கோத்தகிரி அம்பாள் நகர் மக்களின் உரிமை முழக்கம் மலையெங்கும் எதிரொலிக்கட்டும்!

கோத்தகிரி மக்களுடன் இணைந்து மக்கள் அதிகாரக் கழகம் முன்னெடுத்துவரும் இப்போராட்டமும் அதற்கு கிடைத்துள்ள முதல் கட்ட வெற்றியும் அம்பாள் நகர் மக்களுக்கானது மட்டுமல்ல. சுதந்திரம் பெற்றுவிட்டதாகச் சொல்லப்படுகின்ற இந்திய நாட்டில் சாலை வசதியின்றி கர்ப்பிணிப் பெண்களை தொட்டில் கட்டித் தூக்கிச் செல்லும் ஒவ்வொரு மலைக் கிராம மக்களுக்குமானது.

நீலகிரி மாவட்டம், கோத்தகிரி வட்டம், கெங்கரை ஊராட்சியில் உள்ள அம்பாள் நகர் மலைக் கிராமத்தில் 50-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. ஆதிதிராவிடர் மற்றும் அருந்ததியர் சாதியைச் சேர்ந்த இம்மக்கள் தங்களின் குடியிருப்பிலிருந்து முதன்மைச் சாலைக்கு செல்ல சாலை அமைத்துத் தரக்கோரி 40 ஆண்டுகளுக்கும் மேலாகப் பல கட்டப் போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர். கடந்த ஓராண்டாக மக்கள் அதிகாரக் கழகத்துடன் இணைந்து போராடி வருகின்றனர்.

இந்நிலையில், அம்பாள் நகர் மக்களுக்கு சாலை அமைத்துத்தரக் கோரி மக்கள் அதிகாரக் கழகம் சார்பாக கடந்த ஆகஸ்ட் 27 அன்று முதல் தொடர் உண்ணாநிலை, தொடர் முழக்கப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. இப்போராட்டத்தில் மக்கள் அதிகாரக் கழகத்தின் மாநில இணைச் செயலாளர் தோழர் மாறன் மற்றும் கோத்தகிரி கிளைச் செயலாளர் தோழர் சண்முகநாதன் இருவரும் உண்ணாநிலை போராட்டத்தை மேற்கொண்டனர்.

இப்போராட்டப் பந்தலில் அம்பாள் நகரின் குழந்தைகள், பெண்கள், முதியவர்கள் என ஒட்டுமொத்த ஊர்மக்களும் இரவு பகலாகப் போராடினர். கோத்தகிரி பகுதியைச் சார்ந்த ஜனநாயக சக்திகள் இப்போராட்டத்திற்கு நேரடியாக வந்து ஆதரவளித்தனர். மக்கள் அதிகாரக் கழகம், பு.மா.இ.மு. உள்ளிட்ட புரட்சிகர அமைப்புகளைச் சார்ந்த தோழர்கள் போராட்டத்தை விளக்கி காணொளி பதிவிட்டு இப்போராட்டத்தை மக்களிடம் கொண்டுசென்றனர்.

இப்போராட்டமானது அதிகார வர்க்கத்திற்கு பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியது. எனவே, போராட்டத்தின் நான்காவது நாளான கடந்த ஆகஸ்ட் 30 அன்று உண்ணாநிலை போராட்டத்தில் ஈடுபட்டுவந்த இரு தோழர்களையும் அவர்களின் உடல்நிலையைக் காரணம்காட்டி மருத்துவமனையில் அனுமதித்தது. எனினும், தோழர்கள் இருவரும் மருத்துவமனையிலும் தங்களின் உண்ணாநிலை போராட்டத்தைத் தொடர்ந்தனர்.

மேலும், போலீசின் இந்நடவடிக்கை போராட்டத்தை எந்தவகையிலும் வலுவிழக்கச் செய்யவில்லை. தோழர்கள் அழைத்துச்செல்லப்பட்ட உடனேயே கோத்தகிரி கிளை இணைச் செயலாளர் தோழர் ஆறுமுகம், தோழர் அருணாச்சலம், தோழர் மோகன்ராஜ் மூவரும் போராட்டப் பந்தலில் உண்ணாநிலை போராட்டத்தைத் தொடங்கினர். இருவரின் உண்ணாநிலை போராட்டம் ஐவரின் போராட்டமாக வலுவடைந்தது! மேலும், தங்களின் கோரிக்கை நிறைவேற்றப்படாவிட்டால் மொத்த ஊர்மக்களும் உண்ணாநிலைப் போராட்டத்தை முன்னெடுப்போம் என்று மக்கள் அரசுக்கு எச்சரிக்கை விடுத்தனர்.

போராட்டத்தின் ஐந்தாவது நாளான ஆகஸ்ட் 31 அன்று மதியம் கோத்தகிரி அனைத்து கட்சிகள்-இயக்கங்கள் சார்பில் அனைத்து கட்சி கூட்டம் நடத்தப்பட்டு, மக்கள் கோரிக்கையை நிறைவேற்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டது; வட்டாட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது. இதனையடுத்து, மக்கள் போராட்டத்திற்கு பணிந்து, அம்பாள் நகர் மக்களுக்கு சாலை அமைத்துத் தருவதாக வட்டாட்சியர் கையொப்பமிட்டுக் கொடுத்தார். இது இப்போராட்டத்தின் முதல் கட்ட வெற்றியாகும்.  இதனை தொடர்ந்து மக்கள் அதிகாரக் கழகத் தோழர்கள் ஐவரும் தங்களின் உண்ணாநிலை போராட்டத்தை நிறைவு செய்தனர்.

கோத்தகிரி மக்களுடன் இணைந்து மக்கள் அதிகாரக் கழகம் முன்னெடுத்துவரும் இப்போராட்டமும் அதற்கு கிடைத்துள்ள முதல் கட்ட வெற்றியும் அம்பாள் நகர் மக்களுக்கானது மட்டுமல்ல. சுதந்திரம் பெற்றுவிட்டதாகச் சொல்லப்படுகின்ற இந்திய நாட்டில் சாலை வசதியின்றி கர்ப்பிணிப் பெண்களை தொட்டில் கட்டித் தூக்கிச் செல்லும் ஒவ்வொரு மலைக் கிராம மக்களுக்குமானது. சுடுகாடும் சுடுகாட்டுப் பாதையுமின்றி இறந்தவர்களின் உடலை சேற்றிலும் சகதியிலும் எடுத்துச்செல்லும் தலித் மக்களுக்குக்கானது. குடிநீர் வசதி, மின்சார வசதியின்றி இன்றி அல்லல்படும் அத்தனை உழைக்கும் மக்களுக்குமானது.

கோத்தகிரியின் அம்பாள் நகர் மக்களின் உரிமை முழக்கம் மலையெங்கும் எதிரொலிக்கட்டும்! செங்கொடி ஏந்திய மக்கள் போராட்டங்கள் நீலகிரி மலைகளெங்கும் பரவட்டும்!


ஆசிரியர் குழு, புதிய ஜனநாயகம்.

(புதிய ஜனநாயகம் – செப்டம்பர் 2026 இதழ்)

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram, Threads



விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க