சாதி ஒழிப்பு, வர்க்க ஒழிப்புப் போராளிகளின் நினைவை நெஞ்சில் ஏந்துவோம்!

தியாகி இமானுவேல் சேகரன், நக்சல்பாரி புரட்சியாளர் தோழர் பாலன், மாடக்கோட்டை சுப்பு, மாவீரன் மலைச்சாமி. இவர்கள் வெறும் பெயர்கள் அல்ல; தமிழ்நாட்டு மண்ணில் சாதி ஒடுக்குமுறைக்கு எதிராகவும் பண்ணையடிமைத்தனத்திற்கு எதிராகவும் சமத்துவத்திற்காகவும் வீறுகொண்டு எழுந்த போராட்டங்களின் முகவரிகள்.

செப்டம்பர் 11, 12, 13, 14
சாதி ஒழிப்பு, வர்க்க ஒழிப்புப் போராளிகள்!
தியாகி இமானுவேல் சேகரன், தோழர் பாலன், தோழர் மாடக்கோட்டை சுப்பு, மாவீரன் மலைச்சாமி
ஆகியோரின் நினைவை நெஞ்சில் ஏந்துவோம்!

மக்கள் அதிகாரக் கழகம்
மக்கள் கலை இலக்கியக் கழகம்
புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி (மா.ஒ.கு)
அமைப்புகளின் ஒருங்கிணைந்த அறிக்கை!

அன்பார்ந்த உழைக்கும் மக்களே!

​ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைக்காகவும், நிலமற்ற ஏழை எளியோரின் விடுதலைக்காகவும் தங்கள் இன்னுயிரை ஈந்த மாபெரும் ஆளுமைகளான தியாகி இமானுவேல் சேகரன், நக்சல்பாரி புரட்சியாளர் தோழர் பாலன், மாடக்கோட்டை சுப்பு, மாவீரன் மலைச்சாமி ஆகியோரின் நினைவு நாளை உயர்த்திப்பிடிப்போம்.

இவர்கள் வெறும் பெயர்கள் அல்ல; தமிழ்நாட்டு மண்ணில் சாதி ஒடுக்குமுறைக்கு எதிராகவும் பண்ணையடிமைத்தனத்திற்கு எதிராகவும் சமத்துவத்திற்காகவும் வீறுகொண்டு எழுந்த போராட்டங்களின் முகவரிகள்.

​தியாகி இமானுவேல் சேகரன்

இந்திய ராணுவத்தில் பணியாற்றிவிட்டு தாயகம் திரும்பினார். ஒடுக்கப்பட்ட மக்கள் சாதியக் கொடுமைகளால் தலைகுனிந்து வாழ்வதை ஏற்க மறுத்தார். இரட்டை குவளை முறை எதிர்ப்பு, சமபந்தி போஜனம், ஒடுக்கப்பட்டோரின் கல்வி உரிமை மற்றும் வழிபாட்டு உரிமை ஆகியவற்றிற்காகப் பல போராட்டங்களை முன்னெடுத்தார். ஒடுக்கப்பட்டோர் நல உரிமை இயக்கத்தை தொடங்கி சாதியக் கொடுமைகளுக்கு எதிராக மக்களை அமைப்பாக்கினார்.

உரிமைகளுக்காகத் துணிந்து நின்றதற்காகக் ஆதிக்கச் சாதிவெறி கும்பலால் படுகொலை செய்யப்பட்டார். அவரது நினைவு நாள், அடிமைப்பட்டுக் கிடக்கும் சமூகங்களுக்கு நிமிர்ந்து நிற்கும் துணிவைத் தரும் நாள்.

