கோத்தகிரி அம்பாள் நகர் மக்களின் உரிமை முழக்கம் மலையெங்கும் எதிரொலிக்கட்டும்!
கோத்தகிரி அம்பாள் நகர் மக்களின்
சாலை வசதி கோரிய போராட்டத்திற்கு ஆதரவளிப்போம்!
கையெழுத்து இயக்கம்!
செப்டம்பர் 2026
நீலகிரி மாவட்டம், கோத்தகிரி வட்டம், கெங்கரை ஊராட்சியில் உள்ள அம்பாள் நகர் மலைக் கிராமத்தில் 50-க்கும் மேற்பட்ட குடும்பங்களில் வசித்து வரும் ஆதிதிராவிடர் மற்றும் அருந்ததியர் மக்கள் 40 ஆண்டுகளுக்கும் மேலாக தங்களுக்கு சாலை அமைத்துத் தரக்கோரி போராடி வருகின்றனர்.
இம்மக்களது குடியிருப்பிலிருந்து முதன்மை சாலைக்கு சாலை அமைப்பதற்குத் தடையாகச் சில தனியார் நில உரிமையாளர்களுக்குச் சொந்தமான நிலங்கள் உள்ளன. அதனை ஆதி திராவிடர் நலத்துறை மூலம் கட்டாய நில எடுப்பு சட்டத்தின் கீழ் கையகப்படுத்தி சாலை அமைத்துத் தரக்கோரி பல கட்டப் போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர். அரசு அதிகாரிகளிடம் பலமுறை மனு கொடுத்தும், குடும்ப அட்டை, ஆதார் அட்டை உட்பட அனைத்து ஆவணங்களையும் தபால் மூலம் ஆட்சியருக்கு அனுப்பும் போராட்டம் போன்ற பல போராட்டங்களை நடத்தியும், இன்று வரை இம்மக்களது சாலைப் பிரச்சினைக்குத் தீர்வில்லை. இதனால் இம்மக்கள் பல்வேறு துயரங்களை எதிர்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில் ஜூலை 2025 முதல் மக்கள் அதிகாரக் கழகம் அம்பாள் நகர் மக்களுடன் இணைந்து இப்பிரச்சினைக்காக கடந்த ஓராண்டாக போராடி வருகிறது. இதன் தொடர்ச்சியாக 2026 ல் த.வெ.க. ஆட்சி அமைந்த பின்னர் சமூக நீதித்துறை அமைச்சர் வன்னியரசு அவர்களை அம்பாள் நகர் மக்களுடன் ஜீலை-13 அன்று நேரில் சந்தித்து மனு கொடுத்தோம். மனுவின் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காததால் போராட்டத்தின் தீவிரத்தை அரசிற்கு உணர்த்த ஆகஸ்ட்-9 அன்று கோத்தகிரி மார்க்கெட் ஜீப் நிலையத்தில் ஆர்ப்பாட்டம் நடத்தினோம்.
ஆர்ப்பாட்டம் நடத்துவதற்கு முன்னர் அரசு அதிகாரிகள் ஒன்பது பேர் அம்பாள் நகருக்கு வந்து 15-20 நாட்களில் சாலை அமைத்து தருகிறோம் என வாக்குறுதி தந்தனர் வாக்குறுதி அளித்த நாட்கள் கடந்தும் நடவடிக்கைகள் எதுவும் மேற்கொள்ளவில்லை.
இந்நிலையில், அம்பாள் நகர் மக்களுக்கு சாலை அமைத்துத்தரக் கோரி மக்கள் அதிகாரக் கழகம் சார்பாக கடந்த ஆகஸ்ட்-27 முதல் தொடர் உண்ணாநிலை, தொடர் முழக்கப் போராட்டம் அம்பாள் நகரில் முன்னெடுக்கப்பட்டது. இப்போராட்டம் ஆகஸ்ட்-27 தொடங்கி ஆகஸ்ட்-31 வரை ஐந்து நாள் நீடித்து முதல் கட்ட வெற்றியை சாதித்தது.
