109-வது ரஷ்ய சோசலிசப் புரட்சி நாள்!
உலகம் முழுவதும் பற்றிப் படர்ந்துவரும் மக்கள் போராட்டங்கள் வெல்லட்டும்!
டிரம்ப்-மஸ்க் பாசிசக் கும்பலின் உலக மேலாதிக்கத்தை முறியடிப்போம்!
நாட்டை ஏகாதிபத்தியங்களுக்கு மறுகாலனியாக்கும்
ஆர்.எஸ்.எஸ்-பா.ஜ.க; அம்பானி-அதானி பாசிசத்தை வீழ்த்துவோம்!
அன்பார்ந்த உழைக்கும் மக்களே! தொழிலாளர்களே!
1917 நவம்பர் 7 அன்று தோழர் லெனின் தலைமையில் வெடித்தெழுந்த மாபெரும் ரஷ்யப் புரட்சி, உலக வரலாற்றின் ஈடு இணையற்ற திருப்புமுனையாக அமைந்தது. முதலாளித்துவச் சுரண்டலுக்கும் நிலப்பிரபுத்துவ அடக்குமுறைக்கும் முற்றுப்புள்ளி வைத்து, தொழிலாளர்களும் விவசாயிகளும் அதிகாரத்தைக் கைப்பற்றித் தங்களுக்கான அரசை நிறுவ முடியும் என்பதை உலகிற்கு மெய்ப்பித்துக் காட்டிய மகத்தான புரட்சி அது. உலகெங்கும் ஒடுக்கப்பட்ட மக்களின் விடுதலைப் போராட்டங்களுக்குப் புதிய நம்பிக்கையையும் புரட்சிகர உத்வேகத்தையும் அது அளித்தது.
நூற்றாண்டைக் கடந்தும் முதலாளித்துவச் சுரண்டலுக்கு எதிரான கிளர்ச்சிகளுக்கும், ஒடுக்கப்பட்ட மக்களின் விடுதலைப் போராட்டங்களுக்கும் ரஷ்யப் புரட்சியின் சமரசமற்ற மரபே என்றும் வற்றாத வழிகாட்டியாகத் திகழ்கிறது!
தீராத நெருக்கடியில் ஏகாதிபத்தியம்!
சரிந்துவரும் தனது ஒற்றைத்துருவ உலக மேலாதிக்கத்தைத் தக்கவைத்துக்கொள்ளத் துடிக்கும் அமெரிக்க ஆளும் வர்க்கம், டிரம்ப் – மஸ்க் பாசிசக் கும்பலை முன்னிறுத்தி “அமெரிக்காவுக்கே முன்னுரிமை” எனும் அடாவடித்தனக் கொள்கையை உலகத்தின் மீது திணிக்கிறது.
மேற்கு ஆசியாவில் ஈரான் மீது கட்டவிழ்த்துவிடப்பட்டுள்ள போரின் காரணமாக உலகம் முழுவதும் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது; விலைவாசி உயர்வு அதிகரித்து உழைக்கும் மக்களை வாட்டி வதைக்கிறது.
ஏகாதிபத்தியக் கார்ப்பரேட்டுகளின் கட்டற்ற இயற்கை வளச் சூறையாடலால் உருவாகியுள்ள காலநிலை மாற்றம், பேரழிவுகளை புதிய இயல்புநிலையாக்கியுள்ளது. மனித குலத்தின் இருப்பே தீவிரப் பேராபத்தில் சிக்குண்டுக் கிடக்கிறது.
ஏகாதிபத்தியக் கட்டமைப்பு தீராத நெருக்கடியில் தத்தளிக்கும் போதெல்லாம், அதன் சுமைகளை மக்கள் மீது திணிப்பதே முதலாளித்துவத்தின் வழக்கம். மக்கள் நலத் திட்டங்களுக்கான நிதியை வெட்டுவது, அத்தியாவசியச் செலவினங்களைக் குறைப்பது, தொழிலாளர் உரிமைகளைப் பறிப்பது, அடக்குமுறைச் சட்டங்களை ஏவுவது என ஆளும் வர்க்கங்கள் மக்கள் மீது நேரடித் தாக்குதலைத் தொடுத்து வருகின்றன.
மக்களின் அடிப்படைத் தேவைகளான கல்வி, மருத்துவம், குடிநீர் ஆகியவற்றை வணிகமயமாக்கி, பொதுச் சொத்துகளைப் பெரும் கார்ப்பரேட் நிறுவனங்களின் லாபவேட்டைக்கு அரசுகள் தாரைவார்க்கின்றன. வேலைவாய்ப்பின்மை, வறுமை, பொருளாதார ஏற்றத்தாழ்வுகள் வரலாறு காணாத உச்சத்தைத் தொட்டுள்ளன.
வெடித்தெழும் உழைக்கும் மக்கள் போராட்டங்கள்!
தனியார்மயம், தாராளமயம், உலகமயம் ஆகிய மறுகாலனியாதிக்கக் கொள்கைகளே மனிதகுல முன்னேற்றத்துக்கான ஒரே பாதை எனப் போதித்த ஆளும் வர்க்கங்கள், இன்று தங்களது கொள்கைகளுக்கு எதிராக மக்கள் திரண்டெழுவதைக் கண்டு அஞ்சி நடுங்குகின்றன. மக்களை அடக்கி ஒடுக்குவதற்காகப் பாசிச சக்திகளை ஆட்சியதிகாரத்தில் அமர்த்துகின்றன; பாசிச சக்திகள் மத, இன, தேச வெறியூட்டி மக்களைப் பிளவுபடுத்த முயல்கின்றன.
ஆனால், ஆளும்வர்க்கத்தின் இச்சூழ்ச்சிகளுக்குள் சிக்காமல் உழைக்கும் மக்கள் வீதிகளில் இறங்கியுள்ளனர். ஐரோப்பாவில் பரவிவரும் மக்கள் போராட்டங்கள் இதை மெய்ப்பிக்கின்றன. சீரழிந்துள்ள கல்விக் கட்டமைப்புக்கு எதிராகப் பிரான்ஸில் தொடங்கிய போராட்டங்கள், அரசின் சிக்கன நடவடிக்கைகளுக்கும் தொழிலாளர் விரோதக் கொள்கைகளுக்கும் எதிரான போராட்டமாக மாறி, அல்பேனியா, போர்ச்சுகல், பெல்ஜியம், இத்தாலி உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகள் முழுவதும் தீயெனப் பரவி வருகின்றன.

இந்தியாவை மறுகாலனியாக்கும்
ஆர்.எஸ்.எஸ்-பா.ஜ.க; அம்பானி-அதானி பாசிசம்!
இந்தியாவில் அதிகாரத்திலுள்ள பாசிச மோடி அரசு, உள்நாட்டு-வெளிநாட்டுக் கார்ப்பரேட்டுகளின் கொள்ளைக்காக நாட்டை அப்பட்டமாக மறுகாலனியாக்கி வருகிறது. “தேசியச் சொத்துப் பணமாக்கல் திட்டம்” என்ற பெயரில் பொதுத்துறை நிறுவனங்களை அடிமாட்டு விலைக்குத் தனியாருக்குத் தாரைவார்க்கிறது. “அமெரிக்க-இந்தியக் கனிம ஒப்பந்தம்” போன்ற அடிமை ஒப்பந்தங்கள் மூலம் அமெரிக்கக் கார்ப்பரேட்டுகளுக்கு நாட்டின் வளங்களைத் தாரைவார்க்கிறது. விதை மசோதா உள்ளிட்ட திட்டங்கள் மூலம் விவசாயத்தைக் கார்ப்பரேட்மயமாக்கும் போக்கு தீவிரமடைந்து வருகிறது.
கல்வி கார்ப்பரேட்மயமாக்கம், வினாத்தாள் கசிவுகள், வேலையின்மை ஆகியவற்றால் வஞ்சிக்கப்பட்ட இளைஞர் தலைமுறையும், வாழ்வாதாரத்தை இழந்து நிற்கும் விவசாயிகளும் தொழிலாளர்களும் பாசிச பா.ஜ.க. ஆட்சிக்கு எதிராகத் தொடர்ச்சியாகக் களத்தில் நின்று போராடி வருகின்றனர்.
குறிப்பாக, ‘ஜென்-சி’ என்றழைக்கப்படும் இன்றைய இளம் தலைமுறையினரின் போராட்டங்கள் ஆளும் வர்க்கங்களை நிலைகுலையச் செய்கின்றன. இந்தியாவில் நீட் தேர்வு மோசடிகளுக்கு எதிராக இளைஞர்கள் நடத்திய தொடர் போராட்டம், பாசிச மோடி அரசை அடிபணிய வைத்து உலக முக்கியத்துவம் வாய்ந்த வெற்றியைப் பெற்றது.
தற்போது, சிறப்புத் தீவிரத் திருத்தம் என்ற பெயரில் தேர்தல் முறைகேடுகளை அரங்கேற்றியதற்கு எதிராக, “தலைமைத் தேர்தல் ஆணையரைப் பதவிநீக்கம் செய்! கைது செய்!” என முழங்கி, நாடு முழுவதும் மாணவர்களும் இளைஞர்களும் போர்க்குணத்துடன் கொதித்தெழுந்து வீதியில் போராடி வருகின்றனர்.
உலகத் தொழிலாளர்களே, ஒடுக்கப்பட்ட மக்களே, ஒன்றுபடுங்கள்!
ரஷ்யப் புரட்சி நமக்கு உணர்த்தும் முக்கியச் செய்தி இதுதான்: தங்கள் பிரச்சினைகளைத் தீர்த்து வரலாற்றைப் படைக்கும் ஆற்றல் உழைக்கும் மக்களிடமே இருக்கிறது. சுரண்டலையும் ஒடுக்குமுறையையும் இயற்கையானவை என ஏற்றுக்கொள்ளாமல், இந்த முதலாளித்துவக் கட்டமைப்புக்கு எதிராக மக்கள் ஒன்றிணைந்து போராடும் போதுதான் சமூக மாற்றத்தின் திறவுகோல் கிடைக்கிறது.
109-வது ரஷ்யப் புரட்சி நாளில், உலகெங்கும் நடைபெறும் தொழிலாளர் வர்க்கத்தின் உரிமைப் போராட்டங்களுக்கும் ஒடுக்கப்பட்ட மக்களின் விடுதலைப் போராட்டங்களுக்கும் ஆதரவளிப்போம். ஏகாதிபத்தியம், மறுகாலனியாதிக்கம், பாசிச சக்திகளுக்கு எதிராக உழைக்கும் மக்களின் ஒற்றுமையைக் கட்டியெழுப்புவோம்.

நவம்பர் 7 ரஷ்ய புரட்சி நாளை உயர்த்திப் பிடிப்போம்!
- ஐரோப்பிய நாடுகளில் தாராளமயச் சிக்கன நடவடிக்கைகளுக்கு எதிராக நடைபெறும் போராட்டங்கள் வெல்லட்டும்!
- இந்தியாவில் ஆர்.எஸ்.எஸ்-பா.ஜ.க; அம்பானி-அதானி பாசிசக் கும்பலுக்கு எதிராக உழைக்கும் மக்களும் மாணவர்களும் இளைஞர்களும் முன்னெடுக்கும் உரிமைப் போராட்டங்கள் வெல்லட்டும்!
- தனியார்மயம், தாராளமயம், உலகமயம் ஆகிய மறுகாலனியாதிக்கக் கொள்கைகளையும் “அமெரிக்காவுக்கே முன்னுரிமை” என்ற மேலாதிக்கக் கொள்கையையும் எதிர்த்துப் போராடுவோம்! தேசிய இனங்களின் சுயநிர்ணய உரிமைக்காகக் குரல் கொடுப்போம்!
- ஆர்.எஸ்.எஸ்-பா.ஜ.க; அம்பானி-அதானி பாசிசத்தை வீழ்த்துவோம்! பாசிச எதிர்ப்பு ஜனநாயகக் குடியரசைக் கட்டியமைப்போம்!
109-வது ரஷ்ய சோசலிசப் புரட்சி நாள் வாழ்த்துகள்!
***
நவம்பர் 7, 2026 தமிழ்நாடு-புதுச்சேரி எங்கும்
தெருமுனை கூட்டங்கள்
அரங்க கூட்டங்கள்
இளைஞர்கள், சிறுவர்களுக்கான விளையாட்டுப் போட்டிகள், தனித்திறன் போட்டிகள்
***
படிக்க: புதிய ஜனநாயகம்
பார்க்க: வினவு, பெருவிழா
நிதி ஆதரவு தாரீர்!

98402 49210 (G-Pay)
மக்கள் அதிகாரக் கழகம்,
மக்கள் கலை இலக்கியக் கழகம்,
புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி,
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி (மாநில ஒருங்கிணைப்புக் குழு),
தமிழ்நாடு – புதுச்சேரி.
9962366321, 9791653200,
9444836642, 7397404242.
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram, Threads










