பூதத்தின் இணையத் தடம்: “ஆசான்” எவ்வாறு இணையத்தில் தோன்றினார்?

நன்கு கல்வியறிவு பெற்ற இளைஞர்கள் யாரோ சொல்லிக்கொடுத்ததால் மாவோவிடம் திரும்பவில்லை; இந்தத் தாராளவாத அறிவுசார் மேல்தட்டினர் பிரதிநிதித்துவப்படுத்தும் சமூக ஒழுங்கின் மீதான தங்களது அதிருப்தியை வெளிப்படுத்துவதற்கான மொழியை மாவோவின் சிந்தனைகள் வழங்குவதால்தான் அவரிடம் திரும்புகின்றனர்.

0

ஒரு பூதத்தின் பொருளாயத அடித்தளம்:
சீன இளைஞர்கள் ஏன் மாவோவை புதிதாகக் கண்டடைகிறார்கள்? – பகுதி 2

(முந்தைய பகுதியை படிக்க இணைப்பை அழுத்தவும் – பகுதி 1)

“மாவோ காய்ச்சல்” பல்கலைக்கழக வளாகங்களுக்குள் மட்டும் அடங்கியிருக்கவில்லை. அது மிகவும் உயிர்ப்புடன் வெளிப்படும், அதே நேரத்தில் கடுமையான மோதல்கள் நடக்கும் களம் சீனாவின் இணையப் பொதுவெளியாகும். இணையத் தளங்களின் தரவுகள் இந்தக் கருத்தியல் மாற்றம் நிகழ்நேரத்தில் உருவாகிக் கொண்டிருப்பதைக் காட்டுகின்றன. அதன் பரப்பை மட்டுமல்ல, படைப்பாற்றலானதும் பல நேரங்களில் மோதல்மிக்கதுமான வழிகளில் அது எவ்வாறு பரவுகிறது என்பதையும் அவை வெளிப்படுத்துகின்றன.

தேடுபொறித் தரவுகள் இந்த மாற்றத்தைத் தெளிவாகக் காட்டுகின்றன. சீனாவின் முதன்மைத் தேடுபொறியான பைடுவில் “மாவோ சேதுங்” அல்லது “தலைவர் மாவோ” போன்ற சொற்கள் அரசியல் ரீதியாக மிகுந்த எச்சரிக்கையுடன் கையாளப்படுவதால், அவற்றுக்கான பொதுத் தேடல் போக்குத் தரவுகள் வெளியிடப்படுவதில்லை. ஆனால், “மாவோ சுவான்” — மாவோவின் தேர்ந்தெடுக்கப்பட்ட படைப்புகள் — என்ற சொல்லுக்கான தரவு கிடைக்கிறது. அந்தத் தேடல் போக்கு ஆர்வத்தில் ஏற்பட்ட தெளிவான மாற்றத்தைக் காட்டுகிறது. 2016-க்கு முன் அதன் தேடல் குறியீடு குறைந்த, நிலையான மட்டத்தில் இருந்தது. 2016-க்குப் பிறகு அது தொடர்ந்து உயரத் தொடங்கியது; 2019-க்குப் பின்னர் வெகுவாக அதிகரித்து, 2016-க்கு முந்தைய அடிப்படை அளவின் சுமார் நான்கு மடங்கில் நிலைபெற்றது.

இந்தக் கருத்தியல் எழுச்சியின் மிகவும் குறிப்பிடத்தக்க விளைவுகளில் ஒன்று புதிய மொழிப்பயன்பாடு. வழக்கப்படி பலர் இன்னும் “தலைவர்” என்ற பட்டத்தைப் பயன்படுத்துகின்றனர். ஆனால், இணையத்தின் புதிய தலைமுறை மாவோவை அன்பும் மரியாதையும் கலந்த வகையில் குறிப்பிட ஜியாவ்யுவான் (教员) — “ஆசான்” — என்ற சொல்லைப் பரவலாகப் பயன்படுத்துகிறது.

இந்தச் சொல் மாவோவைக் குறிக்கும் சொல்லாகவே மாறிவிட்டதால், இன்று ஒரு பல்கலைக்கழக மாணவரிடம் “ஆசான்” என்று சொன்னாலே, பலர் அது மாவோவைத்தான் குறிக்கிறது என்பதை இயல்பாகப் புரிந்துகொள்வார். இந்தச் சொல்லின் வரலாறு மரியாதையிலும் எதிர்ப்பிலும் வேரூன்றியுள்ளது. பண்பாட்டுப் புரட்சியின்போது தனக்கு அளிக்கப்பட்ட “நான்கு மகத்தான” பட்டங்களை விரும்பாமல் இருந்த மாவோ, அவற்றில் ஒன்றையே விரும்புவதாகக் கூறினார்: “ஆசான்.” தங்கள் போராட்டங்களைப் புரிந்துகொள்ள வழிகாட்டும் ஆசானாக மாவோவை இன்றைய இளைஞர்கள் பார்க்கிறார்கள்; அந்த உறவையே இந்தச் சொல் பிரதிபலிக்கிறது.

வீசாட்டில் பிரபலமான பொதுக் கணக்கொன்றை நடத்திவரும் நான், இந்தச் சொல்லை இணையத்தில் அடிக்கடி பயன்படுத்திய முதல் சிலரில் ஒருவனாக இருக்கலாம். 2017-க்கு அருகில் மாவோ குறித்துத் தொடர் கட்டுரைகள் எழுதிக்கொண்டிருந்தபோது, அந்தத் தளத்தின் தணிக்கை அல்காரிதங்கள் ஏற்படுத்திய தடைகளைச் சமாளிக்க வேண்டியிருந்தது. சீன இணையச் சூழலில் “மாவோ சேதுங்” போன்ற சொற்கள் அரசியல் ரீதியாக மிகுந்த எச்சரிக்கையுடன் கையாளப்படுகின்றன. ஒரு கட்டுரையில் அவற்றை அதிகமாகப் பயன்படுத்தினால் அது தானியங்கிப் பரிசீலனைக்கு உட்பட்டு, வெளியீட்டையே தடுக்க முடியும்.

பல மாற்றுப் பெயர்களை முயன்றபோதும் அவை எல்லா வாசகர்களுக்கும் ஏற்றதாக அமையவில்லை. இறுதியில் “ஆசான்” சரியான தீர்வாக அமைந்தது. மாவோ தானே ஏற்றுக்கொண்ட பட்டம் அது; எழக்கூடிய எதிர்ப்புகளைத் தவிர்க்கவும் தணிக்கையைத் தாண்டவும் உதவியது. இந்தச் சொல் மக்களிடம் ஆழமாகப் பதிந்தது; விரைவிலேயே என்னைவிட மிகப் பெரிய கணக்குகளும் அதைப் பயன்படுத்தத் தொடங்கின. இந்தத் தலைமுறை மாவோவுடன் கொண்டுள்ள உறவையே அது பிரதிபலித்தது: தொலைவில் நிற்கும் ஓர் உருவச்சின்னமாக அல்ல; உலகத்தைப் புரிந்துகொள்ளத் தேவையான கருவிகளை வழங்கும் ஆசானாக.

வீசாட் தேடல் குறியீட்டில் “ஜியாவ்யுவான்” என்ற சொல்லின் பெரும் உயர்வு — 2021-இல் மாவோவின் பிறந்த நாளில் 3.5 கோடி என்ற உச்சத்தை எட்டியதும், பின்னர் ஏப்ரல் 8, 2024 அன்று வரலாற்றிலேயே அதிகபட்சமான 13.9 கோடியை எட்டியதும் — இந்தச் சொல் கீழிருந்து எவ்வளவு பரவலாக ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது என்பதைக் காட்டுகிறது.

இணையத்தில் கீழிருந்து பெருகிய இந்த ஆதரவு தள அதிகாரிகளுடன் மோதல்களையும் உருவாக்கியுள்ளது. 2017-இல் ஜிஹூ தளத்தில் ஒரு பயனர் கேட்டார்: “சீன வரலாற்றில் மிகச் சிறந்த மனிதர் யார்?” தொடக்கத்தில் கன்பூசியஸ், சீனாவின் முதல் பேரரசரான சின் ஷி ஹுவாங், “கலப்பின நெல்லின் தந்தை” என அழைக்கப்படும் யுவான் லோங்பிங், மாவோ போன்ற பெயர்கள் விரிவான காரணங்களுடன் இடம்பெற்றன. ஆனால், விரைவில் மாவோ ஆதரவுப் பதில்கள் மேலோங்கின. அதிக வாக்குகள் பெற்ற பதிவுகளும் பெரும்பாலான புதிய பதில்களும் மாவோவையே குறிப்பிட்டன. புள்ளிவிவரப்படி பாதிக்கும் மேற்பட்ட பயனர்கள் அவரை ஆதரித்தனர்.[8]

இந்தப் போக்கைத் தள நிர்வாகிகள் விரும்பவில்லை. “ஆழமற்ற வாக்கெடுப்பு வகைக் கேள்வி” என்ற பலவீனமான சாக்கைக் கூறி அவர்கள் விரைவில் அந்தத் தொடரை மூடினர். 2020-இல் “மாவோ காய்ச்சல்” மேலும் தீவிரமானபோது இதேபோன்ற மற்றொரு கேள்விக்கு ஐயாயிரத்துக்கும் மேற்பட்ட பதில்கள் வந்தன. ஆயிரக்கணக்கான அல்லது பத்தாயிரக்கணக்கான ஆதரவு வாக்குகள் பெற்ற பெரும்பாலான முன்னணிப் பதில்கள் மாவோவையே குறிப்பிட்டன.[9]

இந்தப் பதில்களில் பல, மாவோவின் மகத்தான பங்களிப்புகளை விரிவாக விளக்கின: இறையாண்மை கொண்ட ஒரு நாட்டை நிறுவியது; தொழில்மயமாக்கலை முன்னெடுத்தது; ஏகாதிபத்தியத்தையும் காலனியாதிக்கத்தையும் எதிர்த்தது; பெண்கள் விடுதலையையும் வெகுமக்கள் எழுத்தறிவையும் முன்னேற்றியது; அதிகாரவர்க்கப் போக்கை எதிர்த்தது; சமூக நீதியைத் தேடியது.

இதற்கு எதிர்வினையாக, சீன ஊடக மேல்தட்டினரின் மேற்கத்திய ஆதரவு மற்றும் மாவோ எதிர்ப்புச் சாய்வுக்கேற்ப, தள நிர்வாகிகள் அதிக ஆதரவு பெற்ற இந்தப் பதில்களில் பலவற்றை அழித்தனர். இன்று கடுமையான தணிக்கைக்குப் பின்னரும் அந்த விவாதம் நீடிக்கிறது. அதன் அதிக ஆதரவு பெற்ற பதில் இவ்வளவுதான்:

“மக்கள் அவர்தான் என்கிறார்கள்; அவரோ மக்கள்தான் என்கிறார்.” அந்த “அவர்” யார் என்பது ஒவ்வொரு பயனருக்கும் தெரியும்.

இந்த நிகழ்வுகள் “மாவோ காய்ச்சல்” அரசால் நிர்வகிக்கப்படும் ஒன்றல்ல என்பதைத் தெளிவாக்குகின்றன. உண்மையில் இந்த இயக்கம் இரண்டு திசைகளிலிருந்தும் அழுத்தத்துக்கு உள்ளாகிறது. ஒருபுறம், குறிப்பாக 1949-க்குப் பிந்தைய மாவோவின் தீவிரமான சிந்தனைகள் மற்றும் பண்பாட்டுப் புரட்சி குறித்த கட்டுப்பாடற்ற விவாதங்களை அரசு இன்னும் எச்சரிக்கையுடன் பார்க்கிறது. மறுபுறம், இந்தத் தனியார் இணையத் தளங்களைச் சொந்தமாகக் கொண்டு இயக்கும் மேற்கத்திய ஆதரவு தாராளவாத ஊடக மேல்தட்டினர் மாவோவுக்குக் கருத்தியல் ரீதியாக எதிரானவர்கள்; மாவோ ஆதரவுக் கருத்துகளை மௌனப்படுத்த “அரசியல் ரீதியாக எச்சரிக்கையுடன் கையாள வேண்டிய உள்ளடக்கம்” என்ற காரணத்தை வசதியான சாக்காகப் பயன்படுத்துகிறார்கள்.

நிலைமை இதனால் இன்னும் சிக்கலாகிறது: கீழிருந்து தன்னிச்சையாக எழும் சக்திவாய்ந்த கருத்தியல் ஓட்டம் ஒன்று, புரட்சிகர அரசியலை நிராகரித்து மேற்கத்திய வகைச் சந்தைச் சீர்திருத்தங்களையும் மதிப்புகளையும் ஏற்றுக்கொண்ட சீர்திருத்தத்துக்குப் பிந்தைய தாராளவாதக் கருத்தொற்றுமையுடன் நேரடியாக மோதுகிறது. நன்கு கல்வியறிவு பெற்ற இளைஞர்கள் யாரோ சொல்லிக்கொடுத்ததால் மாவோவிடம் திரும்பவில்லை; இந்தத் தாராளவாத அறிவுசார் மேல்தட்டினர் பிரதிநிதித்துவப்படுத்தும் சமூக ஒழுங்கின் மீதான தங்களது அதிருப்தியை வெளிப்படுத்துவதற்கான மொழியை மாவோவின் சிந்தனைகள் வழங்குவதால்தான் அவரிடம் திரும்புகின்றனர்.

தொடரும்…

யின்ஹாவ் ஜாங்
மந்த்லி ரிவியூ, தொகுதி 77, எண் 11, ஏப்ரல் 2026.

(யின்ஹாவ் ஜாங், அடிலெய்டு பல்கலைக்கழகத்தின் ஆசிய ஆய்வுகள் துறையில் முனைவர் பட்டம் பெற்றவர். மார்க்சியக் கோட்பாடு மற்றும் சீனப் புரட்சியின் வரலாறு குறித்து பிரபலமான சமூக ஊடகக் கணக்கொன்றையும் நடத்தி வருகிறார்.)

நன்றி: மந்த்லி ரிவியூ

குறிப்புகள்:

8. Li Yuan, “‘Who Are Our Enemies?’: China’s Bitter Youths Embrace Mao,” New York Times, July 8, 2021.

9. Sanjiu Xiansheng-இன் பதில், “Who Is the Greatest Chinese Person in History?,” Zhihu, கடைசியாக மாற்றப்பட்டது August 18, 2017.

மொழிபெயர்ப்பு: தமிழ்ச்சுடர்

மொழிபெயர்ப்பாளர் குறிப்பு:

சீன இணையப் பயன்பாட்டில் மாவோவைக் குறிக்கும் “ஜியாவ்யுவான்” (教员) என்ற சொல்லை, தமிழ் மார்க்சிய மரபில் மார்க்ஸ், எங்கெல்ஸ், லெனின், ஸ்டாலின், மாவோ ஆகியோர் “பாட்டாளி வர்க்க ஆசான்கள்” என அழைக்கப்படும் நிலைபெற்ற பயன்பாட்டை முன்னிட்டு இக்கட்டுரையில் “ஆசான்” என வழங்கியுள்ளோம்.

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram



விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க