ஒரு பெண் என்ன அணிய வேண்டும், பொது இடத்தில் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்பதை யார் முடிவு செய்வது? இரண்டு அண்டை நாடுகளில் இந்தக் கேள்வி இரண்டு வேறுபட்ட வடிவங்களில் எழுகிறது. ஈரானில் அரசே சட்டத்தின் மூலம் இதை முடிவு செய்கிறது. பாகிஸ்தானில் சட்டம் இல்லை, ஆனால் சமூகமே ‘காவல்காரனாக’ நிற்கிறது.
வழிகள் வேறு என்றாலும் இலக்கு ஒன்றுதான்: பெண்ணின் உடல் மீதான கட்டுப்பாடு. அந்தக் கட்டுப்பாட்டை இரு நாட்டுப் பெண்களும் இன்று வெளிப்படையாகக் கேள்வி கேட்கிறார்கள்.
ஈரான்: சட்டத்தை மீறும் தெருக்கள்
1979 இஸ்லாமியப் புரட்சிக்குப் பிறகு ஈரானில் ஹிஜாப் கட்டாயமாக்கப்பட்டது. அதிலிருந்து பெண்ணின் ஆடை என்பது தனிப்பட்ட தேர்வாக இல்லாமல், மேற்கத்திய எதிர்ப்பின் அரசியல் சின்னமாக மாறியது. முக்காட்டைக் களைவது அரசுக்கு எதிரான செயலாகவே பார்க்கப்பட்டது.
2022 செப்டம்பரில் இந்த நிலை உடைந்தது. “முறையற்ற உடை” அணிந்ததாகக் கைது செய்யப்பட்ட 22 வயது குர்து இளம்பெண் ஜினா மஹ்சா அமினி, ‘ஒழுக்கக் காவல் படை’யின் பிடியில் இருந்தபோது உயிரிழந்தார். இதனையடுத்து “ஜின், ஜியான், ஆசாதி” (பெண், வாழ்வு, விடுதலை) என்ற முழக்கம் குர்திஸ்தான், தெஹ்ரான், பலுசிஸ்தான், அஜர்பைஜான் என உள்நாட்டிலும் அண்டை நாடுகளிலும் பரவியது.
அரசு அடக்குமுறை, இனப் புறக்கணிப்பு, பாலின ஒடுக்குமுறை ஆகிய மூன்றும் ஒன்றோடொன்று பிணைந்தவை என்ற புரிதல் இந்த இயக்கத்தை ஒன்றிணைத்தது.
நான்கு ஆண்டுகள் கழிந்துவிட்டன. பரவலான கைதுகள், மரண தண்டனைகள், போர்ப் பதற்றம் எல்லாம் தொடர்ந்தாலும், பெண்களின் எதிர்ப்பு குரல்கள் அடங்கிவிடவில்லை.
கடந்த மாதம் ஒரு வெள்ளிக்கிழமை காலை, தெஹ்ரானின் ஒரு பகுதியில் அரசு தன் படை பலத்தைக் காட்டும் அணிவகுப்பை நடத்தியது. அதே நகரின் இன்னொரு பகுதியில் நடந்த மாரத்தானில் பெண்கள் தலைமுக்காடு இல்லாமல் ஓடினர். ஒருவர் கூட ஹிஜாப் அணியவில்லை.

இது வெறும் விளையாட்டுப் போட்டி அல்ல, தங்களின் பொதுவெளியை மீட்டெடுக்கும் அரசியல் நடவடிக்கை. அரசு ஆதரவுப் பேரணிகளில் கூடப் பெண்கள் விதியைப் பொருட்படுத்தாமல் கலந்துகொள்கிறார்கள். விதிகளை முழுமையாகப் பின்பற்றாவிட்டாலும் அரசை ஆதரிக்கும் பெண்களை வரவேற்க வேண்டும் என்று ஆட்சியமைப்புக்குள்ளேயே சிலர் பேசத் தொடங்கியுள்ளனர்.
பாகிஸ்தான்: கண்காணிப்பின் பெயரில்
சமூக பயங்கரவாதம்
பாகிஸ்தானில் ஹிஜாபைக் கட்டாயமாக்கும் சட்டம் இல்லை. ஆனால் நிலவுடைமை அமைப்புகள், பழமைவாத மதகுருக்கள், தெருக் கும்பல் அரசியல் என்று பல முனைகளிலிருந்து பெண்கள் கண்காணிக்கப்படுகிறார்கள்.
இதற்கு எதிராக 2018 முதல் ஒவ்வொரு மார்ச் 8 அன்றும் கராச்சி, லாகூர், இஸ்லாமாபாத் நகரங்களில் “அவுரத் மார்ச்” (பெண்கள் பேரணி) நடக்கிறது. ஆணவக் கொலைகள், கட்டாயத் திருமணங்கள், வீட்டு வன்முறை, பணியிடத் துன்புறுத்தல், சட்டப் புறக்கணிப்பு ஆகியவற்றுக்கு எதிராக அது குரல் கொடுக்கிறது. பஞ்சாபில் பாலியல் வன்கொடுமைக்கு ஆளானவர்கள் மீது நடத்தப்பட்ட மனிதத்தன்மையற்ற ’கன்னித்தன்மைச் சோதனை’ நீதிமன்றத்தால் தடை செய்யப்பட்டதற்கு இந்த இயக்கமும் பங்களித்தது.
ஆனால் இந்தச் சாதனைகளைவிட, “மேரா ஜிஸ்ம், மேரி மர்ஸி” (என் உடல், என் விருப்பம்) என்ற முழக்கமே மதவாத வட்டாரங்களைக் கொதிப்படையச் செய்தது. மாதவிடாயை தீட்டாகப் பார்க்கும் கண்ணோட்டத்தைக் கைவிடச் சொல்லும் அட்டைகளும் சீற்றத்தைத் தூண்டின.
எதிர்வினையாக “ஹயா மார்ச்”, “ஹிஜாப் மார்ச்” என்று எதிர்ப் பேரணிகள் நடத்தப்பட்டன. உலக மகளிர் நாளை “ஹிஜாப் நாள்” எனப் பெயர் மாற்ற வேண்டும் என்று ஒரு முன்னாள் மத விவகார அமைச்சர் பிரதமரிடம் கோரினார். பாகிஸ்தானில் கடும் தண்டனைக்குரிய இறைநிந்தனைக் குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டன. கொலை மிரட்டல்களால் பல ஒருங்கிணைப்பாளர்கள் சமூக ஊடகக் கணக்குகளை முடக்கிவிட்டுத் தலைமறைவாக வேண்டியிருந்தது.
படிக்க: ஈராக் புதிய சட்ட மசோதா: பெண்கள் மீதான சட்டப்பூர்வ பாலியல் தாக்குதல்!
ஏற்கத்தக்க பெண்,
ஏற்க முடியாத பெண்
இந்த எதிர்வினை ஒரு தெளிவான எல்லைக்கோட்டைக் காட்டுகிறது.
பெண் கல்வி, பெண்கள் பள்ளிகள், தாய்நலம் போன்றவற்றைக் கேட்கும் பெண் “நல்ல தாய்”, “கடமையுள்ள மகள்” என்று பொறுத்துக்கொள்ளப்படுகிறாள். ஆனால் தன் உடல், உடை, இனப்பெருக்க முடிவுகள், நடமாட்டம், பாலியல் ஆகியவற்றின் மீது முழு உரிமை கோரும்போது, அவள் ‘கெட்ட இஸ்லாமியப் பெண்’ ஆகிவிடுகிறாள்.
”பாதுகாக்கப்பட வேண்டிய பொருளாக” இருந்தவள் உரிமை கோரும் தனிமனிதராக மாறுவதுதான் ஆணாதிக்கத்துக்கு உண்மையான அச்சுறுத்தல். வன்கொடுமையையும் கொலையையும் விட, ஒரு பதாகை ஏன் அதிகக் கோபத்தைத் தூண்டுகிறது என்பதற்கான விடை இதுதான்.
இதில் ஓர் இரட்டை அளவுகோலும் உள்ளது. மேற்கத்தியத் தாக்கத்தைக் கண்டிக்கும் அதே தலைவர்கள், உள்நாட்டுச் சட்டமும் மரபும் வழங்கும் அடிப்படை உரிமைகளை மறுக்க அரசு அதிகாரத்தையும் மிரட்டலையும் பயன்படுத்துகிறார்கள். மேலும், ஆடையிலும் ஒழுக்கத்திலும் மட்டுமே கவனம் செலுத்துவதன் மூலம், உழைக்கும் வர்க்கப் பெண்கள் சந்திக்கும் பொருளாதாரச் சுரண்டல், வீட்டு வன்முறை, அரசின் புறக்கணிப்பு ஆகியவற்றிலிருந்து பழமைவாத அமைப்புகள் கவனத்தைத் திசைதிருப்புகின்றன. பெண்களின் அடக்க ஒடுக்கம் பற்றிய சட்டங்கள் இவற்றிலிருந்து எந்தப் பாதுகாப்பையும் தருவதில்லை.
மதத்துக்குள்ளிருந்து எழும் மறுவாசிப்பு
பெண்களின் இப்போராட்டம் மதத்துக்கு எதிரானது அல்ல என்று ஒரு தரப்பினர் வாதிடுகின்றனர். ஃபாத்திமா மெர்னிசி, அமினா வதூத், அஸ்மா பர்லாஸ் போன்ற இஸ்லாமியப் பெண்ணிய இறையியலாளர்கள் பல பத்தாண்டுகளாக ஒரு கருத்தை முன்வைக்கிறார்கள்.
”இஸ்லாமியச் சமூகங்களில் பெண்ணடிமைத்தனம் இறைவெளிப்பாட்டிலிருந்து வரவில்லை. அன்றைய அரபுப் பண்பாட்டு வழக்கங்களை இறைக் கட்டளையோடு கலந்துவிட்ட ஆணாதிக்க விளக்கங்களிலிருந்தே (ஃபிக்ஹ்) வந்தது. ஏழாம் நூற்றாண்டு அரேபியாவிலேயே குர்ஆன் பெண்களுக்குத் தனிச் சட்ட அடையாளம், சொத்துரிமை, வாரிசுரிமை, திருமண ஒப்புதல், பொருளாதாரத் தற்சார்பு ஆகியவற்றை வழங்கியது. மேற்குலகம் இவற்றை வழங்குவதற்குப் பல நூற்றாண்டுகள் முன்பே இது நடந்தது. பெண்களை அரசியலிலிருந்தும் பொது வாழ்விலிருந்தும் விலக்கி வைப்பதற்காகச் சில பெண் வெறுப்பு மரபுகள் பின்னாளில் புனையப்பட்டன அல்லது திரிக்கப்பட்டன” என்பதை மெர்னிசியின் வரலாற்று ஆய்வு காட்டுகிறது.
அமினா வதூத் இதை நம்பிக்கையின் அடிப்படைச் சிக்கலாகப் பார்க்கிறார். ”இஸ்லாத்தில் முழு அதிகாரம் இறைவனுக்கு மட்டுமே உரியது. ஓர் அரசோ குடும்பமோ பெண்ணின் உடல் மீது உரிமை கொண்டாடும்போது, மனித அதிகாரத்தை இறை அதிகாரத்துக்கு இணையாக வைக்கிறது. பெண்ணுடலை மறைக்கப்பட வேண்டிய வெட்கப் பொருளாகப் பார்க்காமல், இறைவன் ஒவ்வொருவரிடமும் நேரடியாக ஒப்படைத்த “அமானா” (நம்பிக்கைப் பொறுப்பு) என்று முற்போக்கு இஸ்லாமிய நீதியியல் பார்க்கிறது. வற்புறுத்தலால் அணியப்படும் முக்காடோ செய்யப்படும் தொழுகையோ அதன் ஆன்மிகப் பொருளை இழந்துவிடுகிறது, ஏனெனில் நம்பிக்கை தன்விருப்பத்தின் மீதே நிற்கிறது.” என்கிறார் அவர்.
பாகிஸ்தான் பெண்ணுரிமை போராளிகளுக்கு இது புதிய பாதையும் அல்ல. 1980-களில் ஜியா-உல்-ஹக்கின் படை ஆட்சிக் காலத்தில், பெண்களுக்கு எதிரான சட்டங்களை எதிர்த்து “பெண்கள் செயல் மன்றம்” போன்ற குழுக்கள் தெருவில் இறங்கின. இன்றைய போராட்டம் அந்த மரபின் தொடர்ச்சி.
இரு பக்கச் சிக்கல்
இஸ்லாமியப் பெண்கள் இரண்டு முனைகளுக்கு நடுவே சிக்கியிருக்கிறார்கள். ஒரு பக்கம், “இஸ்லாமியப் பெண்களைக் காப்பாற்றுதல்” என்ற பெயரில் படையெடுப்புகளை நியாயப்படுத்தும் மேற்கத்திய ஏகாதிபத்தியப் பார்வை. அது சிக்கலான சமூகங்களைப் “பின்தங்கியவை” என்று ஒற்றை வரியில் சுருக்கிவிடுகிறது. மறு பக்கம், இந்த வரலாற்றைப் பயன்படுத்தி, உள்ளிருந்து எழும் எந்த உரிமைக் குரலையும் “மேற்கிடம் சரணடைதல்” என்று முத்திரை குத்தும் உள்நாட்டு மதவாதிகள். மதத்தைப் பின்பற்றினால் மேற்கு ’பரிதாபப்படுகிறது’. உரிமை கேட்டால் உள்ளூர் ஆணாதிக்கம் தண்டிக்கிறது.
ஈரானில் மாரத்தான் ஓடும் பெண்களும் பாகிஸ்தானில் பேரணி செல்லும் பெண்களும் இந்தப் போலியான இருமையை உடைக்கிறார்கள். தங்கள் விடுதலையை அயல்நாட்டு அதிகாரங்கள் வரையறுப்பதையும் அவர்கள் ஏற்கவில்லை, தங்கள் உரிமைகளை மறுக்க உள்ளூர் மதகுருக்கள் மதத்தைப் பயன்படுத்துவதையும் ஏற்கவில்லை. உடல் மீதான உரிமை அயல்நாட்டுக் கருத்தியல் அல்ல, அது மனிதனின் அடிப்படைத் தேவை.
இறுதியாக,
இந்தப் போராட்டத்துக்கு மறக்கப்பட்ட ஒரு வரலாற்றுப் பின்னணியும் உண்டு. இன்று மதவாத அரசியலின் பிடியில் இருக்கும் ஈரான், பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் மூன்று நாடுகளிலும், ஒரு காலத்தில் இடதுசாரி, கம்யூனிஸ்ட் இயக்கங்கள் வலுவான செல்வாக்குடன் இருந்தன. மதத்தை அரசியலிலிருந்து பிரித்து வைத்த அந்த இயக்கங்களில் பெண்கள் முன்வரிசையில் நின்றார்கள்.
ஈரானில் 1941-இல் தொடங்கப்பட்ட துதே கட்சி, 1940-களிலும் 1950-களின் தொடக்கத்திலும் பெரும் மக்கள் ஆதரவைப் பெற்றது. அதனுடன் இணைந்த பெண்கள் அமைப்பு வாக்குரிமைக்காகவும் தொழிலாளர் பெண்களின் உரிமைகளுக்காகவும் போராடியது. 1979 இஸ்லாமியப் புரட்சியிலும் இடதுசாரிக் குழுக்களோடு சேர்ந்து பெண்கள் பெருமளவில் பங்கேற்றனர். ஆனால் புரட்சி முடிந்த சில வாரங்களிலேயே, மார்ச் 8, 1979 அன்று, ஹிஜாப் கட்டாயமாக்கப்படுவதை எதிர்த்து ஆயிரக்கணக்கான பெண்கள் தெஹ்ரான் தெருக்களில் இறங்க வேண்டியிருந்தது. 1980-களின் தொடக்கத்தில் துதே உள்ளிட்ட இடதுசாரி அமைப்புகள் கடுமையாக ஒடுக்கப்பட்டன.
பாகிஸ்தானில் கம்யூனிஸ்ட் கட்சி 1954-லேயே தடை செய்யப்பட்டது. இருந்தாலும் இடதுசாரி அரசியலும் முற்போக்கு எழுத்தாளர் இயக்கமும் நீண்ட காலம் தாக்கம் செலுத்தின. நாடு உருவான தொடக்க ஆண்டுகளிலேயே இடதுசாரிப் பெண்கள் அமைப்புகளை உருவாக்கி, உழைக்கும் பெண்களுக்காகப் பணியாற்றினர். ஜியா-உல்-ஹக் காலத்தில் ஃபஹ்மிதா ரியாஸ் போன்ற முற்போக்குக் கவிஞர்கள் பெண்களுக்கு எதிரான சட்டங்களை எதிர்த்து எழுதினர். அதற்கு அவர் நாடுகடந்து வாழும் விலையையும் கொடுத்தார்.
ஆப்கானிஸ்தானில் 1965-இல் அனாஹிதா ரதேப்சாத் ஆப்கான் பெண்கள் அமைப்பைத் தொடங்கினார். அதே ஆண்டு நாடாளுமன்றத்துக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் பெண்களில் அவரும் ஒருவர். 1978-இல் ஆட்சிக்கு வந்த ஆப்கான் மக்கள் ஜனநாயகக் கட்சி, பெண் கல்வி, குறைந்தபட்சத் திருமண வயது, மணக்கொடைக் கட்டுப்பாடு போன்ற சீர்திருத்தங்களைக் கொண்டுவந்தது. 1980-களில் காபூலில் பெண்கள் மருத்துவர்களாகவும் ஆசிரியர்களாகவும் பல்கலைக்கழக மாணவிகளாகவும் பரவலாகக் காணப்பட்டனர்.
ஆனால் இந்த வரலாற்றில் ஒரு கசப்பான பாடமும் உண்டு. மக்களின் ஒப்புதல் இல்லாமல் மேலிருந்து திணிக்கப்பட்ட மாற்றங்கள் நீடிக்கவில்லை. 1936-இல் ஈரான் மன்னன் ரேசா ஷா, போலீசுதுறையைக் கொண்டு பெண்களின் முக்காட்டை வலுக்கட்டாயமாக அகற்றச் செய்தார். அதுவும் பெண்ணின் உடல் மீதான அரசுக் கட்டுப்பாடுதான். ஆப்கானிஸ்தானின் சீர்திருத்தங்கள் அடக்குமுறையோடு கிராமப்புறங்களில் திணிக்கப்பட்டதால் கடும் எதிர்ப்பைச் சந்தித்தன. அதைத் தொடர்ந்து சோவியத் படையெடுப்பு வந்தது. அதை எதிர்க்க அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் முஜாஹிதீன் குழுக்களுக்கு ஆயுதம் தந்தன. இறுதியில் தாலிபான் ஆட்சி அமைந்து, பெண்களின் உரிமைகளைப் பல பத்தாண்டுகள் பின்னுக்குத் தள்ளியது. பனிப்போர் அரசியலில் இடதுசாரிகளை ஒடுக்குவதற்காக மதவாதக் குழுக்கள் வளர்த்தெடுக்கப்பட்டன. அதன் விலையை இப்பகுதிப் பெண்களே அதிகம் கொடுத்தனர்.
இவை அனைத்துக்கும் அடிப்படையாக ஓர் ஆழமான உண்மை இருக்கிறது: ஆணாதிக்கம் எப்போதும் மதத்தைத் தன் துணையாக்கிக் கொள்கிறது. ஒரு மதம் தன் மூலநூல்களில் பெண்களுக்கு எவ்வளவு உரிமைகள் வழங்கியதாகச் சொன்னாலும், அவற்றை விளக்கும் அதிகாரம் பிற்போக்கு – ஆணாதிக்க – ஆதிக்க சக்திகளிடமே இருக்கும் வரை, மதம் பெண்களைக் கட்டுப்படுத்தும் கருவியாகவே செயல்படுகிறது.
இது கிழக்கு நாடுகளுக்கு மட்டுமான சிக்கல் அல்ல. அமெரிக்காவில் கருக்கலைப்பு உரிமையைப் பறிக்கும் இயக்கத்தின் முன்னணியில் கிறித்தவ வலதுசாரிகள் நிற்கின்றனர். போலந்தில் கத்தோலிக்கத் திருச்சபையின் ஆதரவோடு கருக்கலைப்பு ஏறக்குறைய முழுமையாகத் தடை செய்யப்பட்டது. நம் நாட்டிலும் பார்ப்பனிய இந்து மதமும் அதைப் பின்பற்றும் சங்கப் பரிவார அமைப்புகளும் பெண்களைக் காலங்காலமாக இழிவுபடுத்தி அடிமைப்படுத்தி வருவது நாம் அறிந்ததே. மதமும் நாடும் மாறினாலும், பெண்ணின் உடல் மீதான முடிவை மதத்தின் பெயரால் ஆதிக்க சக்திகள் கையில் எடுக்கும் போக்கு மாறவில்லை.
இன்றைய பெண்கள் இயக்கங்கள் இந்த இரண்டு பாடங்களையும் உள்வாங்கியிருக்கின்றன. முக்காட்டைத் திணிப்பதும் பிடுங்குவதும் ஒரே அதிகாரத்தின் இரண்டு முகங்கள். பெண்கள் கோருவது முடிவெடுக்கும் உரிமையை. மதத்துக்குள்ளிருந்து தொடங்கும் மறுவாசிப்பு, ஒரு கட்டத்தில் மதத்தின் அதிகாரத்தையே கேள்வி கேட்கும். இறுதியில் அதைப் புறக்கணிக்கும் இடத்துக்கும் இட்டுச் செல்லும். இதை உணர்ந்திருப்பதால்தான் மதத்தை விளக்கும் அதிகாரத்தை ஆணாதிக்க பிற்போக்குவாதிகள் இவ்வளவு இறுக்கமாகப் பற்றிக்கொண்டிருக்கிறார்கள்.
அரசின் வன்முறை, பெண்களின் நடத்தையைக் கட்டுப்படுத்தலாம்; ஆனால் விழித்துக்கொண்ட அரசியல் உணர்வை அழிக்க முடியாது. மதச்சார்பற்ற இயக்கங்களின் மரபிலிருந்து வலிமை பெறும் இப்போராட்டங்கள், அயல்நாட்டு அதிகாரங்களையோ உள்ளூர் மதகுருக்களையோ சார்ந்திருக்கவில்லை. இப்பகுதிகளில் பாலின நீதியின் எதிர்காலத்தை அரசாணைகளோ ஃபத்வாக்களோ தீர்மானிக்கப் போவதில்லை. தங்கள் உடலையும் இடத்தையும் உரிமையையும் மீட்டெடுக்கும் பெண்களின் தளராத துணிவே அதைத் தீர்மானிக்கும்.
![]()
மகேஷ்
மூலக்கட்டுரை: தி எக்ஸ்பிரஸ் ட்ரிபியூன்
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram, Threads











