
தமிழ்நாட்டில் உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு தற்போது வருவாய்துறை, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மூலமாக ரூ.1,500 மற்றும் ரூ.2000 மாதாந்திர உதவித்தொகையாக வழங்கப்பட்டு வருகிறது. ஆனால், அத்தியாவசியப் பொருட்களின் விலைவாசி உயர்வு, வேலையில்லா திண்டாட்டம், 100 நாள் வேலை இழப்பு போன்றவற்றால் மாற்றுத்திறனாளிகள் கடுமையான நெருக்கடிக்கு ஆளாகி வருகின்றனர். குறைந்த உதவித்தொகையைக் கொண்டு மாற்றுத்திறனாளிகளால் தங்களது வாழ்க்கையை நடத்த முடியவில்லை.
எனவே அண்டை மாநிலங்களான ஆந்திரா, புதுச்சேரியில் வழங்கப்படுவதைப் போல தங்களுக்கும் உதவித்தொகையை ரூ.6,000-ஆக உயர்த்தி வழங்க வேண்டும், மாதாந்திர உதவித்தொகைக்கு விண்ணப்பித்து காத்துக் கொண்டிருப்பவர்களுக்கு உடனடியாக உதவித்தொகை வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து மாற்றுத்திறனாளிகள் பல ஆண்டுகளாகப் போராடி வருகின்றனர். கடந்த ஆட்சியில் இக்கோரிக்கைகளுக்காக பல கட்ட போராட்டங்களை முன்னெடுத்த மாற்றுத்திறனாளிகளை தி.மு.க. அரசு மனிதாபிமானமற்ற வகையில் கைது செய்து ஒடுக்கியது.
இதனையடுத்து, த.வெ.க. தனது தேர்தல் அறிக்கையில், மாற்றுத்திறனாளிகளின் உதவித்தொகை ரூ.3,000-திலிருந்து ரூ.6,000-ஆக உயர்த்தி வழங்கப்படும் என்று வாக்குறுதியளித்து ஆட்சிக்கு வந்தது. ஆனால், தற்போதுவரை மாற்றுத்திறனாளிகளின் கோரிக்கையை நிறைவேற்றவில்லை.
மாற்றுத்திறனாளிகள் நலத்துறையை தன்னுடைய கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் முதல்வர் விஜய் அவர்களின் வாழ்வாதாரக் கோரிக்கைகளை நிறைவேற்றுவதற்கு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. மேலும் 2026-27-ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையிலும் மானியக் கோரிக்கைகளிலும் உதவித்தொகையை உயர்த்தி வழங்குவதற்கான அறிவிப்பு வெளியாகும் என்று காத்திருந்த மாற்றுத்திறனாளிகளுக்கு ஏமாற்றமே மிஞ்சியது.
இதனையடுத்து, மேற்கண்ட தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த செப்டம்பர் 7 அன்று “தமிழ்நாடு அனைத்துவகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தின்” தலைமையில் மாற்றுத்திறனாளிகள் மாநிலம் முழுவதும் சிறை நிரப்பும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சென்னை, மதுரை, திருச்சி, கன்னியாகுமரி உள்ளிட்டு அனைத்து மாவட்டங்களிலும் மாவட்ட ஆட்சியர் அலுவலக முற்றுகை, இருசக்கர வாகனப் பேரணி என பல்வேறு வடிவங்களில் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆனால் த.வெ.க. அரசு போராட்டத்தில் ஈடுபட்ட மாற்றுத்திறனாளிகளை கைது செய்து அன்று மாலையில் விடுவித்துள்ளது. கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்ற வலியுறுத்தி போராடும் மாற்றுத்திறனாளிகளை விஜய் அரசு போலீசைக் கொண்டு ஒடுக்குவது கண்டனத்திற்குரியதாகும்.
போராட்டத்தில் ஈடுபட்ட மாற்றுத்திறனாளிகள், “முதலமைச்சரின் தற்காலிக அலுவலகம் கட்டுவதற்கும் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு கார் வாங்கி தருவதற்கும் புதிய தலைமைச் செயலகம் கட்டுவதற்கும் மேட்டூரில் தண்ணீர் திறந்து விட சென்றதற்கான பாதுகாப்பிற்கும் நிதி இருக்கிறது. ஆனால் எங்களுக்கான உதவித்தொகையை உயர்த்தி வழங்குவதற்கு நிதி இல்லையா?” என்று கேள்வி எழுப்பியுள்ளனர்.
படிக்க: தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டத்திருத்தம்: ஏழைகளின் வயிற்றில் அடிக்கும் பாசிச மோடி அரசு!
மேலும் மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித்தொகை ஒவ்வொரு மாதமும் 5-ஆம் தேதி அல்லது அதற்கு முன் அவர்களின் வங்கிக்கணக்கில் வரவு வைக்கப்படும். ஆனால், தற்போது 9-ஆம் தேதிக்கு மேலாகியும் பல மாவட்டங்களில் உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு உதவித்தொகை வரவு வைக்கப்படவில்லை என்று ஊடகங்களில் வெளியான செய்திகள் தெரிவிக்கின்றன.
இதனால் தங்கள் வீட்டிற்கான வாடகையையும் மருத்துவச் செலவுகளையும் அன்றாட வாழ்க்கைக்கு தேவையான பொருட்களையும் வாங்க முடியாமல் மாற்றுத்திறனாளிகள் தவித்து வருகின்றனர். ஏற்கனவே உதவித்தொகையை உயர்த்தி வழங்காமல் வஞ்சித்து வருகின்ற த.வெ.க. அரசு, தற்போது மாற்றுத்திறனாளிகளுக்கான மாதாந்திர உதவித்தொகையை தற்போது வரை வழங்காமல் இருப்பது கடும் கண்டனத்திற்குரியதாகும்.
எனவே, அடிப்படை வாழ்வாதாரக் கோரிக்கைகளுக்காகப் போராடும் மாற்றுத்திறனாளிகளின் போராட்டத்திற்கு நாம் அனைவரும் ஆதரவளிக்க வேண்டும்.
![]()
ஆசாத்
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram, Threads










