முகநூல், இன்ஸ்டாகிராம், யூடியூப், டிக்டாக் போன்ற சமூக ஊடகங்களில் நாம் யாரைப் பின்தொடர்கிறோம் என்பதைக் கொண்டு மட்டும் நமது திரையில் பதிவுகள் வருவதில்லை. நாம் ஏற்கெனவே எதைப் பார்த்தோம், எதை அதிக நேரம் பார்க்கிறோம், எதற்கு விருப்பக்குறி இட்டோம், எதைப் பகிர்ந்தோம், எதை மீண்டும் பார்த்தோம் என நமது செயல்பாடுகளைக் கணக்கிட்டு, அடுத்து எதை நம் முன் கொண்டுவர வேண்டும் என்பதை அல்காரிதம் தீர்மானிக்கிறது. இந்த அபாயகரமான அதிகாரத்திற்குக் குறைந்தபட்ச வரம்பையாவது விதிக்க ஆஸ்திரேலிய அரசு முயற்சி எடுத்துள்ளது.
செப்டம்பர் 8, 2026 அன்று அந்நாட்டு அரசு டிஜிட்டல் பாதுகாப்புப் பொறுப்பு (Digital Duty of Care) தொடர்பான சட்ட முன்வரைவைக் கருத்துக் கேட்புக்காக வெளியிட்டது. அதில் இடம்பெற்றுள்ள “என் பதிவோடை, என் விருப்பம்” (My Feed, My Way) திட்டத்தின்படி, சமூக ஊடகப் பயனாளர்கள் தங்களது முகப்புப் பக்கத்தில் அல்காரிதம் தீர்மானித்துப் பரிந்துரைக்கும் பதிவுகளைப் பார்க்க வேண்டுமா என்பதைத் தாங்களே தேர்வு செய்ய வேண்டும். புதியவர்களுக்கும் ஏற்கெனவே சமூக ஊடகங்களைப் பயன்படுத்துபவர்களுக்கும் இந்தத் தேர்வை நிறுவனங்கள் வழங்க வேண்டும்.
இதற்கு முன்பே, 2025 டிசம்பர் 10 முதல் முகநூல், இன்ஸ்டாகிராம், டிக்டாக், எக்ஸ் (முன்னாள் ட்விட்டர்), யூடியூப் உள்ளிட்ட குறிப்பிட்ட சமூக ஊடகங்களில் 16 வயதுக்குட்பட்டவர்கள் கணக்கு தொடங்குவதையோ தொடர்ந்து வைத்திருப்பதையோ தடுப்பதற்கான நியாயமான நடவடிக்கைகளை நிறுவனங்கள் மேற்கொள்ள வேண்டும் என்ற விதி ஆஸ்திரேலியாவில் நடைமுறைக்கு வந்துள்ளது. இது இணையப் பயன்பாட்டுக்கான முழுத் தடை அல்ல; தனிப்பட்ட சமூக ஊடகக் கணக்கு இல்லாமல் பொதுவாகக் கிடைக்கும் உள்ளடக்கங்களை அவர்கள் தொடர்ந்து பார்க்க முடியும்.
இந்த நடவடிக்கைகள் அனைத்துப் பிரச்சினைகளையும் தீர்த்துவிடப் போவதில்லை. ஆனால் அவை ஒரு அடிப்படை அரசியல் கேள்வியை எழுப்புகின்றன: நாம் என்ன பார்க்க வேண்டும், எதில் எவ்வளவு நேரம் செலவிட வேண்டும் என்பதைக் கட்டுப்படுத்தும் அதிகாரம் தனியார் பெருநிறுவனங்களுக்கு எல்லையற்றதாக இருக்க வேண்டுமா என்பதுதான் அது.