​நக்சல்பாரி புரட்சியாளர் தோழர் பாலன் —
வர்க்கப் போராட்டத்தின் ஈகம்

தருமபுரி மண்ணில் நிலமற்ற விவசாயத் தொழிலாளர்களுக்காகவும், சாதிய ஒடுக்குமுறைக்கு எதிராகவும் களம்கண்ட புரட்சியாளர் தோழர் பாலன். அதிகார வர்க்கத்தின் அடக்குமுறைகளுக்கும் பொய் வழக்குகளுக்கும் அஞ்சாமல், எளிய மக்களின் விடியலுக்காகத் துப்பாக்கி முனைகளை எதிர்கொண்டவர். அவரது மரணம், சுரண்டலற்ற ஒரு சமத்துவ சமுதாயத்தைக் கட்டமைக்கத் தொடர்ந்து போராட வேண்டும் என்பதை நமக்கு நினைவூட்டுகிறது.

தோழர் ​மாடக்கோட்டை சுப்பு

சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை அருகிலுள்ள மாடக்கோட்டை கிராமத்தைச் சேர்ந்தவர் தோழர் சுப்பு. தென் தமிழ்நாட்டில் நிலவிய நிலவுடைமை மற்றும் சாதிய ஒடுக்குமுறைகளுக்கு எதிராக உழைக்கும் மற்றும் ஒடுக்கப்பட்ட மக்களைத் திரட்டிப் போராடிய மக்கள் தலைவர். அப்பகுதியில் புரட்சிகர மார்க்சிஸ்ட்–லெனினிஸ்ட் (சி.பி.ஐ–எம்.எல். / நக்சல்பாரி) இயக்கத்தைக் கட்டியெழுப்பிய முன்னணித் தோழர்களில் ஒருவராகச் செயல்பட்டார்.

​சாதிய மற்றும் நிலவுடைமை ஆதிக்க சக்திகளுக்கு எதிராக நின்றதால் பல்வேறு வழக்குகளை எதிர்கொண்ட இவர், நிபந்தனை பிணையில் நெல்லையில் தங்கியிருந்தபோது 1994-ஆம் ஆண்டு செப்டம்பர் 13 அன்று படுகொலை செய்யப்பட்டார்.

மாவீரன் மலைச்சாமி

1980-களில் தமிழ்நாட்டில் ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைக்காகவும் சுயமரியாதைக்காகவும் போராடிய முன்னோடி தலித் இயக்கத் தலைவர் மற்றும் வழக்கறிஞர் ஆவார். இன்றைய விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் (வி.சி.க.) வேராக அமைந்த “தலித் பேந்தர்ஸ் இந்தியா” அமைப்பை தமிழ்நாட்டில் நிறுவி வழிநடத்தினார்.

ஒடுக்கப்பட்ட மக்களின் குடியிருப்புகள் இழிவான பெயர்களில் அழைக்கப்படுவதை எதிர்த்து, அவற்றுக்கு அம்பேத்கர் நகர், இமானுவேல் நகர், பெரியார் நகர் என சுயமரியாதைப் பெயர்களைச் சூட்டினார்.

பல எதிர்ப்புகளையும் தடைகளையும் கடந்து மதுரை மாநகரில் அண்ணல் அம்பேத்கருக்கு முழு உருவச் சிலை அமைய முக்கியக் காரணமாக இருந்தார். 1985-இல் டாக்டர் அம்பேத்கர் கல்விக் கழகத்தைத் தொடங்கி எளிய மாணவர்களின் கல்வி உரிமைக்காகவும், வன்கொடுமைகளுக்கு உள்ளான மக்களுக்காகவும் நீதிமன்றங்களிலும் வீதிகளிலும் வாதாடினார்.

​தொடர்ச்சியான தீவிர களப் பணிகளில் ஈடுபட்டு வந்த தோழர் மலைச்சாமி, உடல்நலக் குறைவால் செப்டம்பர் 14, 1989 அன்று தனது 35-வது வயதில் காலமானார்.

***

அதிகாரக் கரங்களுக்கு அடங்காமல், அடித்தட்டு மக்களின் நில உரிமைக்காகவும் வாழ்வுரிமைக்காகவும் சமரசமின்றி நின்ற இத்தோழர்களின் வீரம் வரலாற்றில் அழியாத பதிவாகும்.

