தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டத்திருத்தம்: ஏழைகளின் வயிற்றில் அடிக்கும் பாசிச மோடி அரசு!

நாட்டு மக்களின் உணவுரிமை பறிக்கப்பட்டு, உணவிற்குப் பன்னாட்டு மற்றும் உள்நாட்டுக் கார்ப்பரேட்டுகளைச் சார்ந்திருக்க வேண்டிய நிலை உருவாகும். உணவின் விலை விண்ணைமுட்டும் அளவிற்கு உயர்ந்து, நாட்டில் பட்டினிச் சாவுகள் அதிகரிக்கும் பேரபாயத்தை மக்கள் எதிர்நோக்கியுள்ளனர்.

ஈரான் மீதான அமெரிக்காவின் போரினால் நம் நாட்டில் காய்கறி மற்றும் உணவுப் பொருட்களின் விலை இதுவரை இல்லாத அளவுக்கு உயர்ந்துள்ளது. அடித்தட்டு ஏழை மக்கள் தாங்கள் உண்ணும் உணவின் அளவைக் குறைத்துக்கொள்ளும் அவலநிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். இவற்றைக் கட்டுப்படுத்துவதற்கு எந்த நடவடிக்கையும் எடுக்காத மோடி அரசு, “தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டம் 2013”-இல் திருத்தத்தை முன்மொழிந்து, நாட்டின் ஏழை மக்களின் உணவுப் பாதுகாப்பின் மீது தாக்குதல் தொடுக்க ஆயத்தமாகியுள்ளது.

கடந்த ஜூன் 24-ஆம் தேதி ஒன்றிய உணவு மற்றும் பொது விநியோகத்துறை “தேசிய உணவுப் பாதுகாப்பு (திருத்த) மசோதா, 2026” வரைவு அறிக்கையைப் பொதுமக்களின் கருத்துக் கேட்பிற்காக வெளியிட்டது. அதில், அந்தியோதயா அன்னயோஜனா (Antyodaya Anna Yojana) திட்டப் பயனாளிகளான வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள மக்களுக்கு வழங்கப்படும் உணவு தானியத்தின் அளவில் திருத்தங்களை கொண்டுவந்துள்ளது. மாதந்தோறும் 35 கிலோ உணவு தானியங்கள் (அரிசி அல்லது கோதுமை) வழங்கப்படும் என்ற விதியை, குடும்பத்தில் ஒருவருக்கு தலா 7 கிலோ உணவு தானியம், அதேசமயத்தில் ஒரு குடும்பத்திற்கு அதிகபட்சமாக 35 கிலோ என்று குறைத்து பாசிச மோடி அரசு திருத்தங்களை முன்மொழிந்துள்ளது.

நடைமுறையிலுள்ள சட்டத்தின்படி, குறைந்த உறுப்பினர் எண்ணிக்கை கொண்ட குடும்பங்களுக்கு அதிகளவிலான உணவு தானியங்களும், அதிக உறுப்பினர் எண்ணிக்கை கொண்ட குடும்பங்களுக்கு குறைந்த அளவிலான உணவு தானியங்களும் கிடைப்பதாகக் கூறி இத்திருத்தத்தை மோடி அரசு நியாயப்படுத்துகிறது. ஆனால், மோடி அரசின் இந்த வாதமும் அது கொண்டுவந்திருக்கும் திருத்தமும் முற்றிலும் முரண்பாடானதாகும்.

“நபர் ஒன்றுக்கு 7 கிலோ” என்ற வரையறையால் சிறிய குடும்பங்களுக்குக் கிடைக்கும் உணவு தானியங்களின் அளவு குறைகிறது; அதேசமயம் பெரிய குடும்பங்களுக்கும் 35 கிலோவுக்கு மேல் கிடைக்காமல் முடக்கப்படுகிறது. இதன் மூலம் அனைத்து ஏழை மக்களுமே தானியப் பறிப்பை எதிர்கொள்கின்றனர்.

இதன் மூலம், ஒருவேளையாவது கஞ்சி குடிப்பதற்காக அந்தியோதயா அன்னயோஜனா திட்டத்தின் மூலம் வழங்கப்படும் உணவு தானியங்களை நம்பியிருந்த வறுமைக் கோட்டிற்கு கீழுள்ள வறிய ஏழை மக்கள், மாற்றுத்திறனாளிகள், முதியவர்கள், கைம்பெண்கள் உள்ளிட்டோர் மீது பாசிச தாக்குதலை தொடுத்துள்ளது.

