அண்மையில், திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. மகுவா மொய்த்ரா, ஐக்கிய நாடுகள் சபையின் சிறுபான்மையின சிறப்பு அறிக்கையாளருக்கு (UN Special Rapporteur on Minority Issues) கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அக்கடிதத்தில் இந்தியாவில் சிறுபான்மையினர் குறிப்பாக, அதிகாரத்தில் இருக்கும் சிறுபான்மையினர் மீது தொடுக்கப்படும் ஒடுக்குமுறைகளை ஆதாரப்பூர்வமாகக் குறிப்பிட்டுள்ளார். இந்த கடிதத்தில் ஐ.பி.எஸ்., ஐ.ஏ.எஸ். அதிகாரிகளாக இருக்கும் இஸ்லாமியர்கள் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பங்கேற்கும் அதிகாரப்பூர்வ கூட்டங்களிலும், நிகழ்வுகளிலும் கலந்து கொள்வதற்குத் தடை விதிக்கப்பட்டதும், அவர்கள் வெளியேறுமாறு கூறப்பட்டதும் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், எந்த காரணம் இல்லாமல் அத்துமீறி அவர்கள் அந்த கூட்டத்திலிருந்து புறக்கணிக்கப்பட்டுள்ளனர்.
கடந்த ஜூலை 18-ஆம் தேதி சிலிகுரி எல்லை பாதுகாப்பு குறித்து நடத்தப்பட்ட கூட்டம் ஒன்றில் அமித்ஷா பங்கேற்க இருந்தார். இக்கூட்டத்திற்கு இந்திய-வங்கதேச எல்லை பாதுகாப்புக் காவலில் உள்ள அனைத்து கண்காணிப்பு அதிகாரிகளும் பங்கேற்றனர்; ஒருவரைத்தவிர.
அந்த கூட்டத்திலிருந்து திட்டமிட்டே புறக்கணிக்கப்பட்டவர் சிலிகுரி பகுதியின் போலீசு ஆணையர் சையத் வக்கார் ராசா. சிலுகுரி பகுதியின் அதிகார வரம்பைக் கொண்ட போலீசு ஆணையரகத்தின் முக்கிய பொறுப்பில் இருக்கும் அவர் இந்த கூட்டத்திலிருந்து வெளியேறுமாறு முன்னறிவிப்பின்றி கடைசி நேரத்தில் கூறப்பட்டதையடுத்து அவர் அந்த கூட்டத்தை விட்டு வெளியேறினார். அவருக்குப் பதிலாக அக்கூட்டத்தில் மேற்கு வங்கத்தின் வடக்கு போலீசு இன்ஸ்பெக்டர் ஜெனரல் சுகேஷ் ஜெயின் கலந்து கொண்டார். அதே கூட்டத்தில் டி.ஜி.பி ஜாவித் ஷமீம் என்ற இஸ்லாமிய அதிகாரியும் கலந்து கொள்ளக் கூடாது என்று கூறப்பட்டது. அவருக்குப் பதிலாக வேறு ஒரு இந்து அதிகாரி அந்த கூட்டத்தில் கலந்துகொண்டார்.
ஜூலை 19 அன்று, கொல்கத்தாவில் சட்டம் ஒழுங்கு மற்றும் பேரிடர் தயார்நிலை குறித்து அமித்ஷா ஒரு கூட்டத்திற்குத் தலைமை தாங்கினார். அதில் கலந்துகொள்ள வந்த ஷமீம் அகமது, அங்கிருந்து வெளியேறும்படி கேட்டுக்கொள்ளப்பட்டார். தீயணைப்பு மற்றும் அவசரக்கால சேவைகளின் கூடுதல் தலைமைச் செயலாளராக, அவர் அவசரக்கால பணிகளில் ஈடுபடும் துறைக்குத் தலைமை வகித்தார். ஷமீம் மீண்டும் கூட்டத்தில் கலந்துகொள்ள வேண்டாம் என்று அவருக்குப் பதிலாக அக்கூட்டத்தில் மற்றொரு இந்து அதிகாரி கலந்துகொண்டார்.
