01.10.2026

பத்திரிகைச் செய்தி

தோழர்களுக்கு புரட்சிகர வணக்கம்!!

புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணியின் முதலாவது மாநில மாநாடு நடைபெறுவதைத் தொடர்ந்து “சென்னைப் பல்கலைக்கழகத்தில் கிளை மாநாடு” (30/09/2026) பேருற்சாகத்துடன் நடந்தேறியது.

நிகழ்வின் தொடக்கமாக, தியாகிகளுக்கு வீரவணக்கம் செலுத்தப்பட்டது.

மாநில ஒருங்கிணைப்புக் குழு தோழர் விமல் அவர்கள், புரட்சிகர மாணவர் இளைஞர் – முன்னணி இதுவரை முன்னெடுத்த அனைத்து போராட்டங்களையும் தொகுத்து அறிக்கையை விரிவாக விளக்கினார். அமைப்பு அறிக்கை தோழர்களிடம் கேள்விகள் கேட்கப்பட்டு விளக்கமளிக்கப்பட்டது. கிளை மாநாட்டில் அமைப்பறிக்கை ஏற்றுக்கொள்ளப்பட்டது.

மாநில ஒருங்கிணைப்புக் குழு தோழர் ஆதி, புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணியின் அமைப்பு விதிகளை விளக்கினார்‌‌. கூடுதலாக, அமைப்பு கடமை, பொது திசைவழி, பொது வேலைத்திட்டம் ஆகியவற்றை நேர்த்தியாக விளக்கினார்.

அமைப்பு விதிகள் தோழர்களிடம் கேள்விகள், கருத்துகள் கேட்கப்பட்டு விளக்கமளிக்கப்பட்டது. கிளை மாநாட்டில் ஒருமனதாக ஏற்றுக்கொள்ளப்பட்டது.

புதிய கிளை நிர்வாகிகளை, தோழர் மாறன் முன்மொழிந்தார். அனைத்து தோழர்களிடம் கருத்துகள் கேட்கப்பட்டதன் அடிப்படையில், கிளைச் செயலாளராக தோழர் ஷான், கிளை இணைச் செயலாளர்களாக தோழர் அஞ்சலி மற்றும் தோழர் பூவரசி ஆகியோர் ஒருமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டனர். அனைவருக்கும் இனிப்பு வழங்கப்பட்டது.

24 கிளைத் தீர்மானங்கள் கிளைச் செயலாளர் தோழர் ஷான் அவர்களால் வாசிக்கப்பட்டு நிறைவேற்றப்பட்டன.

மாநாடு ஒருங்கிணைப்புக் குழு தோழர் மாறன், புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட தோழர்களுக்கு வாழ்த்துரை வழங்கினார்.

இறுதியாக, பாட்டாளி வர்க்க சர்வதேசிய கீதம் பாடப்பட்டு கூட்டம் நிறைவுற்றது.

நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்

  1. அண்ணா பல்கலைக்கழகத்தில் வைரஸ் நோய்த்தொற்றால் உயிரிழந்த மூன்று மாணார்களுக்கு ஆழ்ந்த இரங்கல்.
  2. மும்பை ஐ.ஐ.டி.யில் சாதிரீதியான பாகுபாட்டால் உயிரிழந்த மாணவர் சாகித் ரவிந்திராவிற்கு ஆழ்ந்த இரங்கல்.
  3. தமிழ் மொழிக்காக இன்னுயிர் நீர்த்த மொழிப்போர் தியாகிகளுக்கு வீரவணக்கம்.
  4. மாணவர் சங்கத் தேர்தலை நடத்த வேண்டும், பல்கலைக்கழகத்தின் செனட் மற்றும் சிண்டிகேட் குழுக்களில் மாணவர் பிரதிநிதித்துவம் இடம்பெற வேண்டும்.
  5. தோழி விடுதி கட்டுவதைக் கைவிடவேண்டும். அதே இடத்தில் மாணவிகளுக்கான விடுதியைக் கட்டித்தரவேண்டும். பல்கலைக்கழகத்தில் பயிலும் அனைத்து மாணவிகளுக்கும் விடுதி வசதி ஏற்படுத்தித் தரவேண்டும். மேலும், தற்போதுள்ள மாணவிகளின் விடுதிக்குப் பாதுகாப்பான சுற்றுச்சுவர் ஏற்படுத்திதர வேண்டும்.
  6. மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு பல்கலைக்கழகத்தில் இட ஒதுக்கீட்டைச் சரியாக ஒதுக்கவேண்டும். அவர்களின் மேம்பாட்டிற்கான முன்னெடுப்புகளைச் செய்ய வேண்டும்.
  7. மாணவர்களின் அடிப்படை உரிமைகளுக்காகப் போராடுவதைத் தடுக்கும் பல்கலை நிர்வாகத்தைக் கண்டிக்கிறோம்.
  8. நிதிப் பற்றாக்குறையோடு இயங்கும் சென்னை பல்கலைக்கழகத்திற்கு தமிழ்நாடு அரசு மற்றும் ஒன்றிய அரசு நிதி ஒதுக்கவேண்டும்.
  9. சேப்பாக்கம் வளாகத்தில் உள்ள நூலகத்தைப் புதுப்பிக்க வேண்டும். அனைத்து நூலகங்களிலும் கணினி வசதி ஏற்படுத்தித் தரவேண்டும்.
  10. பல்கலைக்கழகத்தில் உள்ள 350க்கும் மேற்பட்ட பேராசிரியர்களின் பணியிடங்களை உடனடியாக நிரப்பவேண்டும். அலுவலர்களின் காலிப்பணியிடங்களையும் நிரப்ப வேண்டும். மேலும், பல்கலைக்கழகத்தில் உள்ள 20க்கும் மேற்பட்ட துறைகளில் துறைத்தலைவர்கள் இல்லை. உடனடியாக காலிப்பணியிடங்களை நிரப்பவேண்டும்.
  11. பல்கலைக்கழகத்தில் சுத்தமான குடிநீர் மற்றும் சுத்தமான கழிப்பறை வசதியினை ஏற்படுத்தித் தரவேண்டும். மேலும், கூடுதல் கழிப்பறைகள் அமைத்துதர வேண்டும். அனைத்து பெண்கள் கழிவறைகளிலும் பிற மாணவர்களுக்கு தொற்று ஏற்படா வண்ணம் சானிட்டரி நாப்கின் போடுவதற்குக் குப்பைத்தொட்டி அமைத்துதர வேண்டும்.
  12. சாதி புத்தியுடன் மாணவர்களை அணுகும் பதிவாளர் ரீட்டா ஜானை கண்டிக்கிறோம்.
  13. தோழர் தீரனுக்கு அனுப்பிய சேர்க்கை ரத்து தொடர்பான கடிதத்தைத் திரும்பப்பெற வேண்டும். மேலும், தீரனின் பட்டப்படிப்பை உறுதிசெய்து விடுதியில் அனுமதிக்க வேண்டும்.
  14. எஸ்.சி. / எஸ்.டி. மாணவர்களுக்கான கிரிவன்ஸ் (grevance) மீட்டிங்கை வருடத்திற்கு நான்குமுறை நடத்த வேண்டும்.
  15. பல்கலைக்கழகத்தில் ஏற்படும் சாதிய பாகுபாடு, மதபாகுபாடு, பாலின சமத்துவமின்மை மற்றும் பெண்களுக்கு எதிரான பாலியல் அத்துமீறல்களுக்கு எதிராக சமூக அக்கறைகொண்ட மாணவர்களை உள்ளடக்கிய குழுவினை அமைக்க வேண்டும்.
  16. விருந்து நிலை விரிவுரையாளர்களின் மாத ஊதியத்தை உயர்த்தி வழங்க வேண்டும்.
  17. வளாகத்தில் உள்ள தூய்மைப் பணியாளர்கள் மற்றும் பாதுகாவலர்களின் ஊதியத்தை 15,000 ஆக உயர்த்தி வழங்க வேண்டும்.
  18. பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சி மாணவர்களுக்கு வரும் உதவித்தொகையைத் தடையின்றி வழங்கவேண்டும். அவர்களுக்கெதிராக ஏற்படும் சாதிய ரீதியான பாகுபாட்டினை நிறுத்த வேண்டும்.
  19. தனியார் பல்கலைக்கழக திருத்த சட்ட மசோதாவைத் திரும்பப்பெற வேண்டும்.
  20. ஆபாச இதிகாசம், இலக்கியம், நாடகங்கள், பாடல்கள், கதைகள் மற்றும் புராணங்களைப் பாடத்திட்டத்திலிருந்து நீக்கவேண்டும்.
  21. சமூகநீதி விடுதிகளில் அடிப்படை வசதிகள் அனைத்தையும் செய்துதர வேண்டும்.
  22. தேவதாசி முறையை ஆதரித்துப் பேசிய நவீனத் தமிழ் இலக்கியவாதி என தன்னைத்தானே துதிபாடிக்கொள்ளும் ஜெயமோகனை வன்மையாகக் கண்டிக்கிறோம்.
  23. சமூகவியல் இலக்கியங்களை தனி பாடத்திட்டமாக வைக்கவேண்டும்.
  24. மருத்துவம், பொறியியல் மற்றும் இதர உயர்கல்வி படிப்புகளில் தமிழை முதன்மைப் பாடமாக வைக்க வேண்டும்.


இவண்
சென்னைப் பல்கலைக்கழகக் கிளை,
புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி,
தமிழ்நாடு – புதுவை.
9444836642

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram, Threads



1 மறுமொழி

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க