மேலும், மோடி-அமித்ஷா கும்பலின் 12 ஆண்டுகால பாசிச பேயாட்சியில் உணவு தானியங்களின் பொது விநியோகத் திட்டம் மற்றும் பொதுக் கொள்முதலை ஒழித்துக்கட்டி, விதை – விவசாயம் – உணவு சங்கிலியில் அமெரிக்க மற்றும் அம்பானி-அதானி கார்ப்பரேட் கும்பல்களின் ஆதிக்கத்தை நிலைநாட்டும் போக்கு தீவிரமடைந்துள்ளது. இதன் தொடர்ச்சியாகவே இச்சட்டத்திருத்தத்தையும் பாசிச கும்பல் கொண்டுவந்துள்ளது.

ஏழைகளின் வயிற்றில் அடிக்கும்
பாசிச சட்டத்திருத்தம்

இந்தியாவில் பொது விநியோக முறை (Public Distribution System) ஒன்றிய, மாநில அரசுகளின் கூட்டுப் பொறுப்பின் கீழ் செயல்படுத்தப்படுகிறது. ஒன்றிய அரசு இந்திய உணவுக் கழகம் (FCI) மூலம் உணவு தானியங்களைக் கொள்முதல் செய்தல், சேமித்தல், மாநிலங்களுக்கு ஒதுக்கீடு செய்தல் உள்ளிட்ட பணிகளைச் செய்கிறது. மாநில அரசுகள் தகுதியுள்ள குடும்பங்களைக் கண்டறிதல், ரேசன் அட்டைகளை வழங்குதல், ரேசன் கடைகளின் செயல்பாடுகளை மேற்பார்வையிடுதல் உள்ளிட்ட பணிகளைச் செய்கின்றன.

பொது விநியோகத் திட்டப் பயனாளர்கள் அந்தியோதயா அன்னயோஜனா அட்டைதாரர்கள், முன்னுரிமை அட்டைதாரர்கள் (PHH), முன்னுரிமையற்ற அட்டைதாரர்கள் (NPHH) என வகைப்படுத்தப்பட்டுள்ளனர். அவற்றில் அந்தியோதயா அன்னயோஜனா மற்றும் முன்னுரிமை அட்டைதாரர்களுக்கு வழங்கப்படும் உணவு தானியங்கள் (அரிசி அல்லது கோதுமை), ஒன்றிய அரசால் பிரதான் மந்திரி கரீப் கல்யாண் அன்ன யோஜனா (PMGKAY) திட்டத்தின் கீழ் 2028-ஆம் ஆண்டு வரை இலவசமாக வழங்கப்படுகிறது. முன்னுரிமை அட்டைதாரர்களுக்கு ஒரு நபருக்கு 5 கிலோ என்ற அளவில் உணவு தானியங்கள் வழங்கப்படுகின்றன. மாநிலங்கள் அல்லது குறிப்பிட்ட பகுதிகளைப் பொறுத்து குடும்பத்திற்கான அதிகபட்ச அளவு (20 கிலோ) வேறுபடுகிறது.

தற்போது, தேசிய உணவுப் பாதுகாப்பு (திருத்த) மசோதாவில் அந்தியோதயா அன்னயோஜனா திட்டப் பயனாளிகளுக்கு வழங்கப்படும் உணவு தானியங்களின் அளவை மோடி அரசு குறைத்துள்ளது. இதன் விளைவாக, இந்தியா முழுவதும் இலட்சக்கணக்கான டன் உணவு தானியங்களின் விநியோகம் குறைக்கப்பட்டு, கோடிக்கணக்கான மக்கள் பாதிக்கப்படும் அபாயம் எழுந்துள்ளது. தமிழ்நாட்டில் மட்டும் உணவு தானியங்களின் மாதாந்திர ஒதுக்கீடு 65,261 டன்களிலிருந்து 42,040 டன்களாகக் குறைக்கப்படும். அத்திட்டத்தைச் சார்ந்துள்ள 70 இலட்சம் மக்கள் இதனால் பாதிக்கப்படுவர்.

குறிப்பாக, இத்திருத்த மசோதா சட்டமாக்கப்பட்டால் குடும்பக் கட்டுப்பாட்டை தீவிரமாக அமல்படுத்திய தமிழ்நாடு, கேரளம் உள்ளிட்ட தென்னிந்திய மாநிலங்கள் மிக மோசமாகப் பாதிக்கப்படும். தமிழ்நாட்டில் உள்ள 18.64 இலட்சம் அந்தியோதயா அன்னயோஜனா பயனாளர்களில் 15.75 லட்சம் பயனாளர்கள் 5-க்கும் குறைவான குடும்ப உறுப்பினர்களைக் கொண்டவர்கள் ஆவர்.

