15.10.2026

மதம் மாறி இஸ்லாமை தழுவியோருக்கு பிற்படுத்தப்பட்டோர் சான்றிதழ் கிடையாது!
உச்சநீதிமன்றத்தின் இந்துராஷ்டத்திற்கான தீர்ப்பு!‎

பத்திரிகைச் செய்தி

‎மதம் மாறி இஸ்லாம் மதத்தை தழுவியோர்க்கு பிற்படுத்தப்பட்டோர் சான்றிதழ் கிடையாது என்ற சென்னை உயர்நீதிமன்ற உத்தரவை உச்சநீதிமன்றம் ஆனது இன்றைய நாளில் உறுதி செய்துள்ளது.‎

‎இந்து மதத்தில் பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், பட்டியல் சாதியினர் ஆகிய பிரிவுகளிலிருந்து இஸ்லாம் மதத்தைத் தழுவுபவர்க்கு பி.சி. முஸ்லிம் சான்றிதழ் வழங்கி இட ஒதுக்கீட்டைத் தொடரலாம் என்று தமிழ்நாடு அரசு 2024 ஆம் ஆண்டு ஏற்கெனவே அரசாணை பிறப்பித்திருந்தது.‎

‎இந்து மதத்தைச் சேர்ந்த பரமசிவம் என்பவர் 2015 ஆம் ஆண்டு இஸ்லாமியராக மதம் மாறி சமீம் முகமது என்று பெயரை மாற்றிக் கொள்கிறார். அவர் தனக்கு முஸ்லிம் லெப்பை பி.சி. சான்றிதழ் கேட்டு உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்கிறார் மனுவை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையானது, 2024 ஆம் ஆண்டு மேற்படி தமிழ்நாடு அரசால் வெளியிடப்பட்ட அரசாணையை இரத்து செய்தது. இந்த வழக்கில் தமிழக வெற்றிக் கழக அரசு மெத்தனமாக இருந்ததாகத் தொடர்ந்து பல கண்டனங்கள் எழுந்த நிலையில் உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு மேல்முறையீடு செய்தது.

‎சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தொடரப்பட்ட வழக்கில் கோரப்பட்ட கோரிக்கை ஒன்றாக இருக்கும் போது அதற்குத் தொடர்பில்லாத வேறு ஒரு கோரிக்கைக்கு உத்தரவிட்டிருந்தது நீதிமன்றம். அந்த உத்தரவைத்தான் உச்சநீதிமன்றம் ஆனது இன்றைய நாளில் உறுதி செய்துள்ளது. பி.சி., எம்.பி.சி., எஸ்.சி. ஆகிய பிரிவுகளைச் சேர்ந்தவர்கள் இஸ்லாமியராக மதம் மாறுவதன் காரணமாக மட்டுமே அவர்கள் சமூக மற்றும் பொருளாதாரத்தில் உயர்ந்த நிலையை ஒரே நாளில் எட்டி விட முடிவதில்லை. ஈ.டபுள்யூ.எஸ். (EWS) என்ற பெயரில் இட ஒதுக்கீட்டைத் திருடி சென்ற இந்த பார்ப்பன கும்பல் இஸ்லாமியர்களின் இட ஒதுக்கீட்டினை ஒழித்துக் கட்டுவதற்கான தொடக்கமாகவே இதனைக் காண வேண்டி உள்ளது.

‎பி.சி., எம்.பி.சி., எஸ்.சி. ஆகிய பிரிவுகளிலிருந்து இஸ்லாமியராக மாறிய மக்களின் வாழ்வில் மிகப்பெரிய பேரிடியை இறக்கியுள்ளது உச்சநீதிமன்றம். இதுவரை அவ்வாறு மாறி அரசுப் பணிகளிலும் கல்லூரிகளிலும் இருக்கக்கூடிய அவர்களின் வாழ்வு என்ன ஆகும் என்ற அச்சம் பரவியுள்ளது.

‎ஏற்கெனவே சி.ஏ.ஏ., என்.ஆர்.சி., வாக்காளர் பட்டியலிலிருந்து பெயர்கள் நீக்கம் போன்ற பாசிச நடவடிக்கைகள் பாசிச மோடி அமித்ஷா அரசால் நடைமுறைப்படுத்தப்படும் நேரத்தில் தான் இந்த தீர்ப்பு வெளியாகி உள்ளது. இத்தீர்ப்பையும் மோடி அரசின் பாசிச நடவடிக்கைகளில் ஒன்றாகவே கருத வேண்டி உள்ளது. இதனை மக்கள் அதிகாரக் கழகம் வன்மையாகக் கண்டிக்கிறது. மேலும், உச்ச நீதிமன்றத்தில் இந்த உத்தரவுக்கு எதிராக தமிழ்நாடு அரசு உடனே மறுசீராய்வு மனுவைத் தாக்கல் செய்ய வேண்டும் என்றும் கேட்டுக்கொள்கிறது.


தோழமையுடன்
தோழர் சி. வெற்றிவேல் செழியன்,
கழகப் பொதுச் செயலாளர்,
மக்கள் அதிகாரக் கழகம்,
தமிழ்நாடு – புதுவை.
9962366321

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram, Threads



விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க