29.09.2026

பத்திரிகைச் செய்தி

தோழர்களுக்கு வணக்கம்!!

இன்று (29.09.2026) புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணியின் முதலாவது மாநில மாநாடு நடைபெற உள்ளதையொட்டி தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்தில் கிளை மாநாடு பேருற்சாகத்துடன் நடத்தப்பட்டு புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

முதலாவதாக தியாகிகளுக்கு வீரவணக்கம் செலுத்தப்பட்டது.

அடுத்தாக, மாநில ஒருங்கிணைப்புக் குழு தோழர் அறிவு, புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி இதுவரை முன்னெடுத்த அனைத்து போராட்டங்களையும் விளக்கி, அமைப்பு அறிக்கையை விரிவாக விளக்கினார். அமைப்பு அறிக்கை தோழர்களிடம் விளக்கப்பட்டு கிளை மாநாட்டில் ஒருமனதாக ஏற்றுக்கொள்ளப்பட்டது.

அடுத்து, மாநில ஒருங்கிணைப்புக் குழு தோழர் மாறன் புரட்சிகர – மாணவர் இளைஞர் முன்னணியின் அமைப்பு விதிகளை விளக்கினார்‌‌. கூடுதலாக, அமைப்பு கடமை, பொது திசைவழி, பொது வேலைத்திட்டம் ஆகியவற்றை விளக்கினார்.

அமைப்பு விதிகள் தோழர்களிடம் விளக்கப்பட்டு கிளை மாநாட்டில் ஒருமனதாக ஏற்றுக்கொள்ளப்பட்டது.

அடுத்ததாக புதிய கிளை நிர்வாகிகள், ஒருமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டனர். கிளைச் செயலாளராக தோழர் ஷர்மிளா, கிளை இணைச் செயலாளர்களாக தோழர் ஆதி மற்றும் தோழர் தனுஷியா ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

அடுத்து, 11 கிளைத் தீர்மானங்கள் கிளைச் செயலாளர் தோழர் ஷர்மிளா அவர்களால் வாசிக்கப்பட்டு நிறைவேற்றப்பட்டன.

அடுத்து, மாநாடு ஒருங்கிணைப்புக் குழு தோழர் விமல், புதியதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட தோழர்களுக்கு வாழ்த்துரை வழங்கினார்.

இறுதியாக, பாட்டாளி வர்க்க சர்வதேச கீதம் பாடப்பட்டு கூட்டம் நிறைவுற்றது.

இக்கிளைக் கூட்டத்தில் கீழ்க்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன:

1. மாணவர் சங்கத் தேர்தலை நடத்துதல் – ஜனநாயக உரிமைகளை உறுதிப்படுத்துதல்:

டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்தில் மாணவர் சங்கத் தேர்தலை முறையாக நடத்தி, மாணவர்கள் தங்களது பிரதிநிதிகளை ஜனநாயக முறையில் தேர்ந்தெடுக்கும் உரிமையை உறுதிப்படுத்த வேண்டும். மாணவர்கள் தங்களது கோரிக்கைகளை முன்வைப்பதற்கும், போராட்டங்கள் மற்றும் அரசியல் ரீதியான கூட்டங்களை ஜனநாயக முறையில் நடத்துவதற்கும் ஏற்ற வகையில் வளாகச் சூழல் அமைக்கப்பட வேண்டும். மாணவர்களின் கருத்துரிமை, ஒன்றுகூடும் உரிமை மற்றும் ஜனநாயக உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும்.

2. 7.5 சதவீத இடஒதுக்கீட்டின் கீழ் சேரும் மாணவர்களுக்கான விடுதி வசதியை ஏற்படுத்துதல்:

7.5 சதவீத அரசு சிறப்பு உள்இட ஒதுக்கீட்டின் கீழ் பல்கலைக்கழகத்தில் சேரும் மாணவர்களுக்கு போதுமான விடுதி வசதி ஏற்படுத்தப்பட வேண்டும். தற்போது மாணவிகள் தங்கியிருக்கும் விடுதிகளில் நிலவும் அடிப்படை வசதிக் குறைபாடுகள் உடனடியாக சரிசெய்யப்பட்டு, பாதுகாப்பான குடிநீர், உணவு, கழிப்பறை, மின்சாரம், சுகாதாரம் உள்ளிட்ட அனைத்து அடிப்படை வசதிகளும் உறுதிசெய்யப்பட வேண்டும்.

3. பல்கலைக்கழகத்தின் உள்கட்டமைப்பு மற்றும் அடிப்படை வசதிகளை மேம்படுத்துதல்:

பல்கலைக்கழகத்தில் உள்ள கணினி வசதிகள், அரங்குகள், வகுப்பறைகள், கேலரி உள்ளிட்ட அனைத்து உள்கட்டமைப்பு வசதிகளும் முறையாக பராமரிக்கப்பட வேண்டும். பயன்பாட்டில் இல்லாத அல்லது பழுதடைந்த கணிணிகள் மற்றும் பிற உபகரணங்கள் உடனடியாக சரிசெய்யப்பட்டு, மாணவர்களின் கல்விப் பயன்பாட்டிற்கு தேவையான நவீன உள்கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தப்பட வேண்டும்.

4. நிரந்தரப் பேராசிரியர்கள் மற்றும் ஆசிரியர் பணியிடங்களை நிரப்புதல்:

பல்கலைக்கழகத்தில் நீண்டகாலமாக நிலவும் நிரந்தரப் பேராசிரியர் மற்றும் ஆசிரியர் பணியிடங்களின் பற்றாக்குறையை போக்கி, தேவையான நிரந்தர ஆசிரியர் பணியிடங்களை முறையாக நிரப்ப வேண்டும். கல்வியின் தரத்தை உறுதிப்படுத்தும் வகையில் போதுமான எண்ணிக்கையிலான தகுதியான பேராசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் நியமிக்கப்பட வேண்டும்.

5. கேன்டீன் வசதியை மேம்படுத்தி மாணவர்களுக்கு உணவு உண்ணுவதற்கான இடத்தை ஏற்படுத்துதல்:

பல்கலைக்கழக மாணவர்களின் உணவுத் தேவையை கருத்தில் கொண்டு போதுமான கேன்டீன் வசதி ஏற்படுத்தப்பட வேண்டும். மாணவர்கள் வெளியிலிருந்து உணவு கொண்டு வருவதற்கு தேவையற்ற கட்டுப்பாடுகள் விதிக்காமல், மாணவர்களுக்கு தரமான மற்றும் மலிவான உணவு கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும். மேலும், மாணவர்கள் உணவு உண்ணுவதற்கான போதுமான அமர்வு மற்றும் உணவு உண்ணும் இடவசதி ஏற்படுத்தப்பட வேண்டும்.

6. போதைப்பொருள் இல்லாத வளாகத்தை உருவாக்குதல்:

பல்கலைக்கழக வளாகத்திற்குள்ளும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் போதைப்பொருட்களின் பயன்பாடு மற்றும் விற்பனை நடைபெறாத வகையில் உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும். வளாகத்திற்கு அருகிலுள்ள  இடங்களில் சட்டவிரோதமாக போதைப்பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறதா என்பதைக் கண்காணித்து, உரிய சட்ட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். மாணவர்களின் பாதுகாப்பையும் நலனையும் கருத்தில் கொண்டு போதைப்பொருள் இல்லாத வளாகத்தை உருவாக்குவதற்காக பல்கலைக் கழகத்திற்கு அருகில் உள்ள மதுபானக்கடை (TASMAC) அகற்றுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொண்டு மாணவர்களின் பாதுகாப்பை உறுதிசெய்யவேண்டும் .

7. பல்கலைக் கழக துணைவேந்தரை உடனடியாக நியமிக்க வேண்டும்:

துணைவேந்தர் பதவி காலியாக இருக்கும் நிலையில், பல்கலைக்கழகத்தின் நிர்வாகச் செயல்பாடுகள் தடையின்றி நடைபெறும் வகையில் துணைவேந்தர் நியமனத்திற்கான தேடுதல் குழு துரிதமாக செயல்பட்டு உடனடியாக தகுதியான  துணைவேந்தரை நியமனம் செய்ய நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும்.

8. மழைநீர் மற்றும் கழிவுநீர் வடிகால் வசதியை ஏற்படுத்துதல்:

பல்கலைக்கழக வளாகத்தில் மழைக்காலங்களில் மழைநீர் தேங்கி நிற்பதால் மாணவர்கள் மற்றும் பணியாளர்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகின்றனர். எனவே, வளாகத்தில் முறையான மழைநீர் வடிகால் மற்றும் கழிவுநீர் வடிகால் அமைப்புகளை ஏற்படுத்தி, மழைநீர் தேங்கும் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு காண வேண்டும்.

9. சட்டத் தமிழ் பாடத்தை அறிமுகப்படுத்துதல்:

சட்டக் கல்வியில் தமிழ் மொழியின் பயன்பாட்டை மேம்படுத்தும் வகையில், சட்டத் தமிழ் பாடத்தை பாடத்திட்டத்தில் முறையாக அறிமுகப்படுத்த வேண்டும். சட்ட மாணவர்கள் தமிழ் மொழியில் சட்டக் கருத்துகள், சட்ட ஆவணங்கள் மற்றும் சட்ட நடைமுறைகளைப் புரிந்துகொள்ளும் வகையில் சட்டத் தமிழ் தொடர்பான கல்வி வழங்கப்பட வேண்டும்.

10. மாணவர் சேர்க்கை மற்றும் நிர்வாக நடைமுறைகளில் சாதி மற்றும் மத அடிப்படையிலான பாகுபாட்டைத் தவிர்த்தல்:

பல்கலைகழகத்தில் இயங்கிவரும் தேசிய மாணவர் படை (NSS) மற்றும் (NCC) நாட்டுநல பணி திட்டம் இருக்கும் மாணவர்களிடம் சாதி , மதம் போன்ற பிரிவினை ஏற்படுத்தும் வகையிலான கருத்துகளை பரப்புவுதை வன்மையாக கண்டிக்கின்றோம். மாணவர்களின் கல்வி உரிமை மற்றும் சமத்துவ உரிமை பாதுகாக்கப்படும் வகையில் அனைத்து நிர்வாக நடைமுறைகளும் வெளிப்படையாகவும் பாகுபாடற்ற முறையிலும் மேற்கொள்ளப்பட வேண்டும். பல்கலைக்கழகத்தின் கல்விச் சூழல் மதச்சார்பற்ற மற்றும் ஜனநாயகத் தன்மையுடன் பாதுகாக்கப்பட வேண்டும். மாணவர்களிடம் ஒற்றுமை மற்றும் சமுக நல்லிணக்கம் ஏற்ப்படும் வகையில் மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் உரிய வழிகாட்டுதல்கள் மேற்கொள்ள வேண்டும்.

11. சட்டக் கல்விக்கான கட்டாய நுழைவுத் தேர்வு முறையை எதிர்த்தல்:

மருத்துவக் கல்வியில் நடைமுறையில் உள்ள நுழைவுத் தேர்வு முறையைப் போன்ற கட்டாய நுழைவுத் தேர்வு முறையை சட்டக் கல்வியிலும் கொண்டுவரும் முயற்சிகளை முறியடிப்போம். சட்டக் கல்வியைப் பெற விரும்பும் மாணவர்களின் கல்வி வாய்ப்புகள் பாதிக்கப்படாத வகையில், தற்போதுள்ள சேர்க்கை நடைமுறைகளில் தேவையற்ற மாற்றங்களை கொண்டு வருவதை கைவிட வேண்டும்.


இவண்
அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகக் கிளை,
புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி,
தமிழ்நாடு – புதுவை.
9444836642

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram, Threads



விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க