ஆகும். இந்த இடத்திற்குத் தொழிலாளிகளை அனுப்புவதே முடியாத காரியம்.
யார் இந்த வேலைக்குத் தாமாக வருவார்கள்?
ஆயினும் நூற்றுக்கணக்கில் மனுச் செய்துகொண்டார்கள். தேவை எழுபது பேர்கள்தான்!
இப்பொழுது இரண்டாவது வருஷம். ரயில்வே நிலையத்திலிருந்து அறுபது மைல்களுக்கு அப்பால் உள்ள சமவெளியில் அவர்கள் வசித்தார்கள். முதல் மாதத்தில் அவர்கள் திறந்த வெளியில் உறங்கினர்; கூடாரங்கள் கூட இல்லை. இப்பொழுது அங்கே கூடாரங்களும் மரக்குடிசைகளும் இருக்கின்றன. குடிதண்ணீரில் மண்ணெண்ணெய் நாற்றம் இருக்கும். அவர்கள் இருக்கிற இடத்திற்குப் போகுமுன், ரொட்டி கல்லைப்போல் இறுகிவிடும். கடும்புயல் அவர்கள் கூடாரங்களில் மோதி, குளிர் அவர்களை நடுங்கச் செய்யும். சேறுபடிந்த நீரைச் செம்மறி ஆடுகளுடனும் ஒட்டகங்களுடனும் குடித்த காலமும் உண்டு. அவர்களுக்கு உணவுப்பொருள் கொண்டுவந்த வண்டிகள் வழிதவறிச் சென்றதும் உண்டு. யூரல் பிரதேசத்தில் பனிக்கட்டியில் ரயில் சிக்கியதும் உண்டு. அப்பொழுது அவர்கள் பட்டினியால் அவதிப்பட்டார்கள். பழைய செய்தித்தாளைச் சுருட்டி, அதில் காய்ந்த புல்லைச் செலுத்திப் ‘பழங்கால சிகரெட்’டாக அதைப் பயன்படுத்தி, அவர்களுடைய கடும்பசியைத் தணித்துக்கொண்டார்கள்.
இப்போழுது இரண்டாவது வருஷம். ரயில் நிலையத்திலிருந்து அறுபது மைல்களுக்கு அப்பாலுள்ள சமவெளியில் எழுபது தொழிலாளிகள் வசிக்கிறார்கள். ஒருவரேனும் அந்த இடத்திலிருந்து வெளியே வரவில்லை.
சமவெளியின் ஒரு நூதன பகுதி ‘பாமிர்’ என்ற இடம்தான்; பூகோளப் படத்தில் இன்னும் இடம் பெறவில்லை என்று சொல்லப்படுகிறது. தோழரே! இந்தச் சமவெளியுமே பழமையான ஸ்தல விவர நிபுணர்களின் செழுமையான கற்பனையில் மட்டுமே இடம் பெற்றுள்ளது. இப்போதுதான் ஆயிரக்கணக்கான சதுர கிலோமீட்டர் சமவெளிகளின் படம் தயாரிக்கப்பட்டிருக்கிறது. அங்கு வேலை செய்கிற தொழிலாளர்களிடையே ஸ்தல விவர நிபுணர்கள் இருவர் இருக்கிறார்கள். அவர்கள் புதிய படத்தைத் தயாரித்துக்கொண்டிருக்கிறார்கள். உலகப் படத்தில் அது புதியதொரு அம்சம்.
“நாங்கள் நிலத்தை வசப்படுத்தி வெற்றி காண்கிறோம்.”
இதை அவர் மிகச் சாதாரணமாகச் சொல்லுகிறார்!
சென்ற வருட குளிர்கால விடுமுறையில் அவர் லெனின்கிராடுக்குச் சென்றிருந்தார். பல மாதங்களுக்குப் பிறகு, அவர் ஒரு புதிய செய்தித்தாளை எடுத்து, ஐந்தாண்டுத் திட்டத்தின் புள்ளிவிவரங்களைத் தனது குறிப்புப் புத்தகத்தில் குறித்துக்கொண்டார்.
