காஞ்சிபுரம் மாவட்டம், சிங்காடிவாக்கம் ஊராட்சி, இருளர் சமூகத்தைச் சேர்ந்தவர் ஆனந்தன் (40). இவரது மனைவி தேன்மொழி (35). இவர்கள் தங்களின் வேலைக்காக ஆறுமுகம் என்ற விறகு வியாபாரியிடம் முன்பணமாக ரூ.20,000 பெற்றுள்ளனர். அதற்காக அரக்கோணம் சாலையில் உள்ள வெள்ளை கேட்டில், வியாபாரி போட்டுக் கொடுத்த தார்ப்பாய் கொட்டகையில் கடந்த ஆறு மாதங்களாக தங்கி கொத்தடிமைகளாக வேலை செய்து வந்துள்ளனர். இவர்களின் திருமணமான மகள் காவியா -மருமகன் முத்து ஆகியோரும் இவர்களோடு தங்கி வேலை செய்து வந்துள்ளது இன்னும் கொடூரமானதாகும்.
இந்நிலையில் ஒன்பது மாத நிறை கர்ப்பிணியாக இருந்த தேன்மொழிக்கு செப்டம்பர் 8 அன்று திடீரெனக் கடுமையான பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. ஆனந்தன் தேன்மொழியை மருத்துவமனைக்கு அழைத்து செல்வதற்கு முயன்றுள்ளார். இதனை அறிந்த ஆறுமுகம் “வாங்கிய கடனைக் கொடுக்காமல் மரம் வெட்டும் இடத்தில் இருந்து செல்லக் கூடாது” எனத் துளியும் இறக்கமின்றி அவர்களை மருத்துவமனைக்குச் செல்ல விடாமல் தடுத்து நிறுத்தியுள்ளான். வேறு வழியின்றி வயிற்று வலியில் துடித்த தனது மனைவிக்கு விளக்கெண்ணெய் தடவிவிட்டு ஆனந்தன் வேலைக்குச் சென்றுள்ளார்.
மருத்துவ உதவி கிடைக்காமல் தன்னந்தனியே இருந்த தேன்மொழிக்கு, தார்ப்பாய் கொட்டகையிலேயே பிரசவம் ஆகத் தொடங்கியது. அப்போது, குழந்தையின் உடல் பாதி வெளியே வந்த நிலையில், தீவிர வலி மற்றும் அதிக ரத்தப்போக்கால் துடித்த தேன்மொழியும் அவரது பச்சிளம் குழந்தையும் சம்பவ இடத்திலேயே துடிதுடித்துப் பரிதாபமாக உயிரிழந்தனர். இக்கொடூரம் தமிழ்நாட்டு மக்களின் நெஞ்சங்களை உலுக்கியுள்ளது.
மாலை 4.00 மணியளவில் அங்கு வந்த உரிமையாளர் ஆறுமுகம், தன்னால் தாயும் சேயும் கொல்லப்பட்டதை மறைக்க, இது இயற்கை மரணம் என்று கூறி, படிப்பறிவில்லாத ஆனந்தனிடம் வெறும் ரூ.2,000 பணத்தைக் கொடுத்து, உடலை சிங்காடிவாக்கம் இருளர் குடியிருப்புக்கு அனுப்பி வைத்துள்ளான்.
மறுநாள் இதுதொடர்பாக ஆனந்தன் பொன்னேரிகரை போலீசில் புகார் அளித்துள்ளார். ஆனால் போலீசு உடனடியாக வழக்கு பதிவு செய்யாமல் சாதிவெறியுடன் குற்றவாளிக்கு ஆதரவாகச் செயல்பட்டுள்ளது. பின்னர் காஞ்சி மக்கள் மன்றம், வி.சி.க-வினர், ஊர் மக்கள் பொன்னேரிகரை போலீசு நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதன் பிறகே ஆறுமுகத்தின் மீது பட்டியல் சாதியினர் மற்றும் பழங்குடியினர் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால், கொத்தடிமை முறை ஒழிப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யவில்லை. தற்போது வரை கொலைகாரன் ஆறுமுகம் கைது செய்யப்பட்டதாக செய்திகள் வெளியாகவில்லை.
நிறைமாத கர்ப்பிணி பெண் பிரசவ வலியில் துடித்த போது, வெறும் ரூ.20,000 கடனுக்காக அவரை மருத்துவமனைக்கு செல்லவிடாமல் தடுத்தது மிக மிகக் கொடூரமானதுமாகும். பழங்குடியின மக்களின் வறுமையையும் கல்வியறிவின்மையையும் பயன்படுத்திக்கொண்டு அவர்களை கடன் மற்றும் உழைப்புச் சுரண்டலுக்குள் தள்ளுகின்ற கொடூர நடைமுறைகளுக்கு இச்சம்பவம் மற்றொரு எடுத்துக்காட்டாகும்.