இந்த நால்வரும் வெவ்வேறு களங்களில், வெவ்வேறு வடிவங்களில் போராடியிருந்தாலும், அவர்கள் எதிர்த்து நின்ற எதிரி ஒன்றுதான் — அது சாதிய ஒடுக்குமுறையும் வர்க்கச் சுரண்டலும்.

இன்றோ சாதிய ஒடுக்குமுறை என்பது கவின்களின் சாதி ஆணவப் படுகொலைகளாகவும் ஆகாஷ் டெலிசன்களின் கொட்டடிப் படுகொலைகளாகவும் நாங்குநேரி பெரும்பத்து, ஆலங்குளம் நெட்டூரின் சாதிய வன்முறை வெறியாட்டங்களாகவும் தொடர்கிறது.

வர்க்க ஒடுக்குமுறைகள் என்பது அம்பானி – அதானி கார்ப்பரேட் கும்பலின் கொள்ளையாகவும் உழைக்கும் மக்கள் மீதான ஆர்.எஸ்.எஸ். – பா.ஜ.க. கும்பலின் பல்வேறு பொருளாதார பண்பாட்டு தாக்குதலாகவும் தொடர்கிறது.

சாதி ஆதிக்கத்திற்கு எதிராகவும் கார்ப்பரேட் கொள்ளைக்கு எதிராகவும் மக்கள் அணிதிரண்டு விடக் கூடாது என்பதற்காக சாதி, மத, இன வேற்றுமைகளை தூண்டிவிட்டு பிரித்தாலும் சூழ்ச்சியை அரங்கேற்றுகிறது ஆர்.எஸ்.எஸ். – பா.ஜ.க. பாசிச கும்பல்.

தமிழ்நாட்டில் ஆர்.எஸ்.எஸ். – பா.ஜ.க. கும்பலின் அடியாள் படையாக செயல்படும் ஆதிக்கச் சாதிவெறி சங்கங்கள் பல்வேறு சாதிய வன்முறைகளையும் தூண்டி வருகின்றன. உழைக்கும் மக்களுக்கு சாதிய உணர்வுகளை தூண்டிவிட்டு குளிர்காய எத்தனிக்கின்றனர்.

ஆகவே சாதிய ஒடுக்குமுறைகளுக்கு எதிரான போராட்டங்களும் உழைக்கும் மக்களின் உரிமைப் போராட்டங்களும் ஆர்.எஸ்.எஸ். – பா.ஜ.க.; அம்பானி – அதானி பாசிசத்தை எதிர்கொண்டே நிற்கிறது.

ஆகவே நம் தலைவர்களின் நினைவு நாள் என்பது மாலை அணிவித்துச் செல்வதோடு முடிந்துவிடுவதல்ல. அவர்கள் விட்டுச்சென்ற சமத்துவக் கனவை, சாதியற்ற சமுதாயத்தை, உழைக்கும் மக்களுக்கான உரிமைகளை மீட்டெடுப்பதே நாம் அவர்களுக்குச் செலுத்தும் உண்மையான வீரவணக்கம்.

ஆகவே முழங்குவோம்
சாதிவெறியை தூண்டிவிடும் ஆதிக்கச் சாதிவெறி சங்கங்களை தடை செய்!
ஆர்.எஸ்.எஸ். – பா.ஜ.க. கும்பலை தடை செய்!
ஆர்.எஸ்.எஸ். – பா.ஜ.க.; அம்பானி – அதானி பாசிசம் ஒழிக!

தியாகிகளுக்கு வீரவணக்கம்!

மக்கள் அதிகாரக் கழகம் 
மக்கள் கலை இலக்கியக் கழகம்
புரட்சிகர மாணவர்-இளைஞர் முன்னணி
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி (மா.ஒ.கு.)
தமிழ்நாடு-புதுச்சேரி.
9962366321, 9791653200, 9444836642, 7397404242.

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram, Threads



விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க