உத்தராகண்டில் கடந்த 2022-ஆம் ஆண்டிலிருந்து முதல்வர் புஷ்கர் சிங் தாமி தலைமையிலான பா.ஜ.க. கும்பலின் ஆட்சி நடைபெற்று வருகிறது. சட்டப்பேரவையின் ஐந்தாண்டு காலம் கூடிய விரைவில் முடிவடைய உள்ளதால் 2027 பிப்ரவரி அல்லது மார்ச் மாதத்தில் அம்மாநிலத்தில் சட்டமன்றத் தேர்தல் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சட்டமன்றத் தேர்தலில் மீண்டும் வெற்றி பெறுவதற்காக இஸ்லாமிய வெறுப்பு – இந்து மதவெறியூட்டும் பாசிச நடவடிக்கைகளை உத்தராகண்ட் அரசும் காவிக் குண்டர்களும் தீவிரப்படுத்தியுள்ளனர்.
இந்நிலையில், பா.ஜ.க-வின் தேர்தல் வெற்றிக்கு பாதையமைத்துக் கொடுக்கும் வகையில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் (SIR) எனும் பாசிச நடவடிக்கை உத்தராகண்டில் தேர்தல் ஆணையத்தின் மூலம் அமல்படுத்தப்பட்டு வருகிறது.
குறிப்பாக, எஸ்.ஐ.ஆர். 1.0 மற்றும் எஸ்.ஐ.ஆர். 2.0-வில் நடந்ததை போன்று, இஸ்லாமியர்களையும் பெண்களையும் மிகப்பெரும் அளவில் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கி, போலி வாக்காளர்களை சேர்த்து, பா.ஜ.க. வெற்றி பெறும் வகையில் உத்தராகண்ட் வாக்காளர் பட்டியலும் காவிமயமாக்கப்படுகிறது.
உத்தராகண்டில் இந்த ஆண்டு மே 29-ஆம் தேதி முதல் எஸ்.ஐ.ஆர். நடைமுறைப்படுத்தப்பட்டது. வரைவு வாக்காளர் பட்டியல் ஜூலை 14 அன்று வெளியிடப்பட்டது. அதில் 8.25 இலட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டிருந்தனர். 2022 சட்டமன்றத் தேர்தலுக்கான இறுதி வாக்காளர் பட்டியலில் 79.58 இலட்சம் வாக்காளர்கள் பதிவு செய்யப்பட்டிருந்த நிலையில், தற்போதைய வரைவு வாக்காளர் பட்டியலில் 71.33 இலட்சம் வாக்காளர்கள் மட்டுமே இடம்பெற்றிருந்தனர்.
இதனையடுத்து, சிறுபான்மை மக்களின் உரிமைகளுக்காக செயல்பட்டுவரும் சபர் நிறுவனம் (Sabar Institute) உத்தராகண்டில் எஸ்.ஐ.ஆர். அமல்படுத்தப்பட்டதால் ஏற்பட்ட பாதிப்புகளை ஆய்வு செய்தது. அதன் ஆய்வில் இஸ்லாமியர்கள் அதிக எண்ணிக்கையில் வசிக்கும் மாவட்டங்களில் வாக்காளர்கள் அதிக எண்ணிக்கையில் நீக்கப்பட்டிருப்பது அம்பலமாகியுள்ளது. இது, பா.ஜ.க-வின் தேர்தல் வெற்றிக்காக இஸ்லாமியர்கள் இலக்கு வைக்கப்பட்டு எஸ்.ஐ.ஆர். மூலம் வாக்காளர் பட்டியலிலிருந்து நீக்கப்பட்டிருப்பதை உறுதி செய்கிறது.
படிக்க: பீகாரில் எஸ்.ஐ.ஆர் நடவடிக்கை சரி என்று பாசிஸ்டுகளுக்கு பச்சைக்கொடி காட்டும் உச்ச நீதிமன்றம்!
மேலும், வாக்காளர் பட்டியலிலிருந்து நீக்கப்பட்டவர்களில் பாதிக்கும் மேற்பட்டோர் பெண்களாக உள்ளனர். சபர் நிறுவனத்தின் அறிக்கையின்படி, எஸ்.ஐ.ஆர். மூலம் பாதிக்கப்பட்டவர்களில் பெண்கள் 52 சதவிகிதம், ஆண்கள் 48 சதவிகிதம், மூன்றாம் பாலினத்தவர்கள் 40 பேர் ஆவர். உத்தராகண்டில் வறுமை மற்றும் வேலைவாய்ப்பின்மை காரணமாக இளைஞர்கள் மற்றும் ஆண்கள் புலம்பெயர் தொழிலாளர்களாக டெல்லி, மும்பை போன்ற நகரங்களுக்கு சென்றுவிடுவதால் பெண்களின் வாக்குகளே தேர்தல் வெற்றியை தீர்மானிப்பதில் முக்கியப் பங்காற்றுகிறது. எனவேதான் பெண்கள் அதிகளவில் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர்.
