சேவைத்துறை நிதியை வெட்டாதே – பிரான்சை உலுக்கும் போராட்டங்கள்

பள்ளியில் ஏன் ஆசிரியர் இல்லை, நாற்காலி இல்லை என்ற இடத்தில் தொடங்கிய கேள்வி, இறுதியில் அரசின் பணம் எங்கே செல்கிறது என்ற கேள்வியாக மாறியுள்ளது. மாணவர், ஆசிரியர், அரசு ஊழியர், தீயணைப்பு வீரர் ஆகியோரின் தனித்தனி கோரிக்கைகளை ஒன்றாக இணைக்கும் அடிப்படை முரண்பாடும் இதுதான். பிரான்ஸ் முழுவதும் பற்றியெரியக் காரணமும் இதுதான்.

பள்ளிக்குச் சென்றால் ஆசிரியர் இல்லை; வகுப்பறையில் அமர நாற்காலிகள் போதவில்லை; அரசின் பல்வேறு சேவைத்துறைகளிலும் காலிப்பணியிடங்கள் நிரப்பப்படாமல் கிடக்கின்றன. தீ விபத்து ஏற்பட்டால் உயிரைக் காப்பாற்ற ஓடிச் செல்ல வேண்டிய தீயணைப்புப் படையே, தங்களுக்கு ஆட்களும் வாகனங்களும் நிதியும் வேண்டும் என்று பாரிஸ் வீதிகளில் இறங்கிப் போராடுகிறது. தொடர்ச்சியான விலைவாசி உயர்வால் அரசு ஊழியர்களின் வாங்கும் சக்தியும் குறைந்து வருகிறது. இந்த நெருக்கடிகளுக்கு எதிராக மாணவர்கள், ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள், தீயணைப்பு வீரர்கள் எனப் பல பிரிவினர் அடுத்தடுத்து போராட்டத்தில் இறங்கியதால், பிரான்ஸ் மீண்டும் போராட்டக் களமாகியுள்ளது.

இந்த நெருக்கடியின் நடுவில்தான் அதிபர் இம்மானுவேல் மக்ரோன் தலைமையிலான அரசு 2027-ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை முன்வைத்துள்ளது. பற்றாக்குறையைக் குறைக்க வேண்டும், கடனைக் கட்டுப்படுத்த வேண்டும் என்ற பெயரில் அரசு ஊழியர்களின் சம்பளத்தை உயர்த்த மறுத்து, ஓய்வூதிய உயர்வைக் கட்டுப்படுத்தி, மருத்துவம் உள்ளிட்ட பல பொதுச் செலவுகளைச் சுருக்குகிறது. ஆனால் ராணுவச் செலவுக்கு மட்டும் இந்தச் ‘சிக்கனம்’ பொருந்தவில்லை.

2027-ஆம் ஆண்டுக்குள் பிரான்சின் ராணுவப் பட்ஜெட் 2017-இல் இருந்த அளவைவிட இரட்டிப்பாகும் என்று மக்ரோனே அறிவித்துள்ளார். அதுமட்டுமல்ல; 2026 முதல் 2030 வரையிலான காலத்திற்கு ஏற்கெனவே திட்டமிட்டிருந்த தொகைக்கு மேலாக மேலும் 36 பில்லியன் யூரோக்களை (இந்திய ரூபாய் மதிப்பில் சுமார் ரூ.3.9 லட்சம் கோடி) ராணுவத்துக்கு ஒதுக்கும் திட்டமும் நிறைவேற்றப்பட்டுள்ளது. அதில் 10 பில்லியன் யூரோக்கள் 2026–2027 காலத்திலேயே செலவிடப்பட உள்ளன. பிரான்ஸ் பாதுகாப்பு அமைச்சகம் இதனை ராணுவ வலிமையை வேகமாக அதிகரிக்கும் நடவடிக்கை என்று குறிப்பிடுகிறது.

