தூத்துக்குடியில் உள்ள ஒரு கிராமத்தில் நடக்கும் கதை. ஆதிக்கச் சாதி பின்புலம் கொண்ட குடும்பத்தைப் பற்றிய கதை. ஆனால், ஆதிக்கச் சாதிப் பெருமையைத் தூக்கிப் பிடிக்கும் படமல்ல, மொதராத்திரி. படம் முழுக்க வரும் பகடிகளின் ஊடாக, ஆதிக்கச் சாதிப் பெருமையையும், ஆணாதிக்கத் திமிரையும், குடும்ப கௌரவம் என்ற பெயரில் நடக்கும் நிகழ்வுகளையும் கூர்மையாக விமர்சிக்கின்ற திரைப்படம்தான் மொதராத்திரி.
கதாநாயகிக்கும் கதாநாயகனுக்கும் திருமணம் நடக்கின்ற அன்றைய ஒருநாள் சம்பவமே இத்திரைப்படம். இருவரும் ஒரே சாதியினர். விருப்பமில்லாமல்தான் திருமணம் ஏற்பாடு செய்யப்படுகிறது. காரணம், கதாநாயகி அவள் காதலனிடம் (சொந்த சாதியாக இருந்தாலும்) இருந்து வலுக்கட்டாயமாகப் பிரிக்கப்பட்டு, அவளது குடும்பத்தின் நிர்ப்பந்தத்தில் மணமகளாகிறாள். கதாநாயகனோ, தலித் பெண்ணைக் காதலித்தவன் (இது குறியீடாகச் சொல்லப்படுகிறது). அக்காரணம் ஒன்றே, அவர்களைப் பிரிப்பதற்கு போதுமானதாக இருந்தது. அப்பெண் தற்’கொலை’ செய்து கொள்கிறாள்.
தான் விருப்பப்பட்ட வாழ்வை வாழவிடாத குடும்பத்தை வெறுத்துவிட்டு வெளிநாடு சென்று விடுகிறான், கதாநாயகன். வருடங்கள் கடந்த பிறகு, அவனை ஏமாற்றி, வெளிநாட்டிலிருந்து வரவைத்து, நாயகன், நாயகி இருவருக்கும் விரும்பாத் திருமணம் நடைபெறுகிறது.
திருமணம் முடிந்தபின், முதல் நாளிரவில் கதாநாயகி காதலனுடன் தப்பித்து ஓட முயற்சிக்கிறாள். கதாநாயகன் உண்மையை உணர்ந்து அவர்களைச் சேர்த்து வைக்க முயற்சிக்கிறான். இது திரைப்படத்தின் போக்கைப் பற்றிய சுருக்கம்.
முழுத் திரைப்படத்தின் கதையை அல்லது முடிவை விவரிப்பது அல்ல, இக்கட்டுரையின் நோக்கம். மொதராத்திரி திரைப்படத்தின் கதையும், திரைக்கதையும் சொல்லும் உள்ளடக்கம் இன்றைய தமிழ்ச்சூழலில் முக்கியமானது என்பதைக் கடத்த வேண்டியுள்ளது.
தென்மாவட்டங்களில் நடக்கும் சாதி ஒடுக்குமுறைகள் தொடர்பான திரைப்படங்கள் பாதிக்கப்பட்ட பட்டியல் இன மக்களின் பார்வையிலிருந்து காட்டப்படுவது நாம் அறிந்ததே. அம்மக்களின் வலியைப் பொதுச்சமூகத்திற்கு கடத்துவதில் அவை முக்கியப் பங்காற்றுகின்றன.
அதேசமயம், ஆதிக்கச் சாதிக் கதைப் பின்புலத்திலிருந்து, சாதி ஒடுக்குமுறை குறித்த பார்வையை வெளிப்படுத்தும் திரைப்படங்கள் மிகக் குறைவே. அந்த வகையில், மொதராத்திரி வரவேற்கப்பட வேண்டிய படைப்பாகும்.
கதாநாயகனின் காதல் சாதியின் பெயரால் முறிக்கப்படுகிறது. கதாநாயகியின் காதலோ குடும்பக் கௌரவத்தின் பெயரால் தடுக்கப்படுகிறது. இங்கு பெண் என்பவள், சுய முடிவில் தன் வாழ்க்கையைத் தீர்மானிப்பதற்கு உரிமையற்றவள் என்பதுதான். காதலன் சொந்த சாதியைச் சார்ந்தவனாக இருந்தாலும், சுயமாக முடிவெடுக்க இங்கு பெண்ணுக்கு உரிமையில்லை என்பதை இத்திரைப்படம் கோடிட்டுக் காட்டுகிறது. தமிழ் மண்ணில் நடக்கும் வர்க்க ஆணவப் படுகொலைகள், இதனை நம் கண்முன்னே உணர்த்திக் கொண்டிருக்கின்றன. குறிப்பாக, இங்கு சாதி என்பதைத் தாண்டி, பெண்ணை அடிமையாக்கி, அதன் மூலம் குடும்ப கௌரவத்தைப் பாதுகாப்பது என்ற பெயரில் இப்படுகொலைகள் நடக்கின்றன. அண்மையில், செங்கல்பட்டு மாவட்டம் கிளாம்பாக்கத்தில் நடந்த ஆணவப்படுகொலை பட்டியல் சமூகப் பின்னணியில் நிகழ்த்தப்பட்ட வர்க்க ஆணவப் படுகொலை என்பதை பொருத்திப் பார்த்துக் கொள்ளுங்கள்.
இன்றைய தலைமுறையை பிற்போக்குச் சிந்தனைகளுக்குப் பின்னால் அடிமைத்தனமாகச் செல்பவர்களாகக் காட்டாமல், அதை மீறும் தன்மையை இயல்பில் கொண்டவர்களாகக் காட்டுகிறார் இயக்குநர். திருமண நிகழ்வின் ஊடாக, ஆதிக்கச் சாதி இளம்பெண்ணுக்கும், பட்டியல் சாதி இளைஞனுக்கும் இடையேயான ஒரு காதலை இயல்பாகக் காட்டிச் செல்கிறார். அந்தப் பட்டியல் சாதி இளைஞனின் சுயமரியாதைக்கான போராட்டக் குணமும் இணைத்துக் காட்டப்படுகிறது. திருமணம் முடிந்த பின்னர், கதாநாயகி தப்பித்து காதலனுடன் சென்றுவிட முயற்சிப்பதும் கூட அப்படித்தான். பிடித்தவனுடன் செல்ல இயல்பாக முடிவெடுப்பதிலிருந்து ஒழுக்கவாதம் கேள்விக்குள்ளாக்கப்படுகிறது.
ஆதிக்கச் சாதி பின்னணி கொண்ட நாயகன் சாதியைத் தாண்டி வரத் துடிப்பவனாகக் காட்டப்பட்டிருப்பது சிறப்பு. அவன் விதிவிலக்கல்ல, அவனைப் போன்ற எண்ணம் உள்ள ஆதிக்கச் சாதி பின்னணி கொண்ட பல இளைஞர்களின் குறியீடு அவன்.
பெண்களின் இயல்பான சொந்த விருப்பங்கள், இலட்சியங்கள் வெட்டி கௌரவத்திற்காகவும், குடும்ப நலன் என்ற பெயரிலும் அழிக்கப்படுகின்றன என்பது, கதாநாயகியின் சித்தியின் கதாபாத்திரத்தின் மூலம் சொல்லப்படுகிறது. அந்தச் சித்தி கதாபாத்திரமே, உள்நோக்கத்தோடு தனது மகளின் மேற்படிப்பை தடை செய்யும் மனநிலை கொண்டதாக இருக்கும் முரணையும் இத்திரைப்படம் காட்டுகிறது. நிலவுடமை ஆணாதிக்கக் குடும்ப முறை என்பது பெண்களுக்குச் சிறையன்றி வேறென்ன?
தமிழ்ச் சமூகத்தில் பார்ப்பனியக் கடவுள்களும் வழிபாட்டு முறையும் செல்வாக்கு செலுத்துவதையும் இதனால் நாட்டார் தெய்வங்கள் புறக்கணிக்கப்படுவதையும் இத்திரைப்படம் விமர்சனப்படுத்துவது குறிப்பானது. ஆவணப் படுகொலை செய்யப்பட்ட பெண்கள் அம்மனாக வழிபடப்படுவது குறியீடாகக் காட்டப்படுவது சமகாலச் சூழலில் முக்கியமானது.
குறிப்பாக, இத்திரைப்படத்தின் முக்கிய கதாபாத்திரங்கள் ஒவ்வொன்றும் அவற்றின் தன்மையில் இருந்து காட்டப்படுகிறது. பெருமைப்படுத்த முயற்சிக்கவில்லை, விமர்சனப்படுத்தப்படுகிறது. குறிப்பாகச் சொல்லவேண்டுமெனில், நாயகியின் சித்தப்பா. அவரின் வெட்டி கௌரவம் பகடியாக்கப்பட்டு, இறுதியில் அவரது மனைவியின் கன்னத்து அறையால் சிதைக்கப்படுகிறது. அதேசமயம் பெண்களின் மீதான தனது கரிசனத்தை இத்திரைப்படம் வெளிப்படுத்துகிறது. பார்வையாளர்களுக்கு அதனைக் கடத்துவதில் வெற்றியும் பெற்றுள்ளது.
இத்திரைப்படம் குறித்த இயக்குநர் ராஜா கருப்பசாமியின் நேர்காணலைப் பார்த்தேன். ஆதிக்கச் சாதி கொண்ட அவரது பின்புலத்தை, முத்தையாக்களைப் போல பெருமைப்படுத்திக் கொள்ளவில்லை. ஆதிக்கச் சாதிவெறிக்கு ஒத்தூதவில்லை. பரிசீலித்துப் பார்க்கிறார். சாதி அடக்குமுறையை விமர்சிக்கிறார். சாதி ஆணவப் படுகொலையை விமர்சிக்கிறார். தான் ஒரு ஆண் என்பதிலிருந்து தன் மீதான சுயவிமர்சனத்தையும் மேற்கொள்கிறார். தனது படங்களில் அரசியல் சரித்தன்மை முக்கியமானது என்பதை உணர்ந்து பேசுகிறார். அதற்கு பொறுப்பாக நடந்துகொள்ள வேண்டும் என்ற உணர்வு அவரிடத்தில் வெளிப்படுகிறது.
இன்றைய இளம் தலைமுறை, சாதி உள்ளிட்ட பிற்போக்குத்தனங்களைத் தாண்டி வரத் துணிந்து விட்டது என்பதை இத்திரைப்படம் இயல்பாகத் தொட்டுச் செல்கிறது. அந்தவகையில், தான் எடுத்துக் கொண்ட கதைக்களத்தை சமூகப் பொறுப்புணர்வுடன் இயக்குநர் கையாண்டிருக்கிறார். இயக்குநர் ராஜா கருப்பசாமி மற்றும் மொதராத்திரி படக்குழுவினர் அனைவருக்கும் பாராட்டுகள்…!
காதல் என்பது உரிமை!
சாதியும் ஆணாதிக்கமும் வேண்டாம்!!
சமத்துவம் வேண்டும்!!!
![]()
அய்யனார்
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram, Threads





