08.10.2026

ஓசூர்: டெல்டா நிறுவன ஒப்பந்தத் தொழிலாளி தீக்குளித்து மரணம் –
முதலாளித்துவ லாப வெறியால் நிகழ்த்தப்பட்ட படுகொலை!

பத்திரிகைச் செய்தி

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே குருபரப்பள்ளியில் செயல்பட்டு வரும் டெல்டா எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தில் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றி வந்த 28 வயதான நாகநாதன் என்ற இளைஞர் தீக்குளித்து உயிரிழந்த சம்பவம் தொழிலாளர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி தாலுகா ஏமனஸ்புரம் கிராமத்தைச் சார்ந்த நாகராஜ் என்பவரின் மகன் நாகநாதன். கடந்து பத்து ஆண்டுகளாக ஓசூரில் வசித்து வந்தார். இவர் கடந்த ஏழு ஆண்டுகளாக “டி.எம்.ஆர். லேபர்” (DMR Labour contract) என்ற ஒப்பந்த நிறுவனத்தின் மூலம் குருபரப்பள்ளியில் உள்ள டெல்டா எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தில் ஒப்பந்தத் தொழிலாளியாகப் பணிபுரிந்து வந்துள்ளார். ஐ.டி.ஐ. ஃபிட்டர் பிரிவில் படித்தவர். இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை.

நிறுவனத்தில் உற்பத்தி அதிகரிப்பு தொடர்பாக ஏற்பட்ட பணிச்சுமை மற்றும் கூடுதல் வேலை நேரம், வேலை நிரந்தரமின்மை, குறைந்த சம்பளம் போன்ற காரணங்களால் மன உளைச்சலில் இருந்துள்ளார்.

இந்நிலையில், கடந்த செப்டம்பர் 27-ஆம் தேதி மதியம் 12:15 மணிக்கு ஓசூர் கோட்டை மாரியம்மன் கோயில் எதிரே பெட்ரோல் ஊற்றி தன் உடலுக்கு தீ வைத்துக் கொண்டார். அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் ஓசூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

பின்னர் நாகநாதன் மேல் சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார். தொடர்ந்து தனியார் மருத்துவமனையிலும் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் கடந்த அக்டோபர் 5 (திங்கட்கிழமை) அன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இவர் உயிரிழக்கும் முன்பு தேன்கனிக்கோட்டை நீதித்துறை நடுவர் பொறுப்பில் உள்ளவரிடம் மரண வாக்குமூலம் அளித்துள்ளார். அதில், டெல்டா எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தில் உற்பத்தி அதிகரிப்பால் பணிச்சுமை, நிரந்தர வேலைவாய்ப்பு இன்மை, குறைந்த சம்பளம் போன்ற நிலைமையே தீக்குளிக்க காரணம் என்பதைக் கூறியுள்ளார்.

டெல்டா எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தின் லாப வெறியே ஒப்பந்தத் தொழிலாளி நாகநாதனின் உயிரிழப்பிற்கு காரணம். தமிழ்நாடு அரசும் தொழிலாளர் ஆணையமும் ஒப்பந்தத் தொழிலாளர்கள் மீதான முதலாளிகளின் கொடூரச் சுரண்டலை வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருக்கின்றன. இதனை மக்கள் அதிகாரக் கழகம் வன்மையாகக் கண்டிக்கிறது.

தமிழ்நாடு அரசே! தொழிலாளர் ஆணையமே!

  • விதிமுறைகளை மீறிய டெல்டா ஆலை நிர்வாகத்தின் மீது கடும் நடவடிக்கை எடு!
  • டி.எம்.ஆர். லேபர் ஒப்பந்த நிறுவனத்தைத் தடை செய்!
  • உயிரிழந்த நாகநாதன் குடும்பத்திற்கு டெல்டா எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்திடமிருந்து உடனடியாக ரூ.1 கோடி இழப்பீடு பெற்றுக் கொடு!
  • ஓசூரில் பணியாற்றி வரும் ஒப்பந்தத் தொழிலாளர்களின் ஊதியம், பணி நேரம், பணிச்சுமை, பணி பாதுகாப்பு என அனைத்தையும் போர்க்கால அடிப்படையில் ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடு!
  • ஒப்பந்தத் தொழிலாளர்களுக்கு பணிப் பாதுகாப்பை உறுதி செய்!
  • நீண்ட காலமாகப் பணியாற்றும் ஒப்பந்தத் தொழிலாளர்களைப் பணி நிரந்தரம் செய்ய உத்தரவிடு!
  • ஒப்பந்தத் தொழிலாளர்களுக்கு குறைந்தபட்ச ஊதியம் ரூ.30,000 வழங்கிடு!


இவண்,
தோழர் இரஞ்சித்,
மாவட்டச் செயலாளர்,
மக்கள் அதிகாரக் கழகம்,
கிருஷ்ணகிரி மாவட்டம்.
8754674757

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram, Threads



 

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க