அதே பிரான்சில்தான் ஆசிரியர்கள் வேண்டும் என்று மாணவர்களும், விலைவாசிக்கேற்ற ஊதியம் வேண்டும் என்று அரசு ஊழியர்களும், உயிர்காக்கத் தேவையான ஆட்களும் வாகனங்களும் வேண்டும் என்று தீயணைப்பு வீரர்களும் வீதியில் நிற்கிறார்கள்.

செப்டம்பர் 29 அன்று மட்டும் நாடு முழுவதும் சுமார் 170 பேரணிகள் நடைபெற்றன. பிரான்சின் பொதுத் தொழிலாளர் கூட்டமைப்பான சி.ஜி.டி. (CGT) கணக்குப்படி மூன்று லட்சத்துக்கும் அதிகமானோர் பங்கேற்றனர். மாணவர்கள் பள்ளிகளின் முன்பு மறியலில் ஈடுபட்ட அதே நாளில் ஆசிரியர்கள், மருத்துவப் பணியாளர்கள், உள்ளாட்சி ஊழியர்கள், தீயணைப்பு வீரர்கள் எனப் பல்வேறு பொதுச் சேவைப் பிரிவுகளைச் சேர்ந்தவர்கள் திரள் திரளாக வீதிகளில் குவிந்தனர்.

ஆசிரியர் வேண்டும் – மறியலில் மாணவர்கள்!

பாரிஸ் மாநகரின் புறநகர்ப் பகுதிகளில் தொடங்கிய மாணவர் போராட்டம் சில நாட்களிலேயே நாடு முழுவதும் பரவியது. காலியாகக் கிடக்கும் ஆசிரியர் பணியிடங்கள், மாற்று ஆசிரியர்கள் இல்லாமை, நெரிசலான வகுப்பறைகள், மோசமான பள்ளிக் கட்டடங்கள், அடிப்படை வசதிகளின் பற்றாக்குறை ஆகியவற்றுக்கு எதிராக மாணவர்கள் பள்ளிகளின் நுழைவாயில்களை மறித்தனர்.

செப்டம்பர் 30-க்குள் 356 உயர்நிலைப் பள்ளிகளில் இப்போராட்டம் பரவியது. அக்டோபர் 2-க்குள் சுமார் 400 பள்ளிகள் மூடப்பட்டன. இந்தப் போராட்டங்களில் ஈடுபட்ட சுமார் 5,000 பேர் கைது செய்யப்பட்டனர்; அவர்களில் பெரும்பாலோர் பதின்ம வயதினர்.

பாரிஸ் புறநகரான பான்டினில் போராட்டத்தில் கலந்துகொண்ட 15 வயது மாணவி கேசியா, “எங்கள் வகுப்பில் 35 பேர் இருக்கிறோம்; ஆனால் போதுமான நாற்காலிகள் இல்லை. ஒரு மணி நேர மதிய உணவு இடைவேளைக்குள் எல்லோராலும் உணவு வாங்க முடியவில்லை” என்று கூறுகிறார். அவர் பேசிக்கொண்டிருந்தபோதே அவ்விடத்தில் போலீசு கண்ணீர்ப்புகைக் குண்டுகளை வீசியது.

மாணவர்கள் கேட்பது அசாதாரணமான கோரிக்கைகளா? ஆசிரியர் வேண்டும்; அமர இடம் வேண்டும்; பாதுகாப்பான வகுப்பறை வேண்டும்; முறையான கல்வி வேண்டும் – இவை அடிப்படைத் தேவைகள்தான். இந்தப் பிரச்சினைகள் நீண்டகாலமாகத் தொடர்கின்றன. இப்படி அடிப்படை வசதிகளுக்கே போராடும் நிலை இந்தியாவில் மட்டுமல்ல, பிரான்சிலும் வந்திருப்பதுதான் ‘வல்லரசு’ வேடம்போடும் ஆட்சியாளர்களின் சாதனை.