“சூரிய வெப்ப மிகுதியால் வேலை செய்ய முடியாத பொழுது, நான் அவற்றைப் படிக்கிறேன். நாங்கள் அவற்றைக் குறித்துப் பேசுகிறோம். அதில் மிகுந்த வலிமை இருக்கிறது. அடிக்கடி தனிமையாக இருக்கிற நாங்கள் – எங்கள் கதைகளை முன்னமே பரிமாறிக்கொண்ட நாங்கள் – உணர்வதைப் போல், ஒவ்வொருவரும் உணர்வார்களா என்பது எனக்கு தெரியாது. எங்கள் முதலாண்டுத் திட்டம் பூர்த்தியாகிவிட்டது; பூர்த்தியானதும் அல்லாமல் திட்டத்தையும் தாண்டிவிட்டது. எங்கள் திட்டத்தை இப்பொழுது நன்கு அறிந்து கொள்வீர்கள். இயங்கிக் கொண்டிருக்கும் அனைத்தினின்றும் எங்களைப் பிரிக்கலாம். ஆனால், திட்டத்தினின்றும் எங்களைப் பிரிக்க முடியாது. ஏனென்றால், நாங்கள் அதன் பகுதி. இந்தத் தொடர்பிலிருந்து எங்களைப் பிரிக்க முடியாது.”
நான் கற்பனை உலகில் மிதந்து திரியும் பள்ளிச் சிறுமி அல்ல. அவ்வாறே நான் அவரிடம் சொன்னேன். அத்தகைய உற்சாகம் மிகுந்த தன்னல மறுப்பை நம்புவது கஷ்டமாக இருந்தது. அவருடைய பதிலில் கோபம் இல்லை; மனக்கசப்புத் தொனித்தது.
“உங்களுக்கு விளங்கவில்லையா? மக்கள் யுத்த காலத்தில் அவதிப்படுவது இயற்கை என்று உங்களுக்குத் தோன்றலாம். யுத்த காலத்தில் பிறரைக் கொலை செய்வதற்காகப் பல தியாகங்களைச் செய்யத் தயாராக இருக்கிறார்கள் என்பதில் நீங்கள் நம்பிக்கை கொள்வதில்லை.”
“நீங்கள் கவனமாய்க் கேளுங்கள். நான் சொல்வதை நீங்கள் நம்பாமல் இருக்கலாம். ஏனென்றால், நீங்கள் முதன்முதலாக சோவியத் நாட்டில் பிரயாணம் செய்கிறீர்கள்.”
“எனினும், இப்போது நாங்கள் தனித்திருக்கவில்லை. புதிய அரசாங்கப் பண்ணை ஒன்றிருக்கிறது. அதன் பெயர் ‘இரண்டாம் நம்பர் அரக்கன்.’ அதை அவர்கள் ஆறு மாதங்களுக்கு முன் அமைத்தார்கள். அது வளர்ந்தோங்குகிறது. சமவெளியின் ஒரு புதிய பகுதியின் மீது சோவியத் மனிதன் வெற்றிக் கொடியை நாட்டியிருக்கிறான். அது ஒரு புதிய நிலப்பரப்பு. இப்பொழுது எங்களுக்குப் போதிய உணவு கிடைக்கும். நாங்கள் வெகுநாள் பசியோடு காத்திருக்க வேண்டியதில்லை. சென்ற காலத்தைப் போல் காத்திருந்தாலும் நிச்சயம் உணவு கிடைக்கும். பத்தாண்டுகளுக்குப் பிறகு நீங்கள் இங்கு வந்தால், சமவெளியில் அளருவமும் சூரியனும் ஆட்சிபுரியும் பகுதியை நீங்கள் காண முடியாது. மனிதர் வாழும் நகரத்தை நீங்கள் காண்பீர்கள்.”
ரயில் வண்டிக்கு வெளியே இருள் பரந்த சமவெளி. அது பாட்டுப்பாடி உறங்கவைக்கும் நல்ல செவிலித்தாய். சூரிய வெப்பத்தினால் கறுத்த அவரது முகமும், களைப்புச்சாயல் படர்ந்த அவரது கண்களும் பகலைப்போல ஒளி வீசின.
அவருடைய கையிலுள்ள சீசா ஒளிவீசிப் பிரகாசிக்கிறது. எனது குழப்பத்தைத் தீர்த்துக்கொள்ள அது உதவுகிறது.
“தோழரே! அந்தச் சீசாவில்?”
அவர் முகம் மலர்ச்சியுற்றது.