இந்த மூன்று சம்பவங்களிலும், பதவி வகிக்கும் மூன்று உயர் அதிகாரிகள் இஸ்லாமியர்களாவர். மூன்று சம்பவங்களிலும் இஸ்லாமிய அதிகாரிகள் நயவஞ்சகமாகப் புறக்கணிக்கப்பட்டு அவர்களின் இடத்தில் இந்து அதிகாரிகள் கூட்டங்களில் பங்கேற்றனர்.
படிக்க: இஸ்லாமியப் பெண் பத்திரிகையாளர்களைத் தாக்கிய டெல்லி போலீசு!
இச்சம்பவங்கள் நடந்து இரண்டு வாரத்திற்குள்ளேயே மீண்டும் ஓர் இஸ்லாமிய வெறுப்பு சம்பவம் அரங்கேறியுள்ளது. மேற்கு வங்கத்திலுள்ள ஐ.பி.எஸ் அதிகாரி புஷ்ரா பானோ. பல்வேறு பட்டப் படிப்புகளை முடித்து வெளிநாட்டில் வேலை செய்த பானோ சொந்த நாட்டில் வேலை செய்ய வேண்டும் என்பதற்காக வெளிநாட்டிலிருந்த தனது வேலையை விட்டு இந்தியா வந்து குடிமைப் பணிக்கான தேர்வில் தேர்ச்சி பெற்று ஐ.பி.எஸ் அதிகாரியாகவுள்ளார்.
இளைஞர்களுக்கு ஊக்கமளிக்கும் வகையில் உரையாற்றி அதனைத் தனது சமூக ஊடகத்தில் பகிர்ந்து வந்தார். அப்படிப் பகிர்ந்த ஒரு காணொளிதான் சங்கி கும்பலுக்கு கடும் வெறுப்பையும், காழ்ப்புணர்ச்சியையும் தூண்டியுள்ளது. வழக்கம் போலத் தனது சமூக ஊடகப் பக்கத்தில் பானோ இந்திய குடிமைப்பணிக்கான தேர்வுகளுக்குத் தயாராகும் மாணவர்களை ஊக்கப்படுத்தும் வகையில் ஒரு உரை நிகழ்த்தி அதைத் தனது சமூக ஊடகப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அக்காணொளி “அஸ்ஸலாமு அலைக்கும்” என்ற சொற்றொடரோடு தொடங்கி, இஸ்லாமியர்கள் பயன்படுத்தும் சொற்றொடர்களான “இன்ஷா அல்லா, ஜஸக்கல்லாஹ்” போன்ற வார்த்தைகளை உள்ளடக்கியுள்ளது.
இதனைக் கடுகளவும் பொறுத்துக் கொள்ள முடியாத காவி கும்பலின் ஒரு பிரிவான “இந்து சட்ட நிதியம்” இந்த காணொளியின் மீது மேற்கு வங்கத்தின் உள்துறை செயலாளரிடம் புகார் அளித்துள்ளது. பானோ இஸ்லாமிய மதத்தைப் பரப்ப முயற்சிக்கும் வகையில் இந்த வார்த்தைகளை போலீசு சீருடை அணிந்து கொண்டு பேசுவதாகக் கூறி புகார் அளித்துள்ளனர். ஜெய்ஹிந்த், வந்தேமாதரம் போன்ற எந்த சொற்றொடர்களையும் கூறவில்லை என்றும் வெறுப்பைக் கக்கியுள்ளனர். இந்த புகார் எழுந்ததையடுத்து புகாரின் உண்மைத்தன்மையை ஆராய்வதில் எந்த முனைப்பும் காட்டாமல் மேற்கு வங்கத்தின் பா.ஜ.க. அரசு, காரக்பூர் பகுதியில் கூடுதல் போலீசு கண்காணிப்பாளராக இருந்த பானோவை மாநில ஆயுதப்படையில் துணை தளபதியாக பணிமாற்றம் செய்தது. அவருக்கு தற்போது வழங்கப்பட்டுள்ள பதவி போலீசு துறையில் தண்டனை பதவி (punishment posting) என்று கூறப்படும் ஒன்று. பதவி மாற்றத்திற்கான ஆணையத்தில் மேற்குவங்க அரசு பொது விருப்பத்தின் அடிப்படையில் பானோ பதிவு மாற்றம் செய்யப்பட்டுள்ளார் என்று கூறியுள்ளது.