மேலும், இம்மசோதாவில் ஒரு நபருக்கு 7 கிலோ உணவு தானியங்கள் என்ற வரம்பை நிர்ணயிப்பதற்காக இந்திய மருத்துவ ஆராய்ச்சி மன்றத்தின் (ICMR) பரிந்துரைகளில் பாசிச மோடி அரசு திருத்தம் செய்துள்ளது. ஒரு நபருக்குச் சராசரியாக ஒரு நாளைக்கு 400 கிராம் உணவு தானியங்கள் தேவை என்ற பரிந்துரையை 250 கிராம் என்று குறைத்துள்ளது. இதற்கு மக்கள் உணவில் அரிசி, கோதுமைக்குப் பதிலாக புரதம், கொழுப்பு, பருப்பு வகை உணவுகளைச் சேர்த்துக்கொள்ள வேண்டும் என்று காரணம் கூறுகிறது.

ஆனால், அந்தியோதயா திட்டத்தைச் சார்ந்திருப்பவர்கள் மிகவும் வறியவர்கள்; உடலுழைப்பை மட்டுமே நம்பியிருப்பவர்கள். கொழுப்பு, புரத உணவுகளை வாங்கி உண்ணும் நிலையில் அவர்கள் இல்லை. இத்திட்டத்தின் மூலம் வழங்கப்படும் உணவு தானியங்களைக் கொண்டே அம்மக்கள் வயிற்றைக் கழுவிக்கொண்டிருக்கிறார்கள் என்பதை அறிந்திருந்தும், அவர்களுக்கு வழங்கப்படும் உணவு தானியங்களின் அளவைக் குறைத்து ஈவிரக்கமின்றி மோடி அரசு செயல்படுகிறது.

அதேபோல, அந்தியோதயா திட்டத்தில் வழங்கப்படும் உணவு தானியங்களின் அளவை அதிகரிக்க வேண்டும் என்ற மக்களின் கோரிக்கைக்கு மாறாக அளவைக் குறைத்திருப்பது உணவு தானியங்களைப் படிப்படியாகக் குறைத்து பொது விநியோகத் திட்டத்தை ஒழித்துக்கட்ட வேண்டும் என்ற நோக்கத்தில் மோடி அரசு செயல்பட்டு வருவதை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது.

மேலும், கடந்த 2025-ஆம் ஆண்டு வெளியான ஐ.நா. அறிக்கையில், இந்தியாவில் ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளில் 18.7 சதவிகிதம் பேர் ஊட்டச்சத்து குறைபாட்டால் பாதிக்கப்பட்டுள்ளனர்; 3.7 கோடி குழந்தைகள் வளர்ச்சி குன்றியவர்களாக உள்ளனர்; பெண்களில் பாதிக்கும் மேற்பட்டோர் இரத்த சோகையால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று அதிர்ச்சியூட்டும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்நிலையில் இம்மசோதா சட்டமாக்கப்பட்டால் இப்பாதிப்பு மேலும் தீவிரமடையும்.

ரேசன் கடைகளை ஒழிப்பதே
மோடி அரசின் இலக்கு

இந்தியாவில் மறுகாலனியாக்கக் கொள்கைகள் அமல்படுத்தப்படுவதற்கு முன்பாக, பல குறைபாடுகள் இருந்தாலும் “அனைவருக்குமான பொது விநியோகத் திட்டம்” (UPDS) நடைமுறையில் இருந்தது. அது மக்களைப் பொருளாதார ரீதியாக வகைப்படுத்தாமல் அனைவருக்கும் உணவு தானியங்களை மானிய விலையில் வழங்கியது. ஆனால் 1990-களின் இறுதியில் அமல்படுத்தப்பட்ட “இலக்கு நோக்கிய பொது விநியோகத் திட்டம்” (TPDS) மற்றும் 2013-இல் கொண்டுவரப்பட்ட “தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டம்” ஆகியவை மக்களை வகைப்படுத்தி, உணவு மானியத்தைக் குறைக்கும் நோக்கத்திலேயே அமல்படுத்தப்பட்டன.

அதன் தொடர்ச்சியாகவே, அந்தியோதயா அன்னயோஜனா திட்டப் பயனாளிகளின் தானிய அளவைக் குறைத்து, தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டத்தில் பாசிச மோடி அரசு திருத்தங்களை மேற்கொண்டுள்ளது.

தற்போதைய உணவுப் பாதுகாப்புச் சட்டம், 2011 மக்கள்தொகைக் கணக்கெடுப்பின் அடிப்படையிலேயே செயல்படுத்தப்படுகிறது. இதன் விளைவாக, 2021-ஆம் ஆண்டின் மதிப்பீட்டின்படி, பொது விநியோகத் திட்டத்திலிருந்து 10 கோடிக்கும் அதிகமான மக்கள் விலக்கப்பட்டுள்ளதைச் சமூகப் பொருளாதார வல்லுநர்களான ரீத்திகா கேரா, ஜீன் டிரேஸ், மேகனா முங்கிகர் ஆகியோர் கண்டறிந்துள்ளனர். தற்போதைய மக்கள்தொகைக்கு ஏற்ப திட்ட வரம்பை விரிவுபடுத்திப் பயனாளிகளின் தரவுத்தளத்தைப் புதுப்பிக்கும் நீண்ட நாள் கோரிக்கையை மோடி அரசு நிறைவேற்ற மறுப்பது, பொது விநியோகத் திட்டத்தைப் படிப்படியாக ஒழித்துக்கட்டும் சதித்திட்டமே ஆகும்.

மேலும், தகுதியற்ற போலிப் பயனாளர்களை நீக்குவது என்ற பெயரில் ஆண்டுதோறும் இலட்சக்கணக்கான ரேசன் அட்டைகள் நீக்கப்படுகின்றன. குறிப்பாக, பா.ஜ.க. ஆளும் மாநில அரசுகள் உரிய காரணங்களின்றி நீக்கங்களை மேற்கொள்கின்றன. 2013 முதல் 2021 வரை 4.74 கோடி ரேசன் அட்டைகள் நீக்கப்பட்டிருப்பதாக ஒன்றிய அரசு உச்ச நீதிமன்றத்தில் சமர்ப்பித்த தரவு கூறுகிறது. இதில் உத்தரப்பிரதேசத்தில் மட்டும் 1.73 கோடி அட்டைகள் நீக்கப்பட்டுள்ளன.

அதேபோல, அந்தியோதயா அன்னயோஜனா திட்டத்திற்கு ஒதுக்கப்பட்ட அளவை விடக் குறைவான தானியங்களே மாநிலங்களுக்கு வழங்கப்படுகின்றன. சான்றாக, தமிழ்நாட்டிற்கு 2024-2025 நிதியாண்டில் ஒதுக்கப்பட்ட 7,38,492 டன் உணவு தானியங்களுக்குப் பதிலாக 5,85,126 டன் மட்டுமே வழங்கப்பட்டது. மறுபுறம், இந்திய உணவுக் கழகத்தின் (FCI) கிடங்குகளில் உள்ள இலட்சக்கணக்கான டன் தானியங்களைத் திறந்த சந்தை விற்பனைத் திட்டத்தின் (OMSS) மூலம் ஏலம் விட்டு, தனியாருக்கும் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கும் மலிவு விலையில் மோடி அரசு வாரி வழங்குகிறது.

மேலும், திறந்த சந்தை விற்பனைத் திட்டத்தில் ஏலமின்றி மாநில அரசுகளுக்குத் தானியம் விற்பனை செய்யும் முறையை 2023-இல் மோடி அரசு நிறுத்தியது. இதனால், முன்னுரிமையற்ற அட்டைதாரர்களுக்கான திட்டங்களுக்கு மாநில அரசுகள் சந்தையில் கூடுதல் விலை கொடுத்துத் தானியங்களைக் கொள்முதல் செய்ய வேண்டியுள்ளது.

அதாவது, மாநில அரசுகளுக்கு கூடுதல் நிதிச்சுமையை ஏற்படுத்தி, அவை ரேசன் கடைகளில் செயல்படுத்திவரும் நலத்திட்டங்களை ஒழித்துக்கட்ட வேண்டும் என்பதே ஓ.எம்.எஸ்.எஸ். கீழ் மாநிலங்களுக்கு உணவு தானியங்கள் மறுக்கப்பட்டிருப்பதன் பின்னுள்ள மோடி அரசின் சதித்திட்டமாகும்.

இதற்கெல்லாம் உச்சமாக, ரேசன் கடைகளில் தானியம் வழங்குவதை நிறுத்திவிட்டு அதற்கான மானியத்தை வங்கிக் கணக்கில் செலுத்தும் நேரடிப் பணப் பரிமாற்ற (DBT) முறையைத் திணிக்க மோடி அரசு முயல்கிறது. 2015 முதல் சண்டிகரிலும், பின்னர் புதுச்சேரியிலும் இம்முறை நடைமுறைப்படுத்தப்பட்டது. புதுச்சேரியில் மக்கள் எதிர்ப்பினால் மீண்டும் ரேசன் கடைகள் மூலமே உணவு தானியங்கள் விநியோகிக்கப்படுகின்றன.