“இந்தச் சீசாவுக்காகத்தான் நான் இன்று ரயிலில் பிரயாணம் செய்துகொண்டிருக்கிறேன். அதனாலேயே நாம் சந்திக்கிறோம். எனது அறுபது மைல் பிரயாணத்தில் நான் ஒருவரையும் சந்திக்கவில்லை. எங்களது சிறந்த பரிசைப் பற்றி எவரிடமும் சொல்ல முடியவில்லை.”
முதல் தடவையாக அவர் மெதுவாகப் பேசுகிறார்.
“தோழரே! இந்தச் சீசாவில் இருப்பது பெட்ரோல் (எண்ணெய்). இதுதான் இவ்வுலகிலேயே மிகச் சுத்தமான எண்ணெய்.”
“இதை நாங்கள் இன்று காலையில் கண்டுபிடித்தோம்.”
பரந்த சமவெளியிலிருந்து இன்று காலைதான் சுத்தமான எண்ணெய் பொங்கி வடிந்தது. அதே இடத்தில்தான் பல வருடங்களுக்கு முன் ஆங்கிலேயர் தோண்ட ஆரம்பித்தனர்.
“இருபது மீட்டர் தூரம் பூமிக்குள் தோண்டிய பிறகு, அந்த முட்டாள்கள் முயற்சியைக் கைவிட்டார்கள். உலகிலேயே சுத்தமான எண்ணெயை அவர்கள் இழந்துவிட்டார்கள். பார்த்தீர்களா, ஐந்தாண்டுத் திட்டம் அதைக் கண்டுபிடித்துவிட்டது!”
இதற்காகத்தான் எவ்வளவு தூரம் தனது வாழ்க்கையைத் தியாகம் செய்திருக்கிறார் என்பதைப் பற்றி அவர் ஒரு வார்த்தைகூடப் பேசவில்லை. ஐந்தாண்டுத் திட்டத்தின் வெற்றிக்காக, உலகினின்றும் தனித்து நின்று உழைக்கும் எழுபது தொழிலாளிகளையும் நிபுணர்களையும் பற்றிச் சொல்ல வேண்டிய அவசியமில்லை என்று அவர் கருதுகிறார் போலும். லாப ஆசையால் உந்தப்பட்ட பிரிட்டிஷ் கம்பெனி நிறைவேற்ற முடியாமல் கைவிட்ட காரியத்தைத் தங்கள் தன்னலமற்ற உழைப்பால் நிறைவேற்றிய செய்தியைச் சொல்வது அவசியமில்லை என்று நினைத்தார் போலும்.
ஆங்கிலேயர் கைவிட்டுவிட்டார்கள்.
ஆனால், அவர்கள் தோண்டிய இடத்தைப் பிறர் கண்டுபிடிக்க முடியாத முறையில் மறைத்து அடையாளமிட்டுச் சென்றனர்.
எனினும், அது கண்டுபிடிக்கப்பட்டது. எப்படி அந்த இடத்தைப் புதிதாகக் கண்டுபிடித்தோம் என்பது பற்றி நீங்கள் கேட்கப் போகிறீர்கள்.
அந்த இடத்தைக் கண்டுபிடித்தது அந்த நாய். அதோ கதவின் பக்கம் படுத்திருக்கிறதே, அந்த நாய்தான். சுத்தமான எண்ணெய் வைத்திருக்கிற அந்த மனிதரை விட்டு மூன்று வருஷங்களாக அகலாத கூட்டாளி.
தன் எஜமான் கீழே குனிந்து கற்களைப் பொறுக்கி எடுப்பதை அது கவனித்து வந்தது.
தனது கவனத்தைக் கவர்ந்த எல்லாவிதமான கற்களையும் அது கொண்டு வந்தது. சிலவற்றை எறிந்துவிட்டு மற்றக் கற்களை அவர் வைத்துக்கொள்வதை அது கூர்ந்து கவனித்தது. அவை பயனுள்ளவை என்பதை அது தெரிந்துகொண்டது. எவ்வகையான கற்களில் எண்ணெய் மணம் வீசுகிறது என்பதை அது சில மாதங்களில் கண்டுகொண்டது அத்தகைய கற்களை மட்டும் அது பொறுக்கி எடுத்ததோடு, அவை எடுக்கப்பட்ட இடத்தையும் அது அடையாளமிட்டது. எப்பொழுதும் அது தரையை முகர்ந்து மோப்பம் பிடித்துத் திரிந்தது. ஒருநாள் அது ஒரு கல்லைக் கொணர்ந்தது. அந்தக் கல் கிடைத்த இடம்தான் ஆங்கிலேயரால் தோண்டப்பட்டுக் கைவிடப்பட்ட இடம்.