இலவசச் சேவையின் பின்னால் இருக்கும் இலாபம்
முகநூலைப் பயன்படுத்த மாதக் கட்டணம் இல்லை. இன்ஸ்டாகிராமில் ரீல்ஸ் பார்க்க நாம் பணம் செலுத்துவதில்லை. யூட்யூபிலும் பெரும்பாலான காணொளிகளை இலவசமாகப் பார்க்கிறோம். ஆனால் இந்தத் தளங்களை நடத்தும் நிறுவனங்களோ உலகின் மிகப்பெரிய நிறுவனங்களாக வளர்ந்துள்ளன. காரணம், அவை கொடுக்கும் சேவை இலவசம் என்பதல்ல; நாம் வேறு வடிவத்தில் அதன் விலையைச் செலுத்துகிறோம் என்பதுதான்.
மெட்டா நிறுவனம் 2025-இல் சுமார் 201 பில்லியன் டாலர் மொத்த வருவாய் ஈட்டியது. அதில் 196 பில்லியன் டாலருக்கும் அதிகமானது விளம்பர வருவாய். முகநூல், இன்ஸ்டாகிராம் போன்ற அதன் முக்கிய தளங்களின் வருமானம் பெருமளவில் விளம்பரத்தைச் சார்ந்துள்ளது.
நாம் இத்தகைய தளங்களில் அதிக நேரம் செலவிடும்போது நம்மைப் பற்றிய செயல்பாட்டுத் தகவல்கள் அதிகமாகக் கிடைக்கின்றன. எதை நீண்ட நேரம் பார்க்கிறோம், எதை உடனே தாண்டிச் செல்கிறோம், எதைப் பகிர்கிறோம், எதை மீண்டும் பார்க்கிறோம் என்பதிலிருந்து நமது விருப்பங்களையும் நடத்தையையும் பற்றிய தகவல்கள் சேகரிக்கப்படுகின்றன. அவற்றைக் கொண்டு விளம்பரங்களை இன்னும் துல்லியமாகத் தீர்மானித்து நம்மைத் தனிப்பட்ட இலக்காக்க முடிகிறது; அதன் இறுதி விளைவு நிறுவனத்தின் இலாப அதிகரிப்பு.
இந்தச் சங்கிலியில் மனிதக் கவனம் ஒரு வணிக வளமாக மாற்றப்படுகிறது.
அதனால்தான் சமூக ஊடக நிறுவனத்திற்கு நாம் விரும்பியதைப் பார்த்துவிட்டு செயலியை மூடிச் செல்வது இலாபகரமானது அல்ல. இன்னொரு பதிவைப் பார்க்க வேண்டும்; இன்னொரு காணொளிக்குச் செல்ல வேண்டும்; ஐந்து நிமிடம் பத்து நிமிடமாகவும், பத்து நிமிடம் ஒரு மணிநேரமாகவும் மாற வேண்டும்.
அந்த வேலையைச் செய்வதில் அல்காரிதம் முக்கியமான கருவியாகிறது.
சமூக ஊடகப் பயனாளர் வாடிக்கையாளர் என்று தோன்றினாலும், உண்மையில் அவரது கவனமே விளம்பரச் சந்தைக்கு விற்கப்படும் பொருளாகிறது. மனிதர்களின் தேவையை நிறைவேற்றுவதற்குப் பதிலாக, மனிதக் கவனத்தை அதிக நேரம் பிடித்து அதை விளம்பர இலாபமாக மாற்றும் நோக்கத்திற்குள் அல்காரிதம் செயல்படுகிறது.
ஆத்திரமூட்டும் பதிவுகள் ஏன் நம்மை பின்தொடர்கின்றன?
ஒரு நண்பர் போட்ட குடும்பப் புகைப்படத்தை சில வினாடிகளில் கடந்து செல்லலாம். ஆனால் சாதி, மதம், பாலினம், அரசியல், பிரபலங்கள் தொடர்பான மோதல் காணொளியில் நீண்ட நேரம் நின்று பார்க்க நேரிடலாம். அதற்குக் கீழே உள்ள கருத்துகளைப் படிக்கலாம்; பதிலளிக்கலாம்; நண்பருக்குப் பகிரலாம்; அதே விவாதத்தின் அடுத்த காணொளியையும் பார்க்கலாம். இதன் மூலம், எது நம்மை அதிக நேரம் தளத்தில் வைத்திருக்கிறது என்பதை அல்காரிதம் கற்றுக்கொள்கிறது.
இதனால் கோபம், பயம், அதிர்ச்சி, பொறாமை, தாழ்வு உணர்வு, மோதல் போன்றவற்றைத் தூண்டும் உள்ளடக்கம் அதிகமான ஈடுபாட்டை உருவாக்குமானால், அவற்றை மேலும் பரப்புவதற்கான வணிக ஊக்கமும் உருவாகிறது.
இதன் காரணமாக, அல்காரிதத்தையே தனியாக ஒரு தீய சக்தியாக நாம் கருதவில்லை. அது ஒரு தொழில்நுட்பக் கருவி. அந்தத் தொழில்நுட்பம் எந்த சமூக நோக்கத்திற்காகப் பயன்படுத்தப்படுகிறது என்பதே முக்கியம்.
மனிதனுக்கு உதவக்கூடிய அதே தொழில்நுட்பம், இலாப வேட்டைக்கு உட்படுத்தப்பட்டதும் மனிதனின் கவனத்தையே சுரண்டும் கருவியாக மாறுகிறது.
குழந்தையிடம் மட்டும் ஏன்
சுயக்கட்டுப்பாட்டைக் கோருகிறோம்?
இந்தப் பிரச்சினை குழந்தைகளிடம் வரும்போது இன்னும் கூர்மையாகிறது.
ஒருபுறம் உலகின் மிகப்பெரிய தொழில்நுட்ப நிறுவனங்கள் பெரும் தொகையைச் செலவழித்து, தமது பயனாளர் தளத்திலிருந்து வெளியேறாமல் இருக்க என்ன செய்யலாம் என்பதை ஆராய்கின்றன. அடுத்த காணொளியைத் தானாக இயக்குவது, கீழே நகர்த்திக்கொண்டே போனால் முடிவில்லாமல் புதிய பதிவுகள் வருவது, அடிக்கடி அறிவிப்புகளை அனுப்புவது, ஒவ்வொரு பயனாளருக்கும் தனித்தனியாக உள்ளடக்கத்தைப் பரிந்துரைப்பது போன்ற வடிவமைப்புகள் அனைத்தும் இதனுடன் தொடர்புடையவை.
மறுபுறம் ஒரு 13 வயது குழந்தையிடம், “கைப்பேசியை அதிகமாகப் பார்க்காதே; சுயக்கட்டுப்பாட்டுடன் இரு” என்று தொடர்ச்சியாகக் கூறப்படுகிறது. பெற்றோரிடம் “குழந்தையை கண்காணியுங்கள்” என்று அறிவுரை வழங்கப்படுகிறது.
ஆனால் ஒரு சாதாரண தொழிலாளர் குடும்பத்தின் வாழ்க்கையை எடுத்துக்கொண்டால் பிரச்சினை இவ்வளவு எளிதல்ல. பெற்றோர் இருவரும் நீண்ட நேரம் வேலைக்குச் செல்ல வேண்டியிருக்கிறது. குழந்தை விளையாடப் பாதுகாப்பான பொது இடம் இருப்பதில்லை. நூலகம், விளையாட்டு மைதானம், கலாச்சார மையம் போன்ற பொதுவசதிகள் அருகில் கிடைப்பதில்லை. ஆனால் மலிவான இணையத்துடன் ஒரு கைப்பேசி கையில் இருக்கிறது. இந்தச் சமூக நிலையை மறைத்துவிட்டு குழந்தையின் பழக்கத்தையே, பிரச்சினைக்குக் காரணமாகக் காட்டுவது யாருக்குச் சாதகமானது?
இலாபத்தை நிறுவனம் எடுத்துக்கொள்ளும்; அதன் விளைவுகளை குடும்பமும் பள்ளியும் சமாளிக்க வேண்டுமா?
ஆஸ்திரேலிய அரசு எடுத்துள்ள நடவடிக்கையின் முக்கியத்துவம் இங்குதான் இருக்கிறது. குறைந்தபட்சமாக, பிரச்சினைக்கான பொறுப்பை குழந்தை மற்றும் பெற்றோரின் தோளில் மட்டும் வைக்காமல், அந்தச் சூழலை உருவாக்கும் நிறுவனங்களின் பக்கம் திருப்புகிறது.
கார்ப்பரேட் அதிகாரத்துக்கு வரம்பு —
இதுவும் ஜனநாயகத்தின் அளவுகோல்தான்
ஆஸ்திரேலிய அரசின் இந்த முயற்சியை நாம் ஏன் வரவேற்க வேண்டும்?
ஜனநாயகம் என்பது ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை வாக்களிப்பது மட்டும் அல்ல. மக்களின் அன்றாட வாழ்வின் மீது கார்ப்பரேட்டுகள் செலுத்தும் அதிகாரத்திற்கு எந்த அளவு சமூக, சட்ட வரம்புகள் இருக்கின்றன என்பதும் ஜனநாயகத்தின் ஓர் அளவுகோல்.
ஒரு சில தனியார் நிறுவனங்கள் கோடிக்கணக்கான மக்களின் தகவல் சூழலைக் கட்டுப்படுத்துகின்றன. எந்தச் செய்தி முதலில் வர வேண்டும், எந்தக் காணொளி அடுத்ததாக வர வேண்டும், எது மீண்டும் மீண்டும் கண்முன் வர வேண்டும் என்பதில் அவற்றின் அல்காரிதங்கள் பெரும் செல்வாக்கைப் பெற்றிருக்கின்றன.
இத்தகைய சூழலில், “என்னுடைய நடத்தையை ஆய்வு செய்து நீ தேர்வு செய்யும் பதிவுகள் எனக்கு வேண்டாம்; நான் தேர்ந்தெடுத்தவற்றைப் பார்க்கும் உரிமை எனக்கு வேண்டும்” என்று ஒரு மனிதன் சொல்லும் உரிமையை அரசு சட்டமாக்க முன்வருவது குறைந்தபட்ச ஜனநாயக நடவடிக்கை.
இதனால் ஆஸ்திரேலிய அரசு மக்கள் அரசாக மாறிவிட்டது என்றோ, அதன் உள்நாட்டு, வெளிநாட்டு கொள்கைகளையெல்லாம் இதன் மூலம் ஜனநாயகமானவை என்றோ நாம் முடிவுக்கு வரத் தேவையில்லை. ஆனால் ஒரு குறிப்பிட்ட துறையில் பெருநிறுவன அதிகாரத்திற்கு எதிராக மக்கள் உரிமையை விரிவுபடுத்தும் நடவடிக்கை முன்னேற்றமானது என்றால், அதை முற்போக்கானதாகவே மதிப்பிட வேண்டும்.
மோடி அரசுக்கு சமூக ஊடக நிறுவனங்களைக்
கட்டுப்படுத்தத் தெரியாதா?
இங்குதான் அடுத்த கேள்வியை எழுப்புகிறது. ஆஸ்திரேலிய அரசு மேற்கொண்ட இந்நடவடிக்கையை இந்திய அரசால் செய்ய முடியாதா?
முடியும். அதற்கான சட்ட அதிகாரமும் நிர்வாக இயந்திரமும் இந்திய அரசிடம் இருக்கின்றன. பாசிச மோடி அரசு அதனை அந்த அதிகாரத்தை அதன் தேவைக்காகப் பயன்படுத்தியுமிருக்கிறது.
2021 விவசாயிகள் போராட்டத்தின்போது, போராட்டம் தொடர்பாகத் தவறான அல்லது தூண்டிவிடும் தகவல்களைப் பரப்புவதாகக் கூறி 1,178 ட்விட்டர் கணக்குகளை முடக்குமாறு மோடி அரசு உத்தரவிட்டது. அவற்றில் பல பாகிஸ்தானுடன் தொடர்புடையவை அல்லது காலிஸ்தான் ஆதரவாளர்களுடையவை என்று அரசுத் தரப்பில் குற்றஞ்சாட்டப்பட்டது. இதற்கு முன்பாகவே 250-க்கும் மேற்பட்ட கணக்குகள் மற்றும் பதிவுகளை முடக்குமாறு பிறப்பிக்கப்பட்ட மற்றொரு உத்தரவுடன் ட்விட்டர் முழுமையாக இணங்க மறுத்ததால் இருதரப்புக்கும் மோதல் ஏற்பட்டிருந்தது.
2024 விவசாயிகள் போராட்டத்தின்போதும் இதே நிலை தொடர்ந்தது. மோடி அரசின் உத்தரவுக்கு இணங்கி சில கணக்குகளையும் பதிவுகளையும் இந்தியாவில் மறைத்ததாக எக்ஸ் நிறுவனம் அறிவித்தது. அதே நேரத்தில் அந்த உத்தரவுகளுடன் தாங்கள் உடன்படவில்லை என்றும், அவை கருத்துச் சுதந்திரத்தைக் கட்டுப்படுத்துவதாகவும் எக்ஸ் கூறியது.
இந்த மோதல்கள் ஒரு விசயத்தைத் தெளிவாகக் காட்டுகின்றன.
சமூக ஊடகப் பெருநிறுவனங்களை எதிர்கொள்ள இந்திய அரசுக்கு அதிகாரம் இல்லை என்பதல்ல பிரச்சினை. அந்த அதிகாரத்தை எதற்காகப் பயன்படுத்துகிறது என்பதுதான் பிரச்சினை.
அரசின் நலனுக்காக மோத முடியும்; மக்களின் நலனுக்காக?
இந்தியா போன்ற அரசுகள் பன்னாட்டு மூலதனத்துடன் எப்போதும் சமரசமாகவே இருப்பதில்லை. தமது அரசியல் அதிகாரம், ஆட்சியின் நிலைத்தன்மை, ஆளும் வர்க்கத்தின் உடனடி நலன் ஆகியவை பாதிக்கப்படும் இடங்களில் அவை பேரம் பேசும்; மோதவும் செய்யும்.
ஆனால், ஜனநாயகத்திற்கான அளவுகோல், கார்ப்பரேட்டுகளுடன் மோதுகிறதா இல்லையா என்பதல்ல; எதற்காக மோதுகிறது, யாருடைய நலனுக்காக மோதுகிறது என்பதுதான்.
விவசாயிகள் போராட்டத்துடன் தொடர்புடைய கணக்குகளை முடக்குவதற்காக ஒரு அமெரிக்கப் பெருநிறுவனத்துடன் மோத முடியும். அரசியல் உள்ளடக்கங்களை அகற்றுவதற்கான உத்தரவுகளை நடைமுறைப்படுத்த சட்ட, நிர்வாக அதிகாரத்தைப் பயன்படுத்த முடியும். அப்படியானால் அதே அரசு, இந்திய மக்களின் கவனத்தைப் பெருநிறுவனங்கள் இலாபத்திற்காகப் பயன்படுத்துவதற்கு எதிராக ஏன் அதே உறுதியுடன் செயல்படக்கூடாது? “எனது பழைய செயல்பாடுகளை வைத்து என்ன பார்க்க வேண்டும் என்று நீ தீர்மானிக்கக்கூடாது” என்று சொல்லும் உரிமையை இந்தியப் பயனாளருக்கும் ஏன் வழங்கக்கூடாது? குழந்தைகளைத் தொடர்ந்து தளத்தில் வைத்திருக்கும் வடிவமைப்புகளுக்கு நிறுவனங்களை ஏன் பொறுப்பாக்கக்கூடாது?
அரசுக்கு எதிரானதாகக் கருதப்படும் பதிவுகளைக் கட்டுப்படுத்துவதில் காட்டப்படும் அக்கறையின் ஒரு பகுதியையாவது, குழந்தைகளின் கவனத்தை வணிகப் பொருளாக மாற்றும் கார்ப்பரேட் நடைமுறைகளைக் கட்டுப்படுத்துவதில் காட்ட முடியாதா?
முடியும். ஆனால் இங்குதான் இந்திய அரசின் வர்க்கச் சார்பு வெளிப்படுகிறது. அரசின் அரசியல் அதிகாரத்தை சமூக ஊடகங்களின் மீது விரிவுபடுத்துவது ஒரு வகையான கட்டுப்பாடு. சமூக ஊடகப் பெருநிறுவனங்களின் அதிகாரத்திலிருந்து மக்களின் உரிமையை விரிவுபடுத்துவது முற்றிலும் வேறு வகையான கட்டுப்பாடு. ஒன்றில் அரசின் அதிகாரம் பெருகுகிறது; மற்றொன்றில் மக்களின் உரிமை பெருகுகிறது.
முதலில் யாரிடம் கட்டுப்பாட்டைக் கேட்பது?
ஆஸ்திரேலிய அரசின் புதிய சட்ட முன்வரைவு முழுமையான தீர்வு அல்ல. அது இன்னும் கருத்துக் கேட்பு நிலையில்தான் உள்ளது. சட்டமாக நிறைவேற்றப்பட்டாலும் பெருநிறுவனங்கள் அதை எவ்வாறு செயல்படுத்துகின்றன என்பதைக் கண்காணிக்க வேண்டியிருக்கும். ஆனால் அது குறைந்தபட்சமாக ஒரு சரியான திசையைச் சுட்டுகிறது.
ஒரு குழந்தை எவ்வளவு நேரம் கைப்பேசியைப் பார்க்கிறது என்று குற்றம் சாட்டுவதற்கு முன், அந்தக் குழந்தை இன்னும் ஒரு நிமிடம் திரையிலேயே இருந்தால் இலாபம் அதிகரிக்கும் வகையில் அமைக்கப்பட்ட வணிக முறையைக் கேள்விக்குள்ளாக்க வேண்டும். பெற்றோரிடம் மட்டும் கட்டுப்பாட்டைக் கோருவதற்கு முன், குழந்தைகளின் கவனத்தை வணிக வளமாக்கும் கார்ப்பரேட்டுகளைக் கட்டுப்படுத்த அரசு தயாராக இருக்க வேண்டும். அந்த அளவுக்காவது ஆஸ்திரேலியா ஒரு முன்னேற்றமான முயற்சியை எடுத்துள்ளது என்பது வரவேற்கத்தக்கது.
அரசுக்கு எதிரானதாகக் கருதும் பதிவுகளையும் சமூக ஊடகக் கணக்குகளையும் கட்டுப்படுத்துவதற்காகப் பன்னாட்டுப் பெருநிறுவனங்களுடன் மோதத் தயங்காத பாசிச மோடி அரசு, மக்களின் கவனத்தையும் குழந்தைகளின் அறிவாற்றல் சூழலையும் பாதுகாப்பதற்காக அதே பெருநிறுவனங்களுடன் மோதத் தயாரா என்ற கேள்வியை எழுப்பி, அதன் ஜனநாயக விரோதப் பாசிசத்தன்மையையும், அதன் அதிகாரம் யாருடைய நலனுக்காகப் பயன்படுத்தப்படுகிறது என்பதையும் திரைகிழித்துக் காட்ட வேண்டும்.
![]()
தமிழ்ச்சுடர்
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram, Threads