இவ்வாறு நேரடிப் பணப் பரிமாற்ற முறை படிப்படியாக அனைத்து மாநிலங்களுக்கும் விரிவுபடுத்தப்படும் போது, அரசிற்கு ரேசன் கடைகளை நடத்த வேண்டிய அவசியம் இருக்காது. விவசாயிகளிடம் உணவு தானியங்களை கொள்முதல் செய்ய வேண்டிய தேவையும் இருக்காது. இம்முறை மூலம் வழங்கப்படும் மானியத் தொகையும், எரிவாயு உருளைக்கான மானியம் போல படிப்படியாக குறைக்கப்பட்டு நிறுத்தப்படும்.

மேலும், நாடு முழுவதும் எஸ்.ஐ.ஆர். மூலம் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்படும் கோடிக்கணக்கான மக்களுக்கு ரேசன் தானியங்கள் நிறுத்தப்படும் அபாயம் உள்ளது. எஸ்.ஐ.ஆர். பட்டியலில் இல்லாதவர்களுக்கு அரசின் சலுகைகள் கிடையாது என மேற்கு வங்கம், பீகாரின் பா.ஜ.க. அரசுகள் அறிவித்துள்ளன. கடந்த ஜூன் மாதத்திலிருந்து எஸ்.ஐ.ஆர். முடிவுகளின் அடிப்படையில் பொதுவிநியோகத் திட்டப் பயனாளிகளின் தகுதியைச் சரிபார்க்கும் நடவடிக்கைகளில் மேற்குவங்க பா.ஜ.க. அரசு ஈடுபட்டு வருகிறது.

டிஜிட்டல்மயமாக்கத்தின்
பின்னுள்ள அபாயம்!

இந்தியா முழுவதும் உள்ள பொது விநியோக முறையை மோடி அரசு டிஜிட்டல்மயமாக்கியுள்ளது. ஒன்றிய அரசின் தரவுகளின்படி, அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களிலும் ரேசன் அட்டைகள் மற்றும் பயனாளர்களின் தரவுத்தளம் 100 சதவிகிதம் டிஜிட்டல்மயமாக்கப்பட்டுள்ளன. நாட்டிலுள்ள 99.9 சதவிகிதம் ரேசன் அட்டைகளுடன் பயனாளர்களின் ஆதார் விவரங்கள் இணைக்கப்பட்டுள்ளன. பயோமெட்ரிக் விவரங்களைச் சரிபார்க்கும் இ-பி.ஓ.எஸ். (e-POS) கருவிகள் 99.6 சதவிகிதம் கடைகளில் நிறுவப்பட்டுள்ளன.

இதற்காக, பொது விநியோகத் திட்டப் பயனாளர்கள் அனைவரும் கட்டாய மின்னணு வாடிக்கையாளர் தகவல் செயல்முறையை (e-KYC) மேற்கொள்ள வேண்டும் என்பதை 2025-ஆம் ஆண்டிலிருந்து மோடி அரசு கட்டாயமாக்கியது. ராஜஸ்தான் உள்ளிட்ட சில மாநிலங்களில் இது 2025-க்கு முன்பிருந்தே நடைமுறைப்படுத்தப்பட்டது. இந்தச் செயல்முறைக்கு ரேசன் அட்டையில் பட்டியலிடப்பட்டுள்ள ஒவ்வொரு உறுப்பினரும் ரேசன் கடைக்கு நேரில் சென்று கைரேகை மற்றும் ஆதாரைப் பயன்படுத்தித் தங்களது அடையாளத்தை உறுதிப்படுத்த வேண்டும்; அவ்வாறு செய்ய இயலாதவர்கள் ரேசன் அட்டையிலிருந்து நீக்கப்படுவர்.

குறிப்பாக, முதியவர்கள், உடல் உழைப்பை மேற்கொள்பவர்களின் கைரேகையைப் பதிவு செய்ய முடியாததால் ரேசன் அட்டைகள் நீக்கப்பட்ட கொடூரங்கள் இந்தியா முழுவதும் நிகழ்ந்துள்ளன. 2025-ஆம் ஆண்டில் மட்டும் இந்தியா முழுவதும் 41 லட்சம் ரேசன் அட்டைகள் இ-கே.ஒய்.சி. (e-KYC) முறையை நிறைவு செய்யாததால் போலியானவை எனக் கூறி நீக்கப்பட்டுள்ளன. இவ்வாறு பொது விநியோகத் திட்ட டிஜிட்டல்மயமாக்கம் உழைக்கும் மக்களுக்கு விரோதமாகவே அமைந்துள்ளது.