அன்றாடம் உச்சரிக்கும் வார்த்தைகளை உச்சரித்ததற்காக இன்று பானோ ஒரு தீவிரவாதியாக, ஒரு பயங்கரவாதியாக, ஒரு தேச விரோதியாக பாசிச கும்பலால் சித்தரிக்கப்பட்டுள்ளார். இஸ்லாமியர்கள் எவ்வளவு கடின உழைப்பைச் செலுத்தினாலும் எவ்வளவு பாடுபட்டு உயர் பதவியைச் சென்றடைந்தாலும் அவர்களை ஒடுக்குவதும், அவர்களின் மீது வன்முறையை ஏவுவதும் காவி கும்பலுக்கு மிக எளிதாக இருக்கிறது.
அரசு அதிகாரி சீருடை அணிந்துகொண்டு மதரீதியான வார்த்தைகளைப் பயன்படுத்தியது தவறு என்று கூறுகின்றனர். அதேசமயம், போலீஸ் சீருடை அணிந்து கொண்டு இந்து பண்டிகைகளில் கலந்து கொள்வது, “ஜெய் ஸ்ரீ ராம்” என்று முழங்கிக் கொண்டு தெருக்களில் வலம் வருவதையெல்லாம் கண்டுகொள்ளாத இந்த அரசு இஸ்லாமியர் என்பதாலேயே பானோவை பணிமாற்றம் செய்துள்ளது.
அண்மையில் உத்தரப் பிரதேசத்தில் போலீசு அதிகாரி அணுஜ் சவுத்ரி அங்கு நடந்த கன்வர் யாத்திரைக்குத் தனது சீருடையுடன் கதாயுதத்தை ஏந்திக் கொண்டு தான் ஒரு இந்து என்பதைக் கர்வத்தோடு வெளிப்படுத்திக் கொண்டார். அவர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காமல் தனது கரசேவையை செய்துள்ளது உத்தரப்பிரதேச அரசு. தொடர்ந்து இதுபோன்ற மத ரீதியிலான நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்த அவர் உதவி கண்காணிப்பாளராகப் பதவி உயர்வு பெற்றார்.
ஒருபுறம் ஒரு இஸ்லாமிய ஐ.பி.எஸ் அதிகாரி தான் அன்றாடம் பயன்படுத்தும் வார்த்தைகளை உபயோகித்ததற்காக பணியிடை மாற்றம் செய்யப்படுகிறார். மற்றொருபுறம் ஒரு அதிகாரி மத ரீதியிலான நடவடிக்கைகளில் வெளிப்படையாகவே கலந்து கொள்வதும் மத ரீதியான வார்த்தைகளை அப்பட்டமாக வெளியில் பேசுவதையும் செய்யும்போது அவருக்குப் பதவி உயர்வு வழங்கப்படுகிறது. இதுபோல இந்து அதிகாரிகள் மதவெறியோடு செயல்படும் எத்தனையோ சம்பவங்களை நாம் அடுக்கிக் கொண்டே போகலாம். ஆனால் அவர்கள் மீது எந்தவிதமான சட்டப்பூர்வமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
இந்திய அரசியலமைப்புச் சட்டம் ஒரு இந்தியக் குடிமகன் தனக்கு விருப்பமான ஒரு மதத்தைப் பின்பற்றுவதற்கும், அம்மதம் சார்ந்த நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்கும் எல்லா உரிமைகளையும் வழங்குகிறது. ஆனால், சிறுபான்மையினர்களுக்கு, குறிப்பாக இஸ்லாமியர்களுக்கு, இந்த உரிமை தொடர்ந்து மறுக்கப்பட்டு வருகிறது. தற்போது நடந்த இந்த சம்பவத்தைக் கூட பா.ஜ.க. ஆதரவு கோடி மீடியாக்கள் (Godi media) ஊதிப் பெருக்கி வருகின்றன. இஸ்லாமிய அதிகாரிகள் தேசவிரோதிகள் என்ற ஒரு சித்திரத்தை மக்கள் கண் முன்னே காட்டி இந்திய குடிமக்கள் அனைவர் மனதிலும் இஸ்லாமிய வெறுப்புணர்வை ஆழமாக வேரூன்றச் செய்து வருகின்றன. கோடி மீடியாக்களில் ஒன்றான சுதர்சன் டிவி என்ற சேனல் இந்திய குடிமைப் பணிக்கான தேர்வுகளில் இஸ்லாமியர்களின் ஊடுருவல்களை விளக்குவதாக ஓர் நிகழ்ச்சி ஒன்றை நடத்தி வருகின்றது.
மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, மேடையில் “ஜெய் ஸ்ரீ ராம்” என்று முழங்குகிறார். உத்தரப் பிரதேசத்தில் உள்ள உயர் பதவியிலுள்ள ஒரு அதிகாரி கதாயுதத்தைக் கையில் ஏந்திக் கொண்டு தான் ஒரு இந்து என்று தம்பட்டம் அடித்துக் கொண்டு உலா வருகிறார். ஆனால் இவர்கள் மீதெல்லாம் எந்தவித எதிர்ப்பும் இல்லாத நிலையில், இஸ்லாமியராக இருப்பதால் மட்டுமே இந்த அதிகாரிகள் தற்போது ஒடுக்கப்பட்டு வருகின்றனர்.
நாடு முழுவதும் ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க. கும்பல் ஆட்சிக்கு வந்ததிலிருந்து இஸ்லாமிய வெறுப்புணர்வை இந்திய மக்களின் மத்தியில் திட்டமிட்டுப் பரப்பி வருகிறது. இஸ்லாமியர்களின் வீடுகளை புல்டோசர்கள் மூலம் இடிப்பது, வாக்குரிமையை எஸ்.ஐ.ஆர். மூலம் பறிப்பது, இந்திய குடிமக்கள் அல்ல என்று கூறி நாட்டை விட்டு வெளியேற்றுவது போன்ற இஸ்லாமிய வெறுப்பு நடவடிக்கைகளும், இஸ்லாமிய வெறுப்பு பேச்சுக்களும் பொதுவெளியில் அன்றாடம் அதிகரித்துக் கொண்டு வருகிறது. இந்த ஒடுக்குமுறைகள் உழைக்கும் இஸ்லாமியர்களுக்கு மட்டுமல்லாமல், உயர் பதவியில் இருக்கும் இஸ்லாமிய அதிகாரிகளுக்கும் நடந்து வருகின்றன.
சிறுபான்மையினர்கள், இஸ்லாமியர்கள் இல்லாத இந்துராஷ்டிரத்தை உருவாக்குவதை நோக்கி ஆர்.எஸ்.எஸ். – பா.ஜ.க. கும்பல் முன்னேறி வருகிறது. இந்துராஷ்டிரத்தை நிறுவுவதற்கும், பார்ப்பனியத்தை நடைமுறைப்படுத்தவும் இஸ்லாமியர்களின் மீது திட்டமிட்டே வன்முறையைச் செலுத்தி வருகிறது.
இந்த போலி ஜனநாயக கட்டமைப்பில் மத நல்லிணக்கத்தையும் ஏற்படுத்த முடியாது; அவரவர் விரும்பும் மதங்களைப் பின்பற்றும் சுதந்திரத்தையும் மக்களுக்கு வழங்க முடியாது. தன் பாசிச நடவடிக்கைகளின் மூலம் இந்தியாவில் உள்ள பெயரளவு ஜனநாயகத்தையும் அழிக்க முற்படும் இந்த ஆர்.எஸ்.எஸ். – பா.ஜ.க.வை விரட்டியடித்து, மக்களின் மத உரிமையை வழங்கக்கூடிய பாசிச எதிர்ப்பு ஜனநாயகத்தைக் கட்டியமைப்பதே ஜனநாயக சக்திகள் மற்றும் புரட்சிகர சக்திகளின் முக்கியமான கடமையாக உள்ளது.
![]()
நடாஷா
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram











