
16.10.2026
கம்யூனிச மாணவர்-இளைஞர் கழகத்தின் முதலாவது மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:
1. உலகம் முழுவதும் ஆட்சியில் உள்ள பாசிச சக்திகளுக்கும் அரசின் அடக்குமுறைகளுக்கும் எதிராகப் போராடிவரும் மாணவர்-இளைஞர்களின் போராட்டங்களை இம்மாநாடு ஆதரித்து வரவேற்கிறது; அவர்களுக்கு வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறது.
2. ஜனநாயக விரோதமான முறையில் எஸ்.ஐ.ஆர். நடைமுறைப்படுத்தப்பட்டதைக் கண்டிப்பதுடன், தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் கைது செய்யப்பட வேண்டும்; எஸ்.ஐ.ஆர். முறை திரும்பப் பெற வேண்டும்; எஸ்.ஐ.ஆர். அடிப்படையில் நடத்தப்பட்ட அனைத்துத் தேர்தல்களும் ரத்து செய்யப்பட வேண்டும் என்று இம்மாநாடு வலியுறுத்துகிறது.
ஆர்.எஸ்.எஸ்.-பா.ஜ.க.; அம்பானி-அதானி பாசிச சக்தியானது அரசு அதிகாரத்தையும் இந்த நாடாளுமன்றத்தையும் பயன்படுத்தி படிப்படியாக பாசிசத்தை அரங்கேற்றி வருகிறது. தற்போதைய கட்டமைப்பில் இந்த பாசிசத்தை வீழ்த்த முடியாது. மாறாக, பாசிச எதிர்ப்பு ஜனநாயகக் குடியரசை அமைப்பதன் மூலமாகவே பாசிச சக்திகளை நிரந்தரமாக வீழ்த்த முடியும் என இந்த மாநாடு தெரிவிக்கிறது.
ஆகையால், பா.ஜ.க.வின் கைப்பாவையாகச் செயல்படும் தேர்தல் ஆணையத்தால் நேர்மையான தேர்தலை நடத்த முடியாது. மக்கள் கண்காணிப்புடன் கூடிய ஜனநாயகத் தேர்தல் முறையின் மூலமே பாசிச சக்திகளை வீழ்த்த முடியும். ஞானேஷ் குமார் பதவி விலகக் கோரி நடைபெறும் தற்போதைய போராட்டங்களை, அத்தகைய மாற்றுத் தேர்தல் முறைக்கான போராட்டங்களாக வளர்த்தெடுக்க இம்மாநாடு உறுதியேற்கிறது. இப்போராட்டங்களில் மாணவர்கள் மற்றும் பத்திரிகையாளர்கள் மீது காவல்துறையினரும் துணை ராணுவப் படையினரும் நடத்திய தாக்குதல்களை வன்மையாகக் கண்டிக்கிறோம்.
3. ஜார்க்கண்ட் பொது சேவை ஆணையம் (JPSC) மற்றும் ஜார்க்கண்ட் பணியாளர் தேர்வு ஆணையம் (JSSC) நடத்திய தேர்வுகளில் நிகழ்ந்த பெரும் முறைகேடுகளைக் கண்டித்து மாணவர்கள் 26 நாட்கள் தொடர்ச்சியாகப் போராடினர். மாணவர்களின் போராட்டத்திற்குப் பணிந்து, 44 போட்டித் தேர்வுகளை ரத்து செய்வதாக மாநில அரசு அறிவித்தது. இது, மாணவர் போராட்டங்களுக்குக் கிடைத்த வெற்றி என்று இம்மாநாடு அறிவிக்கிறது.
4. கல்வி உரிமையையும் சமத்துவத்தையும் வலியுறுத்தி, கல்வி வணிகமயமாக்கப்படுவதற்கு எதிராகப் பேராசிரியர் ஜவஹர் நேசன் தலைமையில் கன்னியாகுமரியில் தொடங்கி சென்னை வரை சுமார் 2,300 கிலோமீட்டர் தூரம் நடைபெறும் சைக்கிள் பேரணியில், மக்கள் அதிகாரக் கழகம், கம்யூனிச மாணவர்-இளைஞர் கழகத் தோழர்கள் மற்றும் ஜனநாயக சக்திகள் தொடக்கம் முதலே பங்கேற்று ஆதரவு தெரிவித்து வருகின்றனர். இதில் பங்கேற்கும் ஜனநாயக சக்திகளை இம்மாநாடு வாழ்த்துகிறது. பேரணி வெற்றிபெற கம்யூனிச மாணவர்-இளைஞர் கழகம் துணைநிற்கும் என்றும் உறுதியளிக்கிறது.
5. குடியுரிமைத் திருத்தச் சட்டத்திற்கு (CAA) எதிரான போராட்டங்களில் கைது செய்யப்பட்டு, உரிய விசாரணையின்றிச் சிறையில் அடைக்கப்பட்டுள்ள உமர் காலித், சஃபூரா சர்கார், மீரான் ஹைதர் உள்ளிட்ட மாணவர் தலைவர்களை நிபந்தனையின்றி விடுதலை செய்ய வேண்டும் என இம்மாநாடு வலியுறுத்துகிறது.
6. நேபாள-திபெத் எல்லைப் பகுதியிலுள்ள லாங்டாங் லிருங் அருகே பனிப்பாறை உருகியதால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் உயிரிழந்த 1,410 பேருக்கு இம்மாநாடு அஞ்சலி செலுத்துகிறது. மேலும், வாழ்வாதாரத்தை இழந்துள்ள லட்சக்கணக்கான மக்களுக்கு உரிய நிவாரணம் வழங்கப்பட வேண்டும். அதிக அளவில் கார்பன் டை ஆக்சைடை வெளியிடும் அமெரிக்கா, சீனா, இந்தியா உள்ளிட்ட வல்லரசு மற்றும் பிராந்திய வல்லரசு நாடுகள், இத்தகைய பேரிடர்களுக்குத் தங்களுக்குள்ள பொறுப்பை ஏற்க வேண்டும் என இம்மாநாடு வலியுறுத்துகிறது.
7. எல் நினோவின் தாக்கத்தால் தமிழ்நாட்டின் பல பகுதிகளில் தண்ணீர்த் தட்டுப்பாடு தீவிரமடைந்துள்ளது. குடிநீர், கால்நடைகளுக்கான நீர் மற்றும் பிற தேவைகளுக்கான நீர் கிடைக்காமல் மக்கள் அவதிப்படுகின்றனர். அடுத்த ஆண்டு எல் நினோவின் தாக்கத்தால் கடுமையான உணவுப் பஞ்சமும் தொற்றுநோய்களும் ஏற்படக்கூடும் என ஆய்வாளர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர். எனவே, எல் நினோவின் பாதிப்பைக் குறைக்கும் வகையில் தமிழ்நாடு அரசு போர்க்கால அடிப்படையில் போதிய நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என இம்மாநாடு வலியுறுத்துகிறது.
8. தமிழ்நாட்டில் த.வெ.க. அரசு பொறுப்பேற்று 150 நாட்களைக் கடந்துள்ள நிலையில், கல்வி, சுகாதாரம், மின்சாரம் உள்ளிட்ட துறைகளையும் இயற்கை வளங்களையும் கார்ப்பரேட் நிறுவனங்களிடம் ஒப்படைத்து, தனியார்மயமாக்கும் போக்கு தீவிரமடைந்துள்ளது; மாநில உரிமைகள் ஒவ்வொன்றாக அடமானம் வைக்கப்படுகின்றன; காவல்துறை அராஜகம் தலைவிரித்தடுகிறது; சாதிவெறித் தாக்குதல்கள், அடக்குமுறைகள் தீவிரமடைகின்றன; பெண்களும் குழந்தைகளும் பாதுகாப்பற்ற நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்; போதைப்பொருள் கலாச்சாரமும் கும்பல் படுகொலைகளும் அதிகரித்துள்ளன. இவை அனைத்தும், த.வெ.க. பெயரில் பாசிச பா.ஜ.க. அரசின் கொள்கைகள் பின்வாசல் வழியாகச் செயல்படுத்தப்படுவதை வெளிப்படுத்துகின்றன என்று இம்மாநாடு அம்பலப்படுத்துவதுடன், த.வெ.க.-வின் மகக் விரோத மாணவர் விரோத நடவடிக்கைகளுக்கு எதிராக போராட்டங்களை கட்டியமைக்க இம்மாநாடு தமிழ்நாட்டு மக்களுக்கு அறைகூவல் விடுக்கிறது.
9. ஆர்.எஸ்.எஸ்.-பா.ஜ.க. ஆட்சிக்கு வந்ததிலிருந்து பாடநூல்களில் உள்ள மதச்சார்பின்மை, சமூகநீதி, சாதி ஒழிப்பு, சமூகச் சீர்திருத்த இயக்கங்கள், தொழிலாளர் இயக்கங்கள், இடதுசாரிச் சிந்தனைகள் மற்றும் விடுதலைப் போராட்ட வரலாறு தொடர்பான பகுதிகள் நீக்கப்பட்டு வருகின்றன. அதற்குப் பதிலாக, பார்ப்பனியப் புராணங்களும் பொய்யான வரலாறுகளும் திணிக்கப்பட்டு, பாடநூல்களும் பாடத்திட்டங்களும் காவிமயமாக்கப்படுகின்றன. இதனை இம்மாநாடு வன்மையாகக் கண்டிக்கிறது.
10. ஆர்.எஸ்.எஸ்.-பா.ஜ.க., சங்கப் பரிவார அமைப்புகள் மற்றும் ஆதிக்கச் சாதிவெறி அமைப்புகள், பள்ளி-கல்லூரி மாணவர்கள் மற்றும் இளைஞர்களிடையே சாதிவெறி, மதவெறிக் கருத்துகளைப் பரப்பி, சாதிவெறி வன்முறைகளை ஊக்குவிக்கின்றன. இத்தகைய பிரச்சாரங்களை ஜனநாயக சக்திகளும் சமத்துவத்தை விரும்பும் பெற்றோர்களும் மாணவர்களும் ஒன்றிணைந்து முறியடிக்க வேண்டும் என இம்மாநாடு அறைகூவல் விடுக்கிறது.
ஏ.பி.வி.பி. உள்ளிட்ட ஆர்.எஸ்.எஸ். சங்கப் பரிவார அமைப்புகள், ஆதிக்கச் சாதிவெறி சங்கங்கள் தடை செய்யப்பட வேண்டும் என்றும் இம்மாநாடு வலியுறுத்துகிறது.
11. மக்களைப் பிளவுபடுத்தி வரும் சாதி, மதப் பாகுபாடுகள், மூடப்பழக்கவழக்கங்கள், தீண்டாமை, பெண்ணடிமைத்தனம் மற்றும் சாதியக் கட்டுப்பாடுகளை முறியடிக்க உறுதியுடன் போராடவும் சீர்திருத்த மற்றும் புரட்சிகரத் திருமண முறைகளை ஊக்குவிப்பதன் மூலமும், சாதி-மத வேறுபாடுகளைக் கடந்து மக்களிடையே சகோதரத்துவ உறவை வளர்ப்பதன் மூலமும் சமத்துவத்தை நிலைநாட்டவும் கல்வி நிறுவனங்களில் சாதி மறுப்பு, பாலினச் சமத்துவம், பரஸ்பர மரியாதை, ஒப்புதல் மற்றும் தனிநபர் உரிமைகள் குறித்த அரசியல்-பண்பாட்டு விழிப்புணர்வுப் பிரச்சாரங்களையும் நிகழ்வுகளையும் முன்னெடுக்கவும் கம்யூனிச மாணவர்-இளைஞர் கழகம் உறுதியேற்கிறது.
12. உயர்கல்வி நிறுவனங்களில் பட்டியலின மற்றும் சிறுபான்மை மதங்களைச் சேர்ந்த மாணவர்கள் மீது ஆர்.எஸ்.எஸ். சங்கப் பரிவார அமைப்புகள் தொடர்ந்து வன்முறைத் தாக்குதல்களை நடத்துவதுடன், உளவியல் ரீதியாகவும் துன்புறுத்தி வருகின்றன.
கடந்த ஐந்து ஆண்டுகளில் IIT மற்றும் IIM-களில் SC, ST, OBC பிரிவுகளைச் சேர்ந்த 13,600-க்கும் மேற்பட்ட மாணவர்கள் படிப்பைப் பாதியில் கைவிட்டுள்ளதாக உச்ச நீதிமன்றப் பணிக்குழு அறிக்கை தெரிவித்துள்ளது. இது, இப்போக்கின் தீவிரத்தை வெளிப்படுத்துகிறது. இத்தகைய போக்கை இம்மாநாடு கடுமையாகக் கண்டிக்கிறது. ஒடுக்கப்பட்ட மற்றும் பழங்குடியின மாணவர்களின் கல்விக்குப் பாதுகாப்பு அளிக்கப்பட வேண்டும். அவர்களின் சேர்க்கை, இடைநிற்றல், உதவித்தொகை மற்றும் வேலைவாய்ப்பு தொடர்பான தரவுகள் ஆண்டுதோறும் வெளியிடப்பட வேண்டும் என இம்மாநாடு வலியுறுத்துகிறது.
13. கல்வி நிறுவனங்களில் ஒழுக்கம் என்பது மாணவர்களிடம் மட்டுமே எதிர்பார்க்கப்படும் பண்பாக அரசால் தொடர்ந்து கட்டமைக்கப்படுகிறது. ஆனால் ஆசிரியர்களின் சாதி, மதம் மற்றும் பாலினச் சமத்துவம் குறித்த கண்ணோட்டங்கள் உரிய முறையில் கேள்விக்குள்ளாக்கப்படுவதில்லை.
தமிழ்நாட்டில் 2025ஆம் ஆண்டு போக்சோ சட்டத்தின் கீழ் அரசுப் பள்ளி ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்கள் 23 பேர் பணியிலிருந்து நீக்கப்பட்டனர். இதுபோல, சாதி மற்றும் மதவெறி கொண்ட ஆசிரியர்களால் மாணவர்கள் துன்புறுத்தப்படுவதும் பாகுபாட்டுக்கு உள்ளாக்கப்படுவதும் நிகழ்கின்றன.
ஆசிரியர்களிடம் அறிவியல் கண்ணோட்டமும் சமூக அக்கறையும் இருப்பதை உறுதிப்படுத்தும் வகையில், பெற்றோர்-ஆசிரியர் சங்கக் கூட்டங்களில் ஆசிரியர்களின் செயல்பாடுகள் குறித்து முறையான விவாதங்களை நடத்துவதற்குப் போராட இம்மாநாடு உறுதியேற்கிறது.
14. பள்ளி முதல் கல்லூரி வரையிலான மாணவர்கள் போதைப்பொருள் பழக்கம், ஆபாசக் கலாச்சாரம், ரௌடிக் கலாச்சாரம் உள்ளிட்ட பல்வேறு சமூகச் சீரழிவுகளுக்கு ஆளாகி, அவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகிறது. எனவே, மாற்றுக் கலாச்சாரத்தை வளர்க்கவும், மாணவர்களை இத்தகைய பாதிப்புகளிலிருந்து மீட்கவும், அரசியல் விழிப்புணர்வை ஏற்படுத்தவும் கல்வி வளாகங்களில் அரசியல் விவாதங்கள், மாணவர் கூட்டங்கள், கருத்தரங்குகள் மற்றும் ஜனநாயகக் கருத்துப் பரிமாற்றங்கள் நடத்துவதற்கான உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும் என இம்மாநாடு வலியுறுத்துகிறது.
15. மாணவர் சங்கங்கள், கல்வி நிறுவனங்களின் நிர்வாகத்தில் மாணவர்கள் பங்கேற்பதற்கான ஜனநாயக அடிப்படை அமைப்புகளாகும். வளர்ந்து வரும் மாணவர்-இளைஞர் எழுச்சிகளைக் கண்டு அஞ்சும் பாசிச மோடி அரசும் மாநில அரசுகளும், மாணவர்கள் சங்கங்களாக அணிதிரள்வதைத் திட்டமிட்டு தடுத்து வருகின்றன.
எனவே, உரிய விதிமுறைகளின்படி ஒவ்வொரு கல்வி நிறுவனத்திலும் சுதந்திரமான, நியாயமான மாணவர் சங்கத் தேர்தல்கள் உடனடியாக நடத்தப்பட வேண்டும்.
ஒவ்வொரு கல்வி வளாகத்திலும் மாணவர் அமைப்புகளின் செயல்பாடுகளுக்குத் தேவையான பொதுவிடம், அறிவிப்புப் பலகை, கூட்ட அரங்கம் மற்றும் அடிப்படை வசதிகள் வழங்கப்பட வேண்டும்.
சாதியக் கொடுமைகள் மற்றும் சமூக அநீதிகளுக்கு எதிராகப் போராடும் மாணவர்கள் நிறுவன ரீதியாக ஒடுக்கப்படுவதையும் தண்டிக்கப்படுவதையும் தடுக்க வேண்டும். மாணவர்களின் ஜனநாயகப் பங்கேற்பைத் தடுக்கும் இடைநீக்கம், வெளியேற்றம் மற்றும் பழிவாங்கும் நடவடிக்கைகளுக்கு எதிராக உறுதியாகப் போராட வேண்டும்.
கல்வி நிறுவனங்களில் போலீசின் தலையீடு முற்றிலும் ஒழிக்கப்பட வேண்டும். மாணவர்கள் கைது செய்யப்படும் அல்லது ஒழுங்கு நடவடிக்கைக்கு உட்படுத்தப்படும் சூழல்களில் சட்ட உதவி, பெற்றோருக்குத் தகவல் அளித்தல் மற்றும் மேல்முறையீட்டு வாய்ப்புகள் உறுதிசெய்யப்பட வேண்டும் என இம்மாநாடு வலியுறுத்துகிறது.
16. கல்விமுறை தொடர்பாகத் திட்டமிடும் நிர்வாக அமைப்புகளிலும் பல்கலைக்கழகச் செனட் குழுக்களிலும் மாணவர்களுக்கு உரிய பிரதிநிதித்துவம் வழங்கப்பட வேண்டும் என்பதற்காகப் போராட இம்மாநாடு உறுதியேற்கிறது.
17. பாலினச் சிறுபான்மையின மாணவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளி மாணவர்களின் தனியுரிமை, பாதுகாப்பு, கல்வியை அணுகும் உரிமை ஆகியவை பாதுகாக்கப்பட வேண்டும்.
அனைத்துக் கல்வி நிறுவனங்களிலும் சாய்வுப்பாதைகள், அணுகலுக்கு ஏற்ற கழிப்பறைகள், மின்தூக்கிகள் மற்றும் பாதுகாப்பான போக்குவரத்து வசதிகள் ஏற்படுத்தப்பட வேண்டும். பார்வை, செவித்திறன், இயக்கம் அல்லது கற்றல் தொடர்பான மாற்றுத்திறன்களைக் கொண்ட மாணவர்களுக்கு உதவித் தொழில்நுட்பங்கள், பிரெயில், சைகை மொழி மற்றும் அணுகலுக்கு ஏற்ற பாடநூல்கள் வழங்கப்பட வேண்டும் என இம்மாநாடு வலியுறுத்துகிறது.
18. பள்ளிகளில் முறையான, பாதுகாப்பான கல்வியை உறுதிப்படுத்தப் பெற்றோர்-ஆசிரியர் சங்கங்கள் அமைக்கப்பட வேண்டும். அவற்றின் கூட்டங்கள் காலாண்டுக்கு ஒருமுறை முறையாக நடத்தப்பட வேண்டும். பெற்றோர்களும் ஆசிரியர்களும் தங்கள் கருத்துகளை விரிவாக முன்வைத்து விவாதிக்கப் போதிய நேரம் ஒதுக்கப்பட்டு, கூட்டங்கள் ஜனநாயக முறையில் நடைபெறுவதை உறுதிப்படுத்தப் போராட இம்மாநாடு உறுதியேற்கிறது.
19. பாசிச பா.ஜ.க. அரசு, தேசியக் கல்விக் கொள்கையின் மூலம் மும்மொழிக் கல்வி என்ற பெயரில் இந்தித் திணிப்பை மேற்கொள்ள முயல்கிறது. ஏற்கெனவே, சி.பி.எஸ்.இ. உள்ளிட்ட மைய அரசின் பாடத்திட்டங்களின் கீழ் இயங்கும் பள்ளிகளில் மும்மொழிக் கொள்கை நடைமுறையில் உள்ளது. மேலும், மாவட்டந்தோறும் நவோதயா பள்ளிகளைத் தொடங்கவும் பாசிச பா.ஜ.க. அரசு முயன்று வருகிறது. இதற்கு துணைபுரியும் வகையில் தமிழ்நாட்டின் த.வெ.க. அரசு கல்விக் கொள்கைகளை மாற்றியமைத்து வருவதை இம்மாநாடு வன்மையாகக் கண்டிக்கிறது.
மொழி என்பது கல்வியை அணுகுதல், சமூகப் பங்கேற்பு, அதிகாரப் பகிர்வு மற்றும் பண்பாட்டு உரிமை ஆகியவற்றின் முக்கிய அடிப்படையாகும். தமிழ்நாட்டில் தமிழை முதன்மைப்படுத்தும் தாய்மொழிவழிக் கல்வி விரிவுபடுத்தப்பட வேண்டும். மைய அரசு நடத்தும் கல்வி நிறுவனங்களிலும் தேர்வுகளிலும் தமிழ் உள்ளிட்ட மாநில மொழிகளில் தேர்வு எழுதும் வாய்ப்பு விரிவுபடுத்தப்பட வேண்டும். மருத்துவம், பொறியியல், சட்டம் உள்ளிட்ட உயர்கல்விப் படிப்புகளுக்கான தமிழ்வழிப் பாடத்திட்டங்கள் உருவாக்கப்பட்டு கற்பிக்கப்பட வேண்டும். தொடக்கக் கல்வி முதல் உயர்கல்வி வரை தாய்மொழி பயிற்றுமொழியாக இருக்க வேண்டும். தமிழ்வழியில் படித்தவர்களுக்கு தமிழ்நாட்டில் வேலைவாய்ப்பில் முன்னுரிமை வழங்கப்பட வேண்டும் என இம்மாநாடு வலியுறுத்துகிறது.
20. மருத்துவக் கல்விச் சேர்க்கைக்கான நீட் தேர்வு, பள்ளிப் பாடத்திட்டம், பயிற்சி வகுப்புகளுக்கான பொருளாதார வசதி, மொழி, கிராமப்புறக் கல்விச் சூழல், குடும்ப வருமானம் போன்ற சமூகநீதியுடன் தொடர்புடைய அம்சங்களைக் கணக்கில் கொள்ளவில்லை. மாறாக, கார்ப்பரேட் நிறுவனங்கள் கொள்ளை லாபம் ஈட்டவும் ஏழை, எளிய மக்களை மருத்துவக் கல்வியிலிருந்து விலக்கவும் இது பயன்படுத்தப்படுகிறது. தேசியத் தேர்வு முகமை நடத்திய நீட் உள்ளிட்ட தேர்வுகளில் பல்வேறு முறைகேடுகள் நிகழ்ந்துள்ளன.
எனவே, நீட் தேர்வு ரத்து செய்யப்பட வேண்டும். இதுவரை நடைபெற்ற நீட் தேர்வுகளில் எழுந்த வினாத்தாள் கசிவு, ஆள்மாறாட்டம், தொழில்நுட்பக் கோளாறு, மதிப்பெண் முறைகேடு மற்றும் நிர்வாகத் தவறுகள் தொடர்பான புகார்களை விசாரிக்க, கல்வியாளர்கள் மற்றும் ஓய்வுபெற்ற நீதிபதிகள் தலைமையில் வெளிப்படையான விசாரணை ஆணையம் அமைக்கப்பட வேண்டும் என இம்மாநாடு வலியுறுத்துகிறது.
நீட் தேர்வால் உயிரிழந்த மாணவர்களின் குடும்பங்களுக்கு தலா ஒரு கோடி ரூபாய் இழப்பீடும், அவர்களின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலையும் வழங்கக் கோரி போராட இம்மாநாடு உறுதியேற்கிறது.
21. நீட் மட்டுமின்றி, பயிற்சி மையக் கார்ப்பரேட் நிறுவனங்கள் கொள்ளை லாபம் ஈட்டுவதற்கு ஏற்ற வகையில், போட்டித் தேர்வுகள் உயர்கல்விக்கான ஒரே வழியாக மாற்றப்பட்டுள்ளன. பொறியியல், மைய அரசின் பல்கலைக்கழகங்கள், முதுநிலைப் படிப்புகள் மற்றும் ஆராய்ச்சிக் கல்வியில் பல்வேறு தேசிய அளவிலான நுழைவுத் தேர்வுகள் நடைமுறையில் உள்ளன. அடுத்ததாக, கலை மற்றும் அறிவியல் படிப்புகளுக்கும் இத்தகைய தேர்வுகளைத் திணிக்க மைய, மாநில அரசுகள் முயன்று வருகின்றன. எனவே, CUET, JEE, UGC-NET உள்ளிட்ட அனைத்து நுழைவுத் தேர்வுகளும் ரத்து செய்யப்பட வேண்டும்.
தேசியத் தேர்வு முகமை கலைக்கப்பட வேண்டும். தேர்வு முறைகேடுகளால் பாதிக்கப்பட்ட மாணவர்களின் புகார்கள் வெளிப்படையாக விசாரிக்கப்பட்டு, அவர்களுக்கு உரிய நிவாரணம் வழங்கப்பட வேண்டும்.
இதற்கு மாற்றாக, அரசு மற்றும் தனியார் கல்வி நிறுவனங்களில் பள்ளிக் கல்வி மதிப்பீடு, கல்வி மற்றும் விளையாட்டுச் சாதனைகள், இடஒதுக்கீடு ஆகியவற்றின் அடிப்படையில் சேர்க்கை முறைகள் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என இம்மாநாடு வலியுறுத்துகிறது.
22. பாசிச மோடி அரசால் கொண்டுவரப்பட்டுள்ள “வளர்ந்த இந்தியாவுக்கான கல்வி ஆணைய மசோதா” (Viksit Bharat Shiksha Adhishthan Bill – VBSA), பல்கலைக்கழக மானியக் குழு (UGC), அகில இந்தியத் தொழில்நுட்பக் கல்விக் கழகம் (AICTE), தேசிய ஆசிரியர் கல்விக் கழகம் (NCTE) ஆகிய அமைப்புகளைக் கலைத்து, உயர்கல்வியைத் தேசிய உயர்கல்வி ஆணையத்தின் கீழ் மையப்படுத்துகிறது.
மேலும், விக்சித் பாரத் சிக்ஷா வினியமன் பரிஷத், விக்சித் பாரத் சிக்ஷா குணவத்தா பரிஷத், பாரத் சிக்ஷா மானக் பரிஷத் ஆகிய ஒழுங்குமுறை, அங்கீகாரம் மற்றும் தரநிலைக் குழுக்களை உருவாக்குகிறது. இக்குழுக்களில் அதிகார வர்க்கத்தினரையும் காவி-கார்ப்பரேட் ஆதரவாளர்களையும் நியமிப்பதன் மூலம் உயர்கல்வியில் பார்ப்பனியத் திணிப்பையும் கார்ப்பரேட் கொள்ளையையும் இம்மசோதா சட்டப்பூர்வமாக்குகிறது.
தேசியக் கல்விக் கொள்கை சித்தாந்த ரீதியாகச் சீரழித்த கல்வியை, இம்மசோதா சட்ட மற்றும் நிர்வாக வழிகளில் நடைமுறைப்படுத்தும் கருவியாக அமைகிறது. எனவே, இந்த உயர்கல்வி ஆணைய மசோதாவைத் திரும்பப் பெறக் கோரி போராட்டங்களை முன்னெடுக்க இம்மாநாடு உறுதியேற்கிறது.
23. 1976-ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட 42-வது அரசியலமைப்புத் திருத்தத்தின் மூலம் கல்வி, மாநிலப் பட்டியலிலிருந்து பொதுப் பட்டியலுக்கு மாற்றப்பட்டது. இதனால் மைய அரசு கல்வி தொடர்பாகச் சட்டம் இயற்றவும் கொள்கைகளை வகுக்கவும் அதிகாரம் பெற்றது. இதன் மூலம் நீட் போன்ற நுழைவுத் தேர்வுகளையும் தேசியக் கல்விக் கொள்கை போன்ற மாணவர் விரோதக் கொள்கைகளையும் மாநிலங்களின் மீது திணித்து, மாநில அரசுகளின் கல்வி உரிமைகள் பறிக்கப்படுகின்றன. எனவே, கல்வியை மீண்டும் மாநிலப் பட்டியலுக்கு மாற்றும் வகையில் 42-வது அரசியலமைப்புத் திருத்தம் ரத்து செய்யப்பட வேண்டும், தேசியக் கல்விக் கொள்கை ரத்து செய்யப்பட வேண்டுமென இம்மாநாடு வலியுறுத்துகிறது.
24. மருத்துவக் கல்விச் சேர்க்கையில் மாநிலப் பாடத்திட்டத்தின் அடிப்படையிலான மதிப்பீட்டையும் இடஒதுக்கீட்டையும் கொண்ட சேர்க்கை முறையை உருவாக்க வேண்டும். தமிழ்நாட்டின் அரசுப் பள்ளி மாணவர்கள், கிராமப்புற மாணவர்கள், பழங்குடியின மாணவர்கள், ஒடுக்கப்பட்ட சாதிகளைச் சேர்ந்த மாணவர்கள் மற்றும் முதல் தலைமுறைப் பட்டதாரிகளுக்கு மருத்துவக் கல்வியில் சம வாய்ப்புகள் உறுதிசெய்யப்பட வேண்டும்.
மருத்துவக் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டு இடங்களை அதிகரிப்பதுடன், அரசுக் கல்லூரிகளின் எண்ணிக்கை, மருத்துவப் பேராசிரியர்களின் எண்ணிக்கை, மருத்துவமனைப் படுக்கைகள், ஆய்வகங்கள் மற்றும் பயிற்சி வசதிகளை மேம்படுத்தப் போராட இம்மாநாடு உறுதியேற்கிறது.
25. மாணவர்களின் திறன்களை மதிப்பிடுவதற்கு ஒரே தேர்வையோ மனப்பாட அடிப்படையிலான மதிப்பெண்களையோ அளவுக்கு மீறி நம்புவது, அவர்களின் சிந்தனை, படைப்பாற்றல் மற்றும் நடைமுறைத் திறன்களை முழுமையாக வெளிப்படுத்தாது. எனவே, பள்ளி மற்றும் கல்லூரிகளில் தொடர்ச்சியான மதிப்பீடுகள், செய்முறைத் தேர்வுகள், திட்டப்பணிகள், ஆய்வுகள், விவாதங்கள் மற்றும் திறன் சார்ந்த மதிப்பீடுகள் அறிமுகப்படுத்தப்பட வேண்டும்.
வினாத்தாள்கள் மனப்பாடத் திறனை மட்டும் அல்லாமல், கருத்துப் புரிதல், பகுத்தறிவு மற்றும் பயன்பாட்டுத் திறன்களையும் மதிப்பிடும் வகையில் தயாரிக்கப்பட வேண்டும். மாணவர்களின் கலை, விளையாட்டு, சமூகப் பணி, ஆராய்ச்சி மற்றும் படைப்பாற்றலுக்கும் உரிய கல்விசார் அங்கீகாரமும் வேலைவாய்ப்பு அங்கீகாரமும் வழங்கப்பட வேண்டும் என இம்மாநாடு வலியுறுத்துகிறது.
26. தமிழ்நாட்டில் துணைவேந்தர்கள் இல்லாமல் இயங்கும் 15 பல்கலைக்கழகங்களுக்கும் உடனடியாகத் துணைவேந்தர்கள் நியமிக்கப்பட வேண்டும். மூன்று பேர் கொண்ட தேடுதல் குழுவின் வழியாகவே துணைவேந்தர் தேர்வு நடைபெற வேண்டும். கூடுதலாக இரு உறுப்பினர்களைச் சேர்த்து ஐந்து பேர் கொண்ட குழுவை அமைப்பதன் மூலம் மாநிலத்தின் உரிமையைப் பறிக்க முயலும் ஆர்.எஸ்.எஸ்.-பா.ஜ.க.வின் திட்டத்தை முறியடிக்க வேண்டும்.
மாநிலப் பல்கலைக்கழகங்களில் மாநில அரசின் அதிகாரம் நிலைநாட்டப்பட வேண்டும். தமிழ்நாடு முதலமைச்சரே பல்கலைக்கழகங்களின் வேந்தராகச் செயல்பட வேண்டும் என இம்மாநாடு வலியுறுத்துகிறது.
27. துணைவேந்தர் பதவி காலியாக இருக்கும் சூழலில் பல்கலைக்கழக நிர்வாகச் செயல்பாடுகள் தடையின்றி நடைபெற வேண்டும். இதற்காகத் துணைவேந்தர் நியமனத்திற்கான தேடுதல் குழு விரைவாகச் செயல்பட்டு, தகுதியான துணைவேந்தரை உடனடியாக நியமிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என இம்மாநாடு வலியுறுத்துகிறது.
28. மைய மற்றும் மாநில அரசுகள் அரசுப் பல்கலைக்கழகங்களுக்கு முறையாக நிதி ஒதுக்காமல் திட்டமிட்டு நெருக்கடியை ஏற்படுத்தி வருகின்றன. இந்நிலையில், கார்ப்பரேட் நிறுவனங்களின் கல்விக் கொள்ளையைத் தீவிரப்படுத்தி, ஒடுக்கப்பட்ட மற்றும் சிறுபான்மை மாணவர்களின் கல்வி உரிமையைப் பறிக்கும் தனியார் பல்கலைக்கழகச் சட்டத்திருத்த மசோதா திரும்பப் பெறப்பட வேண்டும். இதற்கான போராட்டங்களைக் கட்டியமைக்க இம்மாநாடு உறுதியேற்கிறது.
29. அரசுப் பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளின் நிர்வாகக் குழுக்களில் கார்ப்பரேட் நிறுவனப் பிரதிநிதிகளுக்கு அளவுக்கு மீறிய அதிகாரம் வழங்கப்படுவது தடுக்கப்பட வேண்டும். மாணவர்கள், ஆசிரியர்கள், கல்வியாளர்கள் மற்றும் பொதுமக்களின் பிரதிநிதித்துவம் உறுதிசெய்யப்பட வேண்டும். கார்ப்பரேட் நிறுவனங்களுடன் மேற்கொள்ளப்பட்டுள்ள புரிந்துணர்வு, நிதியுதவி, ஆராய்ச்சி மற்றும் தொழில்நுட்ப ஒப்பந்தங்கள் ரத்து செய்யப்பட வேண்டும். பல்கலைக்கழகங்களின் ஆராய்ச்சி முடிவுகள் மக்கள் நலனுக்குப் பயன்படும் வகையில் பொதுமக்களுக்குக் கிடைப்பதை உறுதிசெய்யும் கொள்கை உருவாக்கப்பட வேண்டும் என இம்மாநாடு வலியுறுத்துகிறது.
30. அரசுக் கல்வி நிறுவனங்களுக்குச் சொந்தமான நிலம், கட்டடங்கள், ஆய்வகங்கள் மற்றும் பிற பொதுச் சொத்துகளைத் தனியார் நிறுவனங்களுக்கோ பிற துறைகளுக்கோ வழங்கும் நடவடிக்கைகள் கைவிடப்பட வேண்டும் என இம்மாநாடு வலியுறுத்துகிறது.
31. கற்பித்தலைப் பல்வேறு பிரிவுகளாகப் பிரித்தல், இல்லம் தேடிக் கல்வித் திட்டம், வானவில் மன்றம் மற்றும் இணையவழிக் கல்வி ஆகியவற்றின் மூலம் மாணவர்களை வழக்கமான பாடத்திட்டம் மற்றும் வகுப்பறை முறையிலிருந்து விலக்கி, கல்வியை மையப்படுத்தி, பின்னர் அதில் கார்ப்பரேட் நிறுவனங்களை நுழைக்கும் போக்கை மாநில அரசு மேற்கொள்கிறது.
இதில் தன்னார்வத் தொண்டு நிறுவனங்களும் (NGO), கார்ப்பரேட் நிறுவனங்களும் புத்தொழில் நிறுவனங்களும் பங்கேற்கின்றன. மேலும், கற்றல்-கற்பித்தல் உள்ளிட்ட கல்வி நடவடிக்கைகள் டிஜிட்டல் தளங்களில் தொடர்ந்து பதிவேற்றப்படுவதால், பெருந்தரவு (Big Data) களஞ்சியம் உருவாக்கப்படுகிறது. இதன் மூலம் கல்வித்துறையின் செயல்பாடுகள் குறித்த தரவுகளை கார்ப்பரேட் நிறுவனங்கள் எளிதில் பெற முடிகிறது. அவற்றைப் பயன்படுத்தி கல்விச் சந்தையைக் கைப்பற்ற அந்நிறுவனங்கள் முயல்கின்றன.
பள்ளிகளின் கட்டடப் பராமரிப்பு, துப்புரவு, உணவு தயாரித்தல், பாதுகாப்பு போன்ற நிர்வாகப் பணிகளும் மையப்படுத்தப்பட்ட நிறுவனங்களின் கட்டுப்பாட்டுக்குச் செல்கின்றன. அரசு-தனியார் கூட்டாண்மையின் பழைய திட்டங்கள் போதிய லாபம் தராத நிலையில், புதிய வடிவில் “நம்ம ஸ்கூல்” திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. கல்விப் பொறுப்பிலிருந்து அரசு விலகும் GATS ஒப்பந்தத்தின் அடிப்படையிலேயே இவை நடைபெறுகின்றன.
எனவே, பன்னாட்டு நிறுவனங்கள், சர்வதேச நாணய நிதியம் (IMF), உலக வங்கி உள்ளிட்ட அமைப்புகளின் ஆதிக்கத்தை முறியடிக்க வேண்டும். நாட்டின் இறையாண்மையை மேலாதிக்க வல்லரசுகளிடம் ஒப்படைத்து, மறுகாலனியாக்கத்தை ஊக்குவிக்கும் கொள்கைகளையும், தேச விரோத மற்றும் மக்கள் விரோதமான GATS உள்ளிட்ட சமமற்ற ஒப்பந்தங்களையும் இந்தியா நிராகரித்து, அவற்றிலிருந்து முழுமையாக வெளியேற வேண்டும் என இம்மாநாடு வலியுறுத்துகிறது.
32. அனைத்து அரசுப் பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களிலும் நவீனத் தொழில்நுட்பக் கல்வியை வழங்கும் பொறுப்பை அரசே ஏற்க வேண்டும். அனைத்து மாணவர்களுக்கும் இலவச இணைய வசதி, கணினி மற்றும் தேவையான மின்னணுச் சாதனங்கள் வழங்கப்பட வேண்டும். இணையவழிக் கல்வி, நேரடி வகுப்பறைக் கல்விக்கு முழுமையான மாற்றாக அமையக் கூடாது; ஆசிரியர்-மாணவர் நேரடித் தொடர்பு, ஆய்வகப் பயிற்சி மற்றும் நூலகப் பயன்பாடு ஆகியவை பாதுகாக்கப்பட வேண்டும்.
டிஜிட்டல்மயமாக்கல் என்ற பெயரில் மைய மற்றும் மாநில அரசுகள் சேகரிக்கும் மாணவர்களின் கல்வித் தரவுகள், அடையாள விவரங்கள், தேர்வு முடிவுகள் மற்றும் தனிப்பட்ட தகவல்கள் தனியார் கல்வி நிறுவனங்களின் லாப நோக்கத்திற்குப் பயன்படுத்தப்படுவதைத் தடுக்க வேண்டும். மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் தனியுரிமை பாதுகாக்கப்பட வேண்டும் என இம்மாநாடு வலியுறுத்துகிறது.
33. அரசுப் பள்ளிகள், அரசு கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் காலியாக உள்ள ஆசிரியர், பேராசிரியர் பணியிடங்கள் குறித்த முழுமையான தரவுகள் வெளியிடப்பட வேண்டும். காலிப்பணியிடங்களை நிரப்புவதற்குக் காலக்கெடுவுடன் கூடிய நிரந்தரப் பணியமர்த்தல் திட்டம் அறிவிக்கப்பட வேண்டும். நீண்டகால ஒப்பந்தம், தற்காலிகப் பணி மற்றும் தொகுப்பூதிய அடிப்படையில் பணிபுரியும் ஆசிரியர்களின் பணிநிலையை உரிய சட்டங்கள் மற்றும் தகுதிகளின் அடிப்படையில் மறுபரிசீலனை செய்து, தகுதியானவர்களை நிரந்தரப்படுத்த வேண்டும்.
ஆசிரியர்களுக்கு உரிய ஊதியம், சமூகப் பாதுகாப்பு, பணிப் பாதுகாப்பு மற்றும் தொழில்முறை முன்னேற்ற வாய்ப்புகள் வழங்கப்பட வேண்டும். ஆசிரியர்களின் கல்விசார் சுதந்திரமும் மாணவர்களுடன் ஜனநாயக உறவை வளர்க்கும் பணிச்சூழலும் உறுதிசெய்யப்பட வேண்டும். ஒரே பணியைச் செய்யும் நிரந்தர மற்றும் ஒப்பந்தப் பணியாளர்களுக்கு ஊதியம், பாதுகாப்பு மற்றும் அடிப்படைப் பணிநலன்களில் சமத்துவம் நிலைநாட்டப்பட வேண்டும் என இம்மாநாடு வலியுறுத்துகிறது.
34. இந்தியா முழுவதும் தொடக்கக் கல்வி முதல் ஆராய்ச்சிக் கல்வி வரை அனைத்து நிலைகளிலும், மறைமுகக் கட்டணங்கள் இன்றி இலவசக் கல்வி வழங்குவதற்கான காலக்கெடுவுடன் கூடிய தேசியத் திட்டம் உருவாக்கப்பட வேண்டும். அரசுப் பள்ளிகள், அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள், பொறியியல் கல்லூரிகள், மருத்துவக் கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களுக்கான நிதி ஒதுக்கீடு அதிகரிக்கப்பட வேண்டும். கல்விக்கான பொதுச் செலவினம் படிப்படியாக உயர்த்தப்பட வேண்டும் என இம்மாநாடு வலியுறுத்துகிறது.
35. கிராமப்புற மற்றும் மலைப்பகுதிப் பள்ளிகளில் அறிவியல் ஆய்வகங்கள், கணினி ஆய்வகங்கள், நூலகங்கள், விளையாட்டுத் திடல்கள் மற்றும் கலைப் பயிற்சி வசதிகள் ஏற்படுத்தப்பட வேண்டும். மாணவர் எண்ணிக்கை குறைவாக இருப்பதை மட்டும் காரணமாகக் கொண்டு அரசுப் பள்ளிகளை மூடுவதோ தொலைதூரப் பள்ளிகளுடன் இணைப்பதோ தவிர்க்கப்பட வேண்டும் என இம்மாநாடு வலியுறுத்துகிறது.
36. ஒடுக்கப்பட்ட மற்றும் ஏழை, எளிய மாணவர்களுக்குக் கல்விக் கட்டணம், விடுதி, உணவு, புத்தகங்கள் மற்றும் போக்குவரத்துச் செலவுகளுக்கான நேரடி உதவித்தொகைகள் வழங்கப்பட வேண்டும். கல்விக் கடன்கள் நிபந்தனையின்றி ரத்து செய்யப்பட வேண்டும். கடனைத் திருப்பிச் செலுத்த இயலாத மாணவர்களை அவமானப்படுத்துதல், மிரட்டுதல் அல்லது அவர்களின் கல்விச் சான்றிதழ்களைத் தடுத்து வைத்தல் போன்ற நடவடிக்கைகள் தடுக்கப்பட வேண்டும். மாணவர்களுக்கான கல்வி உதவித்தொகைகள் காலதாமதமின்றி வழங்கப்பட வேண்டும்; உதவித்தொகை தாமதத்தின் காரணமாகத் தேர்வு எழுதும் வாய்ப்பு, விடுதி வசதி அல்லது கல்வி வாய்ப்பு மறுக்கப்படக் கூடாது என இம்மாநாடு வலியுறுத்துகிறது.
37. ஒடுக்கப்பட்ட மற்றும் பிற்படுத்தப்பட்ட மாணவர்களின் கல்வி உரிமையை உறுதிப்படுத்துவதில் முக்கியப் பங்கு வகிக்கும் அரசு விடுதிகள், ஒவ்வொரு மாவட்டத்திலும் போதுமான எண்ணிக்கையில் அமைக்கப்பட்டு விரிவுபடுத்தப்பட வேண்டும். குறிப்பாக, பெருநகரங்களில் அதிகரித்து வரும் மாணவர் எண்ணிக்கைக்கு ஏற்ப விடுதி வசதிகள் அதிகரிக்கப்பட வேண்டும். தற்போது இயங்கும் விடுதிகளில் அடிப்படை வசதிகளும் உள்கட்டமைப்பும் முறையாகவும் பாதுகாப்பாகவும் இருப்பது உறுதிசெய்யப்பட வேண்டும். மேலும், விடுதி மாணவர்களுக்கான உணவுப்படி ரூ.150 ஆக உடனடியாக உயர்த்தப்பட வேண்டும் என இம்மாநாடு வலியுறுத்துகிறது.
38. தனியார் பள்ளிகளில் தொடர்ந்து நடைபெறும் கட்டணக் கொள்ளை, மாணவிகள் மீதான பாலியல் துன்புறுத்தல்கள் மற்றும் அடிப்படை, உள்கட்டமைப்பு வசதிகளின் பற்றாக்குறை ஆகியவற்றைத் தடுக்க ஒருங்கிணைந்த, முறையான விசாரணை நடத்தப்பட வேண்டும். தொடர்ந்து குற்றச்சாட்டுகள் எழும் தனியார் பள்ளிகளின் உரிமம் ரத்து செய்யப்பட்டு, அவற்றை அரசே ஏற்று நடத்த வேண்டும். பள்ளிக் கல்வித்துறையின் கீழ் இயங்கும் தனியார் பள்ளிகள் இயக்ககம், மேற்கண்ட பிரச்சினைகள் குறித்து விரிவான ஆய்வு செய்து அறிக்கையைப் பொதுவெளியில் வெளியிட வேண்டும் என இம்மாநாடு வலியுறுத்துகிறது.
39. தமிழ்நாட்டில் இதுவரை 18,733 போக்சோ வழக்குகள் நிலுவையில் உள்ளன. இந்த வழக்குகள் சிறப்பு நீதிமன்ற அமர்வுகள் மூலம் விரைவாக விசாரிக்கப்பட்டு, குற்றவாளிகளுக்குத் தண்டனை வழங்கப்பட வேண்டும் என இம்மாநாடு வலியுறுத்துகிறது.
40. மனிதர்களின் சிந்தனையையும் இளைஞர்களின் மனப்பாங்கையும் சீரழிப்பதாகக் கருதப்படும் ஆபாச உள்ளடக்கங்களைத் தடை செய்ய வேண்டும். பெண்களை இழிவாகவும் ஆபாசமாகவும் சித்தரிக்கும் பத்திரிகைகள், விளம்பரங்கள் மற்றும் திரைப்படங்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆபாசத்தையும் வக்கிரத்தையும் பரப்பும் யூடியூப், முகநூல் மற்றும் இணையப் பக்கங்களைத் தடை செய்யக் கோரி போராட இம்மாநாடு உறுதியேற்கிறது.
41. பல சிறுமிகள் மீதான பாலியல் வன்முறை குற்றச்சாட்டுகள் தொடர்புடையதாகக் குறிப்பிடப்படும் “தமிழ்நாட்டின் எப்ஸ்டின்” ஜெம் வீரமணி வழக்கின் விசாரணை விரைவுபடுத்தப்பட வேண்டும். இந்த வழக்குடன் தொடர்புடையதாகக் கூறப்படும் அதிகாரிகள் மற்றும் அரசியல்வாதிகள் மீது பாரபட்சமின்றி விசாரணை நடத்தி, குற்றம் நிரூபிக்கப்பட்டால் தண்டனை வழங்கப்பட வேண்டும் என இம்மாநாடு வலியுறுத்துகிறது.
42. மைய மற்றும் மாநில அரசுகள் அனைத்துத் துறைகளிலும் ஒப்பந்தப் பணிமுறையைப் பரவலாக அறிமுகப்படுத்தி வருகின்றன. இதனால், லட்சக்கணக்கான படித்த இளைஞர்கள் பணிப் பாதுகாப்பும் சமூகப் பாதுகாப்பும் இன்றி கார்ப்பரேட் நிறுவனங்களில் கடுமையான சுரண்டலுக்கு உள்ளாகின்றனர். மைய மற்றும் மாநில அரசுகள், படித்த இளைஞர்களின் வேலைவாய்ப்பு, குறைவேலைவாய்ப்பு, தகுதிக்குக் குறைவான வேலை மற்றும் ஊதியமற்ற உழைப்பு குறித்த விரிவான தரவுகளை ஆண்டுதோறும் வெளியிட வேண்டும்.
அரசுத் துறைகளில் காலியாக உள்ள அனைத்துப் பணியிடங்களும் கணக்கிடப்பட்டு, காலக்கெடுவுக்குள் நிரப்புவதற்கான வேலைவாய்ப்புத் திட்டம் அறிவிக்கப்பட வேண்டும். கல்வி, மருத்துவம், பொதுப் போக்குவரத்து, சுற்றுச்சூழல் பாதுகாப்பு, ஆராய்ச்சி, உள்ளாட்சித் துறை மற்றும் பொதுச் சேவைகளில் புதிய நிரந்தரப் பணியிடங்கள் உருவாக்கப்பட வேண்டும். படித்த வேலையில்லா இளைஞர்களுக்கு வேலை கிடைக்கும் வரை, அவர்களின் கல்வித் தகுதி மற்றும் வாழ்வாதாரத் தேவைகளைக் கருத்தில் கொண்டு வேலைவாய்ப்பு உதவித்தொகை வழங்கும் திட்டம் உருவாக்கப்பட வேண்டும்.
தனியார் நிறுவனங்களில் பணிபுரியும் இளைஞர்களுக்குப் பணிப் பாதுகாப்பு, சமூகப் பாதுகாப்பு, ஒழுங்குபடுத்தப்பட்ட பணிநேரம், பாதுகாப்பான பணிச்சூழல் மற்றும் தொழிற்சங்க உரிமைகள் உறுதிசெய்யப்பட வேண்டும். மைய, மாநில அரசுப் பணிகளிலும் தனியார் நிறுவன வேலைவாய்ப்புகளிலும் அந்தந்த மாநில மக்களுக்கு முன்னுரிமை வழங்கப்பட வேண்டும் என இம்மாநாடு வலியுறுத்துகிறது.
43. சென்னை உயர்நீதிமன்றங்களில் தமிழை வழக்காடு மொழியாக்குவதற்காகப் போராடுவோம் எனக் கம்யூனிச மாணவர்-இளைஞர் கழகம் உறுதியேற்கிறது.
44. ஆபரேஷன் ககர் நடவடிக்கையை உடனடியாக நிறுத்த வேண்டும்!
மத்திய இந்தியாவின் தண்டகாரண்யா பகுதிகளான மகாராஷ்டிரா, தெலங்கானா மற்றும் சத்தீஸ்கர் மாநிலத்தின் பஸ்தர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள இயற்கை வளங்களைக் கொள்ளையடித்து, அம்பானி – அதானி போன்ற பெருமுதலாளிகளுக்குத் தாரைவார்க்கும் நோக்கில், ‘நக்சல் ஒழிப்பு’ என்ற பெயரில் பழங்குடியின மக்கள் மீது பல ஆண்டுகளாக உள்நாட்டுப் போரைத் தீவிரப்படுத்தி வருகிறது பாசிச மோடி அரசு. இந்நடவடிக்கையின் பெயரால் அப்பாவி பழங்குடியின மக்கள் மீதும், கனிமவளக் கொள்ளைக்கு எதிராகப் போராடும் மாவோயிஸ்ட் கட்சியைச் சேர்ந்தவர்கள் மீதும் வன்முறைத் தாக்குதல்கள் நடத்தப்படுவதோடு, கொடூரமான முறையில் கொல்லப்பட்டும் வருகின்றன. பழங்குடியின மக்களின் வாழ்வாதாரத்தையும், அவர்களின் நிலம், காடுகள் மற்றும் இயற்கை வளங்களின் மீதான உரிமைகளையும் பறிக்கும் நோக்கில் மேற்கொள்ளப்படும் இத்தகைய நடவடிக்கைகளை இம்மாநாடு வன்மையாகக் கண்டிக்கிறது.
ஆபரேஷன் ககர்’ நடவடிக்கையை உடனடியாக நிறுத்த வேண்டும் என்றும், பழங்குடியின மக்களின் வாழ்வுரிமை, நில உரிமை மற்றும் அடிப்படை உரிமைகளைப் பாதுகாக்க வேண்டும் என்றும் இம்மாநாடு ஒன்றிய அரசை வலியுறுத்துகிறது.
★
![]()
தோழமையுடன்
தோழர் அறிவு,
பொதுச்செயலாளர்,
கம்யூனிச மாணவர்-இளைஞர் கழகம்,
தமிழ்நாடு-புதுச்சேரி.
94448 36642.
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram, Threads