அதேபோல, உத்தராகண்டில் மொத்தமுள்ள 70 சட்டமன்றத் தொகுதிகளில் 45 தொகுதிகளில் 2022 சட்டமன்றத் தேர்தல் வெற்றிக்கான வாக்கு வித்தியாசத்தை விட அதிக எண்ணிக்கையிலான வாக்காளர்கள் நீக்கப்பட்டிருப்பதையும் சபர் நிறுவனம் அம்பலப்படுத்தியுள்ளது.
இவைமட்டுமின்றி, வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்ட பிறகு வாக்காளர்களை சேர்ப்பது, நீக்குவது, விவரங்களை திருத்துவதற்கு ஆகஸ்ட் 13-ஆம் தேதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டது. இதனை தங்களுக்கு சாதகமாகப் பயன்படுத்திக்கொண்ட காவிக் குண்டர்கள் இஸ்லாமியர்களை ‘சட்டவிரோதக் குடியேறிகள்’ என்று குற்றஞ்சாட்டி ஆயிரக்கணக்கில் ஆட்சேபனை புகார்களை தெரிவித்துள்ளனர். இதன் மூலம் வரைவு வாக்காளர் பட்டியலில் இடம்பெற்றிருந்த இஸ்லாமியர்களையும் வாக்காளர் பட்டியிலிலிருந்து நீக்குவதற்கான பாசிச நடவடிக்கையில் ஈடுபட்டனர்.
கிச்சா, கடர்பூர், கதிமா, நானக்மட்டா, ருத்ராபூர் உள்ளிட்ட சட்டமன்றத் தொகுதிகளில் பா.ஜ.க-வுடன் தொடர்புடைய குண்டர்கள் இஸ்லாமிய மக்களை இலக்கு வைத்து அதிக எண்ணிக்கையிலான ஆட்சேபனை புகார்களை தேர்தல் ஆணையத்திற்கு அனுப்பியுள்ளனர். இதனை “நியூஸ்லாண்டரி” இணையதள செய்தி ஊடகம் தன்னுடைய கள ஆய்வில் அம்பலப்படுத்தியுள்ளது.
சான்றாக, கிச்சாவில் தாக்கல் செய்யப்பட்ட 4,857 ஆட்சேபனை புகார்களில் 4,855 ஆட்சேபனை புகார்கள் ஒரே ஒரு பா.ஜ.க. வாக்குச்சாவடி முகவரால் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. கடர்பூரில் பா.ஜ.க. நிர்வாகி இஸ்லாமியர்களுக்கு எதிராக 670 ஆட்சேபனை புகார்களை தாக்கல் செய்துள்ளார். தேர்தல் ஆணையமும் காவிக் குண்டர்களால் தாக்கல் செய்யப்படும் போலி ஆட்சேபனை புகார்களை கொண்டு இஸ்லாமியர்களை வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்குவதற்கான நடவடிக்கையிலேயே ஈடுபட்டு வருகிறது.
எனவே, இறுதி வாக்காளர் பட்டியலில் வரைவு வாக்காளர் பட்டியலைவிட அதிக எண்ணிக்கையில் இஸ்லாமியர்கள் நீக்கப்படுவர் என்பதை அறிய முடிகிறது. மேலும், உத்தராகண்டில் இனி தேர்தல்கள் நடைபெற்றாலே பா.ஜ.க. மட்டுமே வெற்றி பெறும் வகையில் வாக்காளர் பட்டியல் காவிமயமாக்கப்படுகிறது.
ஆகவே, பா.ஜ.க-வின் தேர்தல் வெற்றிக்கு பாதையமைத்துக் கொடுக்கும் வகையில் செயல்பட்டுவரும் தேர்தல் ஆணையத்தின் எஸ்.ஐ.ஆர். நடவடிக்கையை உத்தராகண்டின் மக்கள் போராட்டங்களால் முறியடிக்க வேண்டியது அவசர அவசியமாகிறது.
![]()
பிரவீன்
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram, Threads











