
15.10.2026
கிருஷ்ணகிரி: 15 ஆண்டுகளாக அடிப்படை வசதிகள் இன்றி தவிக்கும் விசுவாசம்பட்டி மக்கள்
பத்திரிகைச் செய்தி
கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை வட்டம், மகனூர்பட்டி பஞ்சாயத்து விசுவாசம்பட்டி கிராமத்தில் சுமார் 1,500க்கும் மேற்பட்ட குடியிருப்பு வீடுகள் உள்ளன. சுமார் 5,000க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர்.
இந்தக் கிராமத்தில் குடிநீர், தெருவிளக்கு மற்றும் கழிவு நீர் கால்வாய் ஆகிய அடிப்படை வசதிகள் இன்றி கடந்த 15 ஆண்டுகளுக்கு மேலாக அவதியுற்று வருவதாக கிராம மக்கள் குற்றச்சாட்டு வைத்துள்ளனர்.
குறிப்பாக விசுவாசம்பட்டி சுற்றுவட்டாரப் பகுதிகளில் கழிவுநீர் கால்வாய் பழுதடைந்ததால், கழிவுநீர் சீராகச் செல்ல முடியாமல் தெருக்கள் தோறும் தேங்கி நிற்பதாகவும் கால்வாயில் கழிவுநீர் தேங்கி நிற்பதால் துர்நாற்றம் வீசுவதுடன், கொசுக்கள் உற்பத்தியாகி தொற்றுநோய்கள் பரவும் அபாயமும் ஏற்பட்டுள்ளதாகப் பொதுமக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
மேலும் வீடுகள் தோறும் ஜல்ஜீவன் திட்டம் மூலம் அமைக்கப்பட்ட குடிநீர் குழாய்கள் பெரும்பாலும் பழுது ஏற்பட்டு கழிவு நீரும் குடிநீரும் கலந்து வரும் சூழல் ஏற்பட்டுள்ளது.
கழிவு நீர் கால்வாய் முறையாகப் பராமரிக்கப்படாததால் கழிவு நீர் தேங்கி அப்பகுதியின் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு அடிக்கடி குழந்தைகள் மற்றும் முதியவர்களுக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டு வாரம் ஒரு முறை மருத்துவமனைக்குச் சென்று வருவதாகவும் கிராம மக்கள் வேதனையுடன் தெரிவிக்கின்றனர்.
இக்கிராம மக்களின் குடிநீர்த் தேவையைப் பூர்த்தி செய்ய இதே பகுதியில் அமைந்துள்ள மூன்று கிணறுகளையும் தூர்வாரி சுத்தம் செய்து கொடுக்க வேண்டும் என்று மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

15 ஆண்டுகளாக நீடிக்கும் பிரச்சினையைச் சரி செய்யாமல் அரசு நிர்வாகம் இருப்பது கண்டனத்திற்குரியது. ஏழை எளிய மக்களின் மீதான அக்கறையற்ற போக்கையே இது காட்டுகிறது.
கிருஷ்ணகிரி மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை மேற்கொண்டு, விசுவாசம்பட்டி மக்களின் கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்றித் தருமாறு மக்கள் அதிகாரக் கழகம் கேட்டுக்கொள்கிறது.
![]()
இவண்,
தோழர் இரஞ்சித்,
மாவட்டச் செயலாளர்,
மக்கள் அதிகாரக் கழகம்,
கிருஷ்ணகிரி மாவட்டம்.
8754674757
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram, Threads





