சர்க்கரை விலை ஒரே மாதத்தில் கடுமையாக உயர்ந்திருக்கிறது. ஜூலை 20 அன்று சராசரியாக கிலோ ரூ.48.18-ஆக இருந்த சர்க்கரையின் சில்லறை விலை, ஆகஸ்ட் 20 அன்று ரூ.55.70-ஆக உயர்ந்தது. பல நகரங்களில் ரூ.70-ஐ தொட்டுள்ளது; சில பகுதிகளில் ரூ.70–80 வரையிலும் விற்கப்படுகிறது.
நாடு முழுவதும் பண்டிகைக் காலம் தொடங்கவுள்ள சூழலில், இத்தகைய கட்டுக்கடங்காத விலையேற்றம் சாமானியக் குடும்பங்களின் செலவை அதிகரிப்பதோடு, பண்டிகைகளை மட்டுமே நம்பி இயங்கும் சிறு பலகாரப் பட்டறைகள், பேக்கரிகள், பெட்டிக்கடை வியாபாரிகளின் வாழ்வாதாரத்தையும் நசுக்குகிறது.
தொடக்கத்தில் நாட்டின் தேவைக்குப் போதுமான சர்க்கரை கையிருப்பில் உள்ளதாகவே மோடி அரசு கூறி வந்தது. ஆனால், ஜூலை 28-ஆம் தேதி வெளியிட்ட அறிவிப்பில், தேவைக்கேற்ற சர்க்கரையின் வரத்து இல்லாததால், மொத்த விற்பனை விலையில் ஏற்பட்ட உயர்வை சமாளிக்க முடியவில்லை என மாற்றிப் பேசியது.
மேலும், கடந்த நவம்பர் 2025-இல் 15 இலட்சம் டன் சர்க்கரை ஏற்றுமதிக்கு அனுமதி அளித்த மோடி அரசு, 2026 பிப்ரவரியில் மேலும் 5 இலட்சம் டன்னை ஏற்றுமதி செய்ய அனுமதித்தது. “உபரி சர்க்கரையை நிர்வகிக்கிறோம்” என்று பெருமை பேசிய அரசு, இப்போது ஏற்றுமதிக்குத் தடை விதித்துவிட்டு, 10 இலட்சம் டன் கச்சா சர்க்கரையைச் சுங்க வரியின்றி இறக்குமதி செய்யும் நிலைக்கு வந்துவிட்டது. இது கடந்த பத்தாண்டுகளில் இல்லாத நிலையாகும்.
“விளைச்சல் குறைந்துவிட்டதால்தான் விலை உயர்ந்தது” என்ற ஒற்றைக் காரணத்தைக் கூறி, மோடி அரசு இப்பிரச்சினைக்கான உண்மையான காரணங்களை மூடிமறைக்கிறது. 2025–2026-ஆம் ஆண்டில் சர்க்கரை உற்பத்தி எதிர்பார்த்ததைவிடக் குறைந்திருப்பது உண்மைதான். முதலில் சுமார் 343 இலட்சம் டன் உற்பத்தியாகும் என்று அரசு மதிப்பிட்ட நிலையில், இப்போது தனது மதிப்பீட்டை சுமார் 306 இலட்சம் டன்னாகக் குறைத்துள்ளது. கரும்புப் பயிரில் ஏற்படும் செவ்வழுகல் நோய் மற்றும் தண்டு துளைப்பான் பூச்சி தாக்குதல், பருவம் தவறிய மழை, எல்-நினோ போன்றவை கரும்பு விளைச்சலைப் பாதித்துள்ளன.
ஆனால், உற்பத்தி குறைவு மட்டுமே இந்த திடீர் விலையேற்றத்திற்கு காரணம் என மோடி அரசு கூறுவது முழு பூசணிக்காயை சோற்றில் மறைப்பது.
விலை உயர்வை கட்டுப்படுத்த சர்க்கரை வியாபாரிகள் எவரும் 30 நாட்களுக்கு மேல் இருப்பை வைத்திருக்கக் கூடாது என்றும் அதிகபட்சமாக 4,000 குவிண்டால் மட்டுமே இருப்பு வைத்திருக்க வேண்டும் எனவும் அரசு உத்தரவிட்டது. பண்டச் சந்தையில் சர்க்கரை வர்த்தகம் நடக்கும்போது, கையில் சரக்கே இல்லாமல் ஆன்லைன் மூலம் ஊக அடிப்படையில் (Speculation) செயற்கையாக விலையை உயர்த்தும் “காகித வணிகத்திற்கும்” (Paper Trading) கட்டுப்பாடுகளை விதித்தது.
