குஜராத்: அதானி மின்திட்டத்திற்கு எதிராகப் போராடிய விவசாயிகள் மீது வழக்கு!

இத்திட்டத்திற்கு எதிராக செப்டம்பர் 17 அன்று ஜெட்பர் கிராமத்தில் நடைபெற்ற போராட்டத்தில் விவசாயிகள் மோடி மற்றும் அமித்ஷாவின் உருவபொம்மைகளை எரித்தனர். இதையடுத்து தங்கள் வாழ்வாதாரம் காக்கப் போராடிய விவசாயிகளின் மீது, அதானிக்காகப் பொய் வழக்கைப் போட்டுள்ளது குஜராத் மாநில பா.ஜ.க. அரசு.

அதானி மின்திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து மோடி, அமித்ஷாவின் உருவ பொம்மைகளை எரித்த விவசாயிகள்.

குஜராத்தின் மோர்பி மாவட்டத்தில் அதானி குழுமத்துடன் தொடர்புடைய மின்சாரப் பரிமாற்றத் திட்டத்திற்கு எதிராகப் போராடிவரும் 21 விவசாயிகள் மீது போலீசு வழக்குப் பதிவு செய்துள்ளது அம்மாநில பா.ஜ.க. அரசு. செப்டம்பர் 17 அன்று ஜெட்பர் கிராமத்தில் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோரின் உருவபொம்மைகளை எரித்து விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டதைத் தொடர்ந்து இவ்வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

விவசாயிகளின் போராட்டம் கடந்த நான்கு மாதங்களாகத் தொடர்ந்து வருகிறது. ஜெட்பர் கிராமம் மட்டுமின்றி, அதைச் சுற்றியுள்ள சுமார் 35 கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகளும் தங்களது விவசாய நிலங்களின் வழியாக உயர் மின்னழுத்த மின்கம்பிகள் மற்றும் கோபுரங்கள் அமைக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

மோர்பி மாவட்டத்தில் அமைக்கப்பட்டு வரும் இந்த உயர் மின்னழுத்த மின்பரிமாற்றத் திட்டத்திற்கான கோபுரங்களை அமைக்கும் பணியை “ஹல்வாட் டிரான்ஸ்மிஷன் லிமிடெட்” (Halvad Transmission Limited) மேற்கொண்டு வருகிறது. இது  “அதானி எனர்ஜி சொல்யூஷன்ஸ் லிமிடெட்” (Adani Energy Solutions Limited) நிறுவனத்துடன் தொடர்புடைய நிறுவனமாக செயல்படுகிறது.

இதனால் விவசாய நிலங்களின் பயன்பாடு, விவசாயிகளின் வாழ்வாதாரம் மற்றும் நில உரிமைகள் பாதிக்கப்படுவதால் அப்பகுதி விவசாயிகள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

தங்களது விவசாய நிலங்களில் மின்கம்பி கோபுரங்கள் அமைக்கப்படுவதால் விவசாயம் பாதிக்கப்படும் என்றும் தங்களது நிலங்களின் மீது திட்டப் பணிகள் மேற்கொள்ளப்படுவதாகவும் விவசாயிகள் கூறுகின்றனர்.

இத்திட்டத்திற்கு எதிராகத்தான் செப்டம்பர் 17 அன்று ஜெட்பர் கிராமத்தில் நடைபெற்ற போராட்டத்தில் மோடி மற்றும் அமித்ஷாவின் உருவபொம்மைகள் எரிக்கப்பட்டன. இதையடுத்து 21 விவசாயிகள் மீது உடனடியாக முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டது. பாரதிய நியாய சன்ஹிதா (BNS), 2023-இன் எட்டு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

பிரதமர் மோடியின் பிறந்தநாளை முன்னிட்டு நடைபெற்று வந்த கொண்டாட்டங்களுக்கு எதிராகவே இப்போராட்டம் திட்டமிட்டு நடத்தப்பட்டதாக முதல் தகவல் அறிக்கையில் போலீசு குறிப்பிட்டுள்ளது.

மேலும், போராட்டக்காரர்கள் முன்கூட்டியே சதித்திட்டம் தீட்டி, பொது சாலையில் எரிபொருள் போன்ற எரியக்கூடிய திரவத்தைத் தெளித்து உருவபொம்மைகளை எரித்ததாகவும், இதன் மூலம் அச்சுறுத்தல் சூழலை உருவாக்கியதாகவும், பொது அமைதியை சீர்குலைத்ததாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.


படிக்க: அசாம்: அதானிக்காக விரட்டியடிக்கப்படும் இஸ்லாமிய மக்கள்!


விவசாயிகள் போராட்டத்தை வழிநடத்தி வரும் நேஹுல் அம்ரிதியா, இவ்வழக்கு முற்றிலும் ஆதாரமற்றது என்றும், குஜராத் விவசாயிகள் இதற்கு உரிய பதிலை அளிப்பார்கள் என்றும் தெரிவித்துள்ளார். மேலும், இந்த சட்டப் போராட்டத்தை உச்சநீதிமன்றம் வரை கொண்டு செல்வோம் என்றும் கூறியுள்ளார்.

தங்கள் வாழ்வாதாரம் காக்கப் போராடிய விவசாயிகளின் மீது, அதானிக்காகப் பொய் வழக்கைப் போட்டுள்ளது குஜராத் மாநில பா.ஜ.க. அரசு. இதன் மூலம் விவசாயிகளின் எதிர்ப்பை மட்டுப்படுத்தி விடலாம் எனக் கனவு காண்கிறது.

ஆனால், டெல்லியில் நீட் தேர்வுக்கு எதிரான போராட்டம், தற்போது நடைபெற்று வரும் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாருக்கு எதிரான எனப் போராட்டம் என நாடு முழுக்க பாசிசக் கும்பல்களுக்கு எதிரான குரல்கள் ஓங்கி ஒலித்துக் கொண்டிருக்கின்றன. இந்தப் போராட்ட அலையில் பாசிசக் கும்பல் வீழும். விவசாயிகளின் வயிற்றில் அடித்து சேர்த்த சொத்துக்கள் பறிமுதல் செய்யப்படும்.


ஹைதர்

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram, Threads



விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க