கார்கேவின் பேச்சு புறக்கணிக்கப்படுவது ஏன்?

“அனைத்து மாநில சட்டமன்றங்களையும் கலைக்க வேண்டும்” என்று கார்கே கூறும்போது, பா.ஜ.க. ஆளும் மாநிலங்கள் மட்டுமல்ல காங்கிரசு ஆளும் மாநிலச் சட்டமன்றங்களும்தானே அதில் அடங்கும்?. அப்படியானால் இந்தக் கலைப்புப் பட்டியலில் இருந்து விஜய் தலைமையிலான தமிழ்நாடு அரசு மட்டும் எப்படி வெளியே நிற்க முடியும்? இதற்கு பதில் சொல்ல வேண்டிய முதல் கட்சி தமிழ்நாடு காங்கிரசுதான்.

தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலக வேண்டும் என்று தமிழ்நாட்டிலுள்ள இந்தியா கூட்டணிக் கட்சிகள் கடந்த அக்டோபர் 3 அன்று சென்னையில் தீர்மானம் நிறைவேற்றின. அதே நாளில், காங்கிரசு தேசியத் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே அதையும் தாண்டிச் சென்று, தற்போதைய மக்களவையையும் மாநில சட்டமன்றங்களையும் கலைத்து, வாக்குச்சீட்டு முறையில் புதிதாகத் தேர்தல் நடத்த வேண்டும் என்று கூறினார். ஆனால், மாலைக்குள் இந்திய அளவில் பெரிய அரசியல் செய்தியாக மாறிய கார்கேவின் இக்கோரிக்கையைப் பற்றி, தமிழ்நாட்டு காங்கிரசோ அதன் கூட்டணிக் கட்சிகளோ இரவு வரை எந்தக் கருத்தும் சொல்லாமல் கள்ள மௌனம் சாதித்துள்ளனர்.

கர்நாடகத்தின் கலபுர்கியில் செய்தியாளர்களிடம் பேசிய கார்கே, நாட்டில் நடைபெறும் தேர்தல்களை “சட்டவிரோதமானவை” என்று சாடினார். மோடியை “சட்டவிரோதமான பிரதமர்”, அமித்ஷாவை “சட்டவிரோதமான அமைச்சர்” என்று குறிப்பிட்டதுடன், மாநில முதல்வர்களையும் அதே வரிசையில் வைத்தார். மக்களவையையும் மாநில சட்டமன்றங்களையும் கலைத்து, வாக்குச்சீட்டில் புதிதாகத் தேர்தல் நடத்த வேண்டும் என்பதே அவரது கோரிக்கை. “பிசினஸ் ஸ்டாண்டர்ட்” இதழ் தனது இணையப்பக்கத்தில், பிற்பகல் 3.57 மணிக்கே இதை பி.டி.ஐ. (PTI) செய்தியாக வெளியிட்டது.

செப்டம்பர் 30-ஆம் தேதியே மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களுக்குப் பதிலாக மீண்டும் வாக்குச்சீட்டு முறையில் தேர்தல் நடத்த வேண்டும் என்று கார்கே கூறியிருந்தார். அதை இந்து தமிழ் திசை உள்ளிட்ட தமிழ் ஊடகங்களும் செய்தியாக வெளியிட்டிருந்தன. அக்டோபர் 3 அன்று அவர் இன்னொரு படி மேலே சென்று, “இப்போது இருக்கும் அவைகளையே (நாடாளுமன்ற மக்களவை, சட்டமன்றங்கள்) கலைத்துவிட்டு மீண்டும் தேர்தல் நடத்துங்கள்” என்ற இடத்துக்கு முன்னேறிவிட்டார்.

