
20.08.2026
தீ பரவட்டும்!
அரசுப் பள்ளிகளைக் காப்போம் — கல்வி உரிமைக்காக வீதிக்கு வருவோம்!
பத்திரிகைச் செய்தி
ஆசிரியர் வேண்டும். குடிக்கத் தண்ணீர் வேண்டும். பயன்படுத்தக்கூடிய கழிப்பறை வேண்டும். மின்விசிறி வேண்டும். உட்கார மேசை–நாற்காலி வேண்டும். இடிந்து விழாத பாதுகாப்பான வகுப்பறை வேண்டும்.
இவை பள்ளிக் குழந்தைகள் அரசிடம் போராடிப் பெற வேண்டிய சலுகைகள் அல்ல. பள்ளி என்றால் இருக்க வேண்டிய குறைந்தபட்ச வசதிகள். ஆனால், இன்றைய இந்தியாவில் இவற்றுக்காகவே குழந்தைகள் வகுப்புகளைப் புறக்கணிக்கிறார்கள்; பள்ளிக் கதவுகளைப் பூட்டுகிறார்கள்; சாலையில் அமர்கிறார்கள்; அதிகாரிகளைத் தங்களைத் தேடி வரவழைக்கிறார்கள்.
உத்தரப்பிரதேசத்தின் ஃபதேபூரில் குடிநீர், கழிப்பறை, மின்விசிறிக்கு உள்ளிட்ட அடிப்படை வசதிக் கோரி சுமார் 1,500 மாணவர்கள் உள்ளிருப்புப் போராட்டம். கன்னோஜ் நகரில் தரமான உணவுக் கோரி விடுதி அறைக்கு பூட்டு. லக்னோவில் ஆசிரியர் பற்றாக்குறைக்கு எதிராக மாணவிகள் போராட்டம்; அமைச்சர் வந்து வாக்குறுதி கொடுத்த பின்னும் பிரச்சினை தீர்க்கப்படாததால் மீண்டும் சாலை மறியல். ராஜஸ்தானில் ஆசிரியருக்காகப் பள்ளிக்குப் பூட்டு. ஒடிசாவில் ஆசிரியர் பற்றாக்குறைக்கு எதிராக பள்ளி வாயில் முற்றுகை என புதியதொரு போராட்டச் சூழலை நமது அருமைக் குழந்தைகள் உருவாக்கிக் கொண்டிருக்கின்றனர்.
டெல்லியில் கரப்பான்பூச்சிகள் மோடி அரசின் மீதான அச்சத்தை உடைத்தார்கள்.
இப்போது பள்ளி வாசல்களிலிருந்து அச்சமில்லா கட்டெறும்புகள் களமிறங்குகின்றன.
அஞ்சி நடுங்கும் அரசுகள்!
தேர்வு முறைகேடுகள், வினாத்தாள் கசிவுகள், வேலைவாய்ப்பு நெருக்கடி ஆகியவற்றுக்கு எதிராக எழுந்த கரப்பான்பூச்சி ஜனதா கட்சியின் போராட்டத்தின் வெற்றி ஒரு அமைச்சரின் பதவி விலகல் மட்டுமல்ல. “மோடி அரசை எதிர்க்க முடியாது” என்று கட்டமைக்கப்பட்ட பிம்பத்தில் அது விரிசலை ஏற்படுத்தியுள்ளது. போலீசு, துணை இராணுவப் படை அடக்குமுறைக்குப் பிறகும் மீண்டும் திரளலாம்; போராடலாம்; அதிகாரத்தைப் பின்வாங்கச் செய்யலாம் என்ற அனுபவத்தை இளைஞர்கள் பெற்றார்கள். அந்த அனுபவமே இன்று பள்ளி வாசல்களுக்கும் பரவுகிறது.
இந்தச் சூழலில்தான் கடந்த ஆகஸ்ட் 15 அன்று “பள்ளியைச் சரிசெய்” (School Thik Karo) என்ற பெயரில் அரசுப் பள்ளிகளின் உண்மை நிலையை மக்கள் ஆய்வு செய்யும் இயக்கத்தை சி.ஜே.பி. தொடங்கியது. ராஜஸ்தானில் பழுதடைந்த பள்ளிகளை ஆய்வு செய்யப்போவதாக அக்கட்சி அறிவித்த சில மணி நேரங்களுக்குள், பள்ளித் தலைவரின் முன் அனுமதியின்றி வெளியாட்கள் நுழையக்கூடாது; புகைப்படம், காணொளி, நேர்காணல், ஒலிப்பதிவு ஆகியவற்றுக்கும் அனுமதி பெற வேண்டும் என்று கல்வித்துறை உத்தரவிட்டது.
இது ஏதோ மாணவர்களின் பாதுகாப்பு, தனியுரிமை மீதான அக்கறையல்ல; ஆய்வின் மூலம் தங்களது வண்டவாளம் தண்டவாளம் ஏறிவிடும் என்ற பா.ஜ.க. கும்பலின் பீதியின் வெளிப்பாடு!
ஆய்வு செய்ய வருபவர்களைக் கட்டுப்படுத்துவதற்கு முன்னால்,
பள்ளிகள் ஏன் இந்த நிலைக்கு வந்தன என்று பா.ஜ.க. அரசு பதில் சொல்லட்டும்!
ராஜஸ்தானில் உள்ள ஜலாவார் பிப்லோடி அரசுப் பள்ளி கட்டடம் 2025 ஜூலையில் இடிந்து ஏழு குழந்தைகள் உயிரிழந்த பின்னரும் ஆயிரக்கணக்கான பாதுகாப்பற்ற பள்ளிக் கட்டடங்கள் சரிசெய்யப்படவில்லை. அம்மாநில பா.ஜ.க. அரசு அரசு 5,667 பள்ளிக் கட்டடங்கள் பழுதடைந்த நிலையில் இருப்பதை நீதிமன்றத்தில் ஒப்புக்கொண்டது; சுமார் 86 ஆயிரம் பழுதடைந்த வகுப்பறைகள் பற்றியும் உயர்நீதிமன்ற விசாரணையில் கேள்வி எழுந்தது. பாதுகாப்பற்ற கட்டடங்களைப் பயன்படுத்தவே கூடாது என்று நீதிமன்றமே உத்தரவிட வேண்டிய நிலை ஏற்பட்டது.
குழந்தைகளின் தலையில் கூரை விழுகிறது; மோடி அரசோ “வளர்ந்த இந்தியா 2047” என்று பெருமை பேசுகிறது. பள்ளியில் ஆசிரியர் இல்லை; ஆனால் “பி.எம். ஸ்ரீ முன்மாதிரி பள்ளி” என்று விளம்பரம் செய்கிறது. கழிப்பறையில் தண்ணீர் இல்லை; கணினித் தரவுகளில் மட்டும் வசதிகள் இருப்பதாகக் காட்டப்படுகிறது.
அறிக்கையில் பள்ளி இருக்கிறது; வகுப்பில் ஆசிரியர் இல்லை.
கணக்கில் கழிப்பறை இருக்கிறது; குழந்தைக்குத் தண்ணீர் இல்லை.
பதிவில் கட்டடம் இருக்கிறது; குழந்தையின் தலையில் கூரை விழுகிறது.
இதுதான் மோடி கும்பல் உருவாக்கிக் கொண்டிருக்கும் ‘வளர்ச்சி’!
ஆசிரியர் இல்லாத பள்ளி — வேலை இல்லாத இளைஞன்!
இந்தியாவில் ஒரு இலட்சத்துக்கும் மேற்பட்ட பள்ளிகள் ஒரே ஓர் ஆசிரியருடன் இயங்குவதாக “யு.டி.ஐ.எஸ்.இ+” (UDISE+) கணக்குகள் காட்டுகின்றன. அரசின் கணக்குபடியே பத்து இலட்சத்துக்கும் மேற்பட்ட ஆசிரியர் காலிப்பணியிடங்கள் உள்ளன. ஆனால், அரசின் “காலியிடம்” என்ற கணக்கே உண்மையை முழுமையாகக் கூறுவதில்லை. ஏற்கெனவே அனுமதிக்கப்பட்ட இரண்டு பணியிடங்களும் நிரம்பியிருந்தால், ஐந்து வகுப்புகளைக் கொண்ட பள்ளிக்கே “காலியிடம் இல்லை” என்று அரசு சொல்லிவிடலாம். குழந்தைகளுக்குத் தேவையான ஆசிரியர் எத்தனை பேர் என்பது அந்தக் கணக்கில் தெரியாது.
ஒருபுறம் வகுப்பறையில் ஆசிரியர் இல்லை. மறுபுறம் ஆசிரியர் பணிக்குத் தகுதி பெற்ற இலட்சக்கணக்கான இளைஞர்கள் வேலைக்காகக் காத்திருக்கிறார்கள். இதற்கு மேல் என்ன முரண்பாடு வேண்டும்? ஆசிரியர் பற்றாக்குறையுள்ள பள்ளிகளில் இருப்பவர்களையே தேர்தல், கணக்கெடுப்பு, நிர்வாகப் பணிகளுக்கு இழுத்துச் செல்கிறார்கள்.
அரசுக்கு கணக்கெடுப்பு நடத்த ஆள் தேவைப்பட்டால் புதிய வேலைவாய்ப்பை உருவாக்கட்டும். வேலை இல்லாத இளைஞர்களைப் பயிற்றுவித்து ஊதியத்துடன் பணியமர்த்தட்டும். ஆசிரியரை வகுப்பறையில் வைத்திரு; இளைஞனுக்கு வேலை கொடு! — இந்த இரண்டு கோரிக்கைகளும் ஒரே போராட்டத்தில் இணைய வேண்டும்.
அரசுப் பள்ளிகளை பலவீனப்படுத்துவது தனியார் கல்விச் சந்தைக்கு நேரடியாக வழி திறக்கிறது. ஆசிரியரை நியமிக்காமல் விடு; கட்டடத்தைப் பராமரிக்காமல் விடு; கழிப்பறையில் தண்ணீர் இல்லாமல் விடு; நூலகம்–ஆய்வகத்தை அழியவிடு. பெற்றோர் பயந்து தனியார் பள்ளியை நோக்கிச் செல்வார்கள். மாணவர் எண்ணிக்கை குறையும். பிறகு “மாணவர்கள் இல்லை” என்று அதே அரசுப் பள்ளியை மூடு அல்லது இணைத்துவிடு. இதுதான் கல்வித் தனியார்மயத்தின் சூழ்ச்சி. எனவே, அரசுப் பள்ளியைப் பாதுகாப்பதும் கல்வித் தனியார்மயத்தை எதிர்ப்பதும் இரண்டு வேறுபட்ட போராட்டங்கள் அல்ல.
தமிழ்நாடே வேடிக்கை பார்க்காதே – உன் பள்ளிகளைப் பார்!
“உத்தரப்பிரதேசத்தைவிட நாம் மேல்; ராஜஸ்தானைவிட நாம் மேல்” என்று சொல்லிக்கொண்டு தமிழ்நாடு நிம்மதியாக இருக்க முடியாது. பல தலைமுறை மக்கள் போராட்டங்களால் பொதுக் கல்வி, சமூகநீதி, பெண்கள் கல்வி, இடஒதுக்கீடு ஆகியவற்றில் முன்னேறிய தமிழ்நாட்டிற்கான அளவுகோல் மிகப் பின்தங்கிய மாநிலங்கள் அல்ல.
தமிழ்நாட்டில் 3,957 ஓராசிரியர் பள்ளிகள் இருப்பதாக அதிகாரப்பூர்வக் கணக்கு கூறுகிறது. கல்வி இயக்கங்கள் சுமார் 11,000 தொடக்கப் பள்ளிகள் இரண்டு ஆசிரியர்களுடன் மட்டுமே இயங்குவதாகச் சுட்டிக்காட்டுகின்றன. ஐந்து வகுப்புகளுக்கு இரண்டு ஆசிரியர்கள் என்றால் அது எப்படித் தரமான கல்வியாகும்? ஒருவருக்கு விடுப்பு என்றால் அந்தப் பள்ளி நடைமுறையில் ஓராசிரியர் பள்ளியாகிவிடாதா?
இந்தப் பலவீனமான கட்டமைப்பின் மீதுதான் தமிழ் வழி, ஆங்கில வழி என்று இரண்டு பயிற்றுமொழிப் பிரிவுகளையும் அரசு நடத்துகிறது. ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை தமிழ்–ஆங்கிலம் இரண்டு வழிகளிலும் தனித்தனி வகுப்புகள் இருந்தால் பத்து வகுப்புகள் உருவாகின்றன. வகுப்புக்கு ஒரு ஆசிரியர் என்ற குறைந்தபட்ச அளவுகோளில் கூட பத்து ஆசிரியர்கள் தேவை. ஆனால் எதார்த்தத்தில் ஓராசிரியர், ஈராசிரியர் பள்ளிகள் தொடர்கின்றன.
“அரசு அனுமதித்த பணியிடங்களில் எத்தனை காலி?” என்பது மட்டும் நமது கேள்வி அல்ல.
“ஒவ்வொரு வகுப்பிலும் இருக்க வேண்டிய ஆசிரியர் எங்கே?” என்பதுதான் நாம் எழுப்ப வேண்டிய கேள்வி!
“நம்ம ஸ்கூல் நம்ம ஊரு பள்ளி” என்று அடிப்படைத் தேவைகளுக்குக் கூட பெருநிறுவன சமூகப் பொறுப்பு நிதி, பழைய மாணவர்கள், பொதுமக்களின் நன்கொடைக்கு கையேந்துவதை அரசு நிறுத்த வேண்டும். மக்கள் தங்கள் பள்ளிக்கு உதவுவது தவறல்ல; ஆனால் கழிப்பறை, குடிநீர், வகுப்பறை, ஆசிரியர் போன்ற அரசின் அடிப்படைக் கடமைகளை நன்கொடையாக மாற்ற முடியாது.
கல்வி தானம் அல்ல; உரிமை.
ஆசிரியர் நன்கொடை அல்ல; அரசின் கடமை.
பள்ளிக் கட்டடம் பெருநிறுவனத்தின் கருணை அல்ல; மக்கள் வரிப்பணத்தில் உருவாக்க வேண்டிய பொதுச் சொத்து என்பதை நாம் நிலைநாட்ட வேண்டும்.
தமிழ்நாட்டில் மாணவர் சேர்க்கை இல்லை என்று அரசுப் பள்ளிகளை மூடுவது பிரச்சினையின் விளைவையே காரணமாக்கும் ஏமாற்று வேலை. மாணவர்கள் ஏன் வரவில்லை? ஆசிரியர் இருந்தாரா? கழிப்பறை இயங்கியதா? குடிநீர் கிடைத்ததா? கட்டடம் பாதுகாப்பாக இருந்ததா? பெற்றோர் நம்பும் தரத்தில் பள்ளி நடத்தப்பட்டதா? தமிழ்நாடு அரசு முதலில் இதற்குப் பதில் சொல்ல வேண்டும்.
மத்திய மோடி அரசின் கல்வித் தனியார்மய-கார்ப்பரேட்மயப் போக்கையும் பொதுக் கல்வியை பலவீனப்படுத்தும் கொள்கைகளையும் எதிர்ப்பது அவசியம். அதையே காரணமாகக் காட்டி ஆசிரியரை நியமிக்காமல், பள்ளியின் அடிப்படை வசதிகளை உறுதி செய்யாமல், பள்ளி மூடல்–இணைப்புகளை முன்னெடுக்கும் மாநில அரசைத் தப்பிக்க விடக்கூடாது.
வேடிக்கை பார்க்காதே! வீதிக்கு வா!
பள்ளிக் குழந்தைகள் நம்மைவிட முன்னே சென்றுவிட்டார்கள். அவர்கள் மனு கொடுத்தார்கள்; அரசு கேட்கவில்லை. பள்ளிக்குப் பூட்டுப் போட்டார்கள்; அதிகாரிகள் ஓடிவந்தார்கள். அமைச்சர் வாக்குறுதி கொடுத்தார்; நிறைவேறவில்லை. மீண்டும் சாலைக்கு வருகிறார்கள்.
அமைச்சர் வருவது வெற்றி அல்ல.
வாக்குறுதி வெற்றி அல்ல.
செய்தித்தாளில் படம் வருவது வெற்றி அல்ல.
கோரிக்கை நிறைவேறுவதுதான் வெற்றி!
அரசுப் பள்ளியின் பிரச்சினை மாணவர்களின் பிரச்சினை மட்டும் அல்ல. ஆசிரியரின் பிரச்சினை; வேலைக்காகக் காத்திருக்கும் இளைஞரின் பிரச்சினை; தனியார் பள்ளிக் கட்டணத்தில் திணறும் பெற்றோரின் பிரச்சினை; தொழிலாளி–விவசாயி குடும்பங்களின் பிரச்சினை; பள்ளி மூடப்பட்டதால் குழந்தையைத் தொலைதூரம் அனுப்ப வேண்டிய கிராமத்தின் பிரச்சினை.
மாணவர்கள் — ஆசிரியர்கள் — பெற்றோர் — ஆசிரியர் வேலைக்காகக் காத்திருக்கும் இளைஞர்கள் — தொழிலாளர்கள் — விவசாயிகள் — ஜனநாயக அமைப்புகள் ஒன்றிணைய வேண்டும்!
ஒவ்வொரு ஊரும் தனது பள்ளியின் கணக்கைக் கேட்கட்டும்!
ஒவ்வொரு ஊரிலும் அரசுப் பள்ளியின் நிலையை மக்கள் தாங்களே ஆய்வு செய்ய வேண்டும். பள்ளியில் எத்தனை வகுப்புகள், எத்தனை தமிழ்–ஆங்கிலப் பிரிவுகள், எத்தனை ஆசிரியர்கள், எத்தனை காலிப்பணியிடங்கள்? குடிநீர் தினமும் கிடைக்கிறதா? கழிப்பறைகள் பயன்படுத்தக்கூடியவையா? கட்டடம் பாதுகாப்பானதா? நூலகம், ஆய்வகம், விளையாட்டு வசதிகள் உள்ளனவா? பள்ளியை மூடவோ இணைக்கவோ திட்டமிட்டுள்ளார்களா? நிதி எவ்வளவு வந்தது, எப்படி செலவானது? — இந்தக் கணக்கை அதிகாரிகள் மட்டும் எழுதக் கூடாது; மக்களும் கேட்டு பதிவு செய்ய வேண்டும்.
ஒவ்வொரு பள்ளியிலும் உடனடியாகத் தீர்க்க வேண்டிய மூன்று பிரச்சினைகளை பெற்றோர்–மாணவர்–ஆசிரியர் கூட்டாகத் தேர்ந்தெடுத்து, கல்வித்துறைக்கு எழுத்துப்பூர்வமாகக் கொடுத்து, தீர்வுக்கான காலக்கெடு கேட்க வேண்டும். காலக்கெடு முடிந்தும் தீர்வு இல்லையெனில் பள்ளி முன் ஆர்ப்பாட்டம், கல்வி அலுவலக முற்றுகை, மாவட்ட அளவிலான ஒருங்கிணைந்த போராட்டம் என அடுத்த கட்டத்துக்குச் செல்ல வேண்டும்.
முதல் கட்டத்தில் வெல்ல வேண்டிய மூன்று மையக் கோரிக்கைகள்
- ஓராசிரியர்–ஈராசிரியர் பள்ளி முறைக்கு முடிவுக் கட்டு; ஒவ்வொரு வகுப்புக்கும் தேவையான ஆசிரியரை நிரந்தரமாக நியமனம் செய்!
- பாதுகாப்பற்ற பள்ளிக் கட்டடங்கள், குடிநீர், கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகளை உடனடியாகச் சரிசெய்; பள்ளி வாரியான நிலை, நிதி, பணிக்காலக்கெடுவை பொதுவெளியில் வெளியிடு!
- அரசுப் பள்ளி மூடல்–இணைப்புகளை நிறுத்து; பெற்றோர்–ஆசிரியர்–மக்கள் அமைப்புகள் இணைந்த வெளிப்படையான கண்காணிப்பு உரிமையை உறுதி செய்!
இந்த மூன்று கோரிக்கைகளோடு விரிவான போராட்டத் திட்டமும் முன்னேறட்டும்
- தமிழ்–ஆங்கிலம் இரு பயிற்று மொழிகளிலும் வகுப்புகள் நடத்தினால், அவற்றுக்குத் தேவையான முழுமையான ஆசிரியர் அணியை நியமனம் செய்!
- அனுமதிக்கப்பட்ட காலிப்பணியிடங்களை மட்டும் நிரப்புவதோடு நிற்காதே; வகுப்புகளின் உண்மையான தேவைக்கேற்ப புதிய ஆசிரியர் பணியிடங்களை உருவாக்கு!
- ஆசிரியரை கல்விசாரா வேலைகளில் சிதறடிக்காதே; அரசுப் பணிகளுக்குத் தனி மனிதவளத்தை உருவாக்கு; வேலையில்லா இளைஞர்களுக்கு வேலை கொடு!
- ஒவ்வொரு பள்ளியிலும் பாதுகாப்பான கட்டடம், குடிநீர், செயல்படும் கழிப்பறை, நூலகம், ஆய்வகம், விளையாட்டு வசதிகளை அரசே உறுதிசெய்!
- தனியார் பள்ளிக் கட்டணக் கொள்ளையை கட்டுப்படுத்து; கல்வித் தனியார்மயத்தையும் கார்ப்பரேட்மயத்தையும் முறியடிப்போம்!
- அனைவருக்கும் தரமான, சமமான, இலவசப் பொதுக் கல்வியை மக்களின் உரிமையாக நிலைநாட்டுவோம்!
உடனடிக் கோரிக்கைகளுக்கான போராட்டத்தை வெல்வோம்; அந்தப் போராட்டத்தின் அனுபவத்திலிருந்தே இது யாருக்கான அரசு என்ற கேள்வியை மக்களிடையே உரக்க எழுப்புவோம்!
கரப்பான்பூச்சிகள் அதிகாரத்தின் அசைக்க முடியாத மோடி பிம்பத்தில் உடைப்பை ஏற்படுத்தின. கட்டெறும்புகள் பள்ளி வாசல்களிலிருந்து புறப்பட்டுவிட்டன. அவர்கள் பற்ற வைத்த தீ ஒரு பள்ளியோடு அணையக்கூடாது.
ஆசிரியர் இல்லாத ஒவ்வொரு வகுப்பறைக்கும் அந்தத் தீ பரவட்டும்!
மூடப்படும் ஒவ்வொரு அரசுப் பள்ளியிலும் மக்கள் எழட்டும்!
வேலையில்லா இளைஞனின் கோபமும் மாணவரின் கல்வி உரிமையும் ஒன்றாகட்டும்!
ஆசிரியர்–பெற்றோர்–தொழிலாளர்–விவசாயி கைகள் இணையட்டும்!
தமிழ்நாடே!
வேடிக்கை பார்க்காதே!
வீதிக்கு வா!
அரசுப் பள்ளிகளைக் காப்போம்!
பொதுக் கல்வியைக் காப்போம்!
கல்வியும் வேலைவாய்ப்பும் மக்களின் உரிமை — போராடிப் பெறுவோம்!
உழைக்கும் மக்களின் அதிகாரத்திற்கான போராட்டமாக அதை வளர்ப்போம்!
கரப்பான்பூச்சிகளும் கட்டெறும்புகளும் பற்ற வைத்த தீ பரவட்டும்!
பெருச்சாளிகளின் குறட்டைக்கு முடிவு கட்டட்டும்!
![]()
இவண்
புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி,
தமிழ்நாடு – புதுவை.
9444836642
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram, Threads