மேலும், இந்த டிஜிட்டல்மயமாக்கல் நடவடிக்கைகள் மூலம் பெரும் தரவுச் சேகரிப்பு நடைபெறுகிறது. இத்தரவுகளை வைத்துப் பொது விநியோகத் திட்டத்தைப் படிப்படியாக ஒழித்துக்கட்டுவது மற்றும் கார்ப்பரேட் ஆதிக்கத்தை நிறுவுவதற்கான திட்டங்களை எளிதாக நடைமுறைப்படுத்துவது என்ற நோக்கத்திலிருந்தே இத்தரவு சேகரிப்பு நடைபெறுகிறது.

ஒழித்துக்கட்டப்படும்
பொதுக் கொள்முதல் முறை

தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் குறைந்தபட்ச ஆதரவு விலையின் (MSP) அடிப்படையில் நாடு முழுவதும் உள்ள விவசாயிகளிடமிருந்து உணவு தானியங்கள் ஒன்றிய அரசால் பொதுக் கொள்முதல் செய்யப்படுகின்றன. விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யப்படும் தானியங்களின் அளவைக் குறைப்பது, பொதுக் கொள்முதல் கட்டமைப்பைத் திட்டமிட்டுச் சீரழிப்பது மற்றும் கார்ப்பரேட்மயமாக்குவது ஆகியவற்றின் மூலம் பொதுக் கொள்முதல் முறையைப் படிப்படியாக மோடி அரசு ஒழித்துக்கட்டி வருகிறது.

கடந்த மார்ச் மாதத்தில் நாடாளுமன்றத்தில் நுகர்வோர் விவகாரங்கள், உணவு மற்றும் பொது விநியோகத்திற்கான நாடாளுமன்ற நிலைக்குழு, பீகார், பஞ்சாப், உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட பல மாநிலங்களில் அரிசி மற்றும் கோதுமை திட்டமிடப்பட்டதை விடக் குறைவான அளவே கொள்முதல் செய்யப்படுவதை அம்பலப்படுத்தியுள்ளது. 2023-2024, 2024-2025 ஆண்டுகளுக்கான மதிப்பீட்டில் கோதுமையின் உண்மையான கொள்முதல் முறையே 76.71 சதவிகிதம், 71.35 சதவிகிதமாக மட்டுமே இருந்துள்ளது என்று அக்குழு கூறியுள்ளது.

இந்தப் பொதுக் கொள்முதல் நடைமுறையும் சிறு, குறு, நடுத்தர விவசாயிகளுக்குச் சாதகமாக இல்லை. அவ்விவசாயிகள் தனியார் மண்டி முதலாளிகளின் பிடியில் சிக்கித் தவிக்கின்றனர்; அரசு நிர்ணயிக்கும் குறைந்தபட்ச விலையை விடக் குறைவான விலைக்குத் தங்களுடைய தானியங்களைத் தனியார் மண்டிகளிடம் விற்பனை செய்யும் அவலநிலையில் உள்ளனர்.

மேலும், விவசாயிகள் விளைவிக்கும் பொருட்களுக்கு உற்பத்திச் செலவிற்கு அதிகமாக (குறைந்தபட்சம் 50 சதவிகிதத்திற்கு) குறைந்தபட்ச ஆதார விலையை நிர்ணயித்து அரசு கொள்முதல் செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி விவசாயிகள் நீண்ட, தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இருப்பினும் அதனை மோடி அரசு ஏற்க மறுப்பதன் பின்னணியில், பொதுக் கொள்முதலை ஒழித்து விவசாயத்தில் கார்ப்பரேட்டுகளின் ஆதிக்கத்தை நிறுவ வேண்டும் என்ற நோக்கமே உள்ளது.

அதேபோல, விவசாயிகளின் வீரஞ்செறிந்த போராட்டத்தால் மூன்று வேளாண் சட்டங்கள் அமல்படுத்தப்படுவது தடுத்து நிறுத்தப்பட்ட போதிலும், விவசாயத்தைக் கார்ப்பரேட்மயமாக்குவதற்கான கூறுகளை மோடி அரசு மறைமுகமாக அமல்படுத்தி வருகிறது. சான்றாக, கடந்த ஜூன் மாதத்தில் இந்திய உணவுக் கழகத்தின் (FCI) உணவு தானியச் சேமிப்புக் கிடங்குகளை எஃகு சிலோ (Steel Silo) சேமிப்புக் கிடங்குகளாக நவீனமயமாக்கும் திட்டத்தின்கீழ் அதானி மற்றும் லீப் இந்தியா ஆகிய இரு நிறுவனங்களுக்கு 110 தானியச் சேமிப்புக் கிடங்குகளுக்கான ஒப்பந்தங்கள் வழங்கப்பட்டுள்ளன.

