மத்தியப்பிரதேச மாநிலம், பாலாகாட் மாவட்டத்தில் சத்புரா மலை மற்றும் வனப்பகுதியை ஒட்டி போண்டாரி, கொண்டேகசா, மாட்லா, சோன்குட்டா போன்ற கிராமங்கள் உள்ளன. இக்கிராமங்களில் தட்டம்மை, மலேரியா மற்றும் தீவிர ஊட்டச்சத்துக் குறைபாட்டின் கூட்டுத் தாக்குதலால் 1-12 வயதுக்குட்பட்ட பைகா பழங்குடியினக் குழந்தைகள் கொத்து கொத்தாக செத்து மடிந்து வருகின்றனர்.
இந்த நோய்த்தொற்று பாதிப்பால் 32 குழந்தைகள் இறந்துள்ளதாக ஆளும் பா.ஜ.க. அரசு தெரிவித்துள்ளது. ஆனால், காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த உள்ளூர் சட்டமன்ற உறுப்பினரான சஞ்சய் உய்கே, மொத்தம் 43 குழந்தைகள் நோய்த்தொற்றால் கொல்லப்பட்டிருப்பதை அம்பலப்படுத்தியிருக்கிறார்.
மே 18 அன்று இறப்பு பதிவாக தொடங்கிய நிலையில், ஜூலை இரண்டாம் வாரம் வரை அரசு அதிகாரிகள் ஊருக்குள் எட்டிப் பார்க்கக்கூட இல்லை. இதனால், முதலில் மாட்லா கிராமத்தில் பரவிய நோய்த்தொற்று போண்டாரி, கொண்டேகசா, உசேகல், மச்சூர்தா, கோர்கா, தெண்டுடீ மற்றும் சிக்லி ஆகிய கிராமங்களுக்கும் பரவி குழந்தைகளின் உயிரைக் குடித்துள்ளது.
பிஞ்சு உயிர்கள் கொத்து கொத்தாகப் பறிபோன கொடூரம், இந்திய மக்களின் மனசாட்சியை உலுக்கியுள்ளதுடன், அரசுக் கட்டமைப்பின் கொடூரமான புறக்கணிப்பையும் தோலுரித்துக் காட்டியுள்ளது.
000
மே மாதம் முதல் குழந்தைகள் கடுமையான காய்ச்சல், தோலில் சிவப்புத் தடிப்புகள், வாயில் புண்கள் மற்றும் கடுமையான வயிற்றுப்போக்கினால் பாதிக்கப்பட்டு உயிரிழக்கத் தொடங்கினர். மாவட்ட நிர்வாகத்தின் அலட்சியத்தால், மாட்லா கிராமத்தில் தொடங்கிய நோய்ப்பரவல் பழங்குடியின கிராமங்கள் முழுவதும் பரவிய நிலையில், அடுத்தடுத்து குழந்தைகள் உயிரிழக்கத் தொடங்கினர்.
தொற்றுநோயால் உயிரிழந்த குழந்தைகள் பல வாரங்களாக நோய்வாய்ப்பட்டிருந்தனர். அவர்களுக்கு உரிய நேரத்தில் சிகிச்சை அளித்திருந்தால் காப்பாற்றியிருக்க முடியும். ஆனால், பழங்குடியின கிராமங்கள் மருத்துவக் கட்டமைப்பு உள்ளிட்ட அனைத்து அடிப்படைத் தேவைகளிலிருந்தும் அரசால் புறக்கணிக்கப்பட்டுள்ளன.
குறிப்பாக போண்டாரி, கோர்கா, கொண்டேகசா போன்ற பழங்குடியின கிராமங்களில் ஆரம்ப சுகாதார நிலையங்கள் இல்லை. நோய்க்குச் சிகிச்சை பெற வேண்டுமென்றால் 15-20 கிலோமீட்டர் தொலைவில் உள்ள சோன்குட்டா ஆரம்ப சுகாதார நிலையத்திற்குச் செல்ல வேண்டும். தீவிர சிகிச்சைக்கு மாவட்ட மருத்துவமனைக்கே செல்ல வேண்டும்.
ஆனால், அங்கு செல்வதற்குக் கூட சாலை வசதி இல்லை. இதனால் அவசர ஊர்தியும் வருவதில்லை. இதனைப் பயன்படுத்தித் தனியார் வாகனங்கள் ரூ.2,000 முதல் ரூ.5,000 வரை கட்டணம் கேட்பதால், பழங்குடியின மக்களால் அதனைக் கொடுக்க முடிவதில்லை.
எனவே, நோய்வாய்ப்பட்ட தங்களது குழந்தைகளை மூங்கில் மரத்தில் கட்டி, கரடுமுரடான மலைப்பகுதியில் தோளில் தூக்கிக்கொண்டு செல்ல வேண்டிய அவலநிலை நீடிக்கிறது. பல குழந்தைகள் செல்லும் வழியிலேயே உயிரிழக்கும் கொடூரங்களும் அரங்கேறிக் கொண்டிருக்கின்றன.
கிராமங்களில் கிணறுகளோ, சுத்திகரிக்கப்பட்ட குடிநீரோ இல்லை. மக்கள் ஓடைகளிலும் சாக்கடை கலந்த குழிகளிலிருந்தும் கிடைக்கும் நீரையே பருகுகின்றனர். இதனால் அடினோவைரஸ் மற்றும் வயிற்றுப்போக்குத் தொற்றுகள் மிக எளிதாகப் பரவுகின்றன.
தட்டம்மை நோயைத் தடுக்க 9 மாதம் முதல் 15 வயது வரையிலான குழந்தைகளுக்கு இரண்டு தவணை தடுப்பூசி போடுவது கட்டாயமாகும். ஆனால், கொண்டேகசா கிராமத்தில் உள்ள அங்கன்வாடி பதிவேட்டின் தகவல்களின்படி, 15 குழந்தைகளில் 4 பேருக்கு மட்டுமே தடுப்பூசி போடப்பட்டிருப்பது அம்பலமாகியுள்ளது. தடுப்பூசி போடப்படாததால், நோய் குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் பரவியது; சிறு குழந்தைகளால் அதனை எதிர்கொள்ள முடியவில்லை.
நோய் பரவல் தொடங்கிய காலத்தில், பல கிராமங்களில் வீடு வீடாகச் சென்று மக்களின் நோய்களைக் கண்டறிவதற்கு ஆஷா பணியாளர்களோ, செவிலியர்களோ அல்லது மருத்துவர்களோ நியமிக்கப்படவில்லை. பாலாகாட் முழுவதும் உள்ள 72 ஆஷா பணியாளர் காலிப் பணியிடங்களில், 48 பணியிடங்கள் பீர்சா வட்டாரத்தில் மட்டுமே உள்ளன என்பது அரசின் அலட்சியத்தையே காட்டுகிறது.
குறிப்பாக, பருவகால மலேரியா பரவும் ஜூன் மாதங்களில் செய்யப்பட வேண்டிய கொசு மருந்து தெளித்தல் மற்றும் கொசுவலை விநியோகம் போன்ற ஆரம்பத் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவில்லை. மேலும், மலேரியா பாதிப்பு குறித்த புள்ளிவிவரங்களை அதிகாரிகள் மறைக்க முயன்றதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
பைகா சமூக மக்களுக்கு பாரம்பரியமாகக் காடுகளிலிருந்து கிடைத்த கிழங்குகள், மூலிகைகள் மற்றும் சிறுதானியங்கள் அவர்களுக்குத் தேவையான ஊட்டச்சத்தை வழங்கி வந்தன. ஆனால், வனத்துறை மற்றும் போலீசு மூலம் காடுகளுக்குள் செல்லக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டதால், ரேஷன் கடைகளில் வழங்கப்படும் அரிசியை மட்டுமே நம்பியிருக்க வேண்டிய சூழல் உருவானது. மாவுச்சத்து மட்டுமே உள்ள அரிசி உணவை, அதிலும் ஒரு நாளைக்கு ஒருவேளை அல்லது இருவேளை மட்டுமே சாப்பிட முடிகிறது. இது குழந்தைகளிடையே தீவிர ஊட்டச்சத்துக் குறைபாட்டையும் இரத்தசோகையையும் அதிகரித்தது. இதுவே நோய்த்தொற்றுகள் தாக்கும் போது அவர்களின் நோய் எதிர்ப்புச் சக்தியைக் குறைத்து மரணத்திற்கு வழிவகுத்தது.
பழங்குடியின மக்களிடம் நோய்கள் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்படவில்லை. அருகில் மருத்துவமனைகளும் இல்லாததால், தவிர்க்க முடியாமல் உள்ளூர் நாட்டு வைத்தியர்களிடம் செல்கின்றனர். இதனால் உரிய சிகிச்சை கிடைப்பதில் காலதாமதம் ஏற்படுகிறது.
இதற்கு அம்மக்களிடம் உள்ள கல்வியறிவின்மையே முக்கியக் காரணம் என்று சொல்லப்படுகிறது. ஆனால், உண்மையில் மருத்துவமனைக்குச் செல்லும் பழங்குடியின மக்கள், அங்குள்ள அதிகாரிகளால் சாதி, இன மற்றும் வர்க்க ரீதியாக இழிவுபடுத்தப்படுகின்றனர். தன் சகோதரர் ரூப்லாலை இழந்த புதன் சிங் என்னும் பழங்குடியினர் கூறும்போது, “இவர்கள் பைகாக்கள், இவர்களுக்கு எதுவும் தெரியாது என்கிறார்கள். ஏதேனும் ஒரு மருந்தைக் கொடுத்தால், அவர்கள் அதை மாடுகளைப் போல சாப்பிடுவார்கள் என்று நினைக்கிறார்கள்” என்று வேதனையுடன் தெரிவித்துள்ளார்.
பழங்குடியினரிலேயே மிகவும் வறுமையிலும், தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளிலும் வாழும், அழியும் நிலையிலுள்ள “சிறப்புப் பாதுகாப்பு தேவைப்படும் பழங்குடியினர்” (PVTG) மக்களுக்காக மத்திய அரசால் “பிரதமர் பழங்குடியினர் ஆதிவாசி நியாய மகா அபியான்” (PM-JANMAN – Pradhan Mantri Janjati Adivasi Nyaya Maha Abhiyan) திட்டம் தொடங்கப்பட்டது. இப்பட்டியலில்தான் பைகா சமூகமும் வருகிறது.
இத்திட்டத்தின் கீழ் சொல்லப்பட்டுள்ள அம்மக்களுக்கான நிரந்தரக் குடியிருப்புகள், பாதுகாப்பான குடிநீர், மின்சாரம், பள்ளிகள், விடுதிகள், தார்ச் சாலைகள், 100 சதவீதம் தடுப்பூசி இலக்கை அடைதல், அங்கன்வாடிகளை அமைத்து தாய்மார்களுக்கும் குழந்தைகளுக்கும் ஊட்டச்சத்து உணவு வழங்குதல், தொலைதூரக் கிராமங்களுக்கு நடமாடும் மருத்துவமனைகள் அமைப்பது போன்றவை காகிதத்தில் மட்டுமே உள்ளன. பழங்குடியினர் மேம்பாட்டிற்காக ஒதுக்கப்பட்ட பல்லாயிரம் கோடி ரூபாய் நிதி, விளம்பரப் பலகைகளாகவும் நெகிழிப் பைகளாகவும் மட்டுமே கிராமங்களைச் சென்றடைகின்றன.
குழந்தைகள் கொத்து கொத்தாகப் பலியான பின்னரும், நிர்வாகம் தரப்பில் தரவுகளை மறைக்கவும், பத்திரிகையாளர்கள் மற்றும் ஊடகங்கள் மருத்துவமனைகளுக்குச் சென்று உண்மையைக் கண்டறிவதைத் தடுக்கவும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டது செய்திகளில் அம்பலமானது.
பின்னர் குழந்தைகள் கொத்து கொத்தாகப் பலியாவது நாடு முழுவதும் பூதாகரமான நிலையிலும், உயர்நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்கு வந்த பிறகே, பா.ஜ.க. அரசு தற்காலிகமாகப் பள்ளிக்கூடங்களை மருத்துவ முகாம்களாக மாற்றித் தடுப்பூசிகளையும் சிகிச்சையையும் வழங்கி வருகிறது.
இவ்விவகாரம் குறித்து பேசிய மத்தியப் பிரதேச முதல்வர் மோகன் யாதவ், “இப்பகுதி இடதுசாரி தீவிரவாதத்தால் நீண்டகாலம் பாதிக்கப்பட்டிருந்ததால் சுகாதாரம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் ஏற்படுத்த முடியவில்லை” என்று அப்பட்டமாக பொய்யுரைக்கிறார்.
“கடந்த ஆண்டு இப்பகுதியில் நக்சலிசத்தை ஒழிப்பதாக அறிவித்தபோது, ஒரே இரவில் சி.ஆர்.பி.எஃப் (CRPF) முகாம்கள் அமைக்கப்பட்டன. ஆனால், 30 குழந்தைகள் உயிரிழந்த பிறகும், எந்தவித சுகாதாரக் கட்டமைப்புகளும் இதுவரை ஏற்படுத்தப்படவில்லை” என மக்களே அம்பலப்படுத்துகின்றனர்.
எனவே, பழங்குடியினக் குழந்தைகள் உயிரிழப்பிற்கு நோய்த்தொற்று மட்டும் காரணமல்ல; அம்மக்களுக்குத் தேவையான முறையான சாலை, உணவு, சுத்தமான குடிநீர், மருத்துவம் போன்றவற்றைச் செய்து கொடுக்காமல் குழந்தைகளைப் பலிகொடுத்த மாவட்ட நிர்வாகமும் பா.ஜ.க. அரசுமே முக்கியக் குற்றவாளிகள்.
‘சுதந்திரம்’ அடைந்து 79 ஆண்டுகள் கடந்து விட்டது என்று கூறிக்கொண்டாலும் நாட்டின் பல பழங்குடியின கிராம மக்கள் குடிநீர், மருத்துவம், கல்வி உள்ளிட்ட அடிப்படை வாழ்வாதாரத் தேவைகளுக்காகப் போராடி கொண்டிருப்பது வெட்கக்கேடானதாகும்.
உலகப் பொருளாதார வளர்ச்சியில் 4-வது நாடு, ‘டிஜிட்டல் இந்தியா’ எனப் பெருமை பீற்றிக் கொள்ளும் பாசிச கும்பல் பெரு முதலாளிகளின் வளர்ச்சியையே நாட்டின் வளர்ச்சியாக பார்க்கிறது. அதில் பழங்குடியின மக்களின் வாழ்வாதாரத்திற்கான குரல்கள் அடங்கிவிடுகின்றன.
எனவே, அனைத்து மக்களுக்கும் வாழ்வதற்கான உணவு, இருப்பிடம், மருத்துவம் உள்ளிட்ட வாழ்வாதாரத் தேவைகளையும், பாதுகாப்பையும் வழங்குகின்ற மாற்று கட்டமைப்புதான் தீர்வு. அதனை நோக்கிய போராட்டங்களை முன்னெடுப்போம்.
![]()
அப்துல்
(புதிய ஜனநாயகம் – அக்டோபர் 2026 இதழ்)
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram, Threads











