115 ஆண்டுகால மசூதி இடிப்பு: உ.பி. யோகி ஆதித்யநாத் அரசின் பயங்கரவாதம்!

அயோத்தி ராமன் கோவில் கட்டப்பட்ட பிறகு நடந்த 2024 நாடாளுமன்றத் தேர்தலில் அந்த தொகுதியிலேயே பா.ஜ.க படுதோல்வி அடைந்தது. எனவே, அடுத்து வருகின்ற சட்டமன்ற தேர்தலில் வெற்றிபெற இஸ்லாமிய வெறுப்பைப் பரப்பி இந்துக்களின் வாக்கைப் பெறுவதற்காகவே இந்த இடிப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

உத்தரப்பிரதேச மாநிலம் சஹாரன்பூர் மாவட்டத்தில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு உட்பட்ட இடத்தில் 1947 ஆட்சி மாற்றத்திற்கு முந்தைய மசூதி ஒன்று அமைந்திருந்தது. அம்மசூதி அரசாங்க இடத்தில் சட்ட விரோதமாக ஆக்கிரமிக்கப்பட்டுக் கட்டப்பட்டுள்ளதாகக் கூறி கடந்த செப்டம்பர் 5 அன்று அதிகாலையில் யோகி ஆதித்யநாத் தலைமையிலான பாசிச பா.ஜ.க. அரசு அம்மசூதியை இடித்துத் தள்ளியுள்ளது. இதனுடன் மசூதியருகே செயல்பட்டுவந்த அஞ்சல் அலுவலகத்தையும் இடித்துள்ளது.

ஆயுதமேந்திய போலீசு படைகள் மற்றும் கலவரத் தடுப்பு மத்திய போலீசு படைகளின் ஐந்து பிரிவுகள் என அதிகப்படியான போலீசு படைக் குவிக்கப்பட்டு இப்பாசிச நடவடிக்கையை பா.ஜ.க. அரசு அரங்கேற்றியுள்ளது. குறிப்பாக, இது நீதிமன்றத்தின் துணையுடன் நடந்தேறியுள்ளது என்பது இங்கு கவனிக்கத்தக்கதாகும்.

கடந்த ஜூலை மாதம் மசூதியை காலி செய்ய வேண்டும் என்று நகர நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதை எதிர்த்து, மசூதி நிர்வாகக் குழு சார்பில் மாவட்ட நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. அம்மனுவை செப்டம்பர் 2 அன்று மாவட்ட நீதிமன்றம் தள்ளுபடி செய்ததுடன், 30 நாட்களுக்குள் மசூதியை காலி செய்யவேண்டுமெனக்  கெடுவும் விதித்தது. மேலும் ஒரு படி மேலே சென்று, மசூதி சட்டவிரோதமாக அரசுக்குச் சொந்தமான 315 சதுர அடி இடத்தை ஆக்கிரமிப்பு செய்ததாகக் கூறி அயோக்கியத்தனமாக ரூ.6.41 கோடி அபராதமும் விதித்தது. இதன் தொடர்ச்சியாகவே, செப்டம்பர் 5 அன்று மசூதி இடித்து தரைமட்டமாக்கப்பட்டுள்ளது.

மேலும், பாபர் மசூதி இடிப்பைப் போலவே இங்கு ஆர்.எஸ்.எஸ். காவி குண்டர் படைதான் பிரச்சினையைக் கிளப்பியது. 2025-ஆம் ஆண்டில் ஆர்.எஸ்.எஸ்-இன் குண்டர் படையான பஜ்ரங் தள் அமைப்பைச் சார்ந்த விகாஸ் தியாகி என்பவர் அம்மசூதிக்கு எதிராகப் புகார் அளித்ததையடுத்தே பிரச்சினை தொடங்கியது. அதனைத் தொடர்ந்து, வருவாய்த் துறை விசாரணை நடத்தியதுடன், சஹாரன்பூர் மாவட்ட நிர்வாகம் மசூதிக்கு எதிராக வழக்குத் தொடர்ந்தது.

மசூதி அமைந்துள்ள நிலம் அரசுக்குச் சொந்தமானது என்றும் பொதுமக்கள் பயன்படுத்தும் ஓய்விடமாக இருந்த கட்டடம் பின்னர் சட்டவிரோதமாக மதக் கட்டமைப்பாக மாற்றப்பட்டதாகவும் அரசு தரப்பு கூறியது. மேலும், மசூதி வளாகத்தில் உள்ள அறைகள் மற்றும் துணை அஞ்சல் அலுவலகத்திடம் மசூதி நிர்வாகம் சட்டவிரோதமாக வாடகை வசூலித்ததாகவும் கூறியது.

ஆனால், மசூதி 115 ஆண்டுகளுக்கும் மேலான பழமையானது என்றும், 1957-ஆம் ஆண்டு முதலே வக்ஃப் எண் 451-ஆகப் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் மசூதி தரப்பு தெரிவித்தது. மேலும், மசூதி அமைந்துள்ள நிலம் அரசுப் பொது நிலம் அல்ல என்றும் மத்திய அரசு வழங்கிய குத்தகையின் அடிப்படையில் 1960 முதல் அஞ்சல் அலுவலகம் மசூதிக்கு வாடகை செலுத்தி வருவதாகவும் தெரிவித்தது. மேலும், வக்ஃப் வாரியம் இந்த வழக்கில் அவசியமான தரப்பாகச் சேர்க்கப்படவில்லை என்பதால், வக்ஃப் சட்டத்தின் 85-வது பிரிவின்படி வழக்கே செல்லாது என்று வாதிட்டது.

எனினும், நீதிமன்றங்கள் மசூதி தரப்பு வாதத்தை ஏற்க மறுத்து மசூதியை மசூதியை காலி செய்ய உத்தரவிட்டு வழக்கம் போல பாசிச கும்பலுக்கு கரசேவையாற்றியது.

மேலும், மசூதி இடிப்பின் போது கைரானா தொகுதியின் சமாஜ்வாதி கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் இக்ரா ஹசனை அங்கு செல்லவிடாமல் உத்தரப்பிரதேச போலீசுதுறை வீட்டுக் காவலில் வைத்துள்ளது. அவர் கூறுகையில், கீழ்நிலை உரிமையியல் நீதிமன்றத்தின் உத்தரவு வந்த பிறகு, மசூதி முழுவதும் சீல் வைக்கப்பட்டு, அதன் சுற்றுவட்டாரத்தில் தடுப்புகள் அமைக்கப்பட்டதாக அம்பலப்படுத்தியுள்ளார். “மக்கள் உயர் நீதிமன்றத்தை அணுக விரும்பினர். ஆனால் அவகாசம் வழங்கப்படாததால், சஹாரன்பூர் மாவட்டத்தின் முக்கிய பிரமுகர்களான நாங்கள் அனைவரும் எங்கள் வீடுகளிலேயே முடங்கிக் கிடந்தோம். பின்னர், அதிகாலையில் மசூதி இடிக்கப்பட்டது; இது உண்மையிலேயே வெட்கக்கேடானது. இது மிகவும் கொடிய பாவம், இதற்காக அவர்கள் நிச்சயம் தண்டனையை எதிர்கொள்வார்கள்; இதிலிருந்து தப்பிக்க வழியே இல்லை” என்று அவர் கூறினார்.

மேலும், “இந்தச் செயல் செயல்படுத்தப்பட்ட விதம், ஜனநாயகம் எவ்வாறு படுகொலை செய்யப்பட்டுள்ளது என்பதை நிரூபிக்கிறது. ‘விரைவான நீதி’ என்பதே வழக்கமான அணுகுமுறையாகக் கையாளப்படுகிறது. ஒவ்வொரு முடிவும் அரசாங்க உத்தரவுகளின் அடிப்படையில் மட்டுமே எடுக்கப்பட வேண்டும் என்றால், சட்ட அமைப்புக்கே அவசியமில்லை… இந்தச் சம்பவம் முற்றிலும் கண்டிக்கத்தக்கது” என்றும் தெரிவித்துள்ளார்.


படிக்க: ஷாஹி ஜமா மசூதி தலைவரைக் கைது செய்து உ.பி போலீசு அராஜகம்


மசூதி இடிப்பு குறித்து கருத்து தெரிவித்துள்ள ஏ.ஐ.எம்.ஐ.எம். கட்சியின் தலைவர் அசாதுதீன் ஒவைசி, மத சுதந்திரத்திற்கான அரசியலமைப்பு உத்தரவாதம் இனி இஸ்லாமியர்களுக்குப் பொருந்தாதா என்று கேள்வியெழுப்பியுள்ளார். மேலும், “அற்பமான காரணங்களுக்காக எங்கள் வழிபாட்டுத் தலங்கள் ஏன் தொடர்ந்து புல்டோசர் கொண்டு இடிக்கப்படுகின்றன?” என  எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். மசூதியின் இருப்பை நிலைநாட்ட, 1911-ஆம் ஆண்டு வரையிலான பதிவுகளை மசூதிக் குழு சமர்ப்பித்துள்ளதாகவும், ஒரு நூற்றாண்டுக்கும் மேலாக அங்கு தொடர்ச்சியாகத் தொழுகைகள் நடத்தப்பட்டு வந்துள்ளதாகவும் சட்டத்தின் கீழ் அம்மசூதி இன்றும் வக்ஃபாகப் பாதுகாக்கப்பட்டு வருவதாகவும் அம்பலப்படுத்தியுள்ளார்.

அதைப்போல், இராமன் கோவிலில் நடந்த நன்கொடைத் திருட்டிலிருந்து மக்களின் கவனத்தைத் திசை திருப்புவதற்காக, ஆதித்யநாத் அரசு ஒரு “மதவாத”ப் பிரச்சினையைப் பயன்படுத்துவதாக சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் குற்றஞ்சாட்டியுள்ளார். மேலும், உள்ளூர் நீதிமன்றத்தின் உத்தரவுக்கு எதிராக மசூதியின் பொறுப்பாளர்கள் உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்வதைத் தடுப்பதற்காக, மாநில அரசின் தூண்டுதலின் பேரில் சஹாரன்பூர் அதிகாரிகள் செயல்பட்டதாகக் குற்றஞ்சாட்டியுள்ளார்.

ஆம் ஆத்மி கட்சி எம்.பி. சஞ்சய் சிங் கூறுகையில், காஸ்ரா எண் 539 கொண்ட அந்த நிலம் யாகூப் கான் வாஹித் கான் என்பவரின் பெயரில் பதிவு செய்யப்பட்டுள்ளது; அந்த இடத்தில் ஒரு கோயில், ஒரு மசூதி மற்றும் ஆட்சியர் அலுவலகம் ஆகியவை அடங்கியுள்ளன எனத்  தெரிவித்தார். “தேர்தலுக்கு முன்னதாக உத்தரப்பிரதேசத்தில் வெறுப்பைப் பரப்ப விளையாடப்படும் இந்த ஆட்டத்தைக் கவனியுங்கள். சட்டரீதியான எச்சரிக்கை: பா.ஜ.க. கலவரக்காரர்களிடம் ஜாக்கிரதையாக இருங்கள்” என்று எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

உண்மையில், உத்தரப்பிரதேசத்தில் 2027-இல் நடக்கவுள்ள சட்டமன்ற தேர்தலுக்கான முன்னோட்டமாகவே இந்த இடிப்பு நடவடிக்கையைப் பார்க்க வேண்டியுள்ளது. அயோத்தி ராமன் கோவில் கட்டப்பட்ட பிறகு நடந்த 2024 நாடாளுமன்றத் தேர்தலில் அந்த தொகுதியிலேயே பா.ஜ.க படுதோல்வி அடைந்தது. எனவே, அடுத்து வருகின்ற சட்டமன்ற தேர்தலில் வெற்றிபெற இஸ்லாமிய வெறுப்பைப் பரப்பி இந்துக்களின் வாக்கைப் பெறுவதற்காகவே இந்த இடிப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்துராஷ்டிர கனவுடனும் அதில் இஸ்லாமியர்களை இரண்டாந்தர குடிமக்களாக்க வேண்டுமென்ற கெடு நோக்கத்துடனும் ஆர்.எஸ்.எஸ்.-பா.ஜ.க. பயங்கரவாத கும்பல் செயல்பட்டு வருகிறது. அதற்காக இஸ்லாமியர்களின் வழிபாட்டுத்தளங்களைக் குறிவைத்து இடித்து தரைமட்டமாக்குவது போன்ற இஸ்லாமியர்களுக்கு எதிரான நடவடிக்கைகளை சட்டப்பூர்வமாகவே அரங்கேற்றி வருகிறது. இந்நடவடிக்கைகள் பாசிசம் நெருங்கி வருவதை நாள்தோறும் உணர்த்தி வருகின்றன. இஸ்லாமியர்களுக்கு எதிராகச் செயல்படும் ஆர்.எஸ்.எஸ்–பா.ஜ.க கும்பலை அனைத்து மக்களும் ஜனநாயக சக்திகளும் ஓரணியில் திரண்டு விரட்டியடிக்க வேண்டும்.

செய்தி ஆதாரம்: தி வயர்


அசுரன்

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram, Threads



விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க