போராட்டம் தீவிரமடைந்தபோது மாணவர்கள் போலீசோடு நேருக்கு நேராக மோதினர். போலீசு கண்ணீர்ப்புகை உள்ளிட்ட நடவடிக்கைகளில் இறங்கியபோது, மாணவர்கள் சில இடங்களில் குப்பைத்தொட்டிகளை எரித்ததோடு, பட்டாசுகளையும் பிற பொருட்களையும் போலீசை நோக்கி வீசியெறிந்தனர். அன்றாடம் பள்ளிகளுக்குச் சென்றுவந்த பதின்ம வயது மாணவர்கள், போலீசோடு மோத வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கின்றனர்.

“உயிரைக் காப்பாற்றியது யார்?”

மாணவர் போராட்டம் தீவிரமடைந்த அதே நேரத்தில் அரசு ஊழியர்களும் நாடு தழுவிய வேலைநிறுத்தத்தில் இறங்கினர். அவர்களின் முக்கியக் கோரிக்கைகளில் ஒன்று ஊதிய உயர்வு. பிரான்சில் அரசு ஊழியர்களின் சம்பளத்தை நிர்ணயிக்கப் பயன்படுத்தப்படும் அடிப்படை மதிப்பை அரசு உயர்த்தாமல் வைத்திருப்பதால், விலைவாசி உயர்ந்தாலும் அதற்கேற்ப சம்பளம் அதிகரிக்கவில்லை என்று தொழிற்சங்கங்கள் குற்றஞ்சாட்டுகின்றன.

சி.ஜி.டி-யின் பொதுச்செயலாளர் சோபி பினே, “இந்தக் கோடையில் உயிர்களைக் காப்பாற்ற முன்வரிசையில் நின்றவர்கள் யார்? தீயணைப்பு வீரர்கள், மருத்துவப் பணியாளர்கள், அரசு ஊழியர்கள்தானே?” என்று கேள்வி எழுப்பினார். கடும் வெப்பமும் காட்டுத்தீயும் பிரான்சின் பல பகுதிகளைப் பாதித்தபோது மக்களைக் காக்க முன்வரிசையில் பணியாற்றியவர்களின் சம்பளத்தை உயர்த்தாமல் இருப்பதை அவர் கடுமையாக விமர்சித்துள்ளார்.

கடந்த பத்தாண்டுகளில் அரசு ஊழியர்களின் வாங்கும் சக்தி சுமார் 15 சதவிகிதம் குறைந்துள்ளதாக சி.ஜி.டி. கூறுகிறது. “மருத்துவமனை, பள்ளி, பல்கலைக்கழகம், குப்பை அகற்றும் பணியாளர்கள், அரசு நிர்வாகம், பாதுகாப்புச் சேவைகள் இல்லாத ஒரு நாடு எப்படி இருக்கும் என்பதை ஒருநாள் காட்டுவோம்” என்று வேலைநிறுத்தத்திற்கு முன்பே சோபி பினே அழைப்பு விடுத்திருந்தார்.

இது வெறும் சம்பளப் பிரச்சினை மட்டுமல்ல. காலிப்பணியிடங்கள் நீண்டகாலமாக நிரப்பப்படாமல் இருப்பதால், ஏற்கெனவே பணிபுரிபவர்களின் வேலைச்சுமை அதிகரிக்கிறது. விலைவாசிக்கேற்ப ஊதியம் உயராததும், அதிகமான பணிச்சுமையும் இந்த நிலையை மேலும் தீவிரப்படுத்துகின்றன. இறுதியில் பொதுச் சேவைகளின் தரம் பாதிக்கப்பட்டு, மருத்துவமனை வாசலில் காத்திருக்கும் நோயாளி மீதும், பள்ளியில் ஆசிரியரை எதிர்பார்க்கும் மாணவர் மீதுமே இந்தச் சுமைகள் திணிக்கப்படுகின்றன. இது ஒரு சமூக நெருக்கடியாக வெடித்துக் கொண்டிருக்கிறது.

“சத்தம் போடாவிட்டால் யாரும் கேட்க மாட்டார்கள்”

இந்தப் போராட்டத்தின் மிகவும் உயிர்ப்பான காட்சிகளில் ஒன்று தீயணைப்பு வீரர்களின் பேரணி. காட்டுத்தீ, வெப்ப அலை, வெள்ளம், விபத்து என உயிருக்கு ஆபத்து ஏற்பட்ட ஒவ்வொரு நேரத்திலும் முதலில் அழைக்கப்படும் அந்தத் தீயணைப்பு வீரர்களே, தங்களுக்குப் போதுமான ஆட்களும் வாகனங்களும் நிதியும் இல்லை என்று கூறி பாரிஸ் தெருக்களில் தங்கள் சீருடையிலேயே பேரணி நடத்தினர்.

லியோன் நகரிலிருந்து வந்த 22 வயது தீயணைப்பு வீரர் மக்சாங்ஸ் நிக்கொலே, “சத்தம் போடாவிட்டால் எங்கள் குரலை யாரும் கேட்க மாட்டார்கள். தீயை அணைக்கும் போதுதான் அரசியல்வாதிகளுக்கு எங்களைப் பற்றி நினைவு வருகிறது; செப்டம்பர் வந்ததும் மறந்துவிடுகிறார்கள்” என்று கூறுகிறார். அதற்கு முந்தைய நாளே போதுமான தீயணைப்பு வாகனங்கள் இல்லாததால் இரண்டு வீடுகள் தங்கள் கண்முன்னே எரிந்ததையும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

டிஜோனைச் சேர்ந்த 32 வயது தொழில்முறை தீயணைப்பு வீரர் மாக்சிம் துராங், “அதிக ஆட்களையும் வாகனங்களையும் ஏன் கேட்கிறோம்? மக்களைப் பாதுகாக்கத்தான்” என்றும், போதுமான ஆட்கள் இல்லாவிட்டால் மீட்புப் படையினர் சம்பவ இடத்தை அடைவதே தாமதமாகிறது என்றும் அவர் கூறுகிறார்.

சி.ஜி.டி-யின் தீயணைப்புப் பிரிவு மேலும் 21,000 தொழில்முறை தீயணைப்பு வீரர்களையும், ஆயிரக்கணக்கான தொழில்நுட்ப மற்றும் நிர்வாகப் பணியாளர்களையும் நியமிக்க வேண்டும்; மாவட்டத் தீயணைப்பு மற்றும் மீட்புச் சேவைகளுக்குப் போதிய நிதி வழங்க வேண்டும்; காட்டுத்தீயை எதிர்கொள்ள 5,000 வாகனங்களைக் கொண்ட படையை உருவாக்க வேண்டும் என்றும் கோரியுள்ளது.

“வளங்கள் வேண்டும்; அற்புதங்கள் வேண்டாம்” என்ற அவர்களது முழக்கம் தீயணைப்பு வீரர்களின் நிலையைச் சுருக்கமாகச் சொல்கிறது. மீட்பு வாகனம் சில நிமிடங்கள் தாமதமாக வருவது அரசுக்கு சிறிய வேறுபாடாகத் தோன்றலாம். ஆனால் தீ பரவும் இடத்தில் அந்தச் சில நிமிடங்கள் ஒரு வீட்டின் சேதத்தையும் ஒருவரின் உயிரையும் தீர்மானிக்கக்கூடியவை. உயிர்காக்கும் சேவைக்கு அடிப்படையாகத் தேவையான ஆட்களையும் வாகனங்களையும் கூட வழங்காமல், மக்களின் உயிரைக் காவு வாங்கிக் கொண்டிருக்கிறது பிரான்சு அரசு.

உயிர்காக்கும் படையும்
கலவரத் தடுப்புப் படையும்
ஒரே தெருவில்!

செப்டம்பர் 29 அன்று பாரிஸில் நடந்த பேரணியில் ஒரு தீயணைப்பு வீரருக்கும் கலவரத் தடுப்புப் படையான சி.ஆர்.எஸ். (CRS) அதிகாரிக்கும் இடையே நேரடி தள்ளுமுள்ளு ஏற்பட்டது. மக்களின் உயிரைக் காக்க வேண்டிய தீயணைப்பு வீரர், தனது துறைக்கே போதுமான ஆட்களும் வாகனங்களும் இல்லை என்று தெருவில் இறங்கிப் போராடுகிறார். ஆனால் அரசோ, போராட்டத்தைக் கட்டுப்படுத்த கலவரத் தடுப்புப் படையை முழுமையான தயார்நிலையில், அனைத்து ‘உபகரணங்களுடனும்’ நிறுத்துகிறது.

ஒருபுறம் உயிர்காக்கும் பொதுச் சேவைகள் அடிப்படை வசதிகளைக் கேட்கின்றன; மறுபுறம் போராட்டங்களைக் கட்டுப்படுத்தும் அரசு எந்திரம் தெருவில் நிற்கிறது. ஒரே காட்சிக்குள் பிரான்சின் தற்போதைய நெருக்கடியின் இரண்டு முகங்களும் பளிச்செனத் தெரிகின்றன.


படிக்க: பாசிச சக்திகளுக்கு எதிராகக் கிளர்ந்தெழுந்த பிரான்ஸ் மக்கள்! 


சிக்கன நடவடிக்கைகள்: சுமை யாருக்கு?

2027 நிதிநிலையில் பற்றாக்குறையைக் குறைப்பதற்காக வரி மாற்றங்களையும் செலவுக் கட்டுப்பாடுகளையும் பிரான்ஸ் அரசு முன்வைத்துள்ளது. ஏற்கெனவே அறிவிக்கப்பட்ட நடவடிக்கைகளையும் சேர்த்தால், மொத்தம் சுமார் 54 பில்லியன் யூரோ அளவுக்கு அரசின் வரவு–செலவுக் கணக்கில் மாற்றங்கள் செய்யப்படுகின்றன.

அதில் அரசு ஊழியர்களின் சம்பளத்தை உயர்த்தாமல் இருப்பது, ஓய்வூதிய உயர்வைக் கட்டுப்படுத்துவது, மருத்துவச் செலவுகளைச் சுருக்குவது உள்ளிட்ட நடவடிக்கைகளும் அடங்குகின்றன. 2026-இல் பிரான்சின் பொதுக் கடன் நாட்டின் மொத்த உற்பத்தியின் சுமார் 119 சதவிகிதத்தை எட்டும் என்றும், நிதிநிலை பற்றாக்குறை 5.4 சதவிகிதமாக இருக்கும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.

கடன் நெருக்கடியைக் காரணம் காட்டி, நெருக்கடியின் சுமை யார் மீது திணிக்கப்படுகிறது என்பதே முக்கியம். அரசு ஊழியர்களின் சம்பளம் உயரவில்லை; ஓய்வூதிய உயர்வோ கட்டுப்படுத்தப்படுகிறது; மருத்துவச் செலவில் வெட்டு வருகிறது. அதே நேரத்தில் ராணுவத்துக்கான செலவு மட்டும் பெருமளவில் அதிகரிக்கப்படுகிறது.

ஒரு ஆசிரியரை நியமிப்பதும் செலவுதான்; ஒரு செவிலியரை நியமிப்பதும் செலவுதான்; ஒரு தீயணைப்பு வாகனத்தை வாங்குவதும் செலவுதான்; ஏவுகணை, போர் விமானம், வெடிமருந்து வாங்குவதும் செலவுதான். ஆனால் அரசு எதற்குப் பணம் ஒதுக்குகிறது, எதற்குப் பணம் இல்லை என்று சொல்கிறது என்பதில்தான் அதன் வர்க்க நலன் வெளிப்படுகிறது.

மக்ரோனின் ராணுவக் கணக்கு!

மக்கள் நெருக்கடியில் சிக்கித்தவிக்கும் போது, ராணுவச் செலவை உயர்த்துவது பற்றி அதிபர் மக்ரோனுக்குத் துளியும் அச்சமோ, கூச்சமோ இல்லை. 2027-க்குள் ராணுவப் பட்ஜெட்டை ஆண்டுக்கு 64 பில்லியன் யூரோவாக உயர்த்துவதாக மக்ரோன் அறிவித்துள்ளார்.

ரஷ்யாவுடனான மோதல் அபாயம், ஐரோப்பாவில் பெரிய அளவிலான போர் நிகழக்கூடிய சூழல், உக்ரைன் போரின் அனுபவம் ஆகியவற்றை இதற்குக் காரணங்களாகக் கூறுகிறது பிரான்ஸ் பாதுகாப்பு அமைச்சகம். வெடிமருந்துக் கையிருப்பு, ட்ரோன்கள், வான் பாதுகாப்பு, ஏவுகணைகள் உள்ளிட்டவற்றை வேகமாக அதிகரிக்க அரசு திட்டமிட்டுள்ளது.

2025-இல் மட்டும் பிரான்சின் ஆயுதக் கொள்முதல் அமைப்பு சுமார் 38 பில்லியன் யூரோ மதிப்பிலான புதிய ஆர்டர்களை வழங்கியுள்ளது. போர் விமானங்கள், ஏவுகணைகள், வெடிமருந்துகள், ட்ரோன்கள், கடற்படை ஆயுதங்கள் என பிரான்சின் பெரிய ஆயுத உற்பத்தி நிறுவனங்களுக்கு இந்த ராணுவச் செலவு பெரும் சந்தையைத் திறக்கிறது. இவ்வாறு லட்சக்கணக்கான கோடி ரூபாய் மதிப்பிலான ஆயுதங்களைக் கொள்முதல் செய்வதும், அவற்றை உக்ரைனுக்கு அனுப்பி ரஷ்யாவுக்கு எதிரான போரில் பயன்படுத்துவதும் ஐரோப்பிய நாடுகளின் முன்னுரிமையாக இருக்கிறது. நாடும் நாட்டு மக்களும் நாசமாய்ப் போனாலும் பரவாயில்லை, ஆயுத உற்பத்தி செய்யும் கார்ப்பரேட்டுகளின் இலாபம் குறையக் கூடாது என்பதே பிரான்ஸ் அரசின் நிலைப்பாடு.

அதே நேரத்தில்தான் கேசியா தனது வகுப்பில் நாற்காலி இல்லை என்று சொல்கிறார்; சோபி பினே அரசு ஊழியர்களின் வாங்கும் சக்தி குறைந்துவிட்டதாகக் கூறுகிறார்; மக்சாங்ஸ் நிக்கொலே போதுமான தீயணைப்பு வாகனங்கள் இல்லாமல் வீடுகள் எரிந்ததைத் தனது கண்களால் பார்த்ததைப் பற்றிக் கூறுகிறார். இந்தக் குரல்களை ஒன்றாக வைத்துப் பார்க்கும்போதுதான் பிரான்ஸ் அரசு முன்வைக்கும் பட்ஜெட்டின் உண்மையான வர்க்க நலன் தெரிகிறது.

இந்த நெருக்கடி தெருவில் மட்டும் முடிவதில்லை. பிரதமர் செபஸ்தியன் லெகோர்னு தலைமையிலான அரசுக்கு தேசிய சட்டமன்றத்தில் தனிப் பெரும்பான்மை இல்லை. நாடாளுமன்றத்துக்கு வெளியே மக்கள் போராட்டம் வெடித்துள்ள நிலையில், இந்தப் பட்ஜெட்டை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றுவதும் அரசுக்கு எளிதான காரியம் அல்ல.

இதனால் பள்ளிகளின் வாசலில் தொடங்கிய பிரச்சினை, அரசு ஊழியர்களின் வேலைநிறுத்தமாகவும் தீயணைப்பு வீரர்களின் பேரணியாகவும் விரிந்து, இறுதியில் அரசின் பட்ஜெட்டையும் ஆட்சியின் நிலைத்தன்மையையும் சோதிக்கும் அளவுக்கு வளர்ந்துள்ளது.

எண்களுக்குள் மறைந்திருக்கும் வர்க்க முரண்பாடு

400 பள்ளிகள்; சுமார் 5,000 பேர் கைது; மூன்று லட்சத்துக்கும் அதிகமானோர் பங்கேற்ற நாடு தழுவிய போராட்டங்கள்; 54 பில்லியன் யூரோ அளவிலான பட்ஜெட் நடவடிக்கைகள்; ராணுவத்துக்கு கூடுதலாக 36 பில்லியன் யூரோ – இவை அனைத்தும் பெரிய எண்கள்.

ஆனால் அந்த எண்களின் பின்னால் கேசியா இருக்கிறார்; வகுப்பில் உட்கார நாற்காலிகளையும், பாடம் நடத்த ஆசிரியர்களையும் கேட்கிறார். சோபி பினே இருக்கிறார்; கோடையில் உயிர்களைக் காப்பாற்றிய அரசு ஊழியர்களின் சம்பளத்தை ஏன் உயர்த்த மறுக்கிறீர்கள் என்று கேட்கிறார். மக்சாங்ஸ் நிக்கொலே இருக்கிறார்; போதுமான தீயணைப்பு வாகனங்கள் இல்லாமல் வீடுகள் எரிந்து கொண்டிருப்பதைச் சொல்கிறார். மாக்சிம் துராங் இருக்கிறார்; “மக்களைப் பாதுகாக்கத்தான் அதிக ஆட்களையும் வாகனங்களையும் கேட்கிறோம்” என்கிறார்.

மறுபுறம் மக்ரோன் அரசோ ராணுவச் செலவை இரண்டு மடங்காக்குகிறது; ஆயுதக் கையிருப்பையும் போர் தயாரிப்பையும் தீவிரப்படுத்துகிறது; ஆயுத உற்பத்தி நிறுவனங்களுக்கு பல்லாயிரம் கோடி யூரோ மதிப்பிலான அரசு ஆர்டர்கள் செல்கின்றன.

இதுதான் பிரான்சின் தற்போதைய போராட்டத்தின் மைய முரண்பாடு. மக்களின் அன்றாட வாழ்க்கைக்கு அவசியமான கல்வி, மருத்துவம், தீயணைப்பு உள்ளிட்ட பொதுச் சேவைத்துறைகள் போதிய ஊழியர்களையும் நிதியையும் கேட்டு போராடுகின்றனர். அதே நேரத்தில் ராணுவத்துக்கான செலவு தொடர்ந்து அதிகரிக்கிறது.

பள்ளியில் ஏன் ஆசிரியர் இல்லை, நாற்காலி இல்லை என்ற இடத்தில் தொடங்கிய கேள்வி, இறுதியில் அரசின் பணம் எங்கே செல்கிறது என்ற கேள்வியாக மாறியுள்ளது. மாணவர், ஆசிரியர், அரசு ஊழியர், தீயணைப்பு வீரர் ஆகியோரின் தனித்தனி கோரிக்கைகளை ஒன்றாக இணைக்கும் அடிப்படை முரண்பாடும் இதுதான். பிரான்ஸ் முழுவதும் பற்றியெரியக் காரணமும் இதுதான்.

மார்க்சுக்கு முன்பிருந்தே வர்க்கப் போராட்டங்களின் புகழ்பெற்ற களமான பிரான்ஸ், இந்த முரண்பாட்டையும், காரணங்களையும் தீர்க்கும் வரை ஓயாது. பிரான்ஸ் பாட்டாளி வர்க்கத்தின் தற்போதைய போராட்டம் வெல்லட்டும். நாடெங்கும் சரியான அரசியல் தலைமையின் கீழ் ஒருங்கிணைந்து, புரட்சியின் இறுதித் தீர்ப்பை நோக்கி முன்னேறட்டும்!

தமிழ்ச்சுடர்

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram, Threads



1 மறுமொழி

  1. “மக்களின் உயிர் காக்கும் சேவைகளுக்கு நிதி இல்லை; ஆயுதங்களுக்கு மட்டும் கோடிகள் – அரசின் முன்னுரிமை எங்கே என்பதை வெளிப்படுத்துகிறது.”

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க