இப்போராட்டத்தில் மக்கள் அதிகாரக் கழகத்தின் மாநில இணைச் செயலாளர் தோழர் மாறன் மற்றும் கோத்தகிரி கிளைச் செயலாளர் தோழர் சண்முகநாதன் இருவரும் உண்ணாநிலை போராட்டத்தை மேற்கொண்டனர்; அம்பாள் நகரின் குழந்தைகள், பெண்கள், முதியவர்கள் என ஒட்டுமொத்த ஊர்மக்களும் இரவு பகலாகப் போராடினர். கோத்தகிரி பகுதியைச் சார்ந்த ஜனநாயக சக்திகள், பல ஊர் மக்கள் மற்றும் ஊர் தலைவர்கள் இப்போராட்டத்திற்கு நேரடியாக வந்து ஆதரவளித்தனர்.
இப்போராட்டமானது அதிகார வர்க்கத்திற்கு பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியது. எனவே, போராட்டத்தின் நான்காவது நாளன்று உண்ணாநிலை போராட்டத்தில் ஈடுபட்டுவந்த இரு தோழர்களையும் அவர்களின் உடல்நிலையைக் காரணம்காட்டி போலீஸ் மருத்துவமனையில் அனுமதித்தது. எனினும், தோழர்கள் இருவரும் மருத்துவமனையிலும் தங்களின் உண்ணாநிலை போராட்டத்தைத் தொடர்ந்தனர்.
மேலும், போலீசின் இந்நடவடிக்கையால் போராட்டப் பந்தலில் மூன்று தோழர்கள் உண்ணாநிலைப் போராட்டத்தை தொடங்கினர். இருவரின் உண்ணாநிலைப் போராட்டம் ஐவரின் போராட்டமாக வலுவடைந்தது! மேலும், தங்களின் கோரிக்கை நிறைவேற்றப்படாவிட்டால் மொத்த ஊர்மக்களும் உண்ணாநிலைப் போராட்டத்தை முன்னெடுப்போம் என்று மக்கள் அரசுக்கு எச்சரிக்கை விடுத்தனர்.
போராட்டத்தின் ஐந்தாவது நாளான ஆகஸ்ட் 31 அன்று மதியம் கோத்தகிரி அனைத்து கட்சிகள்-இயக்கங்கள் சார்பில் அனைத்து கட்சி கூட்டம் நடத்தப்பட்டு, மக்கள் கோரிக்கையை நிறைவேற்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, வட்டாட்சியரிடம் மனுவாக கொடுத்து அதற்கு பதில் அளிக்குமாறும் மனுவில் தெரிவித்திருந்தனர்.


இதனையடுத்து மக்கள் போராட்டத்திற்கு பணிந்த அரசு, அனைத்து கட்சிகள் இயக்கங்கள் சார்பாக வட்டாட்சியரிடம் கொடுக்கப்பட்ட மனுவிற்கு பதில் தருவதாகவும் மனுவை பெற்றுக் கொண்டதாகவும் ஒப்புகை சீட்டில் வட்டாட்சியர் கையொப்பமிட்டுக் அம்பாள் நகருக்கு சாலை அமைத்து தருவதாக வாக்குறுதி கொடுத்தார். இது இப்போராட்டத்தின் முதல் கட்ட வெற்றியாகும். இதனை தொடர்ந்து மக்கள் அதிகாரக் கழகத் தோழர்கள் ஐவரும் தங்களின் உண்ணாநிலை போராட்டத்தை நிறைவு செய்தனர்.
ஐந்து நாள் தொடர்ந்த தொடர் உண்ணா நிலை, தொடர் முழக்கப் போராட்டத்தின் விளைவாக அம்பாள் நகருக்கு சாலை அமைப்பதற்கு அரசு சார்பில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. உடனடியாக அரசு காலம் கடத்தாமல் நில உரிமையாளர்களிடம் நிலத்தை கையகப்படுத்தி அம்பாள் நகருக்கு சாலை அமைத்துத்தர வேண்டும்.
தமிழ்நாடு அரசு அம்பாள் நகருக்கு சாலை அமைத்துத் தரும்வரை அம்பாள் நகர் மக்களுடன் இணைந்து மக்கள் அதிகாரக் கழகம் போராட்டங்களை முன்னெடுக்கும். இப்போராட்டங்களுக்கு அனைத்து ஜனநாயக சக்திகளும், உழைக்கும் மக்களும் ஆதரவுத்தருமாறு கேட்டுக்கொள்கிறோம்.
படிக்க: புதிய ஜனநாயகம்
பார்க்க: வினவு, பெருவிழா
மக்கள் அதிகாரக் கழகம்,
கோத்தகிரி கிளை,
கோவை மாவட்டம்.
9488902202
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram, Threads





