
08.10.2026
பத்திரிகைச் செய்தி
புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணியின் முதல் மாநில மாநாடு அக்டோபர் 15 -ல் நடைபெற உள்ளதை ஒட்டி (06/10/2026) நெல்லை தூத்துக்குடி மாவட்ட முதல் அமைப்பு மாநாடு சிறப்பாக நடந்து முடிந்தது.
இதில் முதலாவதாக தியாகிகளுக்கு வீர வணக்கம் செலுத்தப்பட்டு மாநாடு துவங்கியது.
அடுத்ததாக, புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணியின் அமைப்பு அறிக்கை தோழர்களுக்கு விளக்கப்பட்டு அனைவராலும் ஏற்றுக் கொள்ளப்பட்டது.
அடுத்ததாக அமைப்பு விதிகள் விளக்கப்பட்டு அனைத்து தோழர்களாலும் ஏற்றுக்கொள்ளப்பட்டது.
அதற்கடுத்ததாக, புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி நெல்லை தூத்துக்குடி மாவட்ட பிரதிநிதிகள் முன்மொழியப்பட்டு அனைத்து தோழர்களாலும் தேர்வு செய்யப்பட்டனர் .
நெல்லை தூத்துக்குடி மாவட்ட செயலாளராக தோழர் விஜய் அவர்களும், இணைச் செயலாளராக தோழர் கயல் அவர்களும், தேர்வு செய்யப்பட்டனர்.
நெல்லை-தூத்துக்குடி மாவட்ட புதிய நிர்வாகிகளுக்கு வாழ்த்துரை வழங்கும் நிகழ்வு நடைபெற்றது.
மக்கள் அதிகாரக் கழகத்தின் நெல்லை -தூத்துக்குடி மாவட்ட செயலாளர் தோழர் தாளமுத்து செல்வம் அவர்களும் மக்கள் அதிகாரக் கழகத்தின் நெல்லை தூத்துக்குடி மாவட்ட இணைச் செயலாளர் தோழர் தமிழ்வேந்தன் அவர்களும் தோழர்களுக்கு வாழ்த்துரை வழங்கி உற்சாகப்படுத்தினர்.
அதனை அடுத்து தோழர்கள் அனைவருக்கும் இனிப்பு வழங்கி கொண்டாடப்பட்டது.
முதல் மாவட்ட மாநாட்டில் கலந்துகொண்ட தோழர்கள் அனைவருக்கும் புத்தகம் பரிசாக வழங்கப்பட்டது.
நெல்லை தூத்துக்குடி மாவட்ட மாநாட்டின் 14 தீர்மானங்கள் வாசிக்கப்பட்டு அனைத்து தோழர்களாலும் ஏற்றுக்கொள்ளப்பட்டது.
இறுதியாக, பாட்டாளி வர்க்க சர்வதேசகீதம் பாடப்பட்டு மாவட்ட மாநாடு நிறைவடைந்தது.
தீர்மானங்கள்:
- வகுப்பறைகளில் முறையாக மின்விசிறிகள், ப்ரொஜெக்டர்கள், மேசைகள், கல்லூரி மற்றும் பள்ளி வளாகங்களில் மைதானம், சுற்றுச் சுவர் உள்ளிட்ட உள்கட்டமைப்பு வசதிகளை செய்து கொடு!
- வெளியூரிலிருந்து வந்து கல்வி பயிலும் மாணவர்கள் விடுதி இல்லாத காரணத்தினால் அதிகப்படியான கட்டணம் செலுத்தி தனியார் விடுதியில் தங்கும் நிலை உள்ளது. மாணவர்களுக்கான விடுதி வசதிகள் செய்து கொடு!
- சமூக நீதி விடுதிகளில் தரமான உணவு, குடிநீர் உள்ளிட்ட அடிப்படை சுகாதார வசதிகளை முறையாக செய்து கொடு! மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்!
- பள்ளிகளில் மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப போதுமான ஆசிரியர்களை நியமித்திடு!
- அரசுப் பள்ளி, கல்லூரிகளில் ஆசிரியர்களை ஒப்பந்த முறையில் பணியமர்த்தப்படுவதை இரத்து செய். அவர்களை நிரந்தரமாக்கு!
- மருத்துவ மாணவர்களுக்கான நீட் தேர்வு, ஆயுஷ் மருத்துவ மாணவர்களுக்கான தேசிய உரிமத்தேர்வை (நெக்ஸ்ட் தேர்வு) இரத்து செய்!, சட்டக்கல்லூரி மாணவர்களுக்கான நுழைவுத்தேர்வு அறிவிப்பை இரத்து செய்!
- பாளையங்கோட்டை சித்த மருத்துவக் கல்லூரிக்கு உரிய நிலத்தை பறிக்காதே. சித்த மருத்துவக் கல்லூரியை விரிவுபடுத்து! சித்த மருத்துவ பல்கலைக்கழகம் அமைத்திடு!
- கல்லூரி மற்றும் பள்ளிகளில் மாணவர் சங்கத் தேர்தலை முறையாக நடத்தி, மாணவர்கள் தங்களது பிரதிநிதிகளை ஜனநாயக முறையில் தேர்ந்தெடுக்கும் உரிமையை உறுதிப்படுத்திடு!
- பல்கலைக்கழகத்தின் செனட் மற்றும் சிண்டிகேட் குழுக்களில் மாணவர் பிரதிநிதித்துவம் இடம்பெற வழிவகை செய்திடு!
- பள்ளி, கல்லூரி அருகில் உள்ள சாலைகளில் வேகத்தடை ஏற்படுத்திடு. தேவைக்கேற்ப பேருந்து நிறுத்தம் ஏற்பாடு செய்து நிழற்குடை அமைத்திடு!
- பள்ளி, கல்லூரிகளைச் சுற்றியுள்ள பகுதிகளில் போதைப்பொருட்கள் பயன்பாடு மற்றும் விற்பனை நடைபெறாத வகையில் உரிய நடவடிக்கைகள் எடுத்திடு!
- பள்ளி, கல்லூரிகளில் மாணவர்கள் நெற்றியில் சாதி அடையாளங்கள், கைகளில் வண்ணக்கயிறுகள் அணிவதை தடுத்திடு!
- பள்ளி, கல்லூரிகளில் சாதியை ஊக்குவிக்கும் ஆசிரியர்களை பணிநீக்கம் செய்திடு!
- பள்ளிகளில் பெற்றோர் – ஆசிரியர் கழக கூட்டத்தை முறையாக நடத்தி மாணவர்களின் கல்வி உரிமையை காத்திடு!
![]()
இவண்
புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி,
நெல்லை – தூத்துக்குடி மாவட்டங்கள்.
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram, Threads











