அனல்மின் நிலையம் முதல் குப்பை எரிவுலைகள் வரை: தமிழ்நாட்டை நாசமாக்கும் த.வெ.க. அரசு!

மேக்கேதாட்டில் அணை கட்டுவது, ஹைட்ரோகார்பன் கிணறுகள் மூலம் காவிரி டெல்டாவைப் பாலைவனமாக்குவது, மேகமலையில் பூர்வகுடி மக்களை வெளியேற்றிக் கனிம வளக் கொள்ளையைத் தீவிரப்படுத்துவது ஆகிய பாசிச மோடி அரசின் நோக்கங்களுக்குச் சாதகமாகவே த.வெ.க. அரசு செயல்பட்டு வருகிறது.

தங்களுடைய நில உரிமைக்காக செப்டம்பர் 26 முதல் போராடி வரும் வருசநாடு மக்கள்.

தமிழ்நாட்டில் ஆட்சியதிகாரத்தைக் கைப்பற்றியுள்ள த.வெ.க. அரசானது, சுற்றுச்சூழல் பேரழிவுத் திட்டங்களை நடைமுறைப்படுத்தி நம் மாநிலத்தை நாசமாக்கி வருகிறது. அண்மையில் நடந்துமுடிந்த தமிழ்நாடு சட்டமன்றக் கூட்டத்தொடரில் தூத்துக்குடியில் புதிய அனல்மின் நிலையம், சேலம், திருநெல்வேலியில் குப்பை எரிவுலைகள், மீஞ்சூரில் கடல்நீரைக் குடிநீராக்கும் திட்ட விரிவாக்கம் ஆகிய நாசகரத் திட்டங்களை த.வெ.க. அரசு அறிவித்துள்ளது. விவசாய நிலங்களை அபகரிப்பதற்கான சட்டத்திருத்தத்தையும் நிறைவேற்றியுள்ளது.

சட்டமன்றத்தில் எதிர்க்கட்சியினரிடம் சண்டையிடுவதைத் தன்னுடைய ஊடகப் படையினர் மூலம் மக்கள் மத்தியில் விவாதப்பொருளாக்கிவிட்டு, நாசகரச் சட்டத்திட்டங்களை 110 விதியின் கீழும் குரல் வாக்கெடுப்பின் மூலமும் த.வெ.க. அரசு நைச்சியமாக நடைமுறைப்படுத்துகிறது. இவை மட்டுமின்றி, ஆட்சிக்கு வந்ததிலிருந்து கல்குவாரிகள், தொழிற்பூங்காக்கள் உள்ளிட்ட சுற்றுச்சூழல் பேரழிவுத் திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது. இவ்வாறு த.வெ.க. அமல்படுத்தும் நாசகரத் திட்டங்கள், தமிழ்நாட்டின் இயற்கை மற்றும் கனிம வளங்களைக் கொள்ளையடிக்க வேண்டும் என்ற ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க; அம்பானி – அதானி பாசிச கும்பலின் நோக்கத்திற்குச் சாதகமாக உள்ளது.

தூத்துக்குடியில் புதிய அனல்மின் நிலையம்

கடந்த ஆகஸ்ட் 31-ஆம் தேதி, தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் தூத்துக்குடி அனல்மின்நிலைய வளாகத்தில் ரூ.20,800 கோடி மதிப்பீட்டில் தலா 800 மெகாவாட் உற்பத்தித் திறன் கொண்ட இரண்டு புதிய “மிக உய்ய அனல்மின் நிலைய அலகுகள்” (New Supercritical Thermal Power Station) அரசு-தனியார் கூட்டாண்மை முறையில் அமைக்கப்படும் என்று 110 விதியின் கீழ் அறிவித்தார். அதற்குப் பதிலாக, ஏற்கெனவே செயல்பாட்டில் உள்ள 210 மெகாவாட் உற்பத்தித் திறன் கொண்ட ஐந்து அனல்மின் நிலைய அலகுகள் படிப்படியாகச் செயலிழக்கச் செய்யப்படும் என்று கூறினார்.

தூத்துக்குடியில் தற்போது செயல்பட்டுவரும் தூத்துக்குடி அனல்மின் நிலையம் பல்வேறு விதிமீறல்களுடன், தீவிர சுற்றுச்சூழல் மாசுபாட்டை ஏற்படுத்தி இயங்கி வருகிறது. அனல்மின் நிலையத்தின் சுற்றுவட்டாரப் பகுதியில் வாழ்ந்துவரும் மக்கள் நிலக்கரி சாம்பல்கள், நச்சு வாயுக்கள் கலந்த காற்றை சுவாசிப்பதால், ஆஸ்துமா, புற்றுநோய் போன்ற பல்வேறு நோய்களால் பாதிப்புக்குள்ளாகின்றனர். விவசாய நிலங்களிலும் உப்பளங்களிலும் நிலக்கரி சாம்பல்கள் படிவதால் விவசாயிகளும் உப்பளத் தொழிலில் ஈடுபடுவோரும் பாதிக்கப்படுகின்றனர். 40 முதல் 44 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை கொண்ட நீர் அனல்மின் நிலையத்திலிருந்து கடலில் திறந்துவிடப்படுவதால் கடல்வளம் பாதிக்கப்படுகிறது.

தூத்துக்குடி அனல்மின் நிலையத்தின் நிலக்கரி சாம்பல் கழிவுகள் கொட்டப்படும் குட்டையானது முற்றிலுமாக நிரம்பிவிட்டது. விதிமுறைகளை மீறி கழிவுகள் கடல் பகுதியில் கொட்டப்பட்டு வருகின்றன. இதன் விளைவாகக் கடலின் ஆழம் குறைந்து, கோரம்பள்ளம் ஓடை வழியாக மீனவர்கள் கடலுக்குச் செல்ல முடியாத நிலை உருவாகியுள்ளது. மீன்வளம் குறைந்து அப்பகுதியில் பாரம்பரியமாக மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டு வந்த மீனவர்களின் வாழ்வாதாரம் முற்றிலுமாக அழிந்துள்ளது.

தூத்துக்குடியில் பல அரசு மற்றும் தனியார் அனல்மின் நிலையங்கள் இயங்கி வருகின்றன. ஒவ்வொரு அனல்மின் நிலையமும் தூத்துக்குடி அனல்மின் நிலையத்தைப் போன்றே விதிமீறல்களுடனேயே இயங்கி வருகின்றன. ஒவ்வொரு அனல்மின் நிலையமும் ஸ்டெர்லைட் ஆலையை விட அதிகப்படியான பாதிப்புகளை ஏற்படுத்துகின்றன. இதனால் மக்கள் வாழத் தகுதியற்ற பகுதியாக தூத்துக்குடி மாற்றப்பட்டு வருகிறது. இந்தப் பாதிப்புகளைத் தீவிரமாக்கித் தூத்துக்குடியைச் சுடுகாடாக்கும் வகையிலேயே த.வெ.க. அரசின் புதிய அனல்மின் நிலையத்திற்கான அறிவிப்பு அமைந்துள்ளது. அனல்மின் நிலையத்தின் மின் உற்பத்தித் திறனும் 550 மெகாவாட் அதிகரிக்கப்பட்டுள்ளது.

அதேபோல, நெய்வேலியை நாசமாக்கிக் கொண்டிருக்கும் என்.எல்.சி. அனல்மின் நிலையத்தின் சுரங்க விரிவாக்கப் பணிகளுக்குத் தேவையான நிலங்களை மக்களின் எதிர்ப்பை மீறி கையகப்படுத்துவதற்கான பணியில் த.வெ.க. அரசு ஈடுபட்டு வருகிறது. சுரங்கம் 1 விரிவாக்கத்திற்காகக் கங்கைகொண்டான் கிராமத்தில் 12.60 ஏக்கர் நிலத்தையும், சுரங்கம் 1-ஏ விரிவாக்கத்திற்காக வானதியாபுரம் கிராமத்தில் 3.21 ஏக்கர் நிலத்தையும் கையகப்படுத்துவதற்கான அரசாணையை த.வெ.க. அரசு வெளியிட்டுள்ளது. அந்த நிலங்களில் நூற்றுக்கும் மேற்பட்ட வீடுகளில் மக்கள் வசித்துவரும் போதிலும் அவற்றை கையகப்படுத்தவுள்ளதாக அறிவித்துள்ளது.

அனல்மின் நிலையங்கள் மூலம் மின் உற்பத்தி செய்வதைப் படிப்படியாகக் குறைக்க வேண்டும்; புதுப்பிக்கத்தக்க ஆற்றல் மூலங்களுக்கு மாற வேண்டும் என்று சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் தொடர்ச்சியாக வலியுறுத்தி வருகின்றனர். ஆனால் அதற்கு எதிராக, சுற்றுச்சூழலை நாசமாக்கி மக்களின் வாழ்வாதாரத்தை அழித்து அனல்மின் நிலையங்களை விரிவாக்கும் பணியில் த.வெ.க. அரசு இறங்கியுள்ளது.

மேலும், நிலக்கரி உற்பத்தி மற்றும் விநியோகம், அனல்மின் உற்பத்தியில் அதானியின் ஆதிக்கத்தை நிறுவ வேண்டும் என்று பாசிச மோடி அரசு செயல்பட்டுவரும் நிலையில் த.வெ.க. அரசின் நடவடிக்கை அதற்குச் சாதகமாகவே அமைகிறது.

விவசாயத்தை அழித்து உருவாக்கப்படும் தொழிற்பூங்காக்கள்

த.வெ.க. அரசு தாக்கல் செய்த 2026-2027 நிதியாண்டுக்கான நிதிநிலை அறிக்கையில் தொழிற்பூங்காக்களை அமைப்பதற்காக ரூ.3,200 கோடி நிதி ஒதுக்கப்பட்டிருந்தது. அதனடிப்படையில் தமிழ்நாட்டின் பல மாவட்டங்களில் விவசாய நிலங்களை அழித்துத் தொழிற்பூங்காக்களை அமைப்பதற்கான நடவடிக்கையில் த.வெ.க. அரசு தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. இதன் மூலம் விவசாயிகளின் வாழ்வாதாரத்தை அழித்து, மக்களை சொந்த நாட்டுக்குள்ளேயே அகதிகளாக்க விழைகிறது.

கடந்த செப்டம்பர் 11 அன்று, பரந்தூர் அருகே உள்ள மதுரமங்கலத்தில் ரூ.175 கோடி முதலீட்டில் செமிகண்டக்டர் மின்னணு உற்பத்தித் தொழிற்பூங்கா அமைக்கப்பட உள்ளதாக த.வெ.க. அரசு அறிவித்துள்ளது. அதற்காக 410.80 ஏக்கர் பட்டா நிலங்களைக் கையகப்படுத்துவதற்கான அரசாணையையும் வெளியிட்டுள்ளது. ஒருபுறம், பரந்தூர் விமான நிலையத் திட்டத்தை இரத்து செய்வதாக அறிவித்துவிட்டு, கையகப்படுத்தப்பட்ட 1,800 ஏக்கர் நிலத்தை விவசாயிகளிடம் ஒப்படைக்காத த.வெ.க. அரசு, தற்போது மேலும் 410.80 ஏக்கர் நிலத்தைத் தன்னுடைய கார்ப்பரேட் சேவைக்காகக் கைப்பற்ற துடிக்கிறது.

தொழிற்பூங்காவில் மிக அதிக அளவில் தண்ணீரை நுகரக்கூடிய செமிகண்டக்டர் ஆலைகளை அமைப்பதன் மூலம் பரந்தூர் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் விவசாயம் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது. விஜய் ஆட்சிக்கு வந்தால் தங்களது விவசாய நிலங்கள் திருப்பி வழங்கப்படும், வாழ்வாதாரம் பாதுகாக்கப்படும் என்று நம்பியிருந்த பரந்தூர் சுற்றுவட்டார மக்களுக்கு த.வெ.க. அரசு துரோகம் இழைத்துள்ளது.

அதேபோல, கடலூரில் புதிய தொழிற்பூங்கா அமைப்பதற்காகத் தியாகவல்லி, குடிக்காடு கிராமங்களில் 164.20 ஏக்கர் விளைநிலங்களைக் கையகப்படுத்துவதற்கான அரசாணையை த.வெ.க. அரசு செப்டம்பர் 1 அன்று வெளியிட்டுள்ளது. கடந்த தி.மு.க. ஆட்சியில் இப்பகுதியில் தொழிற்பூங்கா அமைப்பதற்காக 1,097 ஏக்கர் விளைநிலங்களைக் கையகப்படுத்துவதற்கான அரசாணை வெளியிடப்பட்டது. அதற்கெதிராக மக்கள் போராடிவரும் நிலையில், தற்போது மேலும் 164.20 ஏக்கர் நிலத்தைக் கைப்பற்றி பிரம்மாண்ட அளவில் தொழிற்பூங்காவை அமைப்பதற்கான நடவடிக்கையில் த.வெ.க. அரசு ஈடுபட்டு வருகிறது.

இவ்வாறு, தொழிற்பூங்காக்களை அமைப்பதன் மூலம், தமிழ்நாட்டில் தொழிற்சாலைகளைத் தொடங்குவதற்கு அந்நிய முதலீடுகளை ஈர்க்க முடியும்; தமிழ்நாட்டை 2035-க்குள் 1.5 டிரில்லியன் டாலர் பொருளாதாரம் கொண்ட மாநிலமாக உருவாக்க முடியும் என்று த.வெ.க. அரசு கூறுகிறது. இதைத்தான் முந்தைய தி.மு.க. அரசும் “2030-க்குள் ஒரு டிரில்லியன் டாலர் பொருளாதார வளர்ச்சி” என்ற பெயரில் மேற்கொண்டு வந்தது. தன்னை தி.மு.க-விற்கு மாற்றாக காட்டிக்கொண்ட த.வெ.க. தற்போது தான் பிரதிநிதித்துவப்படுத்தும் கார்ப்பரேட் கும்பலுக்குத் தமிழ்நாட்டின் நிலம், நீர் வளங்களைத் தாரைவார்த்து வருகிறது.

தீவிரமடையும் கனிமவளக் கொள்ளை

விதிமுறைகளை மீறி இயங்கும் கல்குவாரிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டு அவை மூடப்படும் என்பது த.வெ.க-வின் தேர்தல் வாக்குறுதிகளில் ஒன்றாகும். ஆனால் அதற்கு நேரெதிராக, விதிமுறைகளை மீறி இயங்கும் கல்குவாரிகளை மூடாமலும், புதிய கல்குவாரிகளைத் திறக்கும் பணியிலும் த.வெ.க. அரசு ஈடுபட்டு வருகிறது.

மதுரை உசிலம்பட்டி அருகே ஓணான்கரடு பகுதியில் அமைந்துள்ள கல்குவாரி, ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு மக்களின் எதிர்ப்பால் மூடப்பட்டது. இந்நிலையில், ஆந்திராவைச் சேர்ந்த விஜயலட்சுமி என்ற தனியார் நிறுவனத்திற்கு மீண்டும் குவாரி உரிமத்தை த.வெ.க. அரசு வழங்கியிருக்கிறது. கொடுமை என்னெவெனில், தொல்லியல் முக்கியத்துவம் வாய்ந்ததும், இயற்கை நீர்ச்சுனைகள், கால்நடை மேய்ச்சல் நிலம் மற்றும் 42-க்கும் மேற்பட்ட பறவை இனங்களின் வாழ்விடமாக விளங்குவதுமான இப்பகுதியை “எதற்கும் பயன்படாத நிலம்” எனச் சான்றளித்து இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து அப்பகுதி மக்கள் கருப்புக் கொடி கட்டியும் கல்குவாரியை முற்றுகையிட்டும் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி வட்டத்தில் உள்ள மல்லாக்கோட்டை, ஜெயங்கொண்டநிலை சுற்றுவட்டாரக் கிராமங்களில் செயல்பட்டு வரும் கிரானைட், கல்குவாரிகளால் அப்பகுதியில் விவசாயம், சுற்றுச்சூழல், நிலத்தடி நீர் ஆகியவை மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், த.வெ.க. ஆட்சிக்கு வந்த பிறகு, அப்பகுதியில் 100 ஏக்கர் பரப்பளவில் புதிதாகக் கல்குவாரி அமைப்பதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து 82 கிராம மக்கள் ஒன்றிணைந்து, தங்கள் பகுதியைச் “சுரங்கப் பணி தடை செய்யப்பட்ட பகுதி”யாக அறிவிக்க வேண்டும்; ஏற்கெனவே செயல்பாட்டில் உள்ள மற்றும் புதிதாக அமையவுள்ள அனைத்துக் குவாரிகளையும் மூட வேண்டும் என வலியுறுத்திப் போராடி வருகின்றனர்.

அம்மக்களின் போராட்டத்திற்குச் செவிசாய்க்காத த.வெ.க. அரசு கல்குவாரி மீண்டும் செயல்பட அனுமதி வழங்கியுள்ளது. அதிலும், அப்பகுதியில் அனுமதிக் காலம் முடிந்தும் முறைகேடாக இயங்கிய, ஆறு தொழிலாளர்களின் உயிரைப் பறித்த, சீல் வைத்து மூடப்பட்ட “மேகா புளூ மெட்டல்ஸ்” நிறுவனத்தால் நடத்தப்பட்ட குவாரியை, அதே சர்வே எண்ணில் “எஸ்.வி.எஸ். புளூ மெட்டல்ஸ்” என்ற மாற்றுப் பெயரில் இயங்க அனுமதி அளித்துள்ளது. இது த.வெ.க. அரசின் கூட்டுக்களவாணித்தனத்தைக் காட்டுகிறது.

அதேபோல, மதுரை வாடிப்பட்டி பகுதியில் விதிமுறைகளை மீறிச் செயல்படும் ஆறு கல்குவாரிகள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி அப்பகுதி மக்கள் போராடி வருகின்றனர். அம்மக்களின் கோரிக்கையைப் புறக்கணிப்பது மட்டுமின்றி, அப்பகுதியில் மேலும் ஒரு கல்குவாரி அமைப்பதற்கான பணியில் த.வெ.க. அரசு ஈடுபட்டு வருவதானது அதன் திமிர்த்தனத்தையும் மக்கள் விரோதத் தன்மையையும் காட்டுகிறது. மேலும், கடந்த தி.மு.க. ஆட்சியில் நடைபெற்ற கனிம வளக் கொள்ளைக்குச் சான்றாக மதுரை கொண்டையம்பட்டி வண்ணாத்திகரடு மலையைக் குறிப்பிட்டு, கனிம வளத் துறை அமைச்சர் பிரபு ஆகஸ்ட் 25 அன்று சட்டமன்றத்தில் உரையாற்றினார். ஆனால், அந்த மலையில் ஐந்து கல்குவாரிகள் தற்போதும் செயல்பட்டு வருவதைச் சமூகச் செயற்பாட்டாளர் கம்பூர் செல்வராஜ் அம்பலப்படுத்தியிருக்கிறார்.

மதுரை கொண்டையம்பட்டி வண்ணாத்திகரடு மலையை அழிக்கும் கல்குவாரி கொள்ளையர்கள்.

இவை சில சான்றுகள் மட்டுமே. செங்கல்பட்டு, விருதுநகர், தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி எனப் பல மாவட்டங்களில் கனிம வளக் கொள்ளை தீவிரமாக நடைபெற்று வருகிறது. கல்குவாரிகளுக்கு எதிரான மக்கள் போராட்டங்கள் நாள்தோறும் நடைபெறுகின்றன.

மேலும், அணுக்கனிமச் சுரங்க உரிமத்தை நீட்டிக்க மத்திய சுரங்க அமைச்சகத்திற்குக் கடிதம் எழுதியது; தமிழ்நாட்டின் பகுதிகளில் என்னென்ன கனிம வளங்கள் புதைந்திருக்கின்றன என்பதை மத்திய அரசின் அதிகாரிகள் ஆய்வு செய்ய அனுமதித்தது என த.வெ.க. அரசு தமிழ்நாட்டு வளங்களை மோடி அரசிற்கு கூறு போட்டு விற்றுக் கொண்டிருக்கிறது.

சுவாசிக்கும் காற்றை நச்சாக்கும் குப்பை எரிவுலைகள்

கடந்த செப்டம்பர் 2 அன்று தமிழ்நாடு சட்டமன்றத்தில் உரையாற்றிய விஜய், திருநெல்வேலி மாநகராட்சியில் ரூ.256 கோடி மதிப்பீட்டில் 9 மெகாவாட் உற்பத்தித் திறன் கொண்ட எரிவுலையும், சேலம் மாநகராட்சியில் ரூ.291 கோடி மதிப்பீட்டில் 10 மெகாவாட் உற்பத்தித் திறன் கொண்ட எரிவுலையும் (குப்பையிலிருந்து மின்சாரம் தயாரிக்கும் – Waste to Energy) அமைக்கப்படும் என்று அறிவித்திருந்தார். வழக்கம் போல இந்த அறிவிப்பும் 110 விதியின் கீழ்தான் அறிவிக்கப்பட்டது.

அதேபோல, கடந்த தி.மு.க. ஆட்சியில் கோவை வெள்ளலூர் பகுதியில் முன்மொழியப்பட்ட, 20 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யும் குப்பை எரிவுலையை அமைப்பதற்கான ஏலத்தை ஜூலை மாதத்தில் த.வெ.க. அரசு அறிவித்திருக்கிறது. இவ்வாறு அபாயகரமான குப்பை எரிவுலைகளைப் பல்வேறு மாவட்டங்களில் நிறுவுவதற்கான அறிவிப்புகளைத் த.வெ.க. அரசு தொடர்ந்து வெளியிட்டு வருகிறது.

இந்த எரிவுலைகளில் அனைத்து வகைக் குப்பைகளும் ஒன்றாக எரிக்கப்படுகின்றன. நிலக்கரி அனல்மின் நிலையத்தைவிட 28 மடங்கு டையாக்சின், 3 மடங்கு நைட்ரஜன் ஆக்சைடு, 14 மடங்கு பாதரசம், 6 மடங்கு சல்பர் டை ஆக்சைடு உள்ளிட்ட கொடிய நச்சு வாயுக்களும் மாசுக்களும் இவற்றிலிருந்து வெளியேறுவதால், மக்கள் சுவாசிக்கும் காற்றும் நஞ்சாகிறது. இதன் விளைவாக, ஆஸ்துமா, புற்றுநோய், இருதய நோய், தோல் நோய் உள்ளிட்ட பல்வேறு நோய்கள் மக்களுக்கு ஏற்படுகின்றன. இந்த ஆலைகளிலிருந்து கழிவுகளாகக் கொட்டப்படும் சாம்பல்களும் நீர் மற்றும் காற்று மாசுபாட்டை ஏற்படுத்தி மக்களுக்குக் கடுமையான உடல்நலப் பாதிப்புகளை ஏற்படுத்துகின்றன.

தூத்துக்குடி அனல் மின் நிலையம்.

இத்தகைய கொடிய பாதிப்புகளைக் குப்பை எரிவுலைகள் ஏற்படுத்துவதால்தான் அவற்றுக்கு மக்களும் சுற்றுச்சூழல் ஆர்வலர்களும் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர். மேலும், கடந்த தி.மு.க. ஆட்சியில் மக்களின் கடும் எதிர்ப்பினால் முறைகேடாகச் செயல்பட்ட சென்னை மணலி, கொடுங்கையூர் எரிவுலைகள் மூடப்பட்டுள்ளன. கொடுங்கையூரின் மற்றொரு எரிவுலை திட்டப் பணிகளையும் தாம்பரம், கோவை, எரிவுலை திட்டப் பணிகளையும் இரத்து செய்ய மக்கள் வலிறுத்தி வருகின்றனர். ஆனால் மக்களின் கோரிக்கைகளுக்கு எதிராகப் பல மாவட்டங்களில் புதிய எரிவுலைகளைப் அமைப்பதற்கான பணியில் த.வெ.க. அரசு ஈடுபட்டு வருகிறது.

மேலும், மத்திய மோடி அரசும் குப்பை மேலாண்மைக்குத் தீர்வாகக் குப்பை எரிவுலைகளை முன்னிறுத்தி வருகிறது. அவற்றை எளிதில் நிறுவும் வகையில், குப்பை எரிவுலைகளை அதிக மாசுபடுத்தும் தொழிற்சாலைகளுக்கான சிவப்புப் பட்டியலிலிருந்து நீலப் பட்டியலுக்கு முறைகேடாக மாற்றியிருக்கிறது. இதனை அம்பலப்படுத்திச் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் எதிர்ப்புத் தெரிவித்துவரும் நிலையிலும், த.வெ.க. அரசு அதனடிப்படையில் குப்பை எரிவுலைகளை நிறுவும் பணியில் ஈடுபட்டு வருகிறது.

காவிரி டெல்டாவை நாசமாக்கும் ஹைட்ரோகார்பன் கிணறுகள்

மயிலாடுதுறை மாவட்டத்தை ஒட்டியுள்ள கடற்பகுதியில் 81 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் ஐந்து புதிய ஹைட்ரோகார்பன் கிணறுகளை (எண்ணெய் மற்றும் எரிவாயு) அமைப்பதற்கு ஹார்டி எனும் அமெரிக்க நிறுவனம் (Hardy Exploration & Production (India) Inc) மத்திய அரசின் சுற்றுச்சூழல் மற்றும் கடலோர ஒழுங்குமுறை மண்டல அனுமதி கோரியுள்ளதாகச் செப்டம்பர் 14-ஆம் தேதி செய்திகள் வெளியாகியுள்ளன.

அதேபோல, கடலூர் மாவட்டத்தை ஒட்டியுள்ள கடற்பகுதியில் 75 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் நான்கு ஹைட்ரோகார்பன் கிணறுகளை அமைப்பதற்கு “இந்துஸ்தான் ஆயில் எக்ஸ்ப்ளோரேஷன் நிறுவனம்” கடலோர ஒழுங்குமுறை மண்டல அனுமதி கோரி தமிழ்நாடு கடலோர ஒழுங்குமுறை மண்டல மேலாண்மை ஆணையத்திடம் ஜூன் 1-ஆம் தேதி விண்ணப்பித்துள்ளது.

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி நிலப்பகுதியை ஒட்டிய ஆழமற்ற கடற்பகுதியில் 30 ஆயிரம் சதுர கிலோமீட்டர் பரப்பளவிலும், ஆழமான கடற்பகுதியில் 95 ஆயிரம் சதுர கிலோமீட்டர் பரப்பளவிலும் ஹைட்ரோகார்பன் உள்ளதாக மத்திய பெட்ரோலியத் துறை கண்டறிந்துள்ளது. இந்த வளத்தைச் சூறையாட ஓ.என்.ஜி.சி., வேதாந்தா போன்ற உள்நாட்டு மற்றும் பன்னாட்டு நிறுவனங்கள் போட்டிபோட்டுக் கொண்டிருக்கின்றன.

மத்திய அரசும் இந்நிறுவனங்களுக்குத் திறந்தவெளி நிலப்பரப்பு உரிமக் கொள்கை (OALP) அடிப்படையில் ஏல ஒப்பந்தத்தின் மூலம் கிணறுகளை அமைக்கத் தொடர்ந்து அனுமதி வழங்கி வருகிறது. அதனடிப்படையிலேயே, தற்போது ஹார்டி, இந்துஸ்தான் நிறுவனங்கள் ஹைட்ரோகார்பன் கிணறுகளை அமைப்பதற்கான அனுமதிக் கோரி விண்ணப்பித்திருக்கின்றன.

இந்த ஹைட்ரோகார்பன் கிணறுகளால் கடலுக்குள் ஏற்படும் அதிர்வுகள் மற்றும் எண்ணெய்க் கழிவுகளால் மீன், ஆமை போன்ற கடல்வாழ் உயிரினங்கள், பவளப்பாறைகள் உள்ளிட்ட கடல்வளம் மிகக் கடுமையாகப் பாதிக்கப்படும்.

குறிப்பாக, பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்கப்பட்ட காவிரி டெல்டா மாவட்டங்களின் கடற்கரைகளைக் குறிவைத்தே ஹைட்ரோகார்பன் கிணறுகள் அமைக்கப்படுகின்றன. இதன் விளைவாக, கிணறுகள் மூலம் ஹைட்ரோகார்பன்கள் உறிஞ்சப்படும்போது நிலத்தடி நீரும் உறிஞ்சப்பட்டு நில மட்டம் தாழ்ந்துபோகும் அபாயம் உள்ளது. காவிரிப் படுகையின் நில மட்டத்திற்கும் கடல் மட்டத்திற்கும் இடையே ஒரு மீட்டர் வேறுபாடு மட்டுமே உள்ள நிலையில், நில மட்டம் தாழ்ந்தால் காவிரிப் படுகையின் பெரும்பகுதி கடலுக்குள் மூழ்கி, விவசாயம் அழிந்துபோகும் பேரபாயம் உள்ளது.

இந்த ஹைட்ரோகார்பன் கிணறுகளின் அமைவிடம் கடலில் கடலோர ஒழுங்குமுறை மண்டல (CRZ-4) எல்லைக்குள் வரும் பட்சத்தில், தமிழ்நாடு கடலோர ஒழுங்குமுறை மண்டல மேலாண்மை ஆணையம் அனுமதி வழங்க வேண்டியது அவசியமாகும். எனவே, த.வெ.க. அரசினால் ஹார்டி, இந்துஸ்தான் நிறுவனங்கள் ஹைட்ரோகார்பன் கிணறுகள் அமைப்பதைத் தடுத்து நிறுத்த முடியும்.

ஆனால், இத்திட்டங்களுக்கு அனுமதி வழங்கப்படாது என்று தற்போதுவரை அறிவிக்காமல் டெல்டா விவசாயிகளுக்கு துரோகமிழைத்து வருகிறது, த.வெ.க அரசு. இவ்வாறு, மோடி அரசின் நாசகரத் திட்டங்களை த.வெ.க அரசு எவ்வித எதிர்ப்புமின்றி தமிழ்நாட்டிற்குள் அனுமதித்து வருகிறது.

த.வெ.க. அரசின் நில அபகரிப்புச் சட்டம்

அண்மையில் நடந்து முடிந்த சட்டமன்றக் கூட்டத்தொடரின் இறுதி நாளான செப்டம்பர் 8-ஆம் தேதி, தமிழ்நாடு நகர் மற்றும் ஊரமைப்புச் சட்டத் திருத்த முன்வடிவை சி.பி.ஐ., சி.பி.எம்., அ.தி.மு.க., பா.ம.க. உள்ளிட்ட கட்சிகளின் எதிர்ப்புகளை மீறி குரல் வாக்கெடுப்பின் மூலம் த.வெ.க. அரசு நிறைவேற்றியுள்ளது.

இத்திருத்தச் சட்டத்தின் மூலம் நன்செய் நிலங்களை வேறு பணிகளுக்கு மாற்றுவதற்கு ஒப்புதல் வழங்கும் அதிகாரம் உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் மாவட்ட ஆட்சியரிடமிருந்து பறிக்கப்பட்டுள்ளது. அதற்குப் பதிலாக, அந்த அதிகாரம் நகர திட்ட இயக்குநருக்கு வழங்கப்பட்டுள்ளது. முந்தைய சட்டத்தின்படி, எந்தவொரு திட்டத்தைத் தொடங்குவதற்கும் தொழிற்சாலையை அமைப்பதற்கும் உள்ளாட்சி அமைப்புகளின் அனுமதியை பெற வேண்டியிருந்தது. அந்த நடைமுறையை ஒழித்துக்கட்டுவதற்காகவே இச்சட்டத்திருத்தத்தை த.வெ.க. அரசு கொண்டுவந்திருக்கிறது.

இதன் மூலம், வளர்ச்சி என்ற பெயரில் கார்ப்பரேட் நிறுவனங்கள் தொழில் தொடங்க, ஏழை எளிய விவசாய மக்களிடமிருந்து விவசாய நிலங்கள் பறிக்கப்படும்; நிலப் பறிப்பிற்கு எதிராகப் போராடும் மக்கள் கொடூரமாக ஒடுக்கப்படுவார்கள். எனவே, இது த.வெ.க. அரசால் கொண்டுவரப்பட்ட நில அபகரிப்புச் சட்டமே ஆகும். கடந்த ஆட்சியில் தி.மு.க. தன் கார்ப்பரேட் சேவைக்காக நில ஒருங்கிணைப்புச் சட்டத்தைக் கொண்டுவந்ததைப் போன்று, த.வெ.க. அரசு நில அபகரிப்புச் சட்டத்தைக் கொண்டுவந்துள்ளது.

அதேபோல, வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறையின் கீழ் உள்ள, விவசாய நிலங்களை வேறு பயன்பாட்டிற்கு மாற்றுவதற்கான விதிகளில் சில திருத்தங்களை மேற்கொண்டு ஜூலை 31 அன்று த.வெ.க. அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. அதன்படி, திட்டமிடப்படாத பகுதிகளில் தரிசாக உள்ள விவசாய நிலங்களைப் பயன்பாட்டு மாற்றம் செய்வதற்கு வேளாண் துறை இயக்குநரிடம் தடையின்மைச் சான்றிதழ் பெற வேண்டும் என்ற நடைமுறை நீக்கப்பட்டுள்ளது. அதாவது, இந்த அரசாணையின் மூலமும் விவசாய நிலங்களைக் கார்ப்பரேட் திட்டங்களுக்கு அபகரிக்கும் நடவடிக்கையை த.வெ.க. அரசு எளிதாக்கியுள்ளது.

மக்கள் போராட்டங்களால் த.வெ.க. அரசை பணிய வைப்போம்!

மேற்கூறிய நாசகரத் திட்டங்கள் மட்டுமின்றி, மீனவர்களின் வாழ்வாதாரத்தை அழிக்கும் வகையில் மீஞ்சூரில் கடல்நீரைக் குடிநீராக்கும் திட்டத்தை விரிவுபடுத்த உள்ளதாகவும், பட்டினப்பாக்கத்தில் தலைமைச் செயலகத்தைக் கட்ட உள்ளதாகவும் த.வெ.க. அரசு அறிவித்துள்ளது.

மேக்கேதாட்டில் அணை கட்டுவது, ஹைட்ரோகார்பன் கிணறுகள் மூலம் காவிரி டெல்டாவைப் பாலைவனமாக்குவது, மேகமலையில் பூர்வகுடி மக்களை வெளியேற்றிக் கனிம வளக் கொள்ளையைத் தீவிரப்படுத்துவது ஆகிய பாசிச மோடி அரசின் நோக்கங்களுக்குச் சாதகமாகவே த.வெ.க. அரசு செயல்பட்டு வருகிறது. தூத்துக்குடியில் கப்பல் கட்டும் தளத் திட்டத்திற்கு எதிராக மீனவ மக்களும் உப்பளத் தொழிலாளர்களும் போராடிவரும் போதிலும், அதனை த.வெ.க. அரசு நடைமுறைப்படுத்தி வருகிறது.

தமிழ்நாட்டின் சுற்றுச்சூழலை நாசமாக்கும் பல பேரழிவுத் திட்டங்களை ஆட்சிக்கு வந்து 150 நாட்களுக்குள்ளாகவே த.வெ.க. அரசு செயல்படுத்தியுள்ளது. இனிவரும் காலங்களில் மேலும் பல நாசகரத் திட்டங்களை த.வெ.க. அரசு நடைமுறைப்படுத்தும். இயற்கை வளச் சூறையாடலும் மக்களின் வாழ்வாதாரப் பறிப்பும் உடல்நலப் பாதிப்புகளும் மேலும் தீவிரமடையும். இதன் விளைவாக, தமிழ்நாட்டின் பல பகுதிகள் மக்கள் வாழத் தகுதியற்ற பாலைவனமாகப் படிப்படியாக மாற்றப்படும்.

தி.மு.க. மீதான ஊழல் குற்றச்சாட்டுகளை ஊதிப்பெருக்குவது, கவர்ச்சிவாதத் திட்டங்களை நடைமுறைப்படுத்துவது, விஜய்யின் ஒவ்வொரு அசைவையும் ரீல்ஸ்களாக்கிச் சமூக ஊடகங்களில் பரப்புவது உள்ளிட்ட நடவடிக்கைகள் மூலம் மக்களைத் திசைதிருப்பிவிட்டு, நாசகரத் திட்டங்களை த.வெ.க. அரசு நைச்சியமாக நடைமுறைப்படுத்தி வருகிறது.

குறுகிய காலத்தில் இவ்வளவு நாசகரத் திட்டங்களை த.வெ.க அரசு அடுத்தடுத்து அறிவித்து வருகிறது. ஆனால், இதற்கெதிராக எதிர்க்கட்சியான தி.மு.க. எந்தப் போராட்டத்தையும் முன்னெடுக்கவில்லை. குதிரை பேரத்தால் நடைபெற்றுக்கொண்டிருக்கும் மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல் பிரச்சாரத்தில் அனைத்து அரசியல் கட்சிகளும் மூழ்கியுள்ளன.

ஆனால், த.வெ.க. நடைமுறைப்படுத்திவரும் சுற்றுச்சூழல் பேரழிவுத் திட்டங்களுக்கு எதிராகக் களத்தில் மக்கள் போராடி வருகின்றனர். மக்கள் போராட்டங்கள் மூலமே நாசகரத் திட்டங்களைத் தடுத்து நிறுத்த முடியும் என்பதே ஸ்டெர்லைட் ஆலை, ஹைட்ரோகார்பன் கிணறுகள், டங்ஸ்டன் சுரங்கத் திட்டம் ஆகியவற்றுக்கு எதிரான கடந்தகாலப் போராட்ட அனுபவமாகும். தற்போது, த.வெ.க. அரசும் மக்களின் உறுதியான போராட்டத்தாலேயே பரந்தூர் விமான நிலையம், திருவண்ணாமலை மேல்மா தொழிற்பூங்கா திட்டங்களை இரத்து செய்திருக்கிறது.

ஆகவே, த.வெ.க. நடைமுறைப்படுத்திவரும் சுற்றுச்சூழல் பேரழிவுத் திட்டங்களுக்கு எதிராகக் களத்தில் போராடிக் கொண்டிருக்கும் மக்களுடன் புரட்சிகர, ஜனநாயக சக்திகள் ஒன்றிணைய வேண்டும். அம்மக்களின் போராட்டத்தை மாபெரும் மக்கள்திரள் போராட்டங்களாக வளர்த்தெடுத்து, த.வெ.க. அரசை நிர்பந்தித்துப் பணிய வைக்க வேண்டும். இதுவே தமிழ்நாட்டு மக்களைச் சுற்றுச்சூழல் பேரழிவுத் திட்டங்களிலிருந்தும், அம்பானி-அதானி போன்ற கார்ப்பரேட்டுகளின் பின்நிலமாக தமிழ்நாடு மாற்றப்படுவதிலிருந்தும் காப்பதற்கான ஒரே வழியாகும்.


அமீர்

(புதிய ஜனநாயகம் – அக்டோபர் 2026 இதழ்)

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram, Threads



விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க