உலகிலேயே மிகச் சுத்தமான எண்ணெய் இருக்கும் இடத்திற்கு அது அவர்களை அழைத்துச் சென்றது.
“அது என் கூட்டாளி. இனி அதை நாய் என்று சொல்வது பொருந்தாது. அது எனது சகத் தொழிலாளி.”
அவர்கள் வெகுகாலம் தோண்டினார்கள். ஆழத்தில் எண்ணெய் மறைந்து கிடந்தது. இன்று காலைதான் அது தென்பட்டது. மிகச் சுத்தமான எண்ணெயை அவர்கள் கண்டார்கள்.
நில இயல் வல்லுநர் திடுக்கிட்டார். அவர் சுற்றுமுற்றும் பார்த்தார். எண்ணெயை அடைப்பதற்குச் சீசாக்கள் இல்லை. அவர் அதிக நேரம் தயங்கவில்லை. அவருடைய சட்டைப் பையில் தைலச் சீசா ஒன்று வைத்திருந்தார். சமவெளியில் அது ஒரு ஆடம்பரப் பொருள்; அவருக்கு ஆனந்தத்தைக் கொடுக்கும் ஒரு ஆடம்பரப் பொருள். நாகரிகத்தின் சாதாரணச் சின்னம். மீசையும் தாடியும் வளர்ந்திருப்பவருக்கு அது பயனில்லை. எனினும், பிரியமாக அதை எப்பொழுதும் தன்னோடு வைத்திருந்தார். சீசாவைத் திறந்து தைலத்தை வெளியே ஊற்றினார். உலர்ந்த தரையும் சூரிய வெப்பமும் அதனை உறிஞ்சுவதற்கு முன்பே சீசாவில் எண்ணெய் நிரம்பி, அது பளிச்சிட்டது.
நிபுணர் என்ற முறையில் தனது அபிப்பிராயத்தைக் கூறவும், மேற்கொண்டு செய்யவேண்டியது என்னவென்று கேட்கவும் அந்தப் பிரதேசத்தின் இரண்டாவது பகுதிக்குப் பிரயாணம் செய்துகொண்டிருக்கிற அவரது கையிலிருந்த தைலச் சீசா அதுவே.
அவர் தனியாகப் போய்க்கொண்டிருக்கிறார். சில நாட்களுக்கு முன் இது ஒரு கடினமான காரியமாயிருந்திருக்கும். அந்தப் பிரதேசம் முழுவதிலும் அவர் ஒருவரே நில இயல் வல்லுநர். மாணவர்கள்தான் அவரது உதவியாளர்கள். ஆறு மாத காலம் லெனின்கிராடு பல்கலைக்கழகத்தில் படிப்பு; ஆறு மாத காலம் இங்கே வேலை. மீண்டும் ஆறு மாதங்கள் லெனின்கிராடிலும், ஆறு மாதங்கள் எம்பாவிலும் வேலை செய்ய வேண்டும். ஆனால், இன்றைக்குப் பொறுப்புள்ள இரு என்ஜினீயர்கள் இருக்கின்றனர்.
எல்லா விஷயங்களையும் எனக்குச் சொல்வதற்காக, அவர் அவசர அவசரமாகச் சொன்னார். மற்றொருவர் யார் என்பதையும் அவர் எனக்குச் சொன்னார்.
போர் தொடங்கும் வரை அவர் வயலில் வேலை செய்து வந்தார். மூன்றாண்டுகள் பள்ளிக்கூடம் போவதற்கான அதிர்ஷ்டம் படைத்த விவசாயி. ஒரு கிராமப் பள்ளிக்கூடம் – ஜார் ஆட்சியில் கிராமப் பள்ளிக்கூடம் எத்தகையது என்பது உங்களுக்குத் தெரியுமா?
பிறகு யுத்தம் வந்தது. ஏகாதிபத்தியப் போர்முனைக்கு அவர் சென்றார். உள்நாட்டுப் போரில் தீவிரமாகப் பங்கு கொண்டார்.
உலகத்தை ஒரு செஞ்சேனை வீரனாக அவர் அறிந்துகொள்ளத் தொடங்கினார். வயலில் தானியத்தை நன்றாக அறுவடை செய்வதைவிட, மனிதனிடத்தில் வேறு பல சக்திகளும் திறமைகளும் இருப்பதை அவர் கண்டார். வாழ்க்கைப் பாதையில் முன்னேறுவதற்கு எவ்விதத் தடையும் இல்லை என்று அவர் கண்டார். தனக்குத் திறமை இருப்பதை அவர் உணர்ந்தார். படிப்பதென்று முடிவு செய்தார்.
நூற்றைம்பது மைல் அவர் கால்நடையாகச் சென்றார். நூற்றைம்பதாவது மைலில் உயர்தரப் பள்ளிக்கூடம் ஒன்றிருந்தது. அவரது திறமை ஒப்புக்கொள்ளப்பட்டது. அவருக்கு ஆரம்பக் கல்வி போதித்த அந்தக் கிராமப் பள்ளிக்கூடம், ஜார் காலத்திய பிற பள்ளிக்கூடங்களை விடச் சிறந்ததல்ல என்பது தெளிவாகியது. அவர் சிரமப்பட்டுப் படிக்க முடியும்; எழுத முடியாது.
எனவே, அவர் ஆரம்பப் படிப்பிலிருந்து கற்கத் தொடங்கினார். முதலாவதாக எழுதப் படிக்கக் கற்றுக்கொண்டார். பிறகு உயர்தரப் பள்ளிக்கூடத்தில் பயிற்சி பெற்றார். அதன் பிறகு பல்கலைக்கழகத்தில் பயின்றார். அவர் கஷ்டப்பட்டுக் கற்றார்; கசடறக் கற்றார்; அதிவிரைவில் கற்றார். நடைமுறைப் பயிற்சிக்காக அவரை எம்பா பிரதேசத்திற்கு அனுப்பினார்கள். அவர் தனது திறமையை வெளிப்படுத்தினார். அவர் சேவை அங்கு தேவையாயிற்று. எனவே, அவர் மேலும் சில மாதங்கள் அங்கே தங்குவதற்கு அனுமதி கோரப்பட்டது. இதன் மத்தியில், ஆறு மாத காலப் படிப்புக்காக அவர் பல்கலைக்கழகத்திற்குப் போயிருக்க வேண்டும்.
அவர் இனிமேல் போகமாட்டார்.
சில நாட்களுக்கு முன் ‘கசாக்’ தந்திச் சேவகன் அவருக்கு ஒரு தந்தி கொண்டு வந்தான்.
“தோழரே! நீங்கள் எங்களுக்கு ஏதாவது செய்தி அனுப்புவதானால் தந்தி கொடுக்காதீர்கள். எங்களுக்கு அவசியமான பொருள்கள் வருகிற காலம் வரை, நீங்கள் கொடுக்கும் தந்தி ‘குராச்லி’யில்தான் இருக்கும். கடிதமோ அல்லது தந்தியோ அங்கேயே தங்கியிருக்கும். நாங்கள் மாலுமிகளைப் போன்றவர்கள். குராச்லி எங்களது துறைமுகம். தந்தி கொடுக்காதீர்கள். தந்தி இலாக்காவுக்கு அனாவசியமான சிரமத்தைத்தான் கொடுக்கிறீர்கள்.”
அவருடைய தந்தியும் அங்கேயே தங்கிவிட்டது. இரண்டு வாரம் கழித்துத்தான் அது அவருக்குக் கிடைத்தது. அவருடைய கைகள் எண்ணெய்ச் சிக்காயிருந்தன. தனது கால்சட்டையில் அவர் கைகளைத் துடைத்தார். அந்தத் தந்தியைப் பிரித்துப் பார்த்தார்.
அவர் விழுந்து விழுந்து சிரித்தார். அவரது முகம் கரிய சிவப்பாக மாறியது.
அவர் செய்துள்ள வேலைக்கு அவருக்குப் பல்கலைக்கழகப் பட்டம் அளித்திருப்பதாக அவர்கள் தெரிவித்திருந்தார்கள்.
அப்பொழுது மாஸ்கோவில் மணி இரண்டு. நமது நில இயல் நிபுணரின் சில் உடைந்த கைக்கடிகாரத்தில் மணி நான்கு. இது கீழ்நாட்டுக் கால அளவு.