“அனைத்து மாநில சட்டமன்றங்களையும் கலைக்க வேண்டும்” என்று கார்கே கூறும்போது, பா.ஜ.க. ஆளும் மாநிலங்கள் மட்டுமல்ல காங்கிரசு ஆளும் மாநிலச் சட்டமன்றங்களும்தானே அதில் அடங்கும்?. அப்படியானால் இந்தக் கலைப்புப் பட்டியலில் இருந்து விஜய் தலைமையிலான தமிழ்நாடு அரசு மட்டும் எப்படி வெளியே நிற்க முடியும்? அனைத்து மாநில முதல்வர்களையும் தனது குற்றச்சாட்டுக்குள் கொண்டுவரும் கார்கேவின் பொதுக் கூற்றில் தமிழ்நாடு முதலமைச்சருக்கு மட்டும் தனி விலக்கு எங்கே இருக்கிறது? இதற்கு பதில் சொல்ல வேண்டிய முதல் கட்சி தமிழ்நாடு காங்கிரசுதான்.

“வரலாற்றுச் சிறப்புமிக்க நாள்”!

அதே அக்டோபர் 3 அன்று சென்னை சத்தியமூர்த்தி பவனில் காங்கிரசு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, விடுதலைச் சிறுத்தைகள், ம.தி.மு.க., இந்திய யூனியன் முஸ்லிம் லீக் உள்ளிட்ட இந்தியா கூட்டணிக் கட்சிகள் கூடின. இதில் த.வெ.க-வையும் இணைத்துக் கொண்டார்கள். இக்கூட்டத்தில் ஞானேஷ் குமார் பதவி விலக வேண்டும், எஸ்.ஐ.ஆர்-க்கு எதிராக மாவட்ட அளவில் போராட்டங்கள் நடத்த வேண்டும் என்று முடிவு செய்ததாக மாணிக்கம் தாகூர் பத்திரிகைச் செய்தி வெளியிட்டார்.

ஞானேஷ் குமார் பதவி விலக வேண்டுமெனக் கோரும் திசைவிலகல் அரசியலுக்கு தாங்கள் இரையாக மாட்டோமெனக் கூறிக் கொண்டிருந்த, பா.ஜ.க. எதிர்ப்பு பற்றி இதுவரை வாயே திறக்காத த.வெ.க. இந்தக் கூட்டத்தில் பங்கேற்றதை தமிழ்நாடு காங்கிரசு தலைவர் மாணிக்கம் தாகூர் “வரலாற்றுச் சிறப்புமிக்க நாள்” என்று வரவேற்றார். அதாவது, தங்களுக்கு அமைச்சர் பதவி கொடுத்ததையே பா.ஜ.க. எதிர்ப்புக்கான அடையாளமாக அவர்கள் கருதிக் கொண்டிருக்கிறார்கள் போலும்.

மதுராந்தகம் இடைத்தேர்தல் பிரச்சாரத்தில் பேசுகையில், இதை வெளிப்படையாகவே சொல்லி விட்டார் வி.சி.க.தலைவர் திருமாவளவன். காங்கிரசைக் கூட்டணியில் சேர்த்துக்கொள்ளும் ஒரு கட்சி எப்படி ஆர்.எஸ்.எஸ். வளர்ப்பாகவோ, பா.ஜ.க-வின் பி டீமாகவோ இருக்க முடியும்? என மிக ‘முக்கியமான’  ‘வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த’ கேள்வியை எழுப்பியிருக்கிறார் திருமா.

சென்னை கூட்டம் நடைபெற்றுக் கொண்டிருந்த நேரத்திலேயே, மோடி – அமித்ஷா மீது கார்கே முன்வைத்த ‘சட்டவிரோத’ பிரதமர், உள்துறை அமைச்சர் என்னும் விமர்சனங்கள் வெளியாகிவிட்டன. மாலைக்குள் மக்களவை, மாநில சட்டமன்றங்களைக் கலைத்து மறுதேர்தல் நடத்த வேண்டும் என்ற கார்கேவின் முழுக் கோரிக்கையையும் ஆங்கில ஊடகங்களில் வெளியாகத் தொடங்கிவிட்டது. அதற்குப் பிறகும் தமிழ்நாடு காங்கிரசு தலைவர் செய்தியாளர்களிடம் பேசினார். அதாவது, மாலை 6.06 மணிக்கு வெளியான “டைம்ஸ் ஆப் இந்தியா” செய்தியில், இந்தியா கூட்டணியில் த.வெ.க. சேர்ந்தது, ஞானேஷ் குமார் பதவி விலக வேண்டும், எஸ்.ஐ.ஆர்-க்கு எதிராகப் போராட வேண்டும் என்பதையெல்லாம் மாணிக்கம் தாகூர் பேசியது பதிவாகியிருக்கிறது. ஆனால் தனது அகில இந்தியத் தலைவர் மக்களவையையும் மாநில சட்டமன்றங்களையும் கலைக்க வேண்டும் என்று கூறியிருப்பதைப் பற்றி ஒரு வார்த்தையும் பேசவில்லை.

ஞானேஷ் குமார் பதவி விலக வேண்டும் என்று கூறுவதில் தமிழ்நாடு காங்கிரசுக்கு தயக்கம் இல்லை. எஸ்.ஐ.ஆர். எதிர்ப்பு, தேர்தல் ஆணையத்திற்கு எதிரான போராட்டம், வாக்குச்சீட்டு முறை ஆகியவற்றையும் பேச முடிகிறது. ஆனால் அதே குற்றச்சாட்டுகளிலிருந்து கார்கே “இந்தத் தேர்தலால் உருவான அவைகளையே கலைத்துவிட்டு மீண்டும் தேர்தல் நடத்த வேண்டும்” என்ற முடிவுக்கு வந்ததும் அமைதியாகி விடுகிறார்கள். கார்கே சொல்வது சரி என்றால் தமிழ்நாடு சட்டமன்றத்தையும் கலைக்கக் கோர வேண்டும்; தவறு என்றால் அதை வெளிப்படையாக மறுக்க வேண்டும். இரண்டையும் செய்யாமல் பா.ஜ.க-வை ‘பாயாசம் செய்து குடித்துக் கொண்டிருக்கும்’ விஜய், இந்தியா  கூட்டணியில் சேர்ந்ததை மட்டும் “வரலாற்றுச் சிறப்புமிக்க நாள்” என்று கொண்டாடிக் கொண்டிருக்கிறார் எனில், அவரது நோக்கம் என்ன?

திருமாவளவன் நிலைப்பாடு என்ன?

கூட்டணிக் கட்சிகளின் கூட்டம் முடிந்து பேட்டியளித்த திருமாவளவன், ஞானேஷ் குமார் பதவி விலக வேண்டும் என்றும், அக்டோபர் 13 முதல் 15 வரை தமிழ்நாட்டில் போராட்டங்கள் நடைபெறும் என்றும், த.வெ.க-வும் அந்தப் போராட்டத்தில் கலந்துகொள்ளும் என்றும் கூறினார். அதே பேட்டியில், கார்கே தலைமையில் நடந்த இந்தியா கூட்டணி கூட்டத்தின் முடிவுகளையும், அனைத்து ஜனநாயக சக்திகளும் ஒன்றிணைந்து போராட வேண்டும் என்ற கார்கேவின் அழைப்பையும் விரிவாகச் சொல்கிறார். ஆனால் அதே நாளில் கார்கே தனியாக முன்வைத்த “மக்களவையையும் மாநில சட்டமன்றங்களையும் கலைத்து, வாக்குச்சீட்டில் மறுதேர்தல் நடத்த வேண்டும்” என்ற கோரிக்கையை அவர் தனது பேட்டியில் எடுத்துக்கொள்ளவில்லை.

கார்கேவின் முழுக் கூற்று வெளியாகி இரவு வரை சென்ற பிறகும், அவரது கோரிக்கை குறித்து வி.சி.க-விடம் இருந்தோ மற்ற தமிழ்நாட்டு இந்தியா கூட்டணிக் கட்சிகளிடம் இருந்தோ எந்தத் தெளிவான நிலைப்பாடும் வெளியாகவில்லை. தேர்தல் ஆணையரின் பதவியைப் பற்றி ஆவேசமாகப் பேசும் தமிழ்நாட்டுக் கூட்டணிக் கட்சிகள், தாங்கள் அங்கம் வகிக்கும் அல்லது ஆதரிக்கும் சட்டமன்றத்தையே கலைக்க வேண்டும் என்று தங்கள் கூட்டணியின் அகில இந்தியத் தலைவர் கோரும்போது மட்டும் கள்ள மௌனம் சாதிக்கின்றனர்.

