மேற்குவங்க மாநிலம் வடக்கு கொல்கத்தாவின் சோர்பாகன் துர்கா பூஜை பந்தலில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 7 வயது குழந்தை உள்பட 19 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். இது பாசிச பா.ஜ.க. அரசால் நிகழ்த்தப்பட்ட பச்சைப் படுகொலையாகும்.
வடக்கு கொல்கத்தாவின் குறுகலான சந்திற்கு பெயர் பெற்ற ராம் மந்திருக்கு அருகில் துர்கா பூஜை பந்தல் அமைக்கப்பட்டிருந்தது. அக்டோபர் 17 ஆம் தேதி அன்று பூஜையைக் காண்பதற்கு ஆயிரக்கணக்கான மக்கள் கூடியிருந்தனர். மாலையில் தொடர்ந்து மழை பெய்து கொண்டிருந்ததால் குழந்தைகளுடன் வந்திருந்த பெண்கள், முதியவர்கள் உள்ளேயே இருந்துள்ளனர். வெளியே இருந்தவர்கள் குறுகலான வழியில் பந்தலுக்குள் செல்லத் தொடங்கியுள்ளனர்.
அதே சமயம் கூட்டம் அதிகரித்ததால் “பந்தல் அமைப்பு விழப்போகிறது; சீக்கிரம் வெளியேறுங்கள்” என்று பந்தல் அமைப்பாளர்கள் ஒலிபெருக்கியில் அறிவித்துள்ளனர். இதனால் உள்ளே இருந்த மக்கள் பதறியடித்துக் கொண்டு வெளியே ஓடியுள்ளனர். ஒரே நேரத்தில் உள்ளேயும், வெளியேயும் குறுகிய வழியில் மக்கள் வெளியேறியதில் பயங்கரமான கூட்ட நெரிசல் ஏற்பட்டுள்ளது. பலர் கீழே விழுந்ததில் ஏழு வயது குழந்தை மற்றும் 13 பெண்கள் உள்பட 19 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்; 35-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.
உயிருக்குப் போராடியவர்கள் மற்றும் படுகாயமடைந்தவர்களை ஆம்புலன்சில் கொண்டு செல்வதற்கு வழியில்லாமல் குறுகிய பாதையில் ‘வி.ஐ.பி.’க்களின் கார்கள் நிறுத்தப்பட்டிருந்தன.
பின்னர் அப்பகுதி மக்கள் காயமடைந்தவர்களை இருசக்கர வாகனங்களிலும் செயலிகள் மூலம் இயங்கும் டாக்சிகளிலும் கொல்கத்தா மருத்துவக் கல்லூரி மருத்துவமனை உள்பட பல்வேறு மருத்துவமனைகளில் அனுமதித்துள்ளனர்.
இது குறித்து உள்ளூர்வாசியான அனுப் குப்தா கூறுகையில், “நானும் மற்ற இளைஞர்களும் உதவிக்கான அலறல் சத்தத்தைக் கேட்டு உள்ளே ஓடினோம். போலீசு சார்பில் பணியமர்த்தப்பட்ட காவி சீருடை அணிந்த சில தன்னார்வலர்கள் பீதியடைந்து வெளியே ஓடினர். நாங்கள் உள்ளே பார்த்தது நினைத்துப் பார்க்க முடியாத ஒன்று. புதிய ஆடைகளுடன் மிதி பட்ட ஒரு குழந்தையின் உடல் தாயின் உடலுக்கு அருகில் கிடந்தது. சிலர் மயக்கமடைந்திருந்தனர்; சிலர் முனகிக் கொண்டிருந்தனர். உடல்களை ஒவ்வொன்றாக வெளியே கொண்டு வந்தோம். பூஜை கமிட்டி தலைவர்கள் யாரும் அங்கு இல்லை” என்று தெரிவித்துள்ளார்.
இச்சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர் கூறுகையில் “அந்த இடம் மிகவும் குறுக்கலாக இருந்தது. பலர் வரிசையில் நின்றிருந்தனர். அங்கு முழுவதும் இருட்டாக இருந்தது. ஒரு விளக்கு கூட சரியில்லை. எனது மகள் மற்றும் பேத்தி என்னுடன் இருந்தனர். இருவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். நானும் கீழே விழுந்துவிட்டேன். அரை மணி நேரத்துக்கு அங்கு போலீசோ உதவி பணியாளர்களோ யாரும் இல்லை” என்று தெரிவித்துள்ளார்.
இந்த ஆண்டு, பண்டிகைக்குச் சற்று முன்பு தங்களது பகுதிகளை நன்கு அறிந்த அதிகாரிகள் அறிமுகமில்லாத இடங்களுக்கு மாற்றப்பட்டனர். மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் வருகைக்கான பாதுகாப்பு ஏற்பாடுகளுக்காகப் பூஜை பந்தல்களில் போலீசின் எண்ணிக்கை பெருமளவில் குறைக்கப்பட்டுள்ளது. இது மக்களின் பாதுகாப்பின் மீது பா.ஜ.க. அரசு கொண்டுள்ள அலட்சியத்தின் வெளிப்பாடாகும்.
அதேவேலையில் இ காமர்ஸ் இணையதளங்கள் மூலம் வி.ஐ.பி. பாஸ்கள் ரூ.399 க்கு விநியோகிக்கப்பட்டுள்ளது. கறுப்பு சந்தையிலும் இந்த பாஸ்கள் விற்கப்பட்டுள்ளதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன.
கொல்கத்தா போலீசுதுறை 3,319 பூஜைகளில் பயிற்சி பெறாத சுமார் 22,000 தன்னார்வலர்களைப் பணியமர்த்தியுள்ளது பாலிகஞ்சைச் சேர்ந்த இளைஞரான நிஷித் ராய் கூறுகையில், “உள்ளூர் பா.ஜ.க. மண்டலத் தலைவர் மூலமாக காஸ்பா போலீசு நிலையத்தில் நான் பதிவு செய்தேன். அவர்கள் எனது தொலைப்பேசி எண் மற்றும் எனது ஆதார் நகலை மட்டுமே கேட்டார்கள். அதற்குப் பிறகு எனக்கு காவி சட்டை, பேன்ட் மற்றும் தொப்பி வழங்கப்பட்டது. தன்னார்வலர்களுக்கு உணவு தவிர ஒரு நாளைக்கு ரூ.825 வழங்கப்படுகிறது. எங்களுக்கு எந்தப் பயிற்சியும் அளிக்கப்படவில்லை” என்று தெரிவித்துள்ளார்.
90 ஆண்டுகளாக அப்பகுதி மக்களால் துர்கா பூஜை பாரம்பரியமாக நடத்தப்பட்டு வரும் நிலையில் இதுபோன்ற விபத்து இதற்கு முன்பு நடந்ததில்லை என உள்ளூர் மக்கள் தெரிவிக்கின்றனர். இந்த ஆண்டு பூஜை கமிட்டியை பா.ஜ.க. கைப்பற்றிய பிறகே இக்கோர விபத்து நடந்துள்ளது. பா.ஜ.க. எம்.எல்.ஏ. பிஜோய் ஓஜா மற்றும் மேற்கு வங்க முதல்வர் சுவேந்து அதிகாரியின் மருமகன் தேவ்தீப் அதிகாரி உள்ளிட்டோர் புதிய கமிட்டியுடன் தொடர்புடையவர்களாக இருப்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் இதனை விபத்து என்று போலீசும் பா.ஜ.க. அரசும் கூறி வருகிறது. ஆனால் துர்கா பூஜையில் ஆயிரக்கணக்கில் மக்கள் கூடுவர் என்பது தெரிந்தும் உரிய பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளாமல் தன்னுடைய மதவெறி அரசியலுக்காக 19 உயிர்களைப் பலி கொடுத்துள்ளது. எனவே, இது பா.ஜ.க. அரசால் நிகழ்த்தப்பட்ட பச்சைப் படுகொலையாகும்.
தற்போது கண்துடைப்பிற்காகப் பூஜை கமிட்டி மற்றும் தன்னார்வலர்களில் ஏழு பேரைக் கைது செய்துள்ளது போலீசு. முறையான பாதுகாப்பு வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்காமல் 19 உயிர்களைப் பலி கொடுத்த பா.ஜ.க. அரசே முதல் குற்றவாளி.
மாநிலத்தில் ஆட்சியைக் கைப்பற்றியது முதல் மக்களிடம் மதவெறியைத் தூண்டுவதற்கு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது பாசிச பா.ஜ.க. அரசு. அதன் ஒரு பகுதியாக துர்கா பூஜையை பயன்படுத்திக் கொண்டது. பூஜைக்கு வந்த அதிகாரிகள், அரசியல்வாதிகளுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை. உழைக்கும் மக்களுக்கு மட்டுமே மிகப்பெரிய பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு உத்தரப் பிரதேசத்தில் நடைபெற்ற கும்பமேளாவில் கூட்ட நெரிசலில் சிக்கி 82 பேர் உயிரிழந்தனர். பிப்ரவரி 15-ஆம் தேதி இரவு டெல்லி ரயில் நிலையத்தில் கும்பமேளாவிற்குச் செல்வதற்காகக் கூட்டம் கூடியதில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் குழந்தைகள் உட்பட 18 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
அதேபோல், உத்தரப் பிரதேசத்தின் ஹத்ராஸ் மாவட்டத்தின் புல்ராய் கிராமத்தில் கடந்த ஆண்டு ஜூலை 2 அன்று போலே பாபா எனும் போலி சாமியாரின் மத நிகழ்ச்சியில், கூட்ட நெரிசலில் சிக்கி சுமார் 121 பேர் உயிரிழந்த சம்பவம் ஒட்டுமொத்த நாட்டையும் உலுக்கியது.
இவ்வாறு நிகழ்ச்சிகள் மூலம் மக்களிடம் பிற்போக்குத்தனமான, மூடநம்பிக்கை கருத்துகளை விதைப்பதுடன் எந்தவித பாதுகாப்பு ஏற்பாடுகளுமின்றி மதவெறியை ஊட்டுவதற்காகப் பிரமாண்ட மத நிகழ்ச்சிகளை நடத்தி மக்களைப் பலியிட்டுக் கொண்டிருக்கிறது பாசிச பா.ஜ.க. அரசு.
![]()
ஆசாத்
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram, Threads