ஊதா, நீல நிறமாக மாறிக்கொண்டிருக்கிறது. சிவப்பு நிறமான ஒளிக்கற்றை சன்னலின் வழியாக ஊடுருவிப் பாய்ந்து கொண்டிருக்கிறது. சூரியன் அடிவானத்தில் எட்டிப் பார்க்கிறான்.
“இப்போதெல்லாம் நாங்கள் முழு வேகத்தில் வேலை செய்துகொண்டிருக்கிறோம். அதிகாலையில் வேலையைத் தொடங்கி முடிந்த வரைச் செய்கிறோம். மத்தியானம் மண்டையைப் பிளப்பது போல் வெயில் காய்கிறது. மாலை வரை வெயிலின் கடுமை குறைவதில்லை.”
“நாள் ஒன்றுக்குப் பதினொரு மணி நேரம், பன்னிரண்டு மணி நேரம் கூட வேலை செய்கிறோம். அதைப் பற்றி எண்ணுவதற்கே எங்களுக்கு அவகாசமில்லை. எங்களை யாரும் வற்புறுத்தி வேலை செய்யச் சொல்வதில்லை. எங்கள் வேலைதான் எங்களை வற்புறுத்துகிறது. ஆழத்தில் புதைந்திருக்கும் எண்ணெய் ஊற்றை அணுக அணுக, சோஷலிசச் சமுதாயத்தை நெருங்குவதை நாங்கள் உணருகிறோம். தோழரே! நான் போடுவது வாய்ப்பந்தல் அல்ல. அது எங்கள் வாழ்க்கை. எங்களுக்கு வசதி இல்லை; வளமான வாழ்வு இல்லை. எங்கள் மனைவியர் எங்களுடன் இல்லை. தோழரே! அது ஒரு பெரும் குறையல்லவா? ஆனால், நாங்கள் நேசிக்கும் பொருள் ஒன்று இருக்கிறது – எண்ணெய். அதை நாங்கள் பேரன்புடன் நேசிக்கிறோம். எண்ணெய் என்பதற்காக அல்ல, அது தரும் பொருள்களுக்காக. நீங்கள் சொன்னது முதலில் என்னைத் திகைக்கச் செய்தது. இப்போது என்னை அடிக்கடி கட்டுப்படுத்தி வருகிறேன். எங்கள் உண்மை உள்ளத்தை நீங்கள் உணர வேண்டாமா? அதன் அறிகுறியை மாத்திரம் நீங்கள் கண்டு ஏமாறக்கூடாது என்பதற்காக, நான் என்னைக் கட்டுப்படுத்திக்கொண்டேன். எதையும் மிகைப்படுத்திக் கூறாமல், உள்ளதை உள்ளவாறு சொல்ல நீங்கள் இங்கு கற்றுக்கொள்கிறீர்கள். நம்மை நாமே ஏமாற்றிக் கொள்ளக்கூடாது என்று கற்றுக்கொள்கிறீர்கள். இங்கு சாதாரண எண்ணங்களே உங்கள் உள்ளத்தில் துளிர்க்கின்றன. வாழ்க்கை கடினமாக இருக்கிறது. நம்மை ஏமாற்றிக்கொள்வதன் மூலம் நீங்கள் பரிகாரம் தேடினால் அது உங்களைக் கொன்றுவிடும்… ”
இரவு விடைபெற்றுக்கொள்கிறது.
ஒரே ஒரு இரவுதான்.
இஸம்பெட் ரயில் நிலையம்.
நாங்கள் பிரிகிறோம். நிலையக் கட்டிடத்திற்கு நிழல் தரும் மரங்களுக்குப் பின்னால் அவர் மறைகிறார்.
ரயில் நல்ல செவிலித்தாய், அது மீண்டும் தாலாட்டுகிறது.
ஆனால், தூக்கம் வந்தால்தானே?
பசுமையான சமவெளி ஒரு நாடாவைப்போல சன்னலைக் கடந்து வேகமாக ஓடுகிறது. அடிவானத்திற்கு எதிராக அங்கொன்றும் இங்கொன்றுமாகக் கூடாரங்கள் காட்சியளிக்கின்றன.
கீழே ஒட்டகங்கள் கண்களில் கேள்விக்குறி தோன்ற, வண்டித்தொடரைத் தலை நிமிர்ந்து பார்க்கின்றன.
(In the Land Where Tomorrow Is Already Yesterday என்ற புத்தகத்திலிருந்து)
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram











