01.10.2026
கடலூர் சிப்காட் விரிவாக்கத்திற்கு நெல், நிலக்கடலை, வெட்டிவேர் ஆகிய பயிர்கள் விளையும் செழிப்பான நிலங்களைக் கையகப்படுத்துவதை உடனே நிறுத்து!
பத்திரிகைச் செய்தி
கடலூர் மாவட்டம் தியாகவல்லி, குடிகாடு, நொச்சிக்காடு உள்ளிட்ட சுற்று வட்டார கிராமங்களில் கடலூர் சிப்காட் புதிய தொழிற்பூங்கா அமைக்க கடந்த 2025 ஆம் ஆண்டு 1,097 ஏக்கர் அளவிலான நிலங்களைக் கையகப்படுத்த அரசு அறிவித்திருந்த நிலையில், தற்போது செப்டம்பர் 1, 2026 ஆம் தேதி கூடுதலாக 164.20 ஏக்கர் கூடுதல் நிலத்தைக் கையகப்படுத்த அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பிற்கு எதிராகவும் புதிய சிப்காட்டிற்கு எதிராகவும் மக்கள் தொடர்ந்து போராடி வருகின்றனர்.
தியாகவல்லி, குடிகாடு, நொச்சிக்காடு மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் நெல், நிலக்கடலை, வெட்டிவேர் போன்ற பயிர்கள் விளையும் செழிப்பான விளைநிலங்கள் உள்ளன. இந்த அறிவிப்பை எதிர்த்து கடந்த செப்டம்பர் 17ஆம் தேதி நொச்சிக்காடு கிராம மக்கள் தங்கள் வீடுகளில் கருப்பு கொடி ஏற்றி போராட்டம் நடத்தியுள்ளனர். மேலும் செப்டம்பர் 28 ஆம் தேதி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளனர்.
ஏற்கெனவே, 1980-களில் விவசாயிகளிடமிருந்து நிலத்தைக் கையகப்படுத்தி 2,625 ஏக்கர் பரப்பளவில் தற்போது இயங்கும் சிப்காட் அமைக்கப்பட்டது. அப்போது கையகப்படுத்தப்பட்ட இடங்களுக்கு இன்று வரை முழுமையான இழப்பீடு வழங்கப்படாமல் விவசாயிகள் வஞ்சிக்கப்பட்டு வருகின்றனர்.
இந்த சிப்காட் விரிவாக்கத்தை மக்கள் எதிர்ப்பதென்பது வெறுமனே விவசாய நிலங்கள் கையகப்படுத்தப்படுகிறது என்பதால் மட்டுமல்ல. தற்போது இயங்கி வரும் சிப்காட்டில் இரசாயனம், மருந்து, உரம் உள்ளிட்டவற்றைத் தயாரிக்கும் தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன. இவற்றால் மக்களின் அன்றாட வாழ்வு பாதிக்கப்படுவதோடு நிலத்தடி நீர் மாசடைவது, மீன்வளம் குறைவது, விவசாயம் குன்றுவது, மக்களுக்கு தோல் நோய்கள், சுவாசக் கோளாறுகள், மலட்டுத்தன்மை, கருச்சிதைவு போன்ற பேரபாயங்களை ஏற்படுத்தி வருகிறது. இந்த நச்சு ஆலைகளை அகற்றவே தொடர்ந்து போராடிவரும் நிலையில், இது போன்ற இன்னொரு சிப்காட் அமைவதைத் தடுப்பதற்காகவும் தான் மக்கள் இந்த சிப்காட் விரிவாக்கத்தை எதிர்த்துப் போராடுகின்றனர்.
மக்களின் இப்போராட்டத்தை மக்கள் அதிகாரக் கழகம் ஆதரிக்கிறது.
- சிப்காட்டிற்காக கூடுதலாக நிலத்தைக் கையகப்படுத்துவதை நிறுத்து!
- ஏற்கெனவே கையகப்படுத்தப்பட்ட நிலங்களுக்கு முழுமையான இழப்பீடு வழங்கு!
- இயற்கை வள பாதிப்பு, உயிர்க்கொல்லி நோய்கள் ஆகியவற்றிற்கு அடிப்படையாக இருக்கும் கடலூர் சிப்காட் நச்சு ரசாயன தொழிற்சாலைகளை உடனே அகற்றிடு!
![]()
தோழமையுடன்
மக்கள் அதிகாரக் கழகம்,
கடலூர் மாவட்டம்.
94438 49915
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram, Threads