அதாவது, பொதுக் கொள்முதலைத் திட்டமிட்டுக் குறைத்து வரும் மோடி அரசு, மறுபுறம் இந்திய உணவுக் கழகத்தில் அம்பானி-அதானி கார்ப்பரேட் கும்பல்களின் ஆதிக்கத்தை நிறுவிக்கொண்டிருக்கிறது.

இந்திய உணவு சந்தையைக் கைப்பற்றத் துடிக்கும்
அமெரிக்கக் கார்ப்பரேட்டுகள்

கடந்த 2025-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் மோடி அரசு அமெரிக்காவுடன் “காம்பாக்ட்” திட்டத்தில் இணைந்துள்ளது. இத்திட்டத்தில், 2030-ஆம் ஆண்டுக்குள் இருதரப்பு வர்த்தகத்தை 500 பில்லியன் டாலராக உயர்த்துவது என்ற இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதன்படியே இரு நாடுகளும் வர்த்தக ஒப்பந்தப் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றன. அதில் விவசாயம் மற்றும் பால் பொருட்களுக்கான சந்தையை அமெரிக்கக் கார்ப்பரேட்டுகளுக்குத் திறந்துவிடக் கோரி அமெரிக்க அரசு நிர்பந்திக்கிறது. இந்தியாவில் பருத்திக்கான இறக்குமதி வரி ரத்து செய்யப்பட்டதும் அமெரிக்க நிர்பந்தத்தாலேயே ஆகும்.

தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டத் திருத்த மசோதாவிற்கு முன்னர், மோடி அரசால் கடந்த ஆண்டு நவம்பரில் கருத்துக்கேட்புக்காக வெளியிடப்பட்ட “விதைகள் மசோதா”வும் விதைகள் மீது விவசாயிகளுக்கு இருக்கும் உரிமைகளைப் பறித்து, விதைச் சந்தையில் அமெரிக்கக் கார்ப்பரேட்டுகளின் ஆதிக்கத்தை நிறுவுவதற்கே கொண்டுவரப்பட்டது. இவ்வாறு, விதை-விவசாயம்-உணவுச் சங்கிலியில் அமெரிக்கக் கார்ப்பரேட்டுகளின் ஆதிக்கத்தை நிறுவும் நோக்கத்திலேயே பாசிச மோடி அரசு செயல்பட்டு வருகிறது. மேலும், இச்சங்கிலியில் அமெரிக்கக் கார்ப்பரேட்டுகளின் ஆதிக்கம் நிலைநாட்டப்படுவதன் மூலம் அம்பானி-அதானி வகையறா கார்ப்பரேட் கும்பல்களும் பயனடையும்; வரும் காலங்களில் ஆதிக்கம் செலுத்துவதற்கான நடவடிக்கையிலும் அக்கும்பல் ஈடுபடும்.

இதன் விளைவாக, நாட்டு மக்களின் உணவுரிமை பறிக்கப்பட்டு, உணவிற்குப் பன்னாட்டு மற்றும் உள்நாட்டுக் கார்ப்பரேட்டுகளைச் சார்ந்திருக்க வேண்டிய நிலை உருவாகும். உணவின் விலை விண்ணைமுட்டும் அளவிற்கு உயர்ந்து, நாட்டில் பட்டினிச் சாவுகள் அதிகரிக்கும் பேரபாயத்தை மக்கள் எதிர்நோக்கியுள்ளனர்.

எனவே, விதை-விவசாயம்-உணவுச் சங்கிலியில் கார்ப்பரேட்டுகளின் ஆதிக்கத்தை நிலைநாட்டுவதற்கான மோடி அரசின் நடவடிக்கைகள் உடனடியாகத் தடுத்து நிறுத்தப்பட வேண்டும். இந்திய விவசாயச் சந்தையை அமெரிக்கக் கார்ப்பரேட்டுகளுக்குத் திறந்துவிடும் வர்த்தக ஒப்பந்தத்திற்கு எதிராக இந்திய விவசாயிகள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த ஜூலை 20-ஆம் தேதி பஞ்சாப் – ஹரியானா எல்லைகளில் ஆயிரக்கணக்கான விவசாயிகள் ஒன்றுகூடி டெல்லியை நோக்கிய போராட்டத்தை நடத்தினர். விவசாயிகளின் எதிர்ப்பினாலேயே, கருத்துக்கேட்புக் காலம் டிசம்பருடன் முடிந்தபோதிலும் விதைகள் மசோதாவை மோடி அரசு நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யாமல் உள்ளது.