இவ்வாறு கட்டுப்பாடுகளை விதித்ததன் மூலம் பதுக்கல், ஊக வணிகம், சர்க்கரை பரிவர்த்தனை இல்லாமலேயே நடக்கும் காகித வணிகம் ஆகியவைதான் சந்தையில் செயற்கையான பற்றாக்குறையை உருவாக்கியுள்ளன என்பதை மோடி அரசு மறைமுகமாக ஒப்புக்கொண்டுள்ளது.
பண்டச் சந்தையில் ஆன்லைன் மூலமாக நடக்கும் இந்தக் காகித வணிகச் சூதாட்டத்தில், பெருமுதலாளிகள் ஒரு மூட்டை சர்க்கரையைக் கூடத் தொட்டுப் பார்க்காமலேயே கோடிக்கணக்கில் வர்த்தகம் செய்து செயற்கையாக விலையை ஏற்றிவிடுகின்றனர்.
சுங்க வரி இல்லாத சர்க்கரை இறக்குமதி அறிவிக்கப்பட்ட சில நாட்களிலேயே, புதிய சர்க்கரை சந்தைக்கு வருவதற்கு முன்பே, மொத்த விற்பனை விலை 18–20 சதவிகிதம் வரை சரிந்தது. இதிலிருந்தே, பற்றாக்குறையை விடப் பெருமுதலாளிகளின் ஊக வணிகமும் பதுக்கலுமே விலையேற்றத்திற்குக் காரணம் என்பது தெளிவாகிறது.
உற்பத்தி குறைந்தது உண்மை என்றாலும், அதை விலையேற்றமாக மக்கள் மீது திணித்தது சந்தையையும் கையிருப்பையும் தங்களின் கட்டுப்பாட்டில் வைத்துள்ள கார்ப்பரேட் பதுக்கல்காரர்களின் இலாபவெறியும் அதற்கு வழிவகுத்த மோடி அரசின் ஏற்றுமதி–இறக்குமதி கொள்கையும்தான்.

இதற்கிடையில், 2025-26 உற்பத்தி ஆண்டில் சுமார் 30 இலட்சம் டன் சர்க்கரைக்குச் சமமான கரும்புச் சாறு, பாகு உள்ளிட்டவை எத்தனால் உற்பத்திக்கு மடைமாற்றப்பட்டுள்ளன. எத்தனால் மடைமாற்றத்தால் நிகர உற்பத்தி 279 இலட்சம் டன்னாகக் குறைந்து, செப்டம்பர் மாத இறுதியில் கையிருப்பு வெறும் 35 இலட்சம் டன்னாகச் சுருங்கும் என இந்திய சர்க்கரை மற்றும் உயிரின எரிபொருள் உற்பத்தியாளர்கள் சங்கம் மதிப்பிட்டுள்ளது.
ஏற்கெனவே, காலநிலை மாற்றம், நோய் தாக்குதல் போன்றவற்றால் கரும்பு உற்பத்தி பாதிக்கப்பட்டிருக்கும் நிலையில் 30 இலட்சம் டன் சர்க்கரைக்குச் சமமான மூலப்பொருட்களை எரிபொருளுக்கு மடைமாற்றுவது உணவுப் பாதுகாப்புக்கான கையிருப்பைக் கரைக்கும் அயோக்கியத்தனமில்லையா? இதனால் திறந்தவெளிச் சந்தையில் விலை ஏறுவது மட்டுமின்றி, பொது விநியோகத் திட்டத்தின் மூலம் ஏழைகளுக்கு வழங்கப்படும் சர்க்கரை விநியோகத்தையும் கூட மோடி அரசு குறைக்கும் அபாயம் உள்ளது.
இந்த எத்தனால் சந்தை ஒன்றும் திடீரென முளைத்தது அல்ல. சர்க்கரை மட்டுமல்லாது பாகு, எத்தனால், மின்சாரம் எனப் பல வழிகளில் சர்க்கரை ஆலை முதலாளிகள் வருவாய் ஈட்டும்போது, விவசாயி அல்லாடுவதை 2014-ஆம் ஆண்டிலேயே “புதிய ஜனநாயகம்” சுட்டிக்காட்டியிருந்தது. மோடியின் இந்த 12 ஆண்டுகால ஆட்சியில் இக்கொள்ளை பிரம்மாண்டமாக விரிவுபடுத்தப்பட்டுள்ளது.
2014–15-இல் பெட்ரோலில் எத்தனால் கலப்பின் அளவு 1.14 சதவிகிதமாக இருந்த நிலையில், 2025–26-இல் அது 20 சதவிகிதமாக உயர்த்தப்பட்டுள்ளது. எண்ணெய் நிறுவனங்களின் எத்தனால் கொள்முதல் 38 கோடி லிட்டரிலிருந்து 904 கோடி லிட்டராக உயர்ந்துள்ளது. இதன் விளைவாக, கடந்த பத்தாண்டுகளில் சர்க்கரை ஆலைகள் எத்தனால் விற்பனையிலிருந்து ரூ.1.29 இலட்சம் கோடிக்கும் மேல் வருவாய் ஈட்டியுள்ளன. உணவுப்பொருளாக மாற வேண்டிய கரும்பை எரிபொருள் சந்தைக்குத் திருப்பி, அதற்கு உத்தரவாதமான சந்தையையும் அரசே உருவாக்கிக் கொடுத்தால், அது ஆலை முதலாளிகளுக்குப் பெரும் இலாபம் குவிப்பதற்கான மோசடியல்லவா?
இங்கேதான் நிதின் கட்கரி குடும்பத்தின் கொள்ளை குறித்த கேள்வியும் எழுகிறது. பெட்ரோலில் எத்தனாலைக் கலப்படம் செய்யும் கொள்கையை மிகத் தீவிரமாக முன்னெடுப்பவர் மத்திய அமைச்சர் நிதின் கட்கரி. அவரது மகன் நிகில் கட்கரி “சியான் அக்ரோ” (CIAN Agro) எனும் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர்; மற்றொரு மகன் சாரங் கட்கரியுடன் தொடர்புடைய மானஸ் அக்ரோ (Manas Agro) நிறுவனமும் எத்தனால் – சர்க்கரைத் தொழிலில் உள்ளது. அரசுக் கொள்கையைத் தீவிரமாக முன்னெடுக்கும் அமைச்சரின் குடும்பமே, அந்தக் கொள்கையால் விரிவடையும் சந்தையில் பெரும் இலாபத்தைக் குவித்து, நாட்டைக் கொள்ளையிட்டுக் கொண்டிருக்கிறது.
எனவே, சர்க்கரை விலை கிலோ ரூ.70 முதல் ரூ.80 வரை உயர்ந்தாலும், விவசாயிக்குக் கிடைக்கும் கரும்பு கொள்முதல் விலை (FRP / SAP) உயர்வதில்லை. உரங்களின் விலை உயர்வு, பூச்சிக்கொல்லி, டீசல், வெட்டுக்கூலி, பாசனச் செலவு, நோய் மற்றும் மழைப் பாதிப்பு என அனைத்துப் பொருளாதார இழப்புகளையும் விவசாயிகள்தான் சுமக்கிறார்கள்.
ஆலை அதிபர்கள் விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய நிலுவைத் தொகையை வழங்காமல் மாதக்கணக்கில் இழுத்தடிப்பதால், கரும்பு விவசாயிகள் கந்துவட்டிக்கும் கடன் சுமைக்கும் தள்ளப்பட்டுத் தற்கொலைக்கு ஆளாகின்றனர். ஆனால், கையிருப்பை வைத்திருக்கும் சர்க்கரை ஆலை முதலாளிகளும் பெருவணிகர்களும் பதுக்கல் மற்றும் எத்தனால் விற்பனை மூலம் கொள்ளை இலாபம் அடைகிறார்கள். அரசும் இவர்களுக்கே வரிச் சலுகைகளையும் மானியங்களையும் வாரி வழங்குகிறது.
இம்மோசடிகளை முறியடிக்கவும், கார்ப்பரேட் முதலாளிகளின் இலாபவெறிக்காக ஒட்டுமொத்த நாட்டின் உணவுப் பாதுகாப்பையும் சூறையாடும் மோடி அரசின் கொள்கைகளுக்கு எதிராகவும் விவசாயச் சங்கங்களும் உழைக்கும் மக்களும் ஒன்றிணைந்து களப்போராட்டங்களை முன்னெடுக்க வேண்டியது அவசியமாகும்.
உள்நாட்டுச் சர்க்கரைத் தேவை முழுமையாகப் பூர்த்தியாகும் வரை, கரும்புச் சாறு மற்றும் பாகினை எத்தனால் உற்பத்திக்கு மடைமாற்றுவதை உடனடியாக நிறுத்து; சர்க்கரை ஆலை முதலாளிகள் மற்றும் பெருவணிகர்களின் கிடங்குகளில் பதுக்கி வைக்கப்பட்டுள்ள சர்க்கரையைக் கண்டறிந்து, அவற்றை எவ்வித நிபந்தனையுமின்றிப் பறிமுதல் செய்; மழை, நோய், வறட்சியால் பயிரிழந்த விவசாயிகளுக்கு முழுமையான இழப்பீடு வழங்கு; உரம், கூலி உள்ளிட்ட உற்பத்திச் செலவு அதிகரிப்புக்கு ஏற்ப கரும்புக்கான கொள்முதல் விலையை உயர்த்தி, நிலுவைத் தொகையை உடனடியாக வழங்கு உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து வீரியமான களப் போராட்டங்களைக் கட்டியமைக்க வேண்டும்.
![]()
இளவரசன்
(புதிய ஜனநாயகம் – செப்டம்பர் 2026 இதழ்)
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram, Threads











