09.09.2026

தனியார் பல்கலைக்கழகச் சட்டத்திருத்த முன்வடிவு – சட்டமன்றக் கோமாளிக் கூத்துகளுக்கு பின்னால் மறைந்திருக்கும் கல்வி கார்ப்பரேட் கொள்ளை!

கண்டன அறிக்கை

‎கடும் கோமாளிக் கூத்துகளுக்கு இடையில் சட்டமன்றக் கூட்டத்தொடர் நேற்றைய நாளில் முடிவுற்றது. கூட்டத்தொடரின் இறுதி நாளான நேற்று மட்டும் 11 சட்ட முன்வடிவுகள் நிறைவேற்றப்பட்டுள்ளன. சட்டமன்றக் கூட்டத்தொடர் முழுவதும் முதலமைச்சர் விஜய் மற்றும் தமிழக வெற்றிக் கழக எம்.எல்.ஏ-க்கள் ஆகியோர் இதுவரை இல்லாத அளவுக்கு ஆகமிக கேவலமான முறையில் சட்டமன்றத்தில் நடந்துகொண்டனர். அவர்களின் உண்மையான நோக்கமே நேற்றைய நாளில் முன்வைக்கப்பட்ட 11 சட்ட முன்வடிவுகள் குறித்து எந்த விவாதமும் எந்தச் செய்தியும் மக்கள் மத்தியில் சென்று விடக்கூடாது என்பதுதான்.

‎நேற்றைய நாளில் நிறைவேற்றப்பட்ட 11 சட்ட முன்வடிவுகளில் தனியார் பல்கலைக்கழகத் திருத்த முன்வடிவு மிகவும் ஆபத்தான ஒன்றாகும்.

‎ தனியார் பல்கலைக்கழகம் தொடங்க வேண்டும் என்றால் 100 ஏக்கர் நிலமும், பல்கலைக்கழகங்கள் நிதி பிரச்சினை இல்லாமல் செயல்படுவதற்காக ரூ.50 கோடி நிதியும் பல்கலைக்கழக அறக்கட்டளையில் இருக்க வேண்டும் என்ற விதி ஏற்கெனவே இருந்தது.

‎ஒழுங்குமுறை சீர்திருத்தங்களை நிறைவேற்றும் வகையில் ஒன்றிய அரசு அமைத்த பணிக்குழு, குறைந்தபட்ச நிலத் தேவையையும் அறக்கட்டளை நிதித் தேவையையும் குறைக்குமாறு பரிந்துரை அளித்ததையடுத்து, கடந்த தி.மு.க. அரசு சட்டத்திருத்த முன்வடிவை கொண்டுவந்தது. ஆனால், அதற்கு எதிராக மிகுந்த கண்டனங்கள் இருந்த நிலையில் அந்தச் சட்டத்திருத்த முன்வடிவு நிறைவேற்றப்பட்ட போதும் கூட அதனை திரும்பப் பெற்றுக்கொண்டது.


படிக்க: தனியார் பல்கலைக்கழக சட்டத்திருத்த மசோதா: தமிழ்நாட்டு மாணவர்கள் எதிர்நோக்கியுள்ள பேரபாயம்!


‎எவ்வித அரசியல் நோக்கமும் இன்றி பிழைப்புவாதத்தை மட்டுமே நோக்கமாகக் கொண்டு கவர்ச்சிவாதத்தை அடிப்படையாகக் கொண்டு வெற்றி பெற்ற த.வெ.க. அரசு,  தமிழ்நாட்டு மக்களால் கடும் எதிர்ப்புக்கு உள்ளாக்கப்பட்ட அதே சட்ட முன்வடிவை நிறைவேற்றியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இதன் மூலம், ‎பெருநகர சென்னை மாநகராட்சி பகுதியில் ‘நிலப்பற்றாக்குறையை கருத்தில் கொண்டு’ தனியார் பல்கலைக்கழகம் அமைப்பதற்கு குறைந்தபட்சம் 12 ஏக்கர் நிலமும், பிற மாநகராட்சிகள், நகராட்சிகளில் 18 ஏக்கரும் தேவை என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இவை தவிர்த்த பிற ஊரகப் பகுதிகளில் தனியார் பல்கலைக்கழகம் அமைக்க 18 ஏக்கர் நிலம் போதுமானது என அரசு முடிவு செய்துள்ளது.

இதே போல நிலையான அறக்கட்டளை நிதியை ரூ.50 கோடியில் இருந்து ரூ.25 கோடியாக குறைக்கவும் அரசு முடிவு செய்து இந்தச் சட்டத்திருத்தம் கொண்டுவரப்பட்டுள்ளது. இந்த மாற்றம், ஏற்கெனவே தமிழ்நாடு மாநிலத்தில் நிறுவப்பட்டுள்ள தனியார் பல்கலைக்கழகங்களுக்கும், 2018-ஆம் ஆண்டு சட்டங்களின் கீழ் நிறுவப்பட்ட சிவ நாடார் பல்கலைக்கழகம், சாய் பல்கலைக்கழகம் ஆகியவற்றுக்கும் பொருந்தும் எனக் கூறப்பட்டுள்ளது.

‎2026-ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட இந்தச் சட்டத்திருத்தம் 2018-ஆம் ஆண்டு நிறுவப்பட்ட சிவ நாடார் பல்கலைக்கழகம் மற்றும் சாய் பல்கலைக்கழகத்திற்கும் பொருந்தும் என்று கூறப்படுவதன் மூலம் தனியார் கல்விக் கொள்ளையர்கள் தங்கள் விருப்பம் போல கொள்ளையடிக்கவே விஜய் அரசு இந்தச் சட்டத்திருத்தத்தை கொண்டுவந்துள்ளது. இதை மக்கள் அதிகாரக் கழகம் வன்மையாகக் கண்டிப்பதுடன் அந்தச் சட்ட முன்வடிவைத் திரும்பப் பெற வேண்டும் என்றும் கேட்டுக்கொள்கிறது.

‎சி.பி.ஐ. ,சி.பி.எம்., பா.ம.க. உள்ளிட்ட கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்த பிறகும் கூட இந்தச் சட்ட முன்வடிவு நிறைவேற்றப்பட்டுள்ளது. சி.பி.ஐ., சி.பி.எம். ஆகிய கட்சிகளின் துணை இல்லாமல் விஜய் அரசு செயல்படவே முடியாது என்ற நிலையில் இருக்கும்போது கூட கல்வி கார்ப்பரேட்மயத்துக்கு ஆதரவான ஒரு சட்ட முன்வடிவு நிறைவேற்றப்பட்டுள்ள நிலையில், சி.பி.ஐ., சி.பி.எம். ஆகிய கட்சிகள் தங்கள்  ஆதரவைத் தொடர்வது பற்றி பரிசீலனை மேற்கொள்ள வேண்டும் என்றும் கழகம் கேட்டுக்கொள்கிறது.

‎
தோழமையுடன்
தோழர் சி. வெற்றிவேல் செழியன்,
மாநிலப் பொதுச் செயலாளர்,
மக்கள் அதிகாரக் கழகம்,
தமிழ்நாடு – புதுவை.
9962366321

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram, Threads



விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க