ஏகாதிபத்திய கட்டமைப்பால் உருவாக்கப்படும் நெருக்கடிகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. நெருக்கடிகளிலிருந்து மீள முடியாமல் அதன் கட்டமைப்பே மீண்டும் மீண்டும் நெருக்கடிக்குள் சிக்கி சிதைந்து வருகிறது. அதிகரித்து வரும் வேலையின்மை, அழிந்து வரும் பொதுத்துறைகள், எங்கும் சூழ்ந்திருக்கும் போர்ச் சூழல், அதிகரிக்கும் பாலியல் வன்கொடுமைகள் என மக்கள் அச்சத்துடனேயே வாழ வேண்டிய நிலை உருவாகியுள்ளது. இதிலிருந்து மக்களைத் திசை திருப்புவதற்காக மக்களிடையே மதவெறி, இனவெறி, போர் வெறி ஆகியவை தூண்டிவிடப்படுகின்றன. நம் நாட்டில் சாதிவெறியும் தீவிரமாக ஊட்டப்படுகிறது.
ஏகாதிபத்திய ரவுடி அமெரிக்காவால் உருவாக்கப்பட்ட ஈரான் போர், உக்ரைன் மீதான பதிலிப் போர், கட்டுப்பாடற்ற செயற்கை நுண்ணறிவின் வளர்ச்சி, அணு ஆயுதப் போரின் அபாயம் என பல்வேறு நெருக்கடிகளும் அச்சுறுத்தல்களும் தொடர்ந்து வருகிறது. அதற்குப் பக்க பலமாக நின்ற பணக்காரர்கள், நிபுணர்கள் தற்போது அபாயத்திலிருந்து மீள்வதற்காக பாதுகாப்பு பதுங்கு குழிகளை நாடுகின்றனர்.
அதேவேளையில், உலகம் எதிர்கொள்ளும் ஒவ்வொரு நெருக்கடியும் முதலாளிகளுக்கு புதிய சந்தையாக மாறியுள்ளது. பாதுகாப்பு பதுங்கு குழிகளுக்கான வணிகம் வேகமாக வளர்ந்து வருவதாக அதன் நிறுவனங்கள் மகிழ்ச்சியில் திளைக்கின்றன.
புவிசார் அரசியல் பதற்றங்களும் தொழில்நுட்ப மாற்றங்களும் அதிகரித்து வரும் சூழலில், பதுங்கு குழிகளுக்கான வணிகம் வேகமாக வளர்ந்து வருவதாக பல்வேறு நிறுவனங்களின் நிர்வாகிகள் நியூஸ்வீக் ஊடகத்திடம் தெரிவித்துள்ளனர்.
மாசசூசெட்ஸைச் சேர்ந்த பதுங்கு குழி கட்டுமான ஆலோசனை நிறுவனம் (Bunker Building Consulting LLC) நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி மைக்கேல் பிரைட் கூறுகையில்:
“ஆர்வம் கடுமையாக அதிகரித்துள்ளது. அதற்கான துல்லியமான எண்ணிக்கையை நான் குறிப்பிடவில்லை. ஆனால் விசாரிப்புகளும் (inquiries) இணையதளப் பார்வைகளும் அதிகரித்திருப்பது தெளிவாகத் தெரிகிறது. கடந்த ஆண்டை விட அதிகமான மக்கள் எங்களைத் தொடர்புகொள்கிறார்கள்; மேலும் தீவிரமான கேள்விகளைக் கேட்கிறார்கள். வெறும் ஆர்வத்திலிருந்து நடைமுறைத் திட்டமிடலுக்கு மிக வேகமாக நகர்கிறார்கள்.”
“ஒரு காலத்தில் விளிம்புநிலைப் பிரச்சினையாகக் கருதப்பட்ட இந்த விஷயம், தற்போது அதைச் செயல்படுத்தும் பொருளாதார வசதி கொண்ட மக்களிடையே ஒரு பொதுவான விவாதமாக மாறியுள்ளது” என்று அவர் மேலும் கூறினார்.
பதுங்கு குழிகளை நாடுவதற்கான காரணங்கள் குறிப்பிட்ட அச்சுறுத்தல்களிலிருந்து பொதுவான பாதுகாப்புத் தேவைகள் வரை மாறுபடுகின்றன. சிலருக்கு மனநிம்மதியே முக்கியக் காரணமாக இருக்கிறது. மற்றவர்களுக்கோ மனிதகுலத்தின் எதிர்காலம் குறித்த தீவிரமான அச்சங்கள் உள்ளன.
எஸ்.ஏ.எஃப்.இ (Strategically Armored & Fortified Environments – SAFE) நிறுவனத்தின் கூட்டாளரும் செயல்பாட்டு இயக்குநருமான நவோமி கோர்பி, “ஒருவர் ஈரான் விவகாரம் எங்கு செல்லும் என்று கவலைப்படுகிறார். மற்றொருவர் மின்சாரக் கட்டமைப்பு பாதிப்பு அல்லது இணையவழித் தாக்குதல் குறித்துக் கவலைப்படுகிறார். செயற்கை நுண்ணறிவு, அரசியல் அமைதியின்மை, மற்றொரு பெருந்தொற்று, இயற்கைப் பேரிடர்கள் ஆகியவற்றைப் பற்றியும் கேட்கிறார்கள். பெரும்பாலும் ஒரு வாடிக்கையாளர் ஒரே உரையாடலில் மூன்று அல்லது நான்கு விஷயங்களைக் குறிப்பிடுவார்.”
“சில ஆண்டுகளுக்கு முன்பிருந்ததைவிட உலகம் தற்போது கணிக்க முடியாததாகத் தோன்றுகிறது என்ற பொதுவான உணர்வு உள்ளது” என்றும் அவர் கூறுகிறார்.
அமெரிக்கா மேலும் மேலும் பிளவுபட்டு வருவதாகவும், அது இறுதியில் உள்நாட்டுப் போர் அல்லது மோதலுக்கு வழிவகுக்கலாம் என்றும் பலர் நம்புவதாக பாதுகாப்பு பதுங்கு குழி தயாரிப்பு நிறுவனமான டெஃப்கான் அண்டர்கிரவுண்ட் (DEFCON Underground) நிறுவனத்தின் இணை உரிமையாளர் கோரி ஹப்பார்ட் தெரிவித்தார். இதனால், உள்நாட்டுப் போர் குறித்த அச்சமும் தங்களது வாடிக்கையாளர்களிடையே “பொதுவான கவலையாக” மாறியுள்ளது என்று அவர் கூறினார்.
செயற்கை நுண்ணறிவு குறித்த அச்சமும் தற்போது பதுங்கு குழிகளை வாங்க விரும்புபவர்களின் கவலைகளில் ஒன்றாக மாறியுள்ளது.
அட்லஸ் உயிர்வாழ்வு பாதுகாப்பு மையங்கள் (Atlas Survival Shelters) நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி ரான் ஹப்பார்ட் கூறுகையில், 2020ஆம் ஆண்டிலிருந்து பதுங்கு குழிகளுக்கான விற்பனை அதிகரிப்பதற்கு பல்வேறு காரணங்கள் இருப்பதாகத் தெரிவித்தார்.
கோவிட்-19, உக்ரைன் போர், ஈரான் போர் மற்றும் “சட்டவிரோத குடியேற்றம்” ஆகியவற்றுடன் தற்போது செயற்கை நுண்ணறிவையும் அந்தப் பட்டியலில் சேர்க்கலாம் என்றார்.
“எதிர்காலத்தில் பேரழிவுக்கான ஒரு கலவையாக இது இருக்கிறது. அதற்கான முடிவும் தெரியவில்லை. எனவே எங்கள் வியாபாரம் நன்றாக இருக்கிறது.”
அச்சுறுத்தல்களின் பட்டியல் அதிகரித்ததுடன், பதுங்கு குழிகளுக்கான தேவையும் அதிகரித்துள்ளது.
இங்கிலாந்தைச் சேர்ந்த பதுங்கு குழி பாதுகாப்பு நிறுவனத்தின் (Bunker Safe Ltd.) இயக்குநர் ஜேம்ஸ் ஆண்டர்ஸ் போர்ன், அணு மற்றும் அணுசக்தி அல்லாத பாதுகாப்பு மையங்கள் தொடர்பான விசாரணைகளில் “குறிப்பிடத்தக்க அதிகரிப்பு” ஏற்பட்டுள்ளதாகக் கூறினார்.
விவோஸ் (Vivos) என்கிற நிறுவனம் வழங்கும் வசதிகளில், இந்தியானாவில் 80 பேர் தங்கக்கூடிய அணு ஆயுதத் தாக்குதலைத் தாங்கும் வகையில் அமைக்கப்பட்ட பாதுகாப்பு மையமும் உள்ளது. இது பனிப்போர் காலத்தில் கட்டப்பட்டதாகவும், 20 மெகாடன் வெடிப்பின் தாக்கத்தைத் தாங்கும் திறன் கொண்டதாகவும் கூறப்படுகிறது.
அதில் ஒரு தனிநபருக்கான இடம் 50,000 அமெரிக்க டாலர் (சுமார் ரூ.48.5 லட்சம்) எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. தேவையான திறன்களைக் கொண்டவர்களுக்குத் தள்ளுபடியும் வழங்கப்படுகிறது.
“உலகளாவிய அரசியல் பதற்றங்களும் செயற்கை நுண்ணறிவு குறித்த அதிகரித்து வரும் கவலைகளும் கிட்டத்தட்ட உச்சக்கட்டத்தை எட்டியுள்ளன. மூன்றாம் உலகப் போரின் விளிம்பில் உலகம் இருப்பதாகப் பலர் கருதுகிறார்கள்” என்று விசினோ நியூஸ்வீக் ஊடகத்திடம் கூறினார்.
உலகளாவிய நெருக்கடிகள் அதிகரித்து வரும் நிலையில், பதுங்கு குழிகள் சாதாரண பாதுகாப்பு வசதிகளாக மட்டுமல்லாமல், செல்வந்தர்களுக்கான சொகுசு குடியிருப்புகளாகவும் மாறி வருகின்றன.
பாதுகாப்பு நிறுவனங்கள் தனது இணையதளத்தின் ஊடகப் பகுதியில் “கோடீசுவரர்களுக்கான பதுங்கு குழிகள்” தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை வெளியிட்டுள்ளது. அதில் “மிகவும் பணக்காரர்களைப் பாதுகாப்பது” மற்றும் 300 மில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிலான (சுமார் ரூ.2,910 கோடி) உறுப்பினர்களுக்கு மட்டுமான சொகுசு பதுங்கு குழி போன்ற கட்டுரைகளும் இடம்பெற்றுள்ளன.
இந்தப் பதுங்கு குழிகளில் உயரமான மேற்கூரைகள், நீண்ட பார்வைத் தூரங்கள், முழுமையான சமையலறைகள், படுக்கையறைத் தொகுதிகள், உடற்பயிற்சி கூடங்கள், நீச்சல் குளங்கள், உடல்நலம் மற்றும் மருத்துவ வசதிகள், குழந்தைகளுக்கான பகுதிகள், செல்லப்பிராணிகளுக்கான இடங்கள், தாவரங்கள், நெருப்பிடம் உள்ளிட்ட பல்வேறு வசதிகளும் இடம்பெறுகின்றன. வெளிப்புறக் காட்சிகளைப் போன்ற தோற்றத்தை உருவாக்கும் கட்டிடக்கலை அம்சங்களும் இதில் சேர்க்கப்படுகின்றன.
பலப்படுத்தப்பட்ட பாதுகாப்பு கட்டமைப்புகள் நிறுவனத்தின் வணிக மேம்பாட்டுப் பிரிவைச் சேர்ந்த மார்க் சைபர்ஸ் கூறுகையில், “அதிக சொத்துடைய வாடிக்கையாளர்கள் பெரும்பாலானோர் நிறுவனத்தின் “தலைமுறை வீடு” (Generational Home) என்ற திட்டத்தில் ஆர்வம் காட்டுகின்றனர்.
“இது நிலத்துக்கு மேலே ஒரு சொகுசு வீடாகவும், அதன் கீழே குண்டு மற்றும் மின்காந்த ஆயுதத் தாக்குதல்களைத் தாங்கக்கூடிய, இரசாயன, உயிரியல், கதிரியக்க மற்றும் அணு அச்சுறுத்தல்களிலிருந்து பாதுகாக்கும் (CBRN) காற்று வடிகட்டுதல் வசதி கொண்ட பதுங்கு குழியாகவும் அமைக்கப்படுகிறது.
“உணவு மற்றும் தண்ணீர் கையிருப்புகளுடன் ஆயுத அறை, தகவல் தொடர்பு அறை, மாசு நீக்கும் அறை மற்றும் வழக்கமான குடியிருப்பு வசதிகளும் இதில் இடம்பெறும்” என்று கூறியுள்ளார்.
மற்றொரு உதாரணம் வடக்கு கன்சாஸில் உள்ள உயிர்வாழ்வு குடியிருப்பு (Survival Condo).
இந்தப் பதுங்கு குழி 75 பேர் வரை பல ஆண்டுகளுக்குத் தங்கியும் வாழவும் கூடிய வகையில் அமைக்கப்பட்டுள்ளது.
மேலும், செல்வந்த வாடிக்கையாளர்கள் சிலர் தங்களது தேவைகளுக்கு ஏற்ப தனித்துவமான கோரிக்கைகளையும் முன்வைத்துள்ளனர். அவற்றில் “ஜேம்ஸ் பாண்ட்” பாணியிலான ஹெலிபேட் ஒன்றும், நிலத்தடியில் ஒரு பள்ளிவாசல் அமைப்பதும் அடங்கும்.
போர், பொருளாதார நெருக்கடி, இணையவழித் தாக்குதல், காலநிலைப் பேரிடர், செயற்கை நுண்ணறிவு அபாயம், அணு ஆயுதப் போர் என அச்சுறுத்தல்களுக்கு ஊற்றுக் கண்ணாக இருக்கும் முதலாளித்துவ வாதிகள் தங்களைத் தற்காத்துக் கொள்ளப் பதுங்கு குழிகளை நாடி வருகின்றன. இதுபோன்ற நடவடிக்கைகளால் தங்களைத் தற்காத்துக் கொள்ள முடியும் என்பது பகற்கனவே. பதுங்கு குழிக்குள் சென்றுகொண்டிருக்கும் முதலாளித்துவத்தை அடித்து வீழ்த்தி அதனைச் சவக்குழிக்கு அனுப்புவதே தொழிலாளி வர்க்கத்தின் முன்னுள்ள ஒரே தீர்வு!
மூலக் கட்டுரை: நியூஸ்வீக்
![]()
உமர்
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram, Threads