இது எத்தனை பெரிய செய்தி, இந்நேரம் தமிழ்நாட்டு ஊடகங்களில் பற்றியெரிந்திருக்க வேண்டாமா? கட்சிகள் எல்லாம் கருத்துகளைச் சொல்லி சூடுபறக்க விவாதித்திருக்க வேண்டாமா? ஒன்றுமே நடக்கவில்லை. அதற்கான காரணம் எளிதானது. இதுவரை தங்களுக்குக் கிடைக்காத அமைச்சர் பதவிகளை விஜய் கொடுத்திருப்பது மட்டுமே; எக்காரணம் கொண்டும் அதை இழந்துவிட இவர்களுக்கு விருப்பமில்லை என்பதன் வெளிப்பாடே இந்தப் புறக்கணிப்பு. அதனால்தான் இடைத்தேர்தல் மும்முரத்தில் இருப்பதாக நடித்துக் கொண்டிருக்கிறார்கள்.


படிக்க: மேற்குவங்கம்: திருடப்பட்ட தேர்தல் வெற்றி


செய்தியானது எது? பின்னுக்குத் தள்ளப்பட்டது எது?

மக்களவையையும் மாநில சட்டமன்றங்களையும் கலைத்து மறுதேர்தல் நடத்த வேண்டும் என்று நாட்டின் பிரதான எதிர்க்கட்சித் தலைவர் கோரியதை, பிசினஸ் ஸ்டாண்டர்ட் இணையதளம் “அனைத்து தேர்தல்களும் சட்டவிரோதமானவை” (all polls illegal) என்று தலைப்பிட்டு முதன்மைச் செய்தியாக்கியது. அகில இந்திய ஊடகங்களில் அது உடனடியாகப் பெரிய அரசியல் செய்தியாகியது.

ஆனால், தமிழ்நாட்டிலோ அதே நாளில் இந்தியா கூட்டணியில் த.வெ.க. சேர்ந்ததுதான் பெரிய செய்தியானது. மாணிக்கம் தாகூரின் “வரலாற்றுச் சிறப்புமிக்க நாள்” என்ற ‘பொன்மொழி’  செய்தியானது. ஞானேஷ் குமார் பதவி விலகல், தமிழ்நாட்டின் போராட்டங்கள் ஆகியவை விரிவாக வந்தன. எல்லாம் சரிதான். ஆனால், மக்களவையையும் அனைத்து மாநில சட்டமன்றங்களையும் கலைக்க வேண்டும் என்று கார்கே கூறியது இவற்றைவிடச் சிறிய அரசியல் செய்தியா?

ஒருசில தமிழ் இணைய ஊடகங்கள் கார்கேவின் செய்தியைப் பதிவு செய்திருந்தாலும், பெரும்பாலான பிரதான தமிழ் ஊடகங்கள் கார்கேவின் “சட்டமன்றங்களைக் கலைத்து மறுதேர்தல்” கோரிக்கையைத் திட்டமிட்டே இருட்டடிப்பு செய்துள்ளன. தற்போதைய சட்டமன்றத்தையும் அரசையும் நேரடியாகத் தொடக்கூடிய செய்தியின் கூர்மையான பகுதியை அவை பொதுவிவாதத்தின் மையத்திற்கே வரவிடாமல் அமுக்கிவிட்டன. அந்தளவுக்கு ‘விஜய்’ மோகத்தில் தமிழ்நாட்டு ஊடகங்கள் மற்றும் கட்சிக்களின் நிர்வாகிகள் ஊறித்திளைக்கிறார்கள்.

கார்கேவின் பேச்சு வெறும் முழக்கமா?

அனைத்து தேர்தல்களும் சட்டவிரோதமானவை; மக்களவையையும் மாநில சட்டமன்றங்களையும் கலைத்து வாக்குச்சீட்டில் மறுதேர்தல் நடத்த வேண்டும் என்பது காங்கிரசின் அரசியல் நிலைப்பாடு என்றால், அது கலபுரகி செய்தியாளர் சந்திப்புடன் முடிந்துவிடுவதை ஏற்க முடியாது.

காங்கிரசு அதைத் தனது அதிகாரப்பூர்வக் கோரிக்கையாக முன்வைக்க வேண்டும். அதன் மாநிலக் கட்சித் தலைமைகளும் அணிகளும் இதை மக்களிடம் எடுத்துச் செல்ல வேண்டும். இந்தியா கூட்டணிக் கட்சிகளிடம் அதை விவாதத்துக்கு வைக்க வேண்டும். அதற்கான போராட்டத்தையும் நடத்த வேண்டும். ஒருபுறம் தற்போதைய சட்டமன்றங்களையும் அரசுகளையும் வழக்கம்போல நடத்திக்கொண்டு, மறுபுறம் அகில இந்தியத் தலைவர் மட்டும் “அனைத்தையும் கலைக்க வேண்டும்” என்று பேசினால், அந்தக் கூற்றின் அரசியல் வீச்சுக்கு  சொந்தக் கட்சியிலேயே மதிப்பில்லை என்றுதான் அர்த்தம்.

காங்கிரசுக்கு  இதுவொன்றும் புதிதல்ல. வாக்குத்திருட்டு பற்றி கடந்த காலத்திலும் ராகுல்காந்தி கரடியாய்க் கத்தியபோதும்கூட மாநிலக் காங்கிரஸ் கட்சியினர் அதைக் காதிலேயே வாங்கிக்கொள்ளாமல், தங்களுக்குத் தோன்றும் ‘வரலாற்றுச் சிறப்புகளில்’ மூழ்கி முத்தெடுக்கும் திருப்பணியில் ஈடுபட்டிருந்தவர்கள்தான்.

எனவே, ஞானேஷ் குமார் பதவி விலக வேண்டும் என்பதை மட்டும் திரும்பத் திரும்பக் கூறிக் கொண்டிருப்பதால் பயனில்லை. தேர்தல்கள் சட்டவிரோதமானவை என்று கார்கே கூறுகிறாரெனில், அத்தேர்தல்களால் உருவான அவைகளையும் அரசுகளையும் என்ன செய்வது என்பதையும் காங்கிரசு சொல்ல வேண்டும். இல்லையெனில், கார்கேவின் பேச்சு, ஒரு வெற்று செய்தியாளர் சந்திப்பு மட்டுமே என ஊற்றி மூடிவிட்டு, பா.ஜ.க-வுக்கு நோகாத வழக்கமான ‘ஜனநாயக’ சடங்குகளைச் செய்து கொண்டிருக்க வேண்டும்.

நாடெங்கும் இளைஞர்கள் மத்தியில் ஞானேஷ் குமார் பதவி விலக வேண்டும்; எஸ்.ஐ.ஆர். ரத்து செய்யப்பட வேண்டும் என்பது போன்ற முழக்கங்கள் முன்னேறி வருகையில், தமிழ்நாட்டில் மட்டும் மந்தமான போக்கு நிலைகொண்டிருக்கிறது. அதற்கு, ஆளும் அரசை ஆதரிக்கும் அரசியல் கட்சிகள்தான் முதன்மைப் பொறுப்பேற்க வேண்டும். அதிலும் குறிப்பாக, த.வெ.க. ஆட்சியில் பங்கெடுத்த பின், பா.ஜ.க. எதிர்ப்பையே மறந்துபோன, பா.ஜ.க. எதிர்ப்பு குறித்தே வாய்திறக்க மறுக்கும் வி.சி.க-வும் அவர்களின் கூட்டணிக் கட்சிகளும்தான் முக்கியப் பொறுப்பாளிகள். நீட் எதிர்ப்புப் போராட்டத்திலும் ஊக்கமாகப் பங்கேற்க மறுத்த இவர்கள், இப்போது மோடி அரசின் பலவீனமான சூழலிலும், தங்கள் இருப்பைக் காப்பாற்றிக் கொள்ளும் வாய்ப்பையும் கூட கைவிட்டு வேடிக்கை பார்க்கிறார்கள். இனி ஜனநாயகம் பற்றி பேச இவர்களுக்கு என்ன தகுதி இருக்கிறது என்பதுதான் தமிழ்நாட்டு மக்கள் எழுப்ப வேண்டிய கேள்வி.

தமிழ்ச்சுடர்

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram, Threads



விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க