படிக்க: தருமபுரி : வனத்துறை அதிகாரிகளால் பறிக்கப்படும் பன்னப்பட்டி இருளர் பழங்குடி மக்களின் வாழ்வுரிமை
கடந்த மே மாதம் திருவாரூர் மாவட்டம் வன்னிப்பாக்கம் கிராமத்தில் உள்ள செங்கல் சூலையில் கொத்தடிமைகளாக வேலை செய்து வந்த ஒடிசா மாநிலத்தின் பாலங்கீர் மாவட்டத்தைச் சேர்ந்த சிறுவன் உட்பட 39 தொழிலாளர்கள் மீட்கப்பட்டனர். இதேபோன்று மார்ச் மாதத்தில் ஒடிசா பாலங்கீர் மாவட்டத்தைச் சேர்ந்த 21 குழந்தைகள் உள்பட 78 கொத்தடிமைத் தொழிலாளர்கள் மற்றொரு செங்கல் சூளையிலிருந்து மீட்கப்பட்டனர்.
இது தமிழ்நாட்டில் நடக்கின்ற கொத்தடிமை முறைக்கான சில சான்றுகளே. இதுபோன்ற பெரிய சம்பவங்கள் மட்டும்தான் ஊடகங்களில் வெளியாகின்றன.
ஆனால் தேன்மொழி போன்ற பெண்கள் உள்ளிட்டு பல இருளர் பழங்குடியின குடும்பங்கள் அடிப்படை வாழ்வாதாரத்திற்காக பல்வேறு இடங்களுக்கு இடம்பெயர்ந்து அங்கேயே குடும்பத்துடன் கொத்தடிமைகளாக செங்கல் சூளைகளிலும் தனிநபரிடமும் வேலை செய்து வருகின்றனர்.
இவையனைத்தும் அரசுக்கு தெரியாமல் நடக்கவில்லை. ஆனால், சாதிய புத்தி கொண்ட அரசு பழங்குடியின இருளர் மக்களை மீட்டு அவர்களுக்கு தேவையான மறுவாழ்வினை ஏற்படுத்திக் கொடுக்காமல், அவர்களை அதே நிலையில் இறுத்தி படுகொலை செய்து வருகிறது. இருளர் குழந்தைகளுக்கு சாதி சான்றிதழ் வழங்காமல் அவர்களின் படிப்பை முடக்குவது; சாலை வசதி, மின்சாரம் உள்ளிட்ட எந்த அடிப்படை வசதிகளையும் ஏற்படுத்திக் கொடுக்காமல் புறக்கணிப்பது என அம்மக்களை வாழவிடாமல் நாடோடிகளாக விரட்டியடிக்கிறது.
எனவே, பழங்குடியினப் பெண் தேன்மொழியின் உயிரிழப்பு என்பது இந்தச் சாதிய அரசால் நிகழ்த்தப்பட்ட பச்சை படுகொலையாகும். தினந்தோறும் தேன்மொழிகளும் ஆனந்தன்களும் இந்தச் சாதிய அரசால் படுகொலை செய்யப்பட்டும் வஞ்சிக்கப்படும் வருகின்றனர் என்பதே எதார்த்த நிலையாகும்.
தாய், சேய் படுகொலைக்கு காரணமான ஆறுமுகத்தின் மீது கொலை வழக்கும் கொத்தடிமை முறை ஒழிப்பு சட்டத்தின் கீழ் வழக்கும் பதிந்து அவனை கைது செய்ய வேண்டும். அப்பகுதியில் நடந்துவந்த கொத்தடிமை முறையை தடுக்காத அதிகாரிகளை மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மேலும் தமிழ்நாடு முழுவதும் பழங்குடியின மக்கள் வசிக்கக் கூடிய பகுதிகளிலும், செங்கல்சூளை போன்ற இடங்களில் தொழிலாளர்கள் கொத்தடிமைகளாக வேலை செய்கின்றனரா என்பதை குழு அமைத்து ஆய்வு செய்ய வேண்டும்; கொத்தடிமைகளாக உள்ளவர்களை மீட்டு அவர்களுக்கு தேவையான மறுவாழ்வினை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும்; பழங்குடி மக்களுக்கு தேவையான அடிப்படை வாழ்விற்கான பொருளாதார வசதிகளை அரசு ஏற்படுத்தி கொடுக்க வேண்டும் ஆகிய வலியுறுத்தி ஜனநாயக சக்திகளும், புரட்சிகர அமைப்புகளும் போராட்டங்களை முன்னெடுக்க வேண்டும்.
அதேசமயம், தலித் – பழங்குடியின மக்களை கட்டமைப்பு ரீதியாகவே ஒடுக்கும் இக்கட்டமைப்பிற்கு மாற்றாக, அம்மக்களுக்கு உண்மையான உரிமையையும் ஜனநாயகத்தையும் அதிகாரத்தையும் அளிக்கின்ற ஜனநாயகக் குடியரசமைக்கப் போராட வேண்டும்.
![]()
இன்குலாப்
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram, Threads