ஆகவே, விதை-விவசாயம்-உணவுச் சங்கிலியில் அமெரிக்க மற்றும் உள்நாட்டுக் கார்ப்பரேட்டுகளின் ஆதிக்கம் நிலைநாட்டப்படுவதால் ஏற்படவிருக்கும் பேரபாயத்தைப் புரட்சிகர, ஜனநாயக சக்திகள் மக்களுக்கு உணர்த்த வேண்டும். அமெரிக்க வர்த்தக ஒப்பந்தத்திற்கு எதிரான போராட்டங்களில் பிற வர்க்கங்களையும் பங்கேற்கச் செய்து, அதனை நீட் தேர்வு மோசடிகளுக்கு எதிரான மாணவர்கள் போராட்டங்களைப் போன்று நாடு தழுவிய மக்கள் போராட்டமாக வளர்த்தெடுக்க வேண்டும். அப்போராட்டங்கள் மூலமே நாட்டு மக்களின் உணவுரிமையைப் பாதுகாக்க முடியும்.

***

பெட்டிச் செய்தி:

எத்தனால் ஆலை கட்டுமானத்தை தடுத்து நிறுத்திய
விவசாயிகள் போராட்டம்!

ராஜஸ்தான் மாநிலம் ஹனுமன்கர் மாவட்டம், ரதிகேடா கிராமத்தில் ஆசியாவின் மிகப்பெரிய எத்தனால் ஆலையை அமைக்க “டூன் எத்தனால் பிரைவேட் லிமிடெட்” நிறுவனம் 2024-இல் கட்டுமானப் பணிகளைத் தொடங்கியது. ஆழ்துளைக் கிணறுப் பாசனத்தைச் சார்ந்து விவசாயம் செய்யும் அப்பகுதி விவசாயிகள், எத்தனால் ஆலையால் விவசாயமும் சுற்றுச்சூழலும் பாழாகும் என அஞ்சிப் போராட்டத்தில் இறங்கினர். பஞ்சாப், ஹரியானா விவசாயிகளும் இதில் பங்கேற்றனர். அரசின் அடக்குமுறைகளையும் மீறி விவசாயிகள் நடத்திய உறுதியான போராட்டத்தால், டிசம்பர் 2025-இல் ஆலையின் கட்டுமானப் பணிகள் நிறுத்தப்பட்டன. இந்த ஆலை மத்தியப் பிரதேசத்திற்கு மாற்றப்பட உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

டூன் நிறுவனம் இப்பகுதியில் அரிசி மற்றும் மக்காச்சோளத்தைக் கொண்டு எத்தனால் தயாரிக்கத் திட்டமிடப்பட்டிருந்தது. இந்தியாவில் பல மாநிலங்களில் அரிசி மூலம் எத்தனால் தயாரிக்கும் ஆலைகள் இயங்கி வருகின்றன. “தேசிய உயிரி எரிபொருள் கொள்கை 2018”-இன் படி, இந்திய உணவுக் கழகத்திடம் (FCI) உள்ள ‘உபரி’ உணவுத் தானியங்களை எத்தனால் தயாரிப்பிற்குப் பயன்படுத்த மோடி அரசு அனுமதி அளித்துள்ளது.

ஒருபுறம் உணவு பாதுகாப்புச் சட்டத்தில் திருத்தம் செய்து மக்களின் உணவு உரிமையைப் பறிக்கும் பாசிச மோடி அரசு, மறுபுறம் உணவுத் தானியங்களை எரிபொருள் தயாரிப்பிற்குத் திருப்பிவிடுகிறது. 2025-26 நிதியாண்டில் (ஜூன் 2026 வரை) மட்டும் 68 லட்சம் டன் மக்காச்சோளமும் 38 லட்சம் டன் அரிசியும் எத்தனால் உற்பத்திக்குப் பயன்படுத்தப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

2030-க்குள் பெட்ரோலில் 30 சதவிகிதம் எத்தனால் கலக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதால், எதிர்காலத்தில் லட்சக்கணக்கான டன் உணவுத் தானியங்கள் எத்தனால் தயாரிப்பிற்கு திருப்பிவிடப்படும். எனவே, மக்களின் உணவு உரிமை, வாழ்வாதாரம் மற்றும் சுற்றுச்சூழலைப் பாதுகாக்க மோடி அரசின் இக்கொள்கைக்கு எதிராகப் போராட வேண்டியது அவசியமாகும்.


அமீர்

(புதிய ஜனநாயகம் – ஆகஸ்ட் 2026 இதழ்)

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram, Threads



விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க