செயற்கை நுண்ணறிவு (ஏ.ஐ.) ஒரு புதிய உற்பத்திச் சக்தியாக வளர்ந்து வருகிறது. இது மனித உழைப்பைக் குறைக்கும்; அறிவியல் கண்டுபிடிப்புகளை வேகப்படுத்தும்; சமூகத்தின் உற்பத்தித்திறனைப் பல மடங்கு உயர்த்தும்.
ஆனால், கார்ப்பரேட்டுகளின் கைகளில் இதே தொழில்நுட்பம் வேலைநீக்கம், உழைப்புச் சுரண்டல், ஏகபோக மூலதனக் குவிப்பு, வல்லரசுப் போட்டி, தரவு ஏகபோகம், சூழலியல் அழிவு, கட்டுப்பாடுகளை மீறித் தானாகவே செயல்படும் ஏ.ஐ. அமைப்புகளின் அபாயம் ஆகியவற்றையே உருவாக்கிக் கொண்டிருக்கிறது. மேலும், தாங்கள் உருவாக்கும் இந்தத் தொழில்நுட்பத்தைக் கண்டு, கார்ப்பரேட்டுகளே அலறிக் கொண்டிருக்கும் நிலையும் உருவாகியுள்ளது.
எனவே, “ஏ.ஐ. நல்லதா? கெட்டதா?” என்பதல்ல கேள்வி. இந்தப் புதிய உற்பத்திச்சக்தியை யார் கட்டுப்படுத்துகிறார்கள்? இதன் வளர்ச்சி வேகத்தை யார் தீர்மானிக்கிறார்கள்? இதன் உற்பத்தித்திறன் உயர்வின் பலனை யார் கைப்பற்றுகிறார்கள்? இதன் அபாயம் யார் மீது சுமத்தப்படுகிறது? – இவையே நாம் பரிசீலிக்க வேண்டிய அடிப்படையான கேள்விகள்.
செப்டம்பர் 3, 2026 அன்று “ஓப்பன் ஏ.ஐ.” (OpenAI) நிறுவனம் “ஜி.பி.டி-6 அஸ்ட்ரா” (GPT-6 Astra) என்னும் ஏ.ஐ. மாதிரியை வெளியிட்டது. கணினியைப் பயன்படுத்துவது, மென்பொருள் (Software) எழுதுவது, இணையப் பாதுகாப்பு, அறிவியல் ஆராய்ச்சி போன்றவற்றில் இது முந்தைய மாதிரிகளை விடப் பெருமளவு முன்னேறியுள்ளதாக அறிவிக்கப்பட்டது.
முக்கியமாக, ஓப்பன் ஏ.ஐ. நிறுவனத்தின் பாதுகாப்பு விதிமுறைகளின்படி, இணையப் பாதுகாப்புத் திறனில் “அபாயகரமான” நிலையை எட்டிய முதல் மாதிரி இதுவே ஆகும். இதன் பொருள் என்னவெனில், மனித உழைப்புக்கும் சமூகத்தின் உற்பத்தித் திறனுக்கும் இடையிலான உறவு மிக வேகமாகக் தலைகீழாக மாறிக் கொண்டிருக்கிறது என்பதே.
உழைப்பை மிச்சப்படுத்தும் ஏ.ஐ. – பலன் யாருக்கு?
இந்தத் தொழில்நுட்ப வளர்ச்சியின் முதல் பாதிப்பு எங்கே தெரிகிறது? மனிதர்கள் மேற்கொண்டுவரும் வேலைகளில்தான்.
சர்வதேசத் தொழிலாளர் அமைப்பின் 2025-ஆம் ஆண்டு ஆய்வின்படி, உலகளவில் நான்கில் ஒரு தொழிலாளியின் வேலை, புதிய கட்டுரைகள், படங்கள், நிரல்கள் (Codes) போன்றவற்றை உருவாக்கும் “ஜெனரேட்டிவ் ஏ.ஐ.” (Generative AI) தொழில்நுட்பத்தின் தாக்கத்திற்கு உள்ளாகும் நிலையில் உள்ளது. மனிதர்கள் செய்து வந்த வேலைகளின் ஒவ்வொரு பகுதியையும் ஏ.ஐ. படிப்படியாக எடுத்துக்கொள்வதன் மூலம், வேலைவாய்ப்பின் அமைப்பையே மாற்றத் தொடங்கியிருக்கிறது.
சான்றாக, ஒரு மென்பொருள் பொறியாளர் எழுத வேண்டிய சில நிரல் குறியீடுகளை ஏ.ஐ. எழுதுகிறது; பிழைகளைக் கண்டுபிடிக்கிறது; ஆவணங்களைத் தயாரிக்கிறது. இதனால் முன்பு 10 பேர் தேவைப்பட்ட ஒரு குழுவுக்கு, இனி ஏழு அல்லது எட்டு பேர் இருந்தால் போதும் என்ற நிலை உருவாகிறது.
இந்த மாற்றம் புதிய வேலைவாய்ப்பிலும் எதிரொலிக்கிறது. அமெரிக்காவில் 22 முதல் 25 வயதுள்ள இளம் தொழிலாளர்களின் நிலையைப் பற்றி ஆய்வு செய்த “ஸ்டான்போர்டு டிஜிட்டல் எகானமி ஆய்வகம்”, ஏ.ஐ. அதிகம் பயன்படுத்தப்படும் துறைகளில் இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு 19 சதவிகிதம் குறைந்திருப்பதைக் கண்டறிந்துள்ளது.
அதாவது, ஏற்கெனவே வேலை செய்பவர்களின் வேலையைப் பறிப்பது மட்டும் பிரச்சினை அல்ல. புதிதாக 10 பேரை வேலைக்கு எடுக்க வேண்டிய இடத்தில், ஏ.ஐ. உதவியுடன் ஏழு அல்லது எட்டு பேரை மட்டும் எடுத்தால் போதும் என்ற சூழல் உருவாகிறது.
ஆனால், ஏ.ஐ. ஏற்படுத்தும் மாற்றம் இத்துடன் முடிவதில்லை. மனிதர்கள் செய்து வந்த வேலைகளை வேகமாகச் செய்வதிலிருந்து, அடுத்த தலைமுறை ஏ.ஐ-யை உருவாக்கும் ஆராய்ச்சியை ஏ.ஐ-யே செய்யத் தொடங்கும் கட்டத்துக்குத் தொழில்நுட்பம் நகர்கிறது. இதுதான் இன்றைய ஏ.ஐ. துறையில் கார்ப்பரேட்டுகளின் போட்டியை மேலும் வேகப்படுத்தும் புதிய திருப்பம்.
ஏ.ஐ. மூலம் ஏ.ஐ-யை உருவாக்கும் பந்தயம்
ஓப்பன் ஏ.ஐ. (OpenAI) நிறுவனம் செப்டம்பர் மாதம் வெளியிட்ட தகவல்களின்படி, ஒரு மனித ஆராய்ச்சியாளர் நாள் முழுவதும் செய்யக்கூடிய வேலைக்கு ஈடாக, தானாக இயங்கும் ஏ.ஐ. அமைப்புகள் (Autonomous AI Systems) 3.1 மடங்கு வேலையை செய்து முடித்துள்ளன.
அதாவது, மனித ஆராய்ச்சியாளர் 3.1 நாள் செய்யக்கூடிய வேலையை, அவை ஒரே நாளில் செய்துள்ளன. அடுத்த இலக்காக, மனிதர்களின் மேற்பார்வையில் தானாகவே ஆராய்ச்சி செய்யும் ஏ.ஐ. ஆய்வாளரை (automated AI researcher) உருவாக்கவும் அந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
இதன் பொருள் என்ன? ஏ.ஐ. ஆராய்ச்சியை ஏ.ஐ-யே வேகப்படுத்துகிறது. அதனால் முன்பைவிடச் சிறந்த புதிய ஏ.ஐ. மாதிரி (AI model) உருவாகிறது. அந்தப் புதிய மாதிரி, அடுத்த ஆராய்ச்சியை இன்னும் வேகப்படுத்துகிறது. இப்படியே ஒன்றை ஒன்று வளர்த்துக்கொண்டே போகிறது.
அதனால் இன்றைய போட்டி, “யார் சிறந்த மென்பொருளை உருவாக்குவது?” என்பதில் இல்லை. “அடுத்த தலைமுறை ஏ.ஐ-யை (next-generation AI) உருவாக்கும் வேகத்தை யார் முதலில் அதிகரிப்பது?” என்பதுதான் போட்டியாக மாறிவிட்டது.
கட்டுப்பாடுகளை மீறும் ஏ.ஐ.!
இவ்வளவு சுயமாகச் செயல்படும் ஆற்றல் கொடுக்கப்பட்ட ஏ.ஐ., மனிதர்கள் வகுத்த எல்லைக்குள் மட்டுமே செயல்படுமா? 2026 ஜூலையில் ஓப்பன் ஏ.ஐ. நடத்திய இணையப் பாதுகாப்புச் சோதனைகள் இக்கேள்விக்குக் கடுமையான எச்சரிக்கை விடுக்கின்றன.
இச்சோதனையில் பயன்படுத்தப்பட்ட சில உள்ளக ஆராய்ச்சி ஏ.ஐ. மாதிரிகள் (Internal research AI models), இணையத்திலிருந்து தனிமைப்படுத்தப்பட்ட “சாண்ட்பாக்ஸ்” (Sandbox) சூழலில் வைக்கப்பட்டிருந்தன. ஆனால் அவை அக்கட்டுப்பாடுகளை மீறி சென்று அனுமதிக்கப்படாத வழிகளில் ஒன்றுக்கொன்று தகவல்களைப் பகிர்ந்துள்ளன; “ஹக்கிங் ஃபேஸ்” (Hugging Face) தளத்தின் பாதுகாப்புக் குறைகளைப் பயன்படுத்தி அத்தளத்திற்குள் ஊடுருவி, அங்குள்ள சேவையகங்களில் (Servers) முழுமையான அதிகாரத்தையும் (Full Admin Access) பெற்றுள்ளன.
இதில் முக்கியமானது இதுதான். ஹக்கிங் ஃபேஸ் நிறுவனத்தைத் தாக்கு என்று ஏ.ஐ-க்கு யாரும் உத்தரவிடவில்லை. வேறொரு இலக்கை அடைய முயன்ற ஏ.ஐ., கட்டுப்பாடுகளை மீறியுள்ளது.
சான்றாக, நீங்கள் ஒருவரிடம்”அந்த அறையிலுள்ள கோப்பை இன்று மாலைக்குள் எடுத்து வா” என்று கூறுகிறீர்கள். ஆனால், அந்த அறை பூட்டியிருக்கிறது; சாவியும் கிடைக்கவில்லை. உடனே அந்த நபர் ஜன்னலை உடைத்து உள்ளே நுழைந்து கோப்பை எடுத்து வருகிறார். இங்கே “ஜன்னலை உடை” என்று நீங்கள் சொல்லவே இல்லை. ஆனால், கொடுத்த வேலையை முடிக்க வேண்டும் என்பதில் குறியாக இருந்த அவர் ஜன்னலை உடைத்து செயல்படுகிறார். இவ்வாறுதான் ஏ.ஐ. மாதிரியும் தன்னுடைய இலக்கை அடைவதற்காக மனிதர்களின் கட்டுப்பாட்டை மீறி செயல்பட்டுள்ளது.
அதாவது, “தவறான நபர்கள் தவறான கட்டளை கொடுத்தால்தான் ஏ.ஐ. ஆபத்தாக மாறும்” என்ற வாதத்தை இச்சம்பவம் உடைத்து நொறுக்குகிறது.
ஆய்வகத்தைத் தாண்டி அரசுத் தளங்களில்
ஹக்கிங் ஃபேஸ் சம்பவம் ஆய்வகச் சோதனையில் நடந்த ஒரு விதிவிலக்கு என்று ஒதுக்கிவிட முடியாது. 2026 ஜூன் மாதத்தில், ஓப்பன் ஏ.ஐ. நிறுவனத்தின் தானாகச் செயல்படும் ஓர் ஏ.ஐ. அமைப்பு, ஆஸ்திரேலிய அரசின் “மெடிகேர்” புள்ளிவிவர இணையதளத்தில் அனுமதியின்றி நுழைந்து, பொதுவெளியில் கிடைக்காத இரகசியக் கோப்புகளை அணுகியுள்ளது. இதை செப்டம்பர் 24 அன்று ஆஸ்திரேலியாவின் பிரதமர் அந்தோனி அல்பானீஸே வெளிப்படையாகத் தெரிவித்துள்ளார்.
அமெரிக்க அரசுத் தளங்களிலும் இதேபோன்ற முயற்சிகள் கண்டறியப்பட்டுள்ளன. அனுமதிக்கப்பட்ட எல்லைகளை மீறி செயல்படும் ஏ.ஐ-யின் இந்த ஆபத்தான போக்கு வேகமெடுத்து வருவதையே இவை காட்டுகின்றன.
முதலாளித்துவ அரசும்
ஏகபோக நலனும்!
இந்த அபாயங்களை அறிந்த பிறகும், இந்தப் பந்தயத்தை நடத்துபவர்கள் ஏன் வேகத்தைக் குறைப்பதில்லை? மைக்ரோசாப்ட் இணை நிறுவனர் பில்கேட்ஸ் போன்றவர்கள், ஏ.ஐ. நிறுவனங்கள் தங்களைத் தாங்களே கட்டுப்படுத்திக்கொள்வது போதாது என்றும், அரசும் சட்ட அமலாக்க அமைப்புகளும் தலையிட வேண்டும் என்றும் கோருகின்றனர்.
ஆனால், முதலாளித்துவ அரசு என்பது முதலாளிகளின் இலாப நலன்களைப் பாதுகாக்கும் எல்லைக்குள்ளேயே இயங்குகிறது. தனிப்பட்ட நிறுவனங்களுக்கு அபராதம் விதிக்கவோ, நிறுவனங்கள் ஒன்றிணைவதைத் தடுக்கவோ அரசால் முடியும். ஆனால் தனியார் சொத்துரிமை, உழைப்புச் சுரண்டல், மூலதனச் சேர்க்கை ஆகிய முதலாளித்துவத்தின் அடிப்படை விதிகளை மீறி அரசால் செயல்பட முடியாது.
இந்த வரம்பை அமெரிக்காவின் நிலைப்பாடு தெளிவாகக் காட்டுகிறது. ஏ.ஐ. பாதுகாப்பு குறித்த அச்சங்களை டிரம்ப் நிராகரிப்பதோடு, “அமெரிக்கா வேகத்தைக் குறைத்தால் சீனா முந்திவிடும், பலன் சீனாவுக்கே கிடைக்கும்” என்று வாதிடுகிறார். ஏ.ஐ. வளர்ச்சியைக் கட்டுப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை, வல்லரசு நாடுகளுக்கு இடையிலான தொழில்நுட்ப ஆதிக்கப் போட்டியோடு மோதும் இடம் இதுதான்.
ஏகபோக மூலதனத்தின்
கூட்டணியும் போட்டியும்!
ஓப்பன் ஏ.ஐ., ஆந்த்ரோபிக், கூகுள் போன்றவை ஒன்றுக்கொன்று போட்டியிடும் தனித்தனி நிறுவனங்களாகத் தெரிகின்றன. ஆனால், முன்னணி ஏ.ஐ. அமைப்புகளை உருவாக்க முதலீடு, அதிவேகச் சில்லுகள் (high-speed chips), தரவு மையங்கள், மின்சாரம், கணிப்பொறித் திறன், உலகளாவிய சந்தை ஆகியவை தேவை. இவை அனைத்தும் ஏற்கெனவே சில பெரும் தொழில்நுட்பக் கார்ப்பரேட்டுகளிடம் மட்டுமே குவிந்துள்ளன.

சான்றாக, மைக்ரோசாப்ட், ஓப்பன் ஏ.ஐ-யின் பெரிய முதலீட்டாளராகவும் முக்கியக் கணிப்பொறிக் கூட்டாளியாகவும் உள்ளது. ஆனால், ஓப்பன் ஏ.ஐ. மைக்ரோசாப்டின் கட்டுப்பாட்டிலுள்ள பினாமி நிறுவனம் அல்ல. மைக்ரோசாப்டும் ஓப்பன் ஏ.ஐ-யை மட்டுமே சார்ந்திருக்கவில்லை. தனது “கோ-பைலட்” (Copilot) சேவையில் ஓப்பன் ஏ.ஐ. மாதிரிகளுடன் பிற நிறுவனங்களின் ஏ.ஐ. மாதிரிகளையும் பயன்படுத்துகிறது; தனது சொந்த மாதிரிகளையும் உருவாக்குகிறது.
ஆந்த்ரோபிக்–அமேசான் உறவிலும் இதே நிலைதான். அமேசான் பெரும் முதலீட்டையும் கணிப்பொறித் திறனையும் வழங்குகிறது. ஆனால், ஆந்த்ரோபிக் அமேசானின் சொந்த நிறுவனம் அல்ல. பிற தொழில்நுட்ப நிறுவனங்களுடனும் அதற்கு வணிக உறவுகள் உள்ளன.
இதில்தான் முதலாளித்துவப் போட்டியின் உண்மைத் தன்மை தெரிகிறது. நிறுவனங்கள் ஓர் இடத்தில் கூட்டாளிகளாகவும், மற்றொரு இடத்தில் போட்டியாளர்களாகவும் இருக்கின்றன. கூட்டணியும் போட்டியும் ஒரே நேரத்தில் நடக்கின்றன.
எனவே, ஏ.ஐ. பந்தயம் என்பது சில நிறுவனங்களுக்கு இடையிலான தொழில்நுட்பப் போட்டி மட்டுமல்ல. சில்லுகள், கணிப்பொறித் திறன், தரவு மையங்கள், தரவு, மென்பொருள் சந்தை ஆகியவற்றின் மீது ஆதிக்கம் செலுத்துவதற்கான ஏகபோக மூலதனப் போட்டியாகும்.ஏ.ஐ. போட்டியின் பின்னே
ஏகாதிபத்தியப் போட்டி!
நிறுவனங்களுக்கிடையிலான இந்தப் போட்டியை விடப் பெரிய போட்டி அதன் பின்னால் இருக்கிறது. அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் ஏ.ஐ. என்பது வெறும் புதிய வணிகச் சந்தை அல்ல. பொருளாதாரம், அறிவியல், உளவு, இராணுவம், தொழில்துறை உற்பத்தி ஆகியவற்றில் எதிர்கால முன்னிலையைத் தீர்மானிக்கக்கூடிய உற்பத்திச்சக்தியாக அது பார்க்கப்படுகிறது.
செப்டம்பர் 24, 2026 அன்று டிரம்ப்பும் சீன அதிபர் ஜி ஜின்பிங்கும் அமெரிக்காவில் நடத்திய பேச்சுவார்த்தையில், ஏ.ஐ. அபாயங்களையும் பலன்களையும் விவாதிப்பதற்கான இருதரப்பு உரையாடலைத் தொடங்கவும், ஆபத்தான ஏ.ஐ. சம்பவங்கள் ஏற்பட்டால் நேரடியாகத் தொடர்புகொள்ளும் வழியை ஏற்படுத்தவும் இரு நாடுகளும் ஒப்புக்கொண்டன. ஆனால் ஏ.ஐ. வளர்ச்சி வேகத்தைக் குறைப்பதற்கோ, தொழில்நுட்ப முன்னிலைப் போட்டியை நிறுத்துவதற்கோ எந்த உடன்பாடும் ஏற்படவில்லை.
இதுதான் முரண்பாடு. ஏ.ஐ. அபாயம் குறித்து இரு வல்லரசுகளும் பேச வேண்டியிருக்கிறது. ஆனால் எந்த நாடும் முதலில் வேகத்தைக் குறைக்கத் தயாராக இல்லை.
பாதுகாப்பு, வேகத்தைக் குறைக்கச் சொல்கிறது. ஏகபோகப் போட்டி, வேகத்தை அதிகரிக்கச் சொல்கிறது. வல்லரசுப் போட்டி, எதிரியைவிட இன்னும் வேகமாக ஓடச் சொல்கிறது.
சீனாவை முந்த,
சீனாவைச் சார்ந்திருக்கும் முரண்!
இந்தப் போட்டிக்குள்ளேயே அமெரிக்காவுக்கு இன்னொரு முரண்பாடு உள்ளது. சீனாவை விட ஏ.ஐ. மற்றும் உயர் தொழில்நுட்பத் துறைகளில் முன்னிலை பெற வேண்டும் என்று அது விரும்புகிறது. ஆனால் சில்லுகள், தரவு மையங்கள், மின்சார அமைப்புகள் உள்ளிட்ட உயர் தொழில்நுட்ப உற்பத்திக்குத் தேவையான அருமண் தனிமங்கள் மற்றும் பல முக்கிய கனிமங்களின் வழங்கல் சங்கிலிகளில் சீனா மிகப்பெரிய ஆதிக்கம் செலுத்துகிறது.
2024-இல், காந்த உற்பத்திக்குப் பயன்படும் அருமண் தனிமங்களின் உலகச் சுத்திகரிப்பில் சீனாவின் பங்கு 91 சதவிகிதமாக இருந்தது. அமெரிக்கா பயன்படுத்தும் அருமண் சேர்மங்கள், உலோகங்களிலும் சீனாவே முக்கிய வழங்குநராக உள்ளது.
அதாவது, சீனாவை முந்த வேண்டும்; ஆனால் அதற்குத் தேவையான சில முக்கிய உற்பத்திச் சங்கிலிகளில் சீனாவை உடனடியாகத் தவிர்க்கவும் வாய்ப்பில்லை.
கடந்த செப்டம்பர் மாதம் அமெரிக்காவுக்கு அரசு முறை பயணமாக சீன அதிபர் ஜி ஜின்பிங் சென்ற போது அமெரிக்க அதிபர் டிரம்ப் அவரை விமான நிலையத்திற்கே நேரில் சென்று வரவேற்றதெல்லாம், இதன் பின்னணியிலிருந்தே. இப்பயணத்தின் போது அருமண் தனிமங்கள் உள்ளிட்ட முக்கிய கனிமங்களின் விநியோகச் சிக்கல்கள் குறித்து தொடர்ந்து பணியாற்ற இரு நாடுகளும் ஒப்புக்கொண்டுள்ளன.
எனவே, ஏ.ஐ. பந்தயம் வெறும் “யாருடைய மாதிரி சிறந்தது?” என்ற தொழில்நுட்பப் போட்டி அல்ல. சில்லுகள், கனிமங்கள், மின்சாரம், தரவு மையங்கள், அறிவியல் ஆராய்ச்சி, இராணுவத் தொழில்நுட்பம், உலக சந்தை ஆகியவற்றை உள்ளடக்கிய ஏகாதிபத்திய வல்லரசுப் போட்டியின் ஒரு முக்கியக் களமாக அது மாறியுள்ளது.
தரவையும் ஏகபோகமாக்கும் கார்ப்பரேட்டுகள்
இந்தப் போட்டிக்கு சில்லுகளும் கனிமங்களும் மட்டும் போதாது. ஏ.ஐ-க்கு பெருமளவிலான தரவுகளும் தேவை. மொழி, இலக்கியம், அறிவியல், நிரலாக்கக் குறியீடு, படம், ஒலி, பொதுவெளி இணைய உள்ளடக்கம் என மனித சமூகம் தலைமுறைகளாக உருவாக்கிய அறிவின் மீதுதான் இன்றைய ஏ.ஐ. அமைப்புகள் கட்டப்பட்டுள்ளன.
இந்தியா உள்ளிட்ட உலகத் தெற்கு நாடுகளிலிருந்து கிடைக்கும் மொழித் தரவுகள், இணைய உள்ளடக்கம், பயனர்களின் இணையச் செயல்பாடுகள், ஏ.ஐ. பயிற்சிக்காகத் தரவை வகைப்படுத்தும் மனித உழைப்பு ஆகியவற்றையும் பெரும் தொழில்நுட்ப நிறுவனங்கள் பயன்படுத்துகின்றன. ஆனால் இவற்றைத் திரட்டி, செயலாக்கி, பெரும் ஏ.ஐ. அமைப்புகளாக மாற்றுவதற்கான கணிப்பொறித் திறன், முதலீடு, தரவு மையங்கள், சந்தை வலை ஆகியவை ஒரு சில நிறுவனங்களிடமே குவிந்துள்ளன.
உலக மக்களின் அறிவையும் தரவையும் உழைப்பையும் பயன்படுத்தித் தொழில்நுட்பம் உருவாக்கப்படுகிறது; அதன் கட்டுப்பாடும் பெரும்பகுதி இலாபமும் சில நிறுவனங்களிடம் குவிகிறது. பின்னர் அதே தொழில்நுட்பத்தை அவை உலக மக்களுக்கே சேவையாக விற்கின்றன. இப்படித்தான் தரவு ஏகபோகம் உருவாகிறது. இந்த ஏகபோகம் சில்லுகள், கணிப்பொறித் திறன், உலக சந்தை மற்றும் அரசு அதிகாரத்துடன் இணையும் இடத்தில், ஏ.ஐ. வல்லரசுப் போட்டியின் ஒரு பகுதியாகிறது.
மனிதகுலத்தின் கூட்டறிவு –
சில நிறுவனங்களின் கட்டுப்பாடு!
இப்போது தொடக்கத்தில் எழுப்பிய அடிப்படைக் கேள்விக்குத் திரும்புவோம்.
ஒரு வேலையைச் செய்யத் தேவையான மனித உழைப்பு நேரத்தை ஏ.ஐ. பாதியாகக் குறைக்கிறது என்றால், அது சமூகத்துக்குப் பேரழிவாக இருக்க வேண்டியதில்லை. அனைவருடைய வேலை நேரத்தையும் குறைக்கலாம். கடினமான, சலிப்பூட்டும் பணிகளை இயந்திரங்களிடம் ஒப்படைக்கலாம். கல்வி, அறிவியல், கலை, குடும்பம், சமூக வாழ்க்கை ஆகியவற்றுக்கான மனித நேரத்தை அதிகரிக்கலாம். உற்பத்திச்சக்தியின் வளர்ச்சி மனிதகுலத்திற்கு வழங்கக்கூடிய வாய்ப்பு இதுதான்.
ஆனால் முதலாளித்துவத்தின் கீழ் இந்த உழைப்புச் சேமிப்பு, வேலைநேரக் குறைப்பாக மாறுவதில்லை. பத்து தொழிலாளர்கள் செய்த வேலையை ஏழு பேரைக் கொண்டு செய்ய முடிந்தால், மீதமுள்ள மூவரின் உழைப்புச் சேமிப்பு முதலாளிக்குத் தொழிலாளர் செலவைக் குறைத்து, இலாபத்தை அதிகரிப்பதற்கான வாய்ப்பாக மாறுகிறது. இயந்திரம் உற்பத்தித்திறனை உயர்த்த முடியும். ஆனால் அந்த உயர்வின் பலன் யாருக்குச் செல்ல வேண்டும் என்பதை இயந்திரம் தீர்மானிப்பதில்லை. சொத்துடைமை உறவுதான் அதைத் தீர்மானிக்கிறது.
ஏ.ஐ-யும் இதற்கு விதிவிலக்கல்ல. அது கோடிக்கணக்கான மனிதர்களின் சமூக உழைப்பால் உருவான மொழி, இலக்கியம், கணிதம், அறிவியல், தொழில்நுட்பம் ஆகிய கூட்டறிவிலிருந்து உருவானது. அதை இயக்கும் சில்லுகள், மின்சாரம், இணையம், தரவு மையங்கள் ஆகியவையும் சமூக உழைப்பின் விளைவுகளே. ஆனால் அதன் வளர்ச்சி வேகம், பயன்பாடு, அபாயம், உற்பத்தித்திறன் உயர்வின் பலன் ஆகியவற்றை மனிதகுலம் கூட்டாகத் தீர்மானிப்பதில்லை. சில ஏகபோக நிறுவனங்களும் அவற்றோடு பின்னிப்பிணைந்த ஏகாதிபத்திய அரசுகளுமே தீர்மானிக்கின்றன.
அறிவு சமூகமயமானது; உற்பத்தி சமூகமயமானது; உற்பத்திச்சக்தி சமூகமயமானது; அதன் அபாயமும் சமூகமயமானது; ஆனால் சொத்துரிமையும் முடிவெடுக்கும் அதிகாரமும் தனியார் கார்ப்பரேட்டுகளின் கைகளில் குவிந்திருக்கின்றன. இதுதான் அடிப்படை முரண்பாடு.
அரசு ஒழுங்குமுறை, பாதுகாப்புச் சோதனை, சுயாதீனக் கண்காணிப்பு ஆகியவை உடனடி நடவடிக்கைகளாக இருக்கலாம். ஆனால், ஏகபோக நிறுவனங்களின் இலாபப் போட்டியையும் வல்லரசுகளின் ஆதிக்கப் போட்டியையும் அப்படியே வைத்துக்கொண்டு பாதுகாப்பு விதிகளால் மட்டும் இந்த முரண்பாட்டைத் தீர்க்க முடியாது. சமூகமயமாக வளர்ந்துள்ள இந்த உற்பத்திச்சக்தியின் மீது சமூகமே கட்டுப்பாடு செலுத்த வேண்டும். தனியார் இலாபத்தை மையமாகக் கொண்ட உற்பத்தி உறவுகளுக்குப் பதிலாக, சமூகத் தேவைக்காக உற்பத்தியையும் தொழில்நுட்ப வளர்ச்சியையும் திட்டமிடும் சோசலிச உற்பத்தி உறவுகளுக்கான தேவை முன்னெப்போதையும் விட இப்போது தீவிரமடைந்து வருகிறது.
மனித உழைப்பை மிச்சப்படுத்தும் ஏ.ஐ. சோசலிசத்தில் மட்டுமே வேலை பறிக்கும் ஆயுதமாக அல்லாமல், வேலைநேரத்தைக் குறைத்து, சமூகச் செல்வத்தையும் மனிதனின் சுதந்திரமான நேரத்தையும் அதிகரிக்கும் உற்பத்திச்சக்தியாகப் பயன்படுத்தப்படும்.
எனவே, “ஒருநாள் ஏ.ஐ. மனிதகுலத்தைக் கட்டுப்படுத்துமா?” என்பதற்கு முன்பு கேட்க வேண்டிய கேள்வி ஒன்றுதான்: ஏ.ஐ. யாருடைய கட்டுப்பாட்டில் இருக்கிறது?
![]()
தமிழ்ச்சுடர்
(புதிய ஜனநாயகம் – அக்டோபர் 2026 இதழ்)
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